மதுரையில் 'காவல்துறை தாக்கியதால் கோவில் பூசாரி மரணம்' என குடும்பத்தினர் குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGC
மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் 'காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டதில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்' என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மதுரை மாநகர காவல்துறை, பரமசிவம் தனது வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
பரமசிவம் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, நீதித்துறை நடுவருக்கு திங்களன்று (ஆகஸ்ட் 17) உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நீதித்துறை நடுவர் லட்சுமிபிரியா முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், 'எனது தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும், அதுவரை உடலை வாங்கப்போவதில்லை' என பரமசிவத்தின் மகன் பிரபு பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
'பரமசிவனின் இறப்பிற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
பின்னணி என்ன?

பட மூலாதாரம், UGC
"ஒரு சாதாரண பிரச்னைக்காக என் கணவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி, அவரது உயிரையே பறித்து விட்டார்கள்" என பிபிசி தமிழிடம் கூறினார் பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள்.
"அவர் ஒரு கோவில் பூசாரி. எந்தப் பிரச்னைக்கும் செல்லாதவர்." என்று அய்யம்மாள் கூறினார்.
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், தனது மனைவி அய்யம்மாள் மற்றும் மகன் பிரபு ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு அய்யம்மாள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தான் தாக்கப்பட்டதாகவும், எனவே கணவர் பரமசிவம் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி சிந்தாமணி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததாகவும் அய்யம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
"எங்களது அண்டை வீட்டார் தாக்கியதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது," என்று அய்யம்மாள் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், "அன்று (ஜூலை 17) நள்ளிரவில் காவல் நிலையத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து, 'கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும்' என எனது கணவரை மிரட்டினார்கள். ஆனால், அவர் தற்போது காவல்நிலையம் வர முடியாது எனக் கூறிவிட்டார்."
"பின்னர் ஜூலை 19-ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில் எனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் என்னையும், எனது கணவரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றி சிந்தாமணி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று எனது கண்முன்னே எனது கணவரை தலையில் கடுமையாக தாக்கினார்கள். அதனால் எனது கணவர் அங்கேயே வாந்தி எடுத்து மயங்கிவிட்டார்." என்று தெரிவித்துள்ளார்.
"பிறகு காவலர்களே மயங்கிய எனது கணவரை தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்து விட்டு மீண்டும் காவல்நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். எனது கணவரை அடித்தது குறித்து வெளியே சொன்னால் என் மீதும் எனது மகன் பிரபு மீதும் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டினார்கள். அதனால் நான் வேறுவழியில்லாமல் எனது கணவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்." என்று கூறியுள்ளார் அய்யம்மாள்.

பட மூலாதாரம், UGC
"எனது கணவர் பரமசிவம் தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலியால் துடித்தார். சில மருந்துகள் எடுத்துக்கொண்டும், அதிக தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் தொடர்ந்து இருந்து வந்ததால் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரை உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்த்தோம். எனது கணவருக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் தலையில் உள்பகுதியில் ரத்த கசிவு உள்ளதாகவும், தலையில் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்," என அய்யம்மாள் தெரிவித்துள்ளார்.
"அந்தச் சமயத்திலும் சிந்தாமணி காவல்நிலையத்தில் இருந்து ஒரு காவலர் வந்து எனது கணவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மிரட்டினார். இதனால் வேறு வழயில்லாமல் எனது கணவரை ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம். ஆனால் அவரது நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது" என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பரமசிவம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த விவகாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் சங்கீதா விசாரணை நடத்தியதாக காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், UGC
காவல்துறை கூறுவது என்ன?
இந்தச் சம்பவம் குறித்து மதுரை மாநகர காவல்துறை அறிக்கை ஒன்றை நேற்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டது.
"அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக பரமசிவம் உள்ளிட்ட இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் ஜூலை 23 அன்று இருதரப்பினரும் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்." என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
"அதனைத் தொடர்ந்து, 24.07.2026 அன்று பரமசிவம் அவரது வீட்டில் தற்செயலாக கீழே விழுந்ததால் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதாக தெரிவித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவராகவே கீழே விழுந்துவிட்டதாகவும் காவல்துறை நடவடிக்கை தேவை இல்லை என தெரிவித்தார்" என காவல்துறை தெரிவித்துள்ளது.
"மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பரமசிவம், தலையில் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, மருத்துவர்களின் அறிவுரைக்கு முரணாக மருத்துவமனையிலிருந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியேறிச் சென்றுள்ளார்."
"அதன் பிறகு ஆகஸ்ட் 11 அன்று அரைமயக்க நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 16 அன்று உயிரிழந்துள்ளார்" என்றும் காவல்துறை கூறியுள்ளது.
'உடலை வாங்க மாட்டோம்'

பட மூலாதாரம், UGC
கடந்த திங்களன்று பரமசிவத்தின் குடும்பத்தினர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் பரமசிவம் மரணம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், பரமசிவத்தை தாக்கிய சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பரமசிவம் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, நீதித்துறை நடுவருக்கு திங்களன்று உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், நீதித்துறை நடுவர் லட்சுமிபிரியா, நேற்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரமசிவத்தின் உடலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, உடற்கூராய்வுப் பணிகளையும் அவர் கண்காணித்தார்.
ஆனால் தாங்கள் உடலைப் பெறப் போவதில்லை என பரமசிவத்தின் மகன் பிரபு தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் இன்று (ஆகஸ்ட் 19) பேசிய அவர், "காவல்துறை தாக்கியதால் தான் என் தந்தை இறந்தார். அவருக்கு அதற்கு முன் உடல்நலப் பிரச்னைகள் எதுவும் இருந்ததில்லை. நீதித்துறை நடுவர் நேற்று விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே, காவல்துறை அவசர அவசரமாக ஓர் அறிக்கையை வெளியிடுகிறது. அதுவும் பொய்யான அறிக்கை" என்று அவர் கூறினார்.
"எந்தத் தவறும் செய்யாத ஒரு முதியவரை இப்படி அடித்து துன்புறுத்த காவல்துறைக்கு அதிகாரம் அளித்தது யார்? இதில் தொடர்புடைய அனைத்து காவல் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம்" என்கிறார் பிரபு.
இந்த விவகாரத்தில், நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாநகர காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































