சிஜேபி முக்கிய தலைவர்கள் மூவருக்கும் காவல்துறை பிடியில் என்ன நடந்தது? தீப்கே தவிர மற்ற இருவரும் பேட்டி

பட மூலாதாரம், ANI
காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, காக்ரோச் ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், தன்னை காவல்துறையினர் 'கடத்திச் சென்றதாக' குற்றம்சாட்டியுள்ளார்.
தனது செல்போன் குளோன் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
"நீரவ் மோதி, விஜய் மல்லையா ஆகியோரை விமானத்தில் ஏற்றி நாட்டை விட்டு வெளியேற இந்த அரசாங்கம் அனுமதித்தது. ஆனால், எங்களை விமானத்துக்குள் இருந்தபோதே காவலில் அழைத்து சென்றதும் இதே அரசாங்கம்தான்," என்று சௌரவ் தாஸ் குற்றம்சாட்டினார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் மற்றொரு இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா, "இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோழைத்தனமான பிரதமர் நரேந்திர மோதி," என்று விமர்சித்தார்.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகிய மூவரும் அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் விமானத்துக்குள் இருந்தபோதே காவலில் எடுக்கப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூவரையும் விடுவித்ததை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு டெல்லி பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பங்கேற்கவில்லை. தனது பாட்டி உயிரிழந்ததால் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக விடுவிக்கப்பட்ட பிறகு அவர் தெரிவித்தார்.
ஓர் ஆண்டுக்கு அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் மூவரும் விடுவிக்கப்பட்டதாகக் கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்தார்.
'எங்கள் கைப்பேசிகள் குளோன் செய்யப்படும் அபாயம் உள்ளது'

பட மூலாதாரம், ANI
"எங்களைக் கடத்திச் சென்றபோது எந்த ஆவணப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் போல காவல்துறையினர் வந்து எங்களை அழைத்துச் சென்றனர்," என்று சௌரவ் தாஸ் கூறினார்.
"எங்கள் கைப்பேசிகள் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்யப்பட்டன. பெண் காவல்துறையினர் எங்கள் கைப்பேசிகளை எடுத்துச் சென்றனர். ஆனால், அவற்றைப் பறிமுதல் செய்தது தொடர்பாக எந்தச் சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. என்னை ஆர்.கே. புரத்தில் வைத்திருந்தனர். அசுதோஷை பல்லப்கருக்கும், அபிஜித்தை வேறொரு இடத்துக்கும் அழைத்துச் சென்றனர். எங்களை அழைத்துச் சென்றபோது, வழக்கறிஞருடன் பேசுவது எங்களது அடிப்படை உரிமை என்று தெரிவித்தோம்.
"ஆனால், காவலில் இருக்கும்போது எந்த உரிமையும் கிடையாது என்று எங்களிடம் கூறப்பட்டது. போராட்டக்காரர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் எத்தகைய அடக்குமுறையைக் கையாண்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இப்போது எங்கள் கைப்பேசிகளில் என்ன செய்திருப்பார்களோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அவற்றைக் குளோன் செய்திருக்கலாம் என்று அஞ்சுகிறோம். எங்கள் கைப்பேசிகளைக் குளோன் செய்து, அவற்றை ஆதாரங்களாக முன்வைக்கக்கூடும்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
"மோதியும், அமித் ஷாவும், டெல்லி காவல்துறையும்தான் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றனர். ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவே நாங்கள் விரும்புகிறோம்," என்று அசுதோஷ் ரங்கா தெரிவித்தார்.
"ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும்," என்றும் அவர் கூறினார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங், போராட்டக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் டெல்லி காவல்துறையினர் துன்புறுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை, கட்சித் தன்னார்வலர்களின் வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர், அவர்களது பெற்றோரை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
போராட்டக்காரர்களைக் கண்டு அரசு அச்சமடைந்துள்ளதாகவும், அரசின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். டெல்லிக்கு வந்த பிறகு உளவுத்துறை அதிகாரிகள் தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.
"குற்றவாளியைப் பின்தொடர்வதைப் போல அவர்கள் என்னைப் பின்தொடர்ந்தனர்," என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ரத்னா சிங், "நான்கு காவல்துறையினர் எனது குடியிருப்புக்கு வந்தனர். காலையில் அழைப்பு மணியை அடித்து, என்னுடன் தங்கியிருந்தவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தனர். பின்னர் நான் வெளியே சென்று காரில் அமர்ந்திருந்தபோது, திடீரென நான்கு வாகனங்கள் வந்தன. இருபுறமும் என்னைச் சுற்றிவளைத்து காவலில் எடுத்தனர். ஜங்புராவில் நான்கு வாகனங்களுக்கு நடுவே ஒன்பது மணி நேரம் அமர வைக்கப்பட்டிருந்தேன். இதனால் அந்தப் பகுதி மக்களுக்கும் சிரமம் ஏற்பட்டது. மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாகக் காவல்துறையினர் தொடர்ந்து கூறினர்.
30 முதல் 35 அதிகாரிகள் வந்து, என்னைக் காவல் தடுப்பு மையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது வீட்டுக் காவலில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். எங்கள் விருப்பத்துக்கு மாறாக எங்களைச் சட்டவிரோதமாக எப்படிக் காவலில் வைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை, காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த மூவரும் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக அவர்களது வழக்கறிஞர் சௌதிக் பானர்ஜி உறுதிப்படுத்தினார்.
''அமைதியைப் பேணுவதற்கும் நன்னடத்தையுடன் இருப்பதற்கும் ஓராண்டு காலத்துக்கு ரூ.50,000 பிணைப் பத்திரம் தாக்கல் செய்ததன் அடிப்படையில் மூவரையும் மாஜிஸ்திரேட் விடுவித்தார்," என்று டெல்லி காவல்துறை எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































