வெளிநாட்டில் உயர்கல்வி பயில தமிழக அரசின் உதவித்தொகை பெறுவதில் இந்த ஆண்டு புதிய சிக்கல் - மாணவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
''என்னுடைய குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் என்பதே பெரிய விஷயம். வெளியூர் சென்று படிப்பதே கனவு என்ற நிலையில், எனக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 36 லட்ச ரூபாய் செலவு செய்து லண்டனில் வந்து படிக்க வைப்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி சொல்கிறேன். நன்கு படித்து, தமிழகத்தில் என்னால் முயன்ற ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதே என்னுடைய லட்சியம்!''
தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் உதவித்தொகை பெற்று லண்டனில் படித்துக் கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 2025 அக்டோபரில் லண்டனில் தான் பங்கேற்ற ஒரு நிகழ்வில் இவ்வாறு பேசிய காணொளியை பிபிசியிடம் பகிர்ந்திருந்தார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்.
ஆனால் இந்த ஆண்டில் இத்திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை பிரிட்டன் கல்வி நிறுவனங்கள் ஏற்க மறுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 12 அன்று அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அங்குள்ள வேறு சில கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி சேரவிருந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை செல்வதில் ஏற்பட்ட தாமதத்தால் காலக்கெடு முடிந்து சேர்க்கை தடை பட்டிருப்பதாகவும், தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதே கருத்தை பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலரும் பிபிசியிடம் பகிர்ந்துள்ளனர்.
இத்திட்டத்தில் தமிழக மாணவர்கள் பிரிட்டனில் உயர் கல்வி படிப்பதில் இப்போது என்ன சிக்கல்...?

பட மூலாதாரம், AnbilMahesh/X
தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறையின் கீழ் செயல்படும் ஆதி திராவிடர் நலத்துறையால் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை என்ற திட்டம், கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மாணவர்கள், உலகம் முழுவதும் உள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பளிக்கும் இத்திட்டத்தின் கீழ், சிறந்த QS தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
"இந்த ஆண்டில் 316 மாணவர்களுக்கு பிரிட்டனில் படிக்க அரசு உதவித்தொகை"

பட மூலாதாரம், VanniTamizhVCK
ஆண்டுக்கு அதிகபட்சமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.36 லட்சம் அல்லது உண்மையான செலவுத்தொகை ஆகிய இரண்டில் எது குறைவோ அதை தமிழ்நாடு அரசு வழங்குமென்பது விதி. சமூகநீதித்துறை பகிரும் தகவலின்படி, இந்த கல்விக் கட்டணமானது தமிழ்நாடு அரசால் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது. அதுதவிர, வாழ்க்கைச் செலவுகள், விசா விண்ணப்பக் கட்டணம், மருத்துவக் காப்பீடு, விமானக் கட்டணம் (economy-class) மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் ஆகியவற்றிற்கான நிதியுதவி சம்பந்தப்பட்ட மாணவருக்கு தமிழக அரசால் நேரடியாக வழங்கப்படுகிறது.
ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் செந்தில் ராஜ், பிரிட்டன் தூதரகத்துக்கு சமீபத்தில் எழுதியுள்ள கடிதத்தில் உள்ள தகவலின்படி, கடந்த ஐந்தாண்டுகளில், பிரிட்டனில் பயின்ற 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட, பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்வதற்காக 385 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்துள்ளது.
வழக்கமாக, ஜனவரியில் துவங்கி பிப்ரவரிக்குள் முதல் கட்ட உதவித்தொகை வழங்கப்படும் நடைமுறை, இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மே 5 முதல் ஜூன் 5 வரை, 437 மாணவர்கள் இத்திட்டத்துக்காக விண்ணப்பித்ததில், 375 பேர் தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டு, பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை வாய்ப்பைப் பெற்ற 316 பேர் உட்பட மொத்தம் 362 மாணவர்களுக்கு நிதியுதவிக்கான கடிதங்கள் (Sponsorship Letters) வழங்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதத்தில் நிதியுதவிக்கான கடிதங்களைப் பெற்று, அத்துடன் பல்கலைக் கழகங்களிடமிருந்து 'கல்விக்கான சேர்க்கை உறுதிப்படுத்தல்' கடிதத்தையும், விசாவையும் பெறுவதற்காக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அப்போதுதான், பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்கள், மாநில அரசால் நேரடியாக வழங்கப்படும் இந்த நிதியைப் பெற முடியாது என்று மறுப்பது மாணவர்களுக்கு தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலையில்தான் பிரிட்டன் கல்வி நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன. இதனால் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பும், அரசின் உதவித்தொகை கிடைத்தும் அங்கு சேர முடியாத நிலை பல நூறு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோல ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 12 அன்று தகவல் பதிவிட்டிருந்தார். இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாணவர் ஒருவருக்கு முதுகலை கட்டடக்கலை உயர்கல்விக்கு வழங்கப்பட்ட நிதியை ஏற்க மறுத்துள்ளதைக் குறிப்பிட்டிருந்த அவர், இந்த பிரச்னை துவங்கி ஒரு மாதமாகியும் உரிய தீர்வு காணப்படாதது கவலையளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
வேறு சில பிரிட்டன் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி சேரவிருந்த சில மாணவர்களுக்கு, அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை சென்று சேர்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் காலக்கெடு முடிந்து, சேர்க்கை தடைபட்டுள்ளதாக பதிவிட்டிருந்த அவர், மாணவர்களின் நலன் கருதி இந்த பிரச்னைகளை விரைவாக களைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பதிவு குறித்து அன்பில் மகேஸை பிபிசி தொடர்பு கொண்டபோது, அவர் சில கருத்துகளை விரிவாகத் தெரிவித்தார். கடந்த 2025 அக்டோபரில் அவர் அமைச்சராக இருந்தபோது, லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில், அங்கு இத்திட்டத்தின் கீழ் படித்துக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்த காணொளியையும் அவர் பிபிசியிடம் பகிர்ந்தார்.
''அவர்கள் பேசியது என் மனதில் பசுமையாக நினைவில் உள்ளது. அதனால்தான் அந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் இங்கிலாந்து செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, சிக்கல்களை களைய தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். ஆனால் எனக்கு கிடைத்த தகவலின்படி அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. நம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த பல்வேறு கல்வி நிறுவனங்களில், சேர்க்கைக்கான காலக்கெடு ஏற்கெனவே முடிந்து விட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இந்த கல்வியாண்டே விரும்பிய கல்லூரிகளில் சேர தீவிரமான நடவடிக்கையை தவெக அரசு எடுக்கவேண்டும்." என்று கூறினார் அன்பில் மகேஸ்.
பிரிட்டன் கல்வி நிறுவனங்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகையை ஏற்க மறுத்துள்ளது குறித்து, பாதிக்கப்பட்ட சில மாணவர்களுடன் பிபிசி தமிழ் பேசியது. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மாணவர், ''எனக்கு கடந்த ஆண்டிலேயே லண்டனில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது எனக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை. இந்த ஆண்டில் இரண்டுமே கிடைத்தது. தமிழக அரசின் நிதி வழங்கும் கடிதத்தை அனுப்பியிருந்தும் அதை அந்த கல்வி நிறுவனம் ஏற்கவில்லை.'' என்றார்.
மத்திய அரசின் ஒப்புதலை கேட்கும் பிரிட்டன் கல்வி நிறுவனங்கள்

பட மூலாதாரம், Handout
சம்பந்தப்பட்ட பிரிட்டன் கல்வி நிறுவனத்திடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். மேலும் சில மாணவர்களும் இந்த கல்வித்தொகை தொடர்பான மின்னஞ்சல்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்தனர்.
மான்செஸ்டர் கல்வி நிறுவனத்திலிருந்து (Manchester School of Architecture) வந்துள்ள மின்னஞ்சலில், ''முந்தைய தொடர்புகளின்படி, உங்கள் CAS கோரிக்கைக்குத் தேவையான அதிகாரப்பூர்வ நிதி ஆதரவிற்கான சான்றாக, உங்கள் தற்போதைய கல்வி உதவித்தொகை (scholarship) கடிதத்தை எங்களால் ஏற்க இயலாது. ஏனெனில் இந்தக் கல்வி உதவித்தொகை மத்திய அரசால் அல்லாமல் மாநில அரசு அமைப்பால் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இது பிரிட்டன் குடியேற்ற விதிகளின்படி (UK Visas and Immigration) 'அதிகாரப்பூர்வ நிதி ஆதரவாளர்' (official financial sponsor) என்பதற்கான வரையறையைப் பூர்த்தி செய்கிறதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய அரசின் சார்பாக இந்த நிதி நிர்வகிக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையிலான புதுப்பிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை கடிதத்தை உங்களால் பெற முடிந்தால், அதை மறுபரிசீலனை செய்கிறோம்.'' என்று அந்த கல்வி நிறுவனத்தின் அதிகாரி அதில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக மாநில அரசிடமிருந்து நேரடியாக நிதியைப் பெற்று வந்த பிரிட்டன் கல்வி நிறுவனங்கள், இப்போது குடியேற்ற விதிகளைச் சுட்டிக்காட்டி, கல்வி உதவித்தொகையை ஏற்க மறுத்து, இந்திய அரசின் ஒப்புதலைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் ஏற்படும் காலதாமதம் மற்றும் குழப்பங்களால் பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வழக்கறிஞர் தமிழ்வளவன் பிபிசியிடம் இதுபற்றி விளக்கினார். இதற்காக சில மாணவர்களுடன் தமிழக அரசின் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, துறை செயலாளர் சுப்பையன், ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் செந்தில் ராஜ் என பலரையும் சந்தித்து இவர் மனு கொடுத்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் தமிழ் வளவன், ''இத்தனை ஆண்டுகளாக பிரிட்டன் கல்வி நிறுவனங்கள், இந்த நிதியை நேரடியாகப் பெற்று வந்துள்ளன. இங்கிருந்து படிப்பதற்காக வாய்ப்புப் பெற்றுச் செல்லும் மாணவர்கள், அங்கேயே தங்கிவிடுகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில்தான் இப்படியொரு விசா விதியை பிரிட்டன் அரசு உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். எனது தம்பி ஒருவருக்கு கடந்த ஆண்டிலேயே பிரிட்டனில் படிக்க தமிழக அரசின் கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதற்கான கடிதத்துடன் விண்ணப்பித்தபோது, என்ன காரணம் என்பதையே சொல்லாமல், அந்த விண்ணப்பத்தை மறுப்பதாக 2025 ஜூனில் மின்னஞ்சல் வந்தது.'' என்றார்.
''இந்த ஆண்டில் கடந்த மாதம் வந்த மின்னஞ்சலில்தான், தமிழக அரசின் உதவித்தொகை என்பதால் ஏற்க முடியாது, இந்திய அரசின் ஒப்புதல் கடிதம் வேண்டுமென்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அமைச்சர் வரை கொண்டு சென்றிருக்கிறோம். தீர்வு வருமென்று காத்திருக்கிறோம்..
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் கடந்த ஜூலை 13 அன்று வெளியிட்ட செய்தியின்படி, மகாராஷ்டிராவிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரிட்டன் விசா மற்றும் குடியேற்ற விதிகள் பற்றிய விளக்கத்தின்படி, மாணவர் விசாவுக்கான அதிகாரப்பூர்வ நிதி ஆதரவாக, விண்ணப்பதாரரின் சொந்த நாட்டு அரசு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், குறிப்பிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்கும் நிதி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன் கல்வி நிறுவனங்கள், தமிழக அரசின் கல்வி உதவித்தொகையை ஏற்க மறுத்திருப்பது மட்டுமின்றி, அங்கிருந்து இந்திய அரசின் மூலமாக மாணவர்களுக்கு வரவேண்டிய ஏடிஏஎஸ் எனப்படும் கல்வித் தொழில்நுட்ப ஒப்புதல் (ATAS) சான்றும் கிடைக்கத் தாமதமாகி வருவதாகவும் சில மாணவர்கள் கூறுகின்றனர். இதனால் தங்களுக்கு உதவித்தொகை கிடைத்தும் பிரிட்டனில் படிப்பது உறுதியாகவில்லை என்கின்றனர்.
பிபிசியிடம் பேசிய மாணவர் பாலச்சந்தர், ''இந்த ஆண்டில் எனக்கு ரூ.36 லட்சம் கிடைத்ததும் நான் விண்ணப்பித்தேன். தமிழக அரசிடமிருந்து கல்வி உதவித்தொகை கிடைத்த பிறகுதான் இதற்கு விண்ணப்பிக்க முடியும். நான் ஆகஸ்ட் முதல் வாரத்தில்தான் விண்ணப்பித்தேன். அது கிடைக்க 21 வேலை நாட்களாகும். எனக்கு அங்கு சேர்வதற்கான காலக்கெடு மே மாதத்திலேயே முடிந்தவிட்டது. நான் அதை நீட்டித்து என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பிரிட்டன் பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். இதுவரை பதிலும் ஒப்புதல் சான்றும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு படிக்க முடியுமா என்பது தெரியவில்லை.'' என்றார் பாலச்சந்தர்.
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதா அல்லது நடவடிக்கை ஏதும் எடுத்துள்ளதா என்பது பற்றிய எந்தத் தெளிவான விளக்கமும் தரப்படவில்லை. ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் செந்தில் ராஜ், பிரிட்டனுக்கான இந்திய தூதரகத்திற்கு நேரடியாகக் கடிதம் எழுதியிருப்பது மட்டும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு பகிர்ந்த தொடர்பு எண்ணை அலுவல் நேரத்தில் அழைத்தும் பதில் இல்லை!
கடந்த மாதம் 26 ஆம் தேதி ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் செந்தில் ராஜ் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைப் பற்றி விளக்கி, இந்த ஆண்டில் பிரிட்டனுக்கான மாணவர் விசா நடைமுறைக்குத் தேவையான, 'அதிகாரப்பூர்வ நிதியுதவி'யாக தமிழக அரசின் கல்வி உதவித்தொகை அங்கீகரிக்கப்படாததும், இதனால் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் 'கல்விக்கான சேர்க்கை உறுதிப்படுத்தல் வழங்கப்படாததும் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
''முறையாக அமைக்கப்பட்ட ஓர் அரசின் நிதியுதவி கடிதங்களை, 'அதிகாரப்பூர்வ நிதியுதவி'யாக அங்கீகரித்து, பிரிட்டன் கல்வி நிறுவனங்களால் 'கல்விக்கான சேர்க்கை உறுதிப்படுத்தல்' வழங்க வேண்டும். அந்த அங்கீகாரம் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் தகுதியுள்ள மாணவர்கள் பிரிட்டனில் உயர்கல்வியைத் தொடர வழிவகுக்கும்; தமிழ்நாடு அரசுக்கும் பிரிட்டன் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான நீண்டகாலக் கல்வி சார் உறவை மேலும் வலுப்படுத்தும்.'' என்றும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
இதற்குத் தேவைப்படும் தகவல்கள், விளக்கங்கள் அல்லது ஆவணங்களை வழங்கவும் தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் தூதரகத்திடம் இருந்து வந்ததாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக தங்களுக்கும் ஆகஸ்ட் 15 வரையிலும் எந்தத் தகவலும் வரவில்லை என்று உதவித்தொகைக்குக் கடிதம் பெற்றுள்ள மாணவர்கள் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அமைச்சர் வன்னி அரசு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பிரிட்டன் விசா நடைமுறை தொடர்பான சந்தேகங்களுக்கு ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் கண்காணிப்பாளர் சுகன்யாவை தொடர்பு கொள்ளுமாறு'' ஒரு எண்ணைக் குறிப்பிட்டுள்ளார்.
அலுவல் நேரத்தில் மட்டும் அவரைத் தொடர்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு எண்களிலிருந்தும் அந்த எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும், அழைப்பு தொடர்ந்து துண்டிக்கப்பட்டது.
பிரிட்டன் கல்வி நிறுவனங்கள், தமிழக அரசின் உதவித்தொகையை ஏற்க மறுத்து வரும் நிலையில், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் பாரதிதாசன், தனக்கு இந்த ஆண்டுக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு (Ph.d) பயிலும் அவர் பிபிசியிடம் பேசுகையில், ''இத்திட்டத்தில் என்னுடன் தேர்வான 236 மாணவர்களில் நான் மட்டுமே ஆராய்ச்சி மாணவன். கடந்த ஆண்டில் என் ஆராய்ச்சிப்படிப்புக்கான முழுத்தொகை ரூ.35 லட்சம் எனக்குக் கிடைத்தது. ஆனால் இப்போது 5 மாதங்களாகியும் அந்தத் தொகை எனக்கு வரவில்லை. தமிழக அரசின் அதிகாரிகள் பலருக்கும் 12 மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன். எதற்கும் பதில் வரவில்லை. '' என்றார்.
''இதுவரை ஒரு ரூபாய் கூட உதவித்தொகையும் கிடைக்கவில்லை. சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசையும் என் குடும்பத்தினர் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் இதுவரை உதவித்தொகை வராதால் பெரும் சிரமத்தில் இருக்கிறேன்.' என்று அவர் கூறினார்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாமல் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிவதற்காக தமிழக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவை பிபிசி தொடர்பு கொண்டது.
அப்போது, இந்த விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், விரைவில் விரிவான பதில் தருவதாக அவருடைய உதவியாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 18 வரை எந்த பதிலும் தரப்படவில்லை.
பாரதிதாசனின் குற்றச்சாட்டுகளை மறுத்து சமூகநீதித்துறையின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் வன்னி அரசு அலுவலகத்திலிருந்து பிபிசியிடம் பகிரப்பட்ட அந்த அறிக்கையில், பாரதிதாசனுக்கு மூன்றாண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்க கடந்த 2025 ஜனவரி 9 அன்று ஒப்புதல் கடிதம் தரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆண்டில் கல்விக்கட்டணமாக ரூ.5 லட்சம், வாழ்க்கைச் செலவினம் மற்றும் இதர செலவினம் சேர்த்து ரூ.36 லட்சம் கடந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் அந்த அறிக்கை, முதல் ஆண்டுக்கான செலவின ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியும் 10 மாதங்களாக அவற்றை அவர் சமர்ப்பிக்கவில்லை என்றும், இருப்பினும் இரண்டாம் ஆண்டுக்கான கல்விக்கட்டணம் ரூ.5.57 லட்சம், வாழ்க்கைச் செலவினமாக ரூ.6.65 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அதில் விளக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தமாக கடந்த ஏப்ரல் மாதம் வரையிலும் அவருக்கு ரூ.48,22,097 தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அந்த அறிக்கை, இதுவரை அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் அவர் ஊடகங்களில் தவறான தகவலைக் கூறி வருவதாகவும் கூறியுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பாரதிதாசன், பிபிசியிடம் பேசுகையில், ''கடந்த ஆண்டுக்கான செலவின ஆவணங்களை கடந்த ஆண்டிலேயே அனுப்பிவிட்டேன். இரண்டாம் ஆண்டுக்கு கொடுத்துள்ள தொகைக்குரிய ஆவணங்களை கடந்த ஜூன் 8 அன்று அனுப்பியுள்ளேன். ஆனால் எனக்கு இந்த ஆண்டில் வரவேண்டிய ரூ.24 லட்சம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.'' என்றார். அதற்கான மின்னஞ்சல் விபரங்களையும் அவர் பகிர்ந்தார்.
பாரதிதாசன் கூறிய குற்றச்சாட்டுகளை மட்டும் மறுத்துள்ள சமூகநீதித்துறை, பிரிட்டனில் படிக்கும் மாணவர்கள் சந்தித்துள்ள பிரச்னைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































