த.வெ.க. "கூட்டணிக்கு" பெயர் என்ன? - விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை

பட மூலாதாரம், TNDIPR
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஆட்சிக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளுக்கு இடையேயான கூட்டம் இன்று கோவளத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்தன.
அதற்கு முன்னதாக இன்று காலை முதலமைச்சர் விஜயை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.
'கூட்டணி தொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை'
அதன்பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்ததாகவும் தவெக தலைமையிலான கூட்டணி தொடர்பாக யாரும் தங்களிடம் பேசவில்லை என்றும் கூறினார்.
முதல்வர் விஜயை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாக கூறிய வீரபாண்டியன், "முதல்வரிடம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒப்பந்த முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினோம். நாங்கள் ஆட்சியில் பங்கெடுக்கவில்லை. தோழமைக் கட்சியாக வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளோம். இது ஜனநாயகக் கடமை. அது தொடர்கிறது." என்றார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், "விஜய் முதலமைச்சர் ஆன பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு இது. மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனக் கோரினோம். மக்கள் நிதிநிலை அறிக்கையில் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்.
காவிரி சம்மந்தமான விவகாரத்தில் முதல்முறையாக மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ளது. ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். தவெக தலைமையில் கூட்டணி அமைய இருப்பதாக செய்தி வருகிறது, இது தொடர்பாக யாரும் எங்களிடம் பேசவில்லை. நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்." என்று கூறினார்.

பட மூலாதாரம், ANI
கூட்டணி கட்சிகளுடனான சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் முதல்முறையாக ஆட்சியில் பங்கெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. எல்லோரும் நம்பிக்கை உடன் ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறார்கள். யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. இது இயற்கையான கூட்டணி, இனியும் தொடரும். எங்களுடைய கருத்துடன் ஒன்றிப்போகிற கட்சிகளை அழைத்துள்ளோம்." எனத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். கூட்டணிக்குப் பெயர் வைக்க வேண்டும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஏற்பாடு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றும் எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் ஆட்சி தொடர்வதாகவும் கூறினார்கள்." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "விசிக கருத்தியல் அடிப்படையில் தவெகவை ஆதரிக்கிறது. தவெக அரசு மதச்சார்பற்ற ஆட்சியாக இருக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு இருந்தும் பாஜக சார்பு கட்சிகளிடம் ஆதரவு கேட்கவில்லை. மதிமுக சார்பில் உள்ளாட்சிகளுக்கு நேரடி தேர்தல் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற யோசனையை முன்மொழிந்தார்கள்." என்றும் தெரிவித்தார்.

இறுதியில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், "தோழமை கட்சிகளின் முதல் கூட்டம் இது. அனைவருடைய கருத்துக்களும் முதல் கட்டமாக பரிமாறப்பட்டன. இந்தக் கூட்டம் மிகவும் நேர்மறையாக நடைபெற்றது. மூன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும், குறைந்தபட்ச செயல்திட்டம் ஏற்படுத்த வேண்டும், கூட்டணிக்குப் பெயர் வைக்க வேண்டும். அடுத்தடுத்த கூட்டங்களில் இவை பற்றி முடிவு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. தவெக அரசுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி பேசினோம். நாடாளுமன்றத்தில் செயல்படுவது பற்றி தவெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறபோது பேசுவோம்." என்றார்.

பட மூலாதாரம், ANI
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவிற்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி முதலாவதாக ஆதரவு தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து விசிக, இடதுசாரிக் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் தவெக தரப்பில் ஆதரவு கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆதரவு கடிதம் கொடுக்கப்பட்டு தவெக அமைச்சரவைப் பொறுப்பேற்றது.
இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது கூட்டணி கட்சிகளும் இடம்பெற வேண்டும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றன. ஆனால் இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுத்தன.
இந்தச் சூழலில் ஆட்சிக்கு ஆதரவளித்த மற்றும் அமைச்சரவையில் பங்கேற்ற கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























