முஸ்லிமாக மதம் மாறுவோருக்கு இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களை எப்படி பாதிக்கும்?

உச்சநீதிமன்றம்
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"இந்து மதத்தில் இருந்தபோது, சமூக அந்தஸ்தின் அடிப்படையில் ஒருவர் பெற்று வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உரிமையை, அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு பெற முடியாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 15 அன்று உறுதி செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பால் மதம் மாறிய முஸ்லிம்களின் குழந்தைகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

லைவ் லா செய்தியின்படி, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு அரசு 2024ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதுகுறித்த லைவ் லா செய்தியின்படி, "ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் மட்டுமே, மாநிலத்தில் உள்ள ஏழு முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவராகிவிட முடியாது. அவர் முன்பு கொண்டிருந்த சாதி அந்தஸ்தை முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அந்தஸ்தாக மாற்றிக்கொள்ள முடியாது. அதேபோல, அவரது மத அமைப்பு மட்டுமே வைத்து அவர் அத்தகைய இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதியானவர் என்று இறுதியாகத் தீர்மானிக்கவும் முடியாது" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், "அரசியலமைப்புச் சட்டப்படி, இந்து, சீக்கியம் அல்லது புத்த மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர் பட்டியலினத்தவராகக் கருதப்பட முடியாது" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

"மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்புபவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும் அவர்களின் முந்தைய அடையாளத்தை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்குத் தனிப்பட்ட உண்மைச் சூழல்களை ஆய்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்படுமா?

இந்தத் தீர்ப்பால் மதம் மாறிய முஸ்லிம்களின் குழந்தைகள் இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற முடியாத சூழல் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகிறார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு தொடர்பாக எங்களுடைய கவலைகளைத் தெரிவிக்க தவெக அமைச்சர்களைச் சந்தித்தோம். அப்போது, முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கிய 2007ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

"அந்தச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களுக்கான வரைவைச் சமர்ப்பிக்குமாறும் எங்களிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி, நீதிபதி அக்பர் அலி திருத்த வரைவு ஒன்றைச் சமர்ப்பித்தார். ஆனால், அரசு எந்தத் திருத்தத்தையும் கொண்டு வரவில்லை" என்று தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துப் பேசிய அவர், "மதம் மாறிய முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு சமூகச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் பொதுப் பிரிவில் போட்டியிட வேண்டிய சூழல் உருவாகும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டின் பலன்களை அவர்களால் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்படும்" என்று ஜவாஹிருல்லா கூறினார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர், மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சாதி அந்தஸ்தை மட்டுமே அடிப்படையாக வைத்து பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், ஏற்கெனவே மதம் மாறியவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் சமூகச் சான்றிதழ் வழங்குவது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டுத் தகுதியை நிர்ணயிப்பது ஆகியவற்றில் சிக்கல்கள் எழலாம் என்ற கவலை முன்வைக்கப்படுகிறது.

இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறுவதால் இடஒதுக்கீடு சிக்கலாகுமா?
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

வழக்கு தொடர்ந்த சமீர் அகமது கூறியது என்ன?

இந்த வழக்கைத் தொடர்ந்த சமீர் அகமது, தனது குழந்தைகளுக்கு சமூகச் சான்றிதழ் பெற முயன்றபோதுதான் இந்தப் பிரச்னை குறித்து அறிந்துகொண்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதுகுறித்துப் பேசிய அவர், "எனது குழந்தைகளுக்கு சமூகச் சான்றிதழ் பெற முயன்றபோதுதான், எனக்கே சமூகச் சான்றிதழ் பெறுவதில் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக நான் முஸ்லிம் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சான்றிதழ் கோரினேன். ஏனெனில், என் இரு அண்ணன்களும் லெப்பை முஸ்லிம் குடும்பங்களில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். மேலும், கயத்தாறு பகுதியில் பிற முஸ்லிம் பிரிவினரைவிட லெப்பை முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், தமிழக அரசு இந்த வழக்கைக் கையாண்ட விதம் குறித்தும் அவர் விமர்சித்தார். "சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கில் தோல்வியடைந்த பிறகு, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அதற்கு முன்பாக மதத் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை. அவர்களுடன் முறையாக ஆலோசனை நடத்தியிருந்தால், ஒருவேளை இந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கலாம்" என்று சமீர் அகமது பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா
படக்குறிப்பு, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

இந்த வழக்கின் பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் அகமது, முன்பு பரமசிவம் என்ற பெயரில் அறியப்பட்டவர். அவர் 2015ஆம் ஆண்டு இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். 2016ஆம் ஆண்டு இதற்கான அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பின்னர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒன்றான 'முஸ்லிம் லெப்பை' சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சான்றிதழ் கோரி அவர் விண்ணப்பித்தார். அதை வட்டாட்சியர் நிராகரித்ததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

2024 அரசாணை கூறுவது என்ன?

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை கடந்த 9.3.2024 அன்று அரசாணை (எண் 31) ஒன்றை வெளியிட்டது. அந்த அரசாணையில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதி பிரிவுகளில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM)' என வகைப்படுத்தி சான்றிதழ் வழங்குவது குறித்துக் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆணையில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் சட்டம் 2007 என்பது கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின்கீழ் உள்ள பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்கிறது.

இரண்டு இஸ்லாமியர்கள் நிற்கும் காட்சி
படக்குறிப்பு, மதம் மாறிய முஸ்லிம்களின் குழந்தைகள் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற முடியாத சூழல் ஏற்படும் என இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

அதன்படி, தமிழ்நாடு சட்டம் 45/1994, பிரிவு 3(a)படி சில பிரிவினரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதில், ஏழு பிரிவினர் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்சார் (Ansar)

தெக்கானி முஸ்லிம்கள் (Dekkani Muslims)

துதேகுலா (Dudekula)

லெப்பைகள் (Labbais ) (ராவுத்தர் மற்றும் மரைக்காயர் உள்பட - இவர்களின் பேச்சுமொழி தமிழ் அல்லது உருது என இருந்தாலும்)

மாப்பிள்ள (Mapilla)

ஷேக் (Sheik)

சையத் (Syed)

மேற்குறிப்பிட்ட ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் மதம் மாறியதன் அடிப்படையில் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்' என வகுப்புச் சான்றிதழை வழங்கலாம் எனவும் அரசாணை தெரிவிக்கிறது. இந்த வழக்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அறிவிக்கப்பட்ட ஏழு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவராகக் கருதி சான்றிதழ் வழங்க அனுமதித்த தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டு அரசாணையை உயர் நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி ரத்து செய்தது.

ஏற்கெனவே இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற்று வந்தவர்கள், இஸ்லாம் மதத்துக்கு மாறுவதால் அந்தப் பலன்களை இழக்கக்கூடாது என்பதே அரசாணையின் நோக்கம் என்றும் அரசு வாதிட்டது. ஆனால், இந்த அரசாணை முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணானது என்று கூறிய நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, அதை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தற்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

'சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்' - மு.க. ஸ்டாலின்

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், "சமூகரீதியான பின்னடைவு ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இதுவே சமூக எதார்த்தமாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை எனும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இஸ்லாம் மதத்தை ஏற்றவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கடந்த திமுக ஆட்சியில் கிறித்தவ மதத்துக்கு மாறும் ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஸ்டாலின், "சாதியால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவருக்கு அதையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக பிபிசி தமிழிடம் கூறினார் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான்
படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பிபிசி தமிழிடம் கூறினார்.

அமைச்சர் ஷாஜகான் கூறுவது என்ன?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், "இந்த விவகாரத்தில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக" தெரிவித்தார்.

"மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு மிகவும் உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய ஆலோசனைகளை நடத்தவில்லை என்றோ, தீவிரமாகச் செயல்படவில்லை என்றோ கூறுவதில் உண்மையில்லை. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றும் விளக்கினார்.

அதேபோல, "முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய 2007ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது அல்லது 2024ஆம் ஆண்டு அரசாணையில் இருந்த குறைகளைச் சரிசெய்து அதைப் போன்ற புதிய அரசாணையை வெளியிடுவது ஆகிய வழிமுறைகள் குறித்தும் பரிசீலித்து வருவதாக" அமைச்சர் ஷாஜகான் குறிப்பிட்டார்.

மதம் மாறிய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்பதன் மீது அனைத்துத் தரப்பினரின் கவனமும் குவிந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு