மின் கம்பங்களில் அநாயசமாக ஏறி பழுது பார்க்கும் 'வயர்வுமன்' - யார் இவர்?

பட மூலாதாரம், PrajwalBhalerao/BBC
- எழுதியவர், பிபிசி மராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தாமங்காவ் என்பது மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம். இக்கிராமத்தில் ஒரு கோயில், ஒரு சதுக்கம், ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு மகாவிதரன் அலுவலகம் ( மகாராஷ்டிராவின் மின்சார விநியோக அலுவலகம்) உள்ளது.
மகாராஷ்டிராவின் எந்தவொரு கிராமத்திலும் பார்க்கக்கூடிய காட்சிதான் இது.
ஆனால், இந்த கிராமத்தில் பைக்கில் சென்று மகாவிதரனில் பணியாற்றும் ஒரு பெண்ணைப் பற்றி பலரும் பெருமையாகப் பேசுகிறார்கள். அவரது பெயர் ஜோதி அஹேர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மகாவிதரனில் பணியாற்றி வரும் ஜோதி, புல்தானா மாவட்டம் தாமங்காவ் கிராமத்தில் மின்சார விநியோகம் தொடர்பான புகார்களை தீர்த்து வருகிறார்.
சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மற்றும் தனது துறையில் 'பெண் வயர்மேன்' என்று அறியப்பட்டாலும், கிராம மக்களுக்கு அவர் ஒரு மகளாகவே இருக்கிறார்.
இடுப்பில் கட்டிங் பிளையர், முதுகில் இரும்புக் கம்பங்களில் ஏறுவதற்கான பூட்ஸ், தோளில் பாதுகாப்பு பெல்ட், கைகளில் பணிக்குத் தேவையான பொருட்கள் என ஜோதியின் தோற்றம் இப்போது கிராம மக்களுக்கு நன்கு பழக்கமான ஒன்றாகிவிட்டது.
கிராமச் சதுக்கத்தில் வயதான தாத்தா ஒருவர் கையை உயர்த்தி அவரை நிறுத்துகிறார். "இதை நேற்று செய்து முடித்துவிட்டாயா?" என்று கேட்கிறார்.
"முடித்துவிட்டேன்... நேற்று செய்துவிட்டேன். பன்னிரண்டு அல்லது ஒரு மணி இருக்கும்" என்று ஜோதி அஹேர் பதிலளித்துவிட்டு, அடுத்த புகாரைத் தீர்க்கும் பணிக்குத் திரும்புகிறார்.
இது பெரிய சம்பவம் ஒன்றும் இல்லை. ஆனால், தாமங்காவ் கிராமத்தில் ஜோதியின் அடையாளத்தைப் புரிந்துகொள்ள இந்தச் சம்பவம் ஒன்றே போதுமானது.
கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ அல்லது எங்காவது மின் கம்பி அறுந்தாலோ, பலரும் முதலில் அழைப்பது ஜோதியைத் தான்.
ஆண்களுக்கு மட்டுமேயானதாகக் கருதப்பட்ட பணி
பல ஆண்டுகளாக மின் விநியோகத் துறையில் களப்பணி என்பது ஆண்களுக்கான பணியாகவே கருதப்பட்டு வந்தது.
மின் கம்பங்களில் ஏறுவது, ஃபியூஸ் மாற்றுவது, அறுந்த மின் கம்பிகளைச் சரிசெய்வது, மழை மற்றும் புயலிலும் சென்று மின் விநியோகத்தைச் சீரமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் பெண்களை அதிகம் பார்க்க முடியாது.
மகாவிதரன் நிறுவனம் 2013-ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு லைன்ஸ்டாஃப் பணிகளில் வாய்ப்புகளை வழங்கத் தொடங்கியது.
அந்தக் காலகட்டத்தில், சுமார் 2,200 பெண்கள் 'எலக்ட்ரிக்கல் அசிஸ்டென்ட்' பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில், 2013-ஆம் ஆண்டு வெளியான ஒரு செய்தியில், 2,206 பெண்கள் வெவ்வேறு கட்டங்களில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
2024-ஆம் ஆண்டு வெளியான ஒரு செய்தியின்படி, மகாவிதரன் நிறுவனத்தில் சுமார் 55 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பெண்கள்.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக ஜோதியும் இருக்கிறார்.
ஆனால், அவரிடம் நாம் பேசும்போது, தாங்கள் வித்தியாசமாக ஏதோ செய்வதாக அவர் உணர்வது போல் தெரியவில்லை.
நிர்ணயிக்கப்படாத பணி நேரம்
"மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் அழைப்புகள் வரத் தொடங்கிவிடும். எங்களுடைய பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டது கிடையாது. 24 மணி நேரமும் நள்ளிரவாக இருந்தாலும் சரி, அழைப்பு வந்தவுடன் நாங்கள் செல்ல வேண்டும்"என்கிறார் அவர்.
தாமங்காவ் பிரிவில் பணியாற்றும் ஜோதியுடன் ஒரு நாள் பயணித்தபோது, இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை எங்களால் நேரடியாக அனுபவிக்க முடிந்தது.
முதல் புகார் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு வயல்வெளியில் இருந்து வந்தது. இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றோம். பின்னர் சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று, இரும்பு மின் கம்பம் ஒன்றை அடைந்தோம்.

பட மூலாதாரம், PrajwalBhalerao/BBC
மின் கம்பத்தில் ஏறுவதற்கு முன்பு, ஜோதி முதலில் அலுவலகத்தைத் தொடர்புகொண்டார்.
சம்பந்தப்பட்ட மின் இணைப்பில் மின் விநியோகத்தைத் துண்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரே, அவர் பாதுகாப்பு பெல்ட்டை அணிந்து, கையுறைகளைப் போட்டுக்கொண்டு மின் கம்பத்தில் ஏறத் தொடங்கினார்.
மின் கம்பத்தில் ஏறுவது என்பது இந்தப் பணியின் ஒரு பகுதி மட்டுமே.
சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்வது முதல், பணியை முடித்த பிறகு மின் விநியோகத்தை மீண்டும் தொடங்குவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
பணியை முடித்த பிறகு அவர் கீழே இறங்கினார். பாதுகாப்பான தூரத்திற்குச் சென்ற பின்னர் மீண்டும் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, மின் விநியோகத்தைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
சில நிமிடங்களில் அந்தப் பகுதிக்கான மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
'முதல் முறையாக கம்பத்தில் ஏறுகிறேன்'
தற்போது இரும்புக் கம்பங்களில் எளிதாக ஏறும் ஜோதி, ஆரம்பத்தில் மிகவும் பயந்துள்ளார். பயிற்சிக் காலத்தில், பயிற்சிக்காக அமைக்கப்பட்ட ஒரு கம்பத்தில் ஏறுமாறு அவரிடம் கூறப்பட்டது.
"மேடம், நான் எப்படி மேலே ஏறுவது?" என்று அவர் கேட்டுள்ளார்.
"போ... நீ கீழே விழுந்தால், உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று பதில் வந்தது.
சிரமப்பட்டு ஜோதி அந்தக் கம்பத்தில் ஏறியுள்ளார்.
அதன் பிறகு எட்டு நாட்கள் பயிற்சி எடுத்தார். "இப்போது என்னால் இரும்புக் கம்பத்தில் எளிதாக ஏற முடியும்" என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார்.

பட மூலாதாரம், PrajwalBhalerao/BBC
ஜோதியின் இடுப்பில் எப்போதும் ஒரு கட்டிங் பிளையர் இருக்கும்.
"இதுதான் என் வாழ்க்கை. இதை இல்லாமல் என்னால் எங்கும் செல்ல முடியாது" என்கிறார்.
பாதுகாப்பு பெல்ட், கையுறைகள், பூட்ஸ், எர்த்திங் ராட், கட்டிங் பிளையர் என ஒவ்வொரு பொருளும் அவருக்கு முக்கியமானது.
தன்னை அவர் ஒருபோதும் 'தைரியமானவர்' என்று அழைத்துக்கொள்வதில்லை. ஆனால், அவரது பணியைப் பார்க்கும் போது, தைரியம் என்பது அவரது அன்றாட வேலையின் ஒரு பகுதியாக இருப்பதை உணர முடிகிறது.
ஜோதி தான் சந்தித்த ஒரு சம்பவத்தை இன்றும் நினைவுகூர்கிறார்.
ஒரு நாள் மாலை, கிராமம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டிபி ஃபியூஸ் பழுதாகியிருந்தது. தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அந்த நேரத்தில் அவருடன் வேறு எந்த ஊழியரும் இல்லை.
"அப்போது எனக்கு தைரியம் வந்தது. கிராமத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் உதவிக்கு வந்தனர். நான் ஃபியூஸை பொருத்த முயன்றபோது, டிபியில் பெரிய தீப்பொறி ஏற்பட்டது. எல்லோரும் பயந்துவிட்டார்கள். எனக்கு சிலிர்த்துவிட்டது"என்று பகிர்ந்து கொண்டார் ஜோதி.
இதுபோன்ற சம்பவங்கள் ஜோதியின் பணியின் ஒரு பகுதியாக இருக்கின்றன. ஆரம்பத்தில் பயந்த ஜோதி, இப்போது இந்தப் பணிக்குப் பழகிவிட்டார்.
'நான் சீருடை அணிய வேண்டியிருந்தது'
ஜோதியைப் பொறுத்தவரை, இது வெறும் பணி மட்டுமல்ல.
சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போலவே அவருக்கும் சீருடை மீது ஈர்ப்பு இருந்தது.
"நான் போலீஸாக வேண்டும் என்று விரும்பினேன். இல்லையென்றால், ராணுவத்தில் சேர வேண்டும் என்று நினைத்தேன்."
அவர் உயரம் குறைவாக இருந்ததால் அந்தக் கனவு நிறைவேறவில்லை. ஆனால், சீருடை அணிய வேண்டும் என்ற ஆசை மட்டும் அவருக்குள் இருந்தது.
மகாவிதரன் பணியாளர் தேர்வு பட்டியலில் தனது பெயர் இடம்பெற்ற நாள் அவருக்கு இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது. "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்"என்கிறார் ஜோதி.
அன்று அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் சேர்ந்து ஐந்து முதல் ஏழு கிலோ சர்க்கரையைப் பகிர்ந்துகொண்டனர்.
ஜோதியின் தந்தை ஓட்டுநராக உள்ளார். தனது நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கினார்.
தன்னைப் படிப்பில் சராசரியானவர் என்றும், விளையாட்டில் சிறந்து விளங்கியவர் என்றும் ஜோதி கூறுகிறார். தனது குடும்பத்தில் அரசு வேலைக்குச் சேர்ந்த முதல் நபர் அவர்தான்.
ஜோதி பணியாற்றும் அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றும் சுமித் கபுதாரே, அவரைப் பற்றி பேசும்போது பெருமைப்படுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, பெண்களுக்கு களப்பணி என்பது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது.
ஆனால், ஜோதி அந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதுடன், பல நேரங்களில் தனது ஆண் சக ஊழியர்களுக்கு இணையாகவும், சில சமயங்களில் அவர்களைவிட சிறப்பாகவும் பணியாற்றுகிறார் என்று அவர் கூறுகிறார்.
"பெண்களை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்" என்கிறார் சுமித் .
தாமங்காவ் கிராமத்தில் ஜோதியுடன் நடந்து செல்லும்போது, இந்த வார்த்தைகள் உண்மை என்பதை உணர முடிகிறது.

பட மூலாதாரம், PrajwalBhalerao/BBC
கிராமப் பெண்கள் அவரைப் பெருமையுடன் பார்க்கிறார்கள்.
பலருக்கு அவர் மிகவும் பழக்கமானவராகிவிட்டதால், அவர் மின் கம்பத்தில் ஏறுவதுகூட அன்றாடக் காட்சியாகிவிட்டது.
"உங்களை வயர்மேன் என்று அழைக்கட்டுமா அல்லது வயர்வுமன் என்று அழைக்கட்டுமா?" என்று நான் ஜோதியிடம் கேட்டேன்.
அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
"மக்கள் என்னை என் பெயரில்தான் அழைக்கிறார்கள்... ஜோதி" என்றார்.
பின்னர் , "வயர்வுமன் என்று சொன்னாலும்... வயர்மேன் என்று சொன்னாலும்... நீங்கள் அதே வேலையைத்தானே செய்வீர்கள்?"என ஜோதி சாதாரணமாகக் கேட்டார்.
அவருடன் ஒரு நாள் முழுவதும் நடந்த பிறகு, ஜோதி வயல்வெளிகளில் நடந்து செல்லும் காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
ஒரு கையில் எர்த்திங் ராட், இடுப்பில் கட்டிங் பிளையர், தோள்களில் பொறுப்பு.
மெலிந்த உடல்வாகு கொண்ட அந்த இளம் பெண், அனுபவம் வாய்ந்த ஒரு பணியாளரின் நம்பிக்கையுடன் நடந்து செல்கிறார்.
தங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அதைப் பற்றி அவர் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.
"மக்களின் பிரச்னைகள் தீர்கின்றன... நாங்கள் மிகவும் திருப்தியாக இருக்கிறோம். எங்களால் அவர்களின் வேலை முடிகிறது... அவ்வளவுதான்"என்று அவர் கூறுகிறார்.
அதனால் தான் தாமங்காவ் கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மக்கள் மகாவிதரன் அலுவலகத்தை அழைக்காமல், நேரடியாக ஜோதியை அழைக்கிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































