மின்னஞ்சலின் @ குறியீட்டில் மறைந்திருக்கும் 3000 ஆண்டு வரலாறு

அந்த நேர்த்தியான குறியீடு நவீன மின்னணுத் தொடர்பின் அடையாளமாக மாறியுள்ளது; ஆனால், அதன் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.
படக்குறிப்பு, அந்த நேர்த்தியான குறியீடு நவீன மின்னணுத் தொடர்பின் அடையாளமாக மாறியுள்ளது; ஆனால், அதன் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.
    • எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

2010ஆம் ஆண்டு, நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புப் பிரிவின் மூத்த பொறுப்பாளரான பவோலா அன்டோனெல்லி ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்.

"ஒவ்வொருவரும் தங்களுடைய டிராயரில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகத் தரத்தில் ஒரு கண்காட்சியை உருவாக்க முடியும் என்பதை காட்டும் ஒரு கண்காட்சியை நடத்த விரும்பினேன்'' என்கிறார் அவர்.

"ஸ்டிக்கி நோட்ஸ், எம்&எம்'எஸ் சாக்லேட்டுகள், பேப்பர் கிளிப்புகள், ஓ.எக்ஸ்.ஓ குட் கிரிப்ஸ் (பிரபலமான சமையலறை உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம்] ஆகியவற்றைச் சேர்த்தேன். நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்ட, மிகவும் பயனுள்ள பொருட்கள் இவை. அதனால் அவற்றை நாம் கவனிப்பதே இல்லை" என்கிறார்.

"ஓர் அருங்காட்சியகம் செய்யும் பணிகளில் ஒன்று, குறிப்பாக இதுபோன்ற பொருட்களைத் தனிமைப்படுத்திக் காட்சிப்படுத்துவதன் மூலம், அவற்றுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு இடைவெளியையும், ஒரு வியப்பையும் உருவாக்குவது. அதன் மூலம் மக்கள் அந்தப் பொருட்களை வேறுபட்ட பார்வையில் பார்க்க முடியும்" என்கிறார் அவர்.

"திடீரென்று, அந்தப் பொருளுக்குப் பின்னால் இருக்கும் கதையைப் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்கள். அது ஒரு முழு பிரபஞ்சமே என்பதை உணர்கிறீர்கள்."

கண்காட்சி முடிந்ததும், ஒரு முடிவு தெளிவாகத் தெரிந்தது. @ குறியீட்டை அருங்காட்சியகத்தின் நிரந்தர சேகரிப்பில் சேர்த்துக்கொண்டார் அன்டோனெல்லி.

சற்று நின்று உங்கள் கணினி விசைப்பலகையைப் பாருங்கள்.

&, #, %, * ஆகியவை பயனுள்ள, எங்கும் காணப்படும் குறியீடுகள். ஆனால் பணத்தைக் குறிக்கும் குறியீடுகளைத் தவிர்த்துப் பார்த்தால், @ குறியீட்டைவிட அதிகமான பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட குறியீடு வேறு எதுவும் இருக்காது.

இணையத்தின் அடித்தளங்களில் ஒன்றாக இருப்பது இந்தக் குறியீடு. உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இது உள்ளது. ஒரு உரையில் உங்கள் பயனர்பெயரை இது சுட்டிக்காட்டுகிறது. இன்றுகூட நீங்கள் இதைப் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

அப்படியானால், @ குறியீடு தனது முக்கியத்துவத்தை எவ்வாறு பெற்றது?

இது முற்றிலும் நவீன காலத்தின் நிகழ்வு போல் தோன்றலாம். ஆனால், இந்தச் சிறிய அலங்கரிக்கப்பட்ட "a" எழுத்தின் சுழல்களுக்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு கதை மறைந்திருக்கிறது. நாடுகள், பண்பாடுகள், மொழிகள் எனப் பல்வேறு எல்லைகளைக் கடந்து, மனித வரலாற்றின் பக்கங்களில் இந்தக் குறியீடு பயணித்துள்ளது.

கானா ஊர் அற்புதத்தில், கிறிஸ்து பெரிய ஜாடிகளில் இருந்த தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது (மிகவும் பரிசுத்தமான ரட்சகர் தேவாலயத்தின் மொசைக் ஓவியம், இஸ்தான்புல், துருக்கி, 14-ஆம் நூற்றாண்டு).
படக்குறிப்பு, கானா ஊர் அற்புதத்தில், கிறிஸ்து பெரிய ஜாடிகளில் இருந்த தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது (மிகவும் பரிசுத்தமான ரட்சகர் தேவாலயத்தின் மொசைக் ஓவியம், இஸ்தான்புல், துருக்கி, 14-ஆம் நூற்றாண்டு).

"இது ஒரு சுருக்கக் குறியீடு" என்கிறார், 'சஸ்பீசியஸ் கேரக்டர்ஸ்: தி சீக்ரெட் ஹிஸ்டரி ஆஃப் பங்ச்சுவேஷன்' (Suspicious Characters: The Secret History of Punctuation) என்ற புத்தகத்தின் ஆசிரியர் கீத் ஹூஸ்டன்.

ஆனால், முதலில் அது எதைக் குறித்தது என்பதுதான் கேள்வி.

ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது: இதற்கு மண்பாண்டங்களுடன் தொடர்பு உள்ளது.

திராட்சை மதுவும் ஆலிவ் எண்ணெயும்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பண்டைய கிரேக்கர்கள் அம்போரா எனப்படும் ஒரு வகை மண்பாண்டத்தை அதிகம் பயன்படுத்தினர்.

நீங்கள் அவற்றைப் பார்த்திருக்கலாம்: உயரமாகவும் அழகாகவும் இருக்கும்; இரண்டு கைப்பிடிகளும் நீண்ட கழுத்துப் பகுதியும் கொண்டவை.

மது, தானியங்கள், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைச் சேமித்து வைக்க அம்போரா பானைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த நடைமுறை மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் பிற இடங்களிலும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது.

காலப்போக்கில், அம்போரா ஒரு நிலையான அளவீட்டு அலகாக மாறியது.

"வணிகர்கள், 'குறிப்பிட்ட அளவு அம்போரா பொருளை, குறிப்பிட்ட விலைக்கு உங்களுக்கு விற்கப் போகிறேன்' என்பதை அடிக்கடி தெரிவிக்க வேண்டியிருந்தது" என்கிறார் ஹூஸ்டன்.

அதை அடிக்கடி பயன்படுத்தியதால், மக்கள் 'அம்போரா' என்ற சொல்லில் உள்ள மற்ற எழுத்துகளைத் தவிர்த்து, நீண்ட வால் போன்ற பகுதியுடன் கூடிய "a" எழுத்தை வரையத் தொடங்கினர்.

1536-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி, பிரான்செஸ்கோ லாபி என்ற வணிகர் செவில்லில் இருந்து ரோமுக்கு எழுதிய கடிதத்தில், ஒரு அம்போரா அளவு மதுவின் விலை சுமார் 70 அல்லது 80 டுகாட்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்காக அவர் @ குறியீட்டைப் பயன்படுத்தியிருந்தார்.

நவீன அர்த்தத்தில் @ குறியீடு பயன்படுத்தப்பட்டதற்கான அறியப்பட்ட முதல் உதாரணம் இதுதான். ஆனால், இந்தக் குறியீட்டின் மிகப் பழமையான பதிவு இதுவல்ல.

1375-ஆம் ஆண்டைச் சேர்ந்த பல்கேரிய கையெழுத்துப் பிரதியில் @ குறியீடு இடம்பெற்றுள்ளது. ஆனால், என்ன பொருளில் அது பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. "ஆமென்" என்ற சொல்லின் முதல் எழுத்தில் செய்யப்பட்ட அலங்கார வடிவமாக அது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

165 ஆண்டுகளுக்கு முந்தைய மனாசேயின் குறிப்பேட்டிலிருந்து (Chronicle of Manasseh), 19-ஆம் நூற்றாண்டின் தட்டச்சு இயந்திரங்கள் வரை.
படக்குறிப்பு, 165 ஆண்டுகளுக்கு முந்தைய மனாசேயின் குறிப்பேட்டிலிருந்து (Chronicle of Manasseh), 19-ஆம் நூற்றாண்டின் தட்டச்சு இயந்திரங்கள் வரை.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அம்போரா பானைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனால், @ குறியீடு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது. கணக்காளர்களும் கணக்குப் பதிவுகளைப் பராமரிப்பவர்களும் பொருட்களின் விற்பனை விலையைக் குறிப்பிட இதைப் பயன்படுத்தினர்.

"இதற்கான காரணம் தட்டச்சு இயந்திரங்களில்தான் இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில் குறிப்பாக அமெரிக்காவில் அவை வேகமாகப் பரவின" என்கிறார், பிரிட்டனில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தின் அச்செழுத்தியல் பேராசிரியர் ஜெர்ரி லியோனிடஸ்.

அமெரிக்காவில் அஞ்சல் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பட்டியல்கள் பெருமளவில் அதிகரித்ததும் இதற்கு ஒரு காரணம் என்கிறார் அவர். இதனால் மிகப்பெரிய அளவில் நிர்வாகப் பணிகள் தேவைப்பட்டன. இறுதியில், தொழில்முறை தட்டச்சர்களைக் கொண்ட ஒரு தனிப் பணிப்பிரிவே உருவானது.

"தவறான தட்டச்சுக்கான வாய்ப்பைக் குறைத்து, அலுவலக நிர்வாகத்தின் செயல்திறனையும் சீரான தன்மையையும் அதிகரிப்பதற்கான ஒரு வழியாகவே தட்டச்சு இயந்திரம் இருந்தது" என்கிறார் லியோனிடஸ்.

அந்தக் காலத்தில் தட்டச்சு இயந்திரங்கள் மிகவும் சிக்கலானவையாகவும் விலை உயர்ந்தவையாகவும் இருந்தன. சில பழைய மாடல்களில் 1 அல்லது 0 என்ற எண்களுக்குக்கூட தனி விசைகள் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக "O" மற்றும் "I" ஆகிய எழுத்துகளையே பயன்படுத்தினர்.

ஆனால், @ குறியீடு முக்கியமானதாகக் கருதப்பட்டதால், அது தட்டச்சு இயந்திரங்களில் இடம்பெற்றது.

"தட்டச்சு இயந்திரங்கள் வணிகம் மற்றும் கணக்கியல் நடைமுறைகளுடன் தொடர்புடையவையாக இருந்ததால், @ குறியீடு அனைத்து தலைமுறை தட்டச்சு இயந்திரங்களிலும் தொடர்ந்து இடம்பெற்றது. காரணம், அது அந்த முக்கியமான பணியைச் செய்துகொண்டிருந்தது."

பின்னர் கணினிகளுக்கு விசைப்பலகைகள் வந்தபோது, @ குறியும் அதனுடன் வந்தது. ஆனால் நீங்கள் கணக்காளராக இல்லாவிட்டால், அதற்கு பெரிதாகப் பயன்பாடு இல்லை.

அமெரிக்க அரசின் ஆர்பநெட் திட்டத்தில் பணியாற்றிய கணினி விஞ்ஞானி ரே டாம்லின்சன் வந்தபோதுதான் நிலைமை மாறியது. ஆர்பநெட் தான் பின்னாளில் இணையத்துக்கான அடித்தளத்தை அமைத்த திட்டம்.

மக்கள் ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்ப விரும்பலாம் என்ற யோசனை டாம்லின்சனுக்கு ஏற்பட்டது. அதற்கான கோட்-ஐ எழுதும்போது, ஒரு குறிப்பிட்ட நபர் வலையமைப்பின் எந்தக் கணினியில் இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு குறியீடு தேவைப்பட்டது.

அவர் விசைப்பலகையைப் பார்த்தார். அங்கே அதற்கான குறியீடு இருந்தது.

வணிகத் துறையில் பயன்படுத்தப்பட்டு வந்த @ குறியீட்டை அவர் எடுத்து, மின்னஞ்சல் முகவரியின் நடுப்பகுதியில் பயன்படுத்தினார். 1971-ஆம் ஆண்டு முதல் மின்னஞ்சலை அனுப்பினார்.

அடுத்த அரை நூற்றாண்டில் இணையம் வளர்ந்து மனித வாழ்க்கையின் பல்வேறு தளங்களிலும் ஊடுருவியபோது, @ குறியீடும் அதனுடன் பயணித்தது.

உலகம் முழுவதும் இந்தக் குறியீடு பரவியபோது, ஒரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்தது: அதற்கு பல்வேறு புதிய பெயர்கள் உருவாகத் தொடங்கின.

பல விலங்குகளும் ஒரு கேக்கும்

இன்று இத்தாலியர்கள் @ குறியீட்டை சியோசியோலா என்று அழைக்கின்றனர். அதாவது"நத்தை" என்று பொருள். அந்த வடிவத்தைப் பார்த்தால், இந்தப் பெயர் ஏன் வந்தது என்பது எளிதாகப் புரியும்.

ஹீப்ரு மொழியில் @ குறியீட்டை சில நேரங்களில் ஸ்ட்ரூடெல் என்று அழைக்கிறார்கள். இது ஆஸ்ட்ரோ-ஹங்கேரியப் பேரரசின் பாரம்பரிய இனிப்பு உணவு. அதன் மெல்லிய மாவு சுழல் வடிவில் சுற்றப்பட்டிருக்கும்.

செக் மொழியில் இதை 'ஸாவினாக்' என்று அழைக்கிறார்கள். இது உருளை வடிவில் சுருட்டப்பட்டு, பொதுவாக சுவையான நிரப்புடன் பரிமாறப்படும் ஊறுகாய் செய்யப்பட்ட ஹெர்ரிங் மீனின் பெயர்.

ரஷ்யர்கள் சில நேரங்களில் இதை சொபாகா என்று அழைக்கிறார்கள். இதன் பொருள் "நாய்". தூங்குவதற்காகச் சுருண்டு கிடக்கும் செல்ல நாயைப் போல இந்தக் குறியீடு இருப்பதாகத் தோன்றலாம்.

ரஷ்யப் பெயர் பல ஆண்டுகளாக வேடிக்கையான நகைச்சுவைகளுக்கும் வழிவகுத்துள்ளது. நீங்கள் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது, யாராவது ஒருவர், "உங்கள் முகவரியை நாயில் எழுதுங்கள்" என்று சொன்னால், அவர் @ குறியைத்தான் குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹங்கேரியில் இது 'புழு' என்று அழைக்கப்படுகிறது; டேனிஷ் மக்கள் இதை யானையின் தும்பிக்கையாகக் கருதுகின்றனர்; கசாக் மக்களுக்கு இது நிலவின் காது ஆகும்.
படக்குறிப்பு, ஹங்கேரியில் இது 'புழு' என்று அழைக்கப்படுகிறது; டேனிஷ் மக்கள் இதை யானையின் தும்பிக்கையாகக் கருதுகின்றனர்; கசாக் மக்களுக்கு இது நிலவின் காது ஆகும்.

பெல்ஜியத்தில் ஒருவர் வசிக்கும் பகுதியைப் பொறுத்து பிளெமிஷ் (பெல்ஜிய டச்சு), பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழிகளில் வளரக்கூடும்.

அங்கு "இப்போது பலரும் இதை 'at' என்றே அழைக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் பல விஷயங்கள் ஆங்கிலமயமாகிவிட்டன" என்கிறார் சுயாதீன மேலாண்மை ஆலோசகர் நிக் பிரான்சன்.

"ஆனால் சில நாட்களுக்கு முன்பு, அதிகம் ஆங்கிலம் பேசாத வயதான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, யோசிக்காமலேயே @ குறியீட்டை 'அபென்ஸ்டார்ட்ஜே' என்று அழைக்கத் தொடங்கிவிட்டேன்" என்கிறார் அவர்.

அபென்ஸ்டார்ட்ஜே என்பது @ குறியீட்டுக்கான பாரம்பரிய டச்சுப் பெயர். இதன் பொருள் "குரங்கின் வால்".

ஆங்கிலத்தில் இதை வெறுமனே "at" என்று அழைக்கிறார்கள்

"இது மிகவும் தெளிவானது; தொடக்கத்தில் இருந்த வரையறையையே அது வெளிப்படுத்துகிறது" என்கிறார் லியோனிடஸ்.

"ஆனால், பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, அவர்களது உள்ளூர் மொழிகளில் அதை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு பெயர் தேவைப்பட்டது."

பல சந்தர்ப்பங்களில், அந்தப் பெயர் குறியீட்டின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டே உருவானது.

"கிரேக்க மொழியில் இதை 'வாத்துக் குஞ்சு' என்று அழைக்கிறோம்" என்கிறார் லியோனிடஸ்.

அடையாளங்கள்

டாம்லின்சன் தனது பணிக்காக இந்தச் சுருள் வடிவிலான குறியீட்டை பயன்படுத்தியதைப் போலவே, @ குறியீடு தொடர்ந்து புதிய பயன்பாடுகளுக்காக மறுவிளக்கம் செய்யப்பட்டு வருகிறது.

லத்தீன் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் @ குறியீட்டுக்கான சொல் அர்ரோபா. இது அம்போராவுடன் தொடர்புடைய சொல். அம்போராவும் எடை மற்றும் அளவுக்கான ஒரு நிலையான அலகாகப் பயன்படுத்தப்பட்டது.

இன்றோ, @ குறியீடு சில நேரங்களில் பாலின நடுநிலைக் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பாலினத்தைக் குறிக்காமல் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் சில சொற்களை எழுதும்போது @ பயன்படுத்தப்படுகிறது.

சில சமயங்களில், இது தனிப்பட்ட விஷயமாக இருக்கிறது.
படக்குறிப்பு, சில சமயங்களில், இது தனிப்பட்ட விஷயமாக இருக்கிறது.

ஆனால், லியோனிடஸைப் பொறுத்தவரை, @ குறியீட்டில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது.

"@ குறியீட்டுக்குப் பிறகு என்ன வருகிறது என்பதுதான் தனித்துவமானது" என்கிறார் அவர்.

ஆங்கிலத்தில் உங்கள் பெயரை எழுதும்போது, முதல் எழுத்துகளைப் பெரிய எழுத்துகளில் பயன்படுத்தி, உங்கள் முதல் பெயருக்கும் கடைசிப் பெயருக்கும் இடையில் ஒரு இடைவெளி விடுகிறீர்கள்.

"ஆனால், @ குறியீட்டை பயனர் அடையாளமாகப் பயன்படுத்தும்போது, பெயர்களில் சிறிய எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது; இடைவெளிகளையும் முற்றிலும் நீக்க வேண்டியிருக்கிறது" என்கிறார் அவர்.

"நமக்காக ஒரு தனித்துவமான சொல்லை உருவாக்க வேண்டியிருக்கிறது. நமது அடையாளத்தை நாம் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க இது நம்மைத் தூண்டுகிறது."

ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால், நீங்கள் ஏற்கெனவே அனுபவித்திருக்கக்கூடிய ஒரு விஷயம் இது: ஒருவகையில், பயனர்பெயரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் உணர்வுபூர்வமான செயல்முறையாக இருக்கலாம்.

பொதுவாக, மக்கள் தங்கள் பயனர்பெயர்கள் தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்று மட்டுமல்ல; அது தங்களுக்கு நன்றாக உணரப்பட வேண்டும், தங்களைப் பிரதிபலிக்க வேண்டும், தங்கள் ஆளுமை அல்லது அடையாளத்தின் ஒரு பகுதியை வெளிப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

நாம் யார் என்பதை வெளிப்படுத்தவும் அல்லது நமது உண்மையான அடையாளத்திலிருந்து வேறுபட்ட ஓர் இணைய அடையாளத்தை உருவாக்கவும் பயனர்பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இணையக் கலாசாரத்தை ஆய்வு செய்யும் மொழியியலாளர்கள், பயனர்பெயர்கள் நமது அடையாளத்துடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றை மாற்றுவது, இணையத்துக்கு வெளியே நமது பெயரையோ தோற்றத்தையோ மாற்றுவதைப் போல, வித்தியாசமான நெருக்கமான அனுபவமாக இருக்கலாம்.

இணையத்தின் பெரும்பாலான பகுதிகளில், @ குறியீடும் இணைய அடையாளமும் பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்துள்ளன.

"நிச்சயமாக @ குறியீட்டைப் பற்றி நமக்கு வலுவான உணர்வுகள் உள்ளன. அது நம்மைப் பற்றிய நமது புரிதலுடன் இணைந்துள்ளது" என்கிறார் லியோனிடஸ்.

நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தில் நடந்த "பிரௌவெட்: டர்னிங் பாயிண்ட்ஸ் இன் டிசைன்" (Pirouette: Turning Points in Design) என்ற கண்காட்சி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய கிரேக்க மண்பாண்டங்களில் தொடங்கிய @ குறியீட்டின் வரலாற்றை, கணினி விசைப்பலகையை விட்டு விலகி நின்று ரசிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

"இதுவரை, திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, இசை எவ்வாறு இயற்றப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது" என்கிறார் அன்டோனெல்லி.

"ஆனால், பொருட்களைப் பற்றியும் இதேபோல் புரிந்துகொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கப்படவில்லை."

"@ குறியீட்டைப் பற்றி நான் உண்மையில் தெரிவிக்க விரும்புவது, அது எனக்குள் ஏற்படுத்திய மகிழ்ச்சி, அந்தத் திடீர் உத்வேகத்தின் தருணம், நான் அனுபவித்த சந்தோஷம் மற்றும் பெருமை ஆகியவற்றைத்தான். அந்தச் சிறிய தொப்புள் போன்ற வடிவிலான குறியீட்டுக்குள் எவ்வளவு பெரிய உலகமே அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்தபோது, வடிவமைப்பு உலகத்தின் ஒரு பகுதியாக இருப்பதைப் பற்றி பெருமிதம் ஏற்பட்டது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு