அதீத படைக்குவிப்பு, சிஜேபி தலைவர்கள் கைதை தாண்டியும் ஜென் ஸி போராட்டம் - டெல்லியில் நடந்தது என்ன?

டெல்லி, காக்ரோச் ஜனதா கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம்
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டெல்லியில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையைத் தொடர்வதற்கு எதிராக, காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அக்டோபர் 10-ஆம் தேதி சனிக்கிழமை போராட்டம் நடத்தின.

இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்காகக் காவல்துறையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள், ஓய்வுபெற்ற மூத்த காவல் துறை அதிகாரிகள் மட்டுமின்றி, அரசியல் பார்வையாளர்களையும் திடுக்கிடச் செய்துள்ளன.

காவல்துறையின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, போராட்டத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தீவிரத்தைவிட, இவ்வளவு பெரிய அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வியே அதிகமாக எழுந்துள்ளது.

சுமார் 20,000 போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஏறத்தாழ 35,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் டெல்லி காவல்துறையினருடன், பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

டெல்லி, காக்ரோச் ஜனதா கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம்
படக்குறிப்பு, அக்டோபர் 10, சனிக்கிழமை டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன

பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், டெல்லி மெட்ரோவின் 50-க்கும் மேற்பட்ட நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வந்த மற்றும் டெல்லியிலிருந்து புறப்படவிருந்த சுமார் 245 ரயில்கள் தாமதப்படுத்தப்பட்டதாகவும், சில ரயில்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அபிஜித் தீப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரைக் கைது செய்வதற்காக, பெண் காவல் துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் விமானத்துக்குள் நுழைந்த விதம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

தாம் கைது செய்யப்படுவதை எதிர்க்கும் எண்ணம் இல்லை என்றும், காவல்துறையினர் அவசரம் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் அபிஜித் தீப்கே தொடர்ந்து கூறிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் அளவுடன் ஒப்பிடும்போது, காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தேவையற்றதும் அளவுக்கு அதிகமானதுமாக இருந்ததாகப் பல முன்னாள் மூத்த காவல் துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அரசியல் முடிவுகளே காவல்துறை நடவடிக்கைகளை தீர்மானிக்கிறதா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் எஸ்.டி. ரமேஷ் பிபிசியிடம் கூறுகையில், "காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால், தற்போதைய நடவடிக்கைகள் அரசியல் முடிவுகளையே பிரதிபலிக்கின்றன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பிகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் மக்கள் தவிப்பதைக் காட்டும் புகைப்படத்தைப் பார்த்தேன். எனவே, இதன் தாக்கம் டெல்லியுடன் மட்டும் நின்றுவிடவில்லை; நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

உளவுத்துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநர் யஷோவர்தன் ஆசாத்திடமும் பிபிசி இதுகுறித்துப் பேசியது.

அவரது கருத்துப்படி, போராட்டக்காரர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அவற்றை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தனது அரசியல் மேலதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்.

காவல் ஆணையர் அரசியல் கருத்துகளின் தாக்கமின்றி, சுதந்திரமாக முடிவெடுத்திருக்க வேண்டும் என்ற எஸ்.டி. ரமேஷின் கருத்தையும் யஷோவர்தன் ஆசாத் ஏற்றுக்கொண்டார்.

அவர் கூறுகையில், "ஜென் ஸி இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஜந்தர் மந்தரை விடப் பெரிய இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது நீட் தேர்வில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற முக்கியப் பிரச்னையே பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. காவல்துறையின் கடுமையான நடவடிக்கையால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பகையுணர்வு உருவாகியுள்ளது. இதனால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிட்டன" என்றார்.

அபிஜித் திப்கே, ஜந்தர் மந்தர், சிஜேபி, டெல்லி காவல்துறை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம், காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு
படக்குறிப்பு, போராட்டத்தை முன்னிட்டு, டெல்லி வீதிகளில் பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் (கோப்புக் காட்சி)

போராட்டங்கள் அரசியலாக்கப்படுவதாக பாஜக குற்றச்சாட்டு

இதற்கிடையில், தங்கள் கட்சி போராட்டங்களுக்கு எதிரானது அல்ல என்று பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், சனிக்கிழமை (அக்டோபர் 10-ஆம் தேதி) கூறுகையில், "நாங்கள் போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், தங்களது தோல்வியால் வீதிகளில் இறங்கிப் போராடும் சிலர், போராட்டங்களை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்றியுள்ளனர். அதிலும் ஒரு விசித்திரமான போட்டியே நடைபெறுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "முதல் மூன்று நாட்கள் ராகுல் காந்தி இருந்தார். அவர் சென்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் சி.ஜே.பி வந்தது. காலையிலிருந்தே அவர்களின் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மற்றவர்களும் வந்தனர்.

"அதன்பிறகு, 'நாமும் ஏன் பின்தங்கியிருக்க வேண்டும்?' என்று நினைத்து மம்தா பானர்ஜி வந்தார். தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வந்தன" என்றார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, டெல்லி: போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே

கள நிலவரத்தை மதிப்பிடுவதில் அதிகாரிகளின் பங்கு

இருப்பினும், ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் வேறொரு கோணத்தையும் முன்வைத்தனர். களத்தில் பணியாற்றும் அதிகாரிகளே அப்போதைய சூழ்நிலையை நேரடியாக மதிப்பிடுவதற்குப் பொருத்தமானவர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கள நிலவரத்தை மதிப்பிடுவதற்கு வேறு வழியில்லை. அந்த மதிப்பீடு தவறாக இருந்ததா அல்லது அரசியல் அழுத்தத்தின் காரணமாக அத்தகைய முடிவு எடுக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிப்பது கடினம்" என்றார்.

டெல்லி, காக்ரோச் ஜனதா கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம்
படக்குறிப்பு, வாக்காளர் பட்டியலின் 'சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி' தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகல் ஆகியவற்றை வலியுறுத்தி அக்டோபர் 10 அன்று டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன

'ஜென் ஸி'-இன் அரசியல் புரிதல்

'ஜென்-ஸி' இளைஞர்களுடனான சமீபத்திய மோதலின் போது, பெருமளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதை, கடந்த ஜூலை மாதம் நீட் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட கடுமையான முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றதைக் கண்டு அரசாங்கம் அடைந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அப்போது நிலைமையைக் கையாள்வதில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அரசாங்கம், இந்த முறை உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

அரசியல் ஆய்வாளர் ராதிகா ராமசேஷன் பிபிசியிடம் கூறுகையில், "இதுவரை மில்லினியல் தலைமுறையினரின் ஆதரவு பாஜகவுக்குக் கிடைத்து வந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறுவதும் வெற்றிபெறுவதுமே அந்தத் தலைமுறையினரின் முக்கியக் கவலைகளாக இருந்தன. ஆனால், ஜென் ஸி தலைமுறையினரைப் புரிந்துகொள்வது முற்றிலும் மாறுபட்ட சவாலாகும். அவர்களது லட்சியங்களும், அவர்களின் பார்வையும் முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது மிகவும் வேறுபட்டவை. அவர்களது எதிர்பார்ப்புகளையும் அரசியல் குறித்த அவர்களது பார்வையையும் பாஜகவால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் தீவிரத்தை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுவிட்டது என்ற ராமசேஷனின் கருத்துடன் அரசியல் விமர்சகர் ஆர்த்தி ஜெரத்தும் ஓரளவு உடன்படுகிறார்.

அவர் கூறுகையில், "ஜூலை மாதம் ஏராளமானோர் வீதிகளில் இறங்கிப் போராடியபோது, அரசாங்கம் பீதியடைந்து பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது. இதனால், போராட்டம் ஒரு பெரிய இயக்கமாக உருவெடுத்தது. ஆனால், இந்த முறை அரசாங்கம் மறுமுனைக்குச் சென்றுவிட்டது. தேவைக்கு அதிகமாகக் கடுமையான எதிர்வினையாற்றியதால், டெல்லியில் அச்சம் நிறைந்த சூழலை அரசு உருவாக்கிவிட்டது" என்றார்.

டெல்லி, காக்ரோச் ஜனதா கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம்
படக்குறிப்பு, அக்டோபர் 10: டெல்லியில் காவல் துறை வாகனத்திலிருந்து வெளியேற முயன்ற போராட்டக்காரர் ஒருவர்

மூத்த அரசியல் பகுப்பாய்வாளர் ஆனந்த் சஹாய் பிபிசியிடம் கூறுகையில், "அரசாங்கம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு அரசியல் செய்தியை வழங்கியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு சேர்க்கப்பட்ட மேற்கு வங்கத்தின் இரண்டு இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தனர்" என்றார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்துவதற்கு முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் போதும் கூட, "எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசியல் பாதை எப்போதும் திறந்தே இருந்தது. மக்கள் போராடும் உரிமை எந்த நிலையிலும் தடுத்து நிறுத்தப்பட்டதில்லை" என்று சஹாய் கூறினார்.

ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நடத்திய போராட்டங்கள் ஒரு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைச் செய்துள்ளன என்று ராதிகா ராமசேஷன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்திற்குள்ளேயோ அல்லது வெளியேயோ போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு. ஆனால் ராகுல் காந்தி நேரடி மோதல் பாதையைத் தேர்ந்தெடுத்தார். கோட்பாட்டு ரீதியாக, ஜூலை மாதத்தைப் போலவே பாஜக தலைமையும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால் இந்த முறை பேச்சுவார்த்தைக்கான கதவுகள் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டன. தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்தான் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது. இல்லையென்றால், காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவை தேர்தல் ஆணையம் ஏன் சந்திக்கவில்லை?" என்றார்.

அடுத்து என்ன?

டெல்லி, காக்ரோச் ஜனதா கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம்
படக்குறிப்பு, போராட்டத்தின் போது தடுத்து வைக்கப்பட்ட நிலையில் காவல் வாகனத்திலிருந்து முழக்கமிடும் அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவரான நேஹா போரா

அரசாங்கம் ஒரு கட்டத்தில் தனது வியூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று ஜெரத் கருதுகிறார். அவர் கூறுகையில், "டெல்லியில் நாளுக்கு நாள் அச்சம் நிறைந்த சூழல் நீடிக்க முடியாது. போராட்டக்காரர்களின் ஆரம்பக்கட்ட முயற்சிகளுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த மும்பை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைப் பாருங்கள். அங்கு நடைபெற்ற போராட்டம் முழுமையாக அமைதியான முறையில் நடந்து முடிந்தது. பிரஷர் குக்கரில் அழுத்தத்தைக் குறைக்க ஆவி வெளியேற அனுமதிப்பது எவ்வளவு அவசியமோ, அதைப் போன்றே போராட்டங்களுக்கான இடத்தை வழங்குவதும் அவசியம் என்பதை அரசாங்கமோ காவல்துறையோ புரிந்துகொள்ளவில்லை" என்றார்.

அரசியல் ரீதியாக நிலைமை மிகவும் சிக்கலாகிவிட்டதாக ராமசேஷன் கருதுகிறார். அவர் கூறுகையில், "நீட் விவகாரம் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் பாதித்த ஒன்றாக இருந்தது. ஆனால், மற்ற சமூகத்தினருடன் ஒப்பிடும்போது சிறுபான்மையினரும் தலித்துகளும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எனவே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் கோபமடைந்த பாஜகவின் முக்கிய வாக்காளர்கள், அரசாங்கத்தின் தற்போதைய கடுமையான அணுகுமுறையை வரவேற்கக்கூடும்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "ஏதேனும் மாறியிருக்கிறது என்றால், அது இரு தரப்புக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதுதான். எதிர்காலத்தில் அவர்களுக்கு இடையேயான இடைவெளி குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம், குறிப்பாகப் பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தங்களது கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜூலை மாதத்தில் இந்த அணுகுமுறை பின்னடைவைச் சந்தித்தது" என்றார்.

இருப்பினும், கடுமையான காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் சி.ஜே.பி. தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் மத்தியிலும், தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்தபோதிலும், இளைஞர்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று போராட்டங்களை நடத்த முடிந்ததை ஆனந்த் சஹாய் சுட்டிக்காட்டினார்.

"அவர்களின் அனைத்துத் தலைவர்களையும் காவல்துறை முன்கூட்டியே கைது செய்துவிட்டது. எனவே, தலைவர்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதற்கான பெருமை அந்த இளைஞர்களையே சேரும்" என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு