விவசாயம் மனிதனின் உயரத்தைக் குறைத்ததா? வரலாற்றில் உயரத்தை மாற்றிய 2 திருப்புமுனைகள்

மனித உயரம் அதிகரித்ததும் குறைந்ததும் எப்போது?
    • எழுதியவர், கேத்தரின் ஹீத்வுட்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உங்கள் கொள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டியருடன் ஒப்பிடும்போது உங்கள் உயரம் எவ்வளவு? இன்று நீங்கள் அவர்களைவிட கணிசமாக உயரமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

ஆய்வு தரவுத் தொகுப்பான அவர் வேர்ல்ட் இன் டேட்டா வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் இன்றைய இளம் வயதினரின் சராசரி உயரம், 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவர்களின் மூதாதையர்களைவிட சுமார் 10 சென்டிமீட்டர் அதிகமாக உள்ளது.

1896 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களை ஒப்பிட்ட 2016-ஆம் ஆண்டு ஆய்வு தென் கொரியப் பெண்களும் இரானிய ஆண்களும் உயரத்தில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. தென் கொரியப் பெண்களின் சராசரி உயரம் 20 செ.மீ., இரானிய ஆண்களின் உயரம் 17 செ.மீ. அதிகரித்துள்ளது.

இதற்கு மேம்பட்ட உணவுப் பழக்கம், நோய்களின் தாக்கம் குறைந்த சூழல், தடுப்பூசி பரவல் மற்றும் பல்வேறு சமூக-சுகாதார முன்னேற்றங்களே காரணம் என்று ஸ்காட்லாந்தில் உள்ள அபர்தீன் பல்கலைக்கழகத்தின் உலக சுகாதாரத் துறையின் மூத்த விரிவுரையாளரான அரவிந்த குண்டுப்பள்ளி கூறுகிறார்.

ஆனால், மனிதர்களின் உயரம் முந்தைய ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது என்று கூற முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவுமுறை, போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் பெரிய சமூக மாற்றங்கள் மனிதர்களின் உயரத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

மனித உயரம் அதிகரித்ததும் குறைந்ததும் எப்போது?
படக்குறிப்பு, உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார விஞ்ஞானிகள் குழு ஒன்று 2016ஆம் ஆண்டு தரவுகளை ஆய்வு செய்தபோது, 20ஆம் நூற்றாண்டில் தென் கொரிய பெண்களின் சராசரி உயரம் சுமார் 20 செ.மீ. அதிகரித்திருப்பதை கண்டறிந்தது.

உயரம் - வரலாற்றைப் புரியவைக்கும் ஒரு குறியீடு

பிற வரலாற்றுத் தகவல்கள் அல்லது புள்ளிவிவரங்கள் இல்லாத சூழல்களில், மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் புரிந்துகொள்வதற்கு உயரம் ஒரு முக்கியக் குறியீடாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"ஒரு சமூகத்தின் நலனை அளவிட உயரம் ஒரு நல்ல அளவுகோல்," என்று வட அயர்லாந்தில் உள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார வரலாற்றாசிரியரும் கௌரவ பேராசிரியருமான மத்தியாஸ் ப்ளூம் கூறுகிறார்.

ஆய்வுகளின்படி, ஒருவரின் உயரத்தில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மரபணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

மீதமுள்ள சிறிய பகுதி உணவுச் சத்து, நோய்களுக்கான வெளிப்பாடு, சிறுவயது வாழ்வுச்சூழல் மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

"உயரமாக இருப்பது, பொதுவாக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை பிரதிபலிக்கிறது," என்று ப்ளூம் கூறுகிறார்.

மரபணு வேறுபாடுகளின் தாக்கத்தை சமநிலைப்படுத்துவதற்காக, ஆய்வாளர்கள் பெரிய மக்கள் தொகைகளின் சராசரி உயரத்தைக் கணக்கிடுகின்றனர். இதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற அளவுகோல்கள் வெளிக்கொணர முடியாத சமூகப் போக்குகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கண்டறிய முடிகிறது என்று அவர் விளக்குகிறார்.

விவசாயம் மனிதர்களின் உயரத்தைக் குறைத்ததா?

வரலாற்றில் இரண்டு முக்கிய திருப்புமுனைகள் இருப்பதாக ப்ளூம் கூறுகிறார்.

முதலாவது, சுமார் 10,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த புதிய கற்காலப் புரட்சி . அப்போது மனிதர்கள் வேட்டையாடி உணவு சேகரிக்கும் வாழ்க்கை முறையிலிருந்து விவசாய வாழ்க்கை முறைக்கு மாறினர்.

அத்தனைப் பழமையான காலத்தை ஆய்வு செய்யும்போது, ஆராய்ச்சியாளர்கள் மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களை நம்பியே தகவல்களைப் பெறுகின்றனர். இந்த முறைக்கு சில வரம்புகள் இருந்தாலும், பெரும்பாலான ஆய்வாளர்கள் விவசாயம் பரவியதன் பின்னர் மனிதர்களின் உயரம் குறைந்தது என்ற கருத்தில் ஒருமித்துள்ளனர்.

2022-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வு, மரபணு வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புதிய கற்கால மனிதர்கள், அதற்கு முந்தைய கால மனிதர்களைவிட சராசரியாக 2.8 செ.மீ. குறைவான உயரம் கொண்டிருந்ததாக மதிப்பிட்டுள்ளது.

மனித உயரம் அதிகரித்ததும் குறைந்ததும் எப்போது?
படக்குறிப்பு, இன்றைய துருக்கியில் அமைந்துள்ள இந்தப் பகுதியையும் உள்ளடக்கிய மேல்நிலை மெசபொத்தேமியா பிராந்தியத்தில், வேட்டையாடி சமூகங்களிலிருந்து உருவான ஆரம்பகால விவசாயக் குடியிருப்புகளில் சில தோன்றின.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விவசாயம் உணவின் கிடைப்பதை அதிகமாகவும் நிலையானதாகவும் மாற்றியிருந்தாலும், அது சிறந்த ஊட்டச்சத்தை வழங்கியதாக அர்த்தமில்லை.

வேட்டையாடி வாழ்ந்த மக்களின் உணவில் அதிகளவில் விலங்கு சார்ந்த உணவுப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அது மிகவும் முக்கியமான காரணம் என்று ப்ளூம் கூறுகிறார்.

"இது பட்டினியா அல்லது பட்டினி அல்லாத நிலையா என்ற கேள்வியைப் பற்றியது. அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, விலங்கு சார்ந்த உணவுகள் அதிகமாக இருப்பது நல்லது. ஏனெனில் அவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் உடலுக்குத் தவிர்க்க முடியாதவை," என அவர் கூறுகிறார்.

நல்ல உணவுடன் மட்டுமல்லாமல், வேட்டையாடி வாழ்ந்த மக்கள் இடமிருந்து இடம் நகர முடிந்ததால், தங்களின் கழிவுகளையும் விட்டுச் செல்ல முடிந்தது என்று ப்ளூம் கூறுகிறார். ஆனால் விவசாயிகளால் அப்படிச் செய்ய முடியவில்லை.

அவர்கள் தொற்றுநோய்களால் அதிகமாக பாதிக்கப்பட்டனர். "அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. வீடுகளையும் கால்நடைகளையும் பராமரிக்க வேண்டியிருந்தது. மேலும், அவர்கள் விலங்குகளுக்கு மிக அருகில் வாழ்ந்தனர்," என்று அவர் கூறுகிறார்.

மனித உயரம் அதிகரித்ததும் குறைந்ததும் எப்போது?
படக்குறிப்பு, பண்டைய கால மனிதர்களின் உயரத்தை மதிப்பிடுவதற்காக, ஆய்வாளர்கள் எலும்புக்கூடுகளில் காணப்படும் தொடை எலும்பு (ஃபெமர்) போன்ற நீளமான எலும்புகளின் நீளத்தை ஆய்வு செய்கின்றனர்.

போர்கள், பஞ்சங்கள், தொற்றுகள்... மீண்டும் எழுந்த சமூகங்கள்

அடுத்த பல ஆயிரம் ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளில் மனிதர்களின் உயரம் அதிகரிக்கவும் குறையவும் செய்தது. ஆனால் அவை பெரும்பாலும் நீண்டகால மாற்றங்களாக அமையவில்லை என்று ப்ளூம் கூறுகிறார்.

"நீண்டகாலமாகப் பார்த்தால் தெளிவான உயர்வு அல்லது வீழ்ச்சி போக்கு ஒன்றைக் காண முடியாது. பஞ்சங்களும் போர்களும் நடக்கும். ஆனால் அதன்பிறகு சமூகங்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுகின்றன," என அவர் கூறுகிறார்.

சில பேரழிவுகள் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தின. 14-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய மக்கள்தொகையின் பாதி வரை உயிரிழக்க காரணமான கரும்பிளேக் எனும் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலகட்டத்தின் உயரத் தரவுகள், மக்களின் உயரம் அதிகரித்ததைக் காட்டுகின்றன.

இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு எச்சங்களை அடிப்படையாகக் கொண்டு அரவிந்த குண்டுப்பள்ளி மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்படி, 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் சராசரி உயரம் சுமார் 170 செ.மீ. இருந்தது. 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது சுமார் 174 செ.மீ. ஆக உயர்ந்தது.

தரவுகள் அதிக அளவில் கிடைக்கவில்லை என்றாலும், "தொழிலாளர்களுக்கு அதிக பேரம் பேசும் ஆற்றல் கிடைத்ததால் கூலி உயர்ந்திருக்கலாம். அதனால் அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டிருக்கலாம். அதன் விளைவாகவே உயரமும் அதிகரித்திருக்கலாம்," என்று அவர் கருதுகிறார்.

'புதுமைகளின் தொகுப்பு'

மனிதர்களின் உயரத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய மாற்றம் தொழில்புரட்சியுடன் தொடர்புடையது என்று ப்ளூம் கூறுகிறார். 18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் தொடங்கிய இந்த மாற்றம் பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

தொழில்மயமாக்கல், விவசாயத்தை மையமாகக் கொண்ட பொருளாதார அமைப்புகளை தொழில்துறையை மையமாகக் கொண்ட அமைப்புகளாக மாற்றியது. இதன் விளைவாக பெருமளவிலான நகரமயமாக்கல் ஏற்பட்டதுடன், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின. சர்வதேச வர்த்தக வலையமைப்புகளும் விரிவடைந்தன.

இதன் விளைவாக மக்களின் உயரம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் அது உடனடியாக நிகழவில்லை.

தொழில்மயமாக்கலின் ஆரம்பக்கட்ட சூழல் "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லை" என்று குண்டுப்பள்ளி கூறுகிறார்.

மோசமான சுகாதார வசதிகள், நெருக்கடியான குடியிருப்புகள் மற்றும் கடுமையான தொழிற்சாலை வேலைகள் காரணமாக பல நாடுகளில் ஆரம்பகட்ட தசாப்தங்களில் மக்களின் உயரம் குறைந்தது.

பெரிய தொழில் மையங்களில் மக்கள் ஒரே படுக்கையில் தூங்கும் நிலையும் இருந்ததாக ப்ளூம் கூறுகிறார்.

பின்னர், மக்களின் வருவாய் அதிகரித்து, பொது சுகாதார நடவடிக்கைகள் விரிவடைந்தபோதுதான் உயரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டது.

 மனித உயரம் அதிகரித்ததும் குறைந்ததும் எப்போது?
படக்குறிப்பு, தொழில்புரட்சிக் காலத்தில் தொழிற்சாலைகளிலும் நிலக்கரி சுரங்கங்களிலும் நிலவிய பணிச்சூழல் மிகவும் ஆபத்தானதாக, கடின உழைப்பு தேவைப்படுவதாக இருந்தது.

மேம்பட்ட சுகாதார வசதிகள், தரமான வீட்டு வசதி, ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் மருத்துவத் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளே இதற்குக் காரணம் என்று ப்ளூம் கூறுகிறார். "இவை அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்ட பல்வேறு புதுமைகளின் தொகுப்பாகும்" என அவர் விளக்குகிறார்.

தென் கொரியாவில் தொழில்மயமாக்கல் ஒப்பீட்டளவில் பின்னரே ஏற்பட்டிருந்தாலும், அதன் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கடந்த நூற்றாண்டில் பதிவான மிகப் பெரிய உயர வளர்ச்சிகளில் ஒன்று அங்கு காணப்பட்டது. 2016-ஆம் ஆண்டின் ஆய்வின்படி, ஆண்களின் சராசரி உயரம் 15 செ.மீ. மற்றும் பெண்களின் சராசரி உயரம் 20 செ.மீ. அதிகரித்துள்ளது.

உயர வளர்ச்சி உச்சத்தை எட்டிவிட்டதா?

அவர் வேர்ல்ட் இன் டேட்டா தரவுகளின்படி, 1996-ஆம் ஆண்டு பிறந்தவர்களின் உலகளாவிய சராசரி உயரம் ஆண்களுக்கு 171 செ.மீ. மற்றும் பெண்களுக்கு 159 செ.மீ. ஆகும்.

இன்று மிகவும் மேம்பட்ட நாடுகளில் வருமானம், உற்பத்தித் திறன், பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், அதனால் சராசரி உயரத்தில் மேலும் உயர்வு ஏற்படுவது போலத் தெரியவில்லை என்று ப்ளூம் கூறுகிறார்.

அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சில ஆய்வாளர்கள், அந்த மக்கள்தொகைகள் தங்களின் மரபணுக்கள் நிர்ணயித்திருக்கக்கூடிய அதிகபட்ச உயரத்தை ஏற்கெனவே எட்டியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மற்றவர்கள், துரித உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி குறைந்த வாழ்க்கைமுறையின் அதிகரிப்புடன் இதற்கு தொடர்பு இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

எதிர்காலத்தில், மனிதர்களின் "உயிரியல் வாழ்க்கைத் தரத்தை" அளவிட உயரத்தைத் தவிர புதிய குறியீடுகள் தேவைப்படலாம் என்று ப்ளூம் தெரிவிக்கிறார்.

உதாரணமாக, சைவ மற்றும் வீகன் (பால் உட்பட அனைத்து விலங்கு சார்ந்த உணவுகளை தவிர்க்கும்) உணவுமுறைகள் அதிகரிப்பது சராசரி உயரத்தை உயர்த்த வேண்டும் என்பதில்லை.

ஆனால் அவை உடல்நல மேம்பாடு அல்லது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற பிற நன்மைகளை வழங்கக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

உலகளாவிய அளவில் பார்க்கும்போது, மனிதர்கள் தொடர்ந்து உயரமாகிக் கொண்டே இருப்பார்கள் என்ற கருத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாக குண்டுப்பள்ளி கூறுகிறார். உணவு, வறுமை, மேலும் இன்றைய உலகில் காணப்படும் "மிகவும் தீவிரமான சமத்துவமின்மைகள்" ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வளர்ச்சிக் குறைபாடு அதிகமாக இருப்பதாக அவர் கூறுகிறார். அந்த நாடுகளுக்குள்ளேயும் ஏழை மக்கள் தொகையே மிகவும் குறைவான உயரம் கொண்டவர்களாக உள்ளனர்.

வளர்ச்சிக் குறைபாடு என்பது குழந்தைகள் தங்களின் வயதுக்கேற்ற உயரத்தை எட்டாமல் இருப்பதைக் குறிக்கும். இதன் விளைவாக அவர்கள் வளர்ந்த பிறகும் குறைவான உயரம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலைச் சம்பவங்கள் உணவு உற்பத்தியையும், பால் மற்றும் பிற விலங்கு சார்ந்த உணவுப் பொருட்களைப் பெறுவதையும் பாதித்து வருகின்றன என்று குண்டுப்பள்ளி கூறுகிறார்.

"உலகளாவிய சுகாதாரத் திட்டங்களுக்கான நிதிக் குறைப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால் பல தடுப்பூசி திட்டங்கள், உணவூட்டும் திட்டங்கள் மற்றும் அகதி நலத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன," என்றும் அவர் கூறுகிறார்.

இந்த "முழுமையான நெருக்கடி சூழ்நிலை" காரணமாக, உயரம் தொடர்பான சமத்துவமின்மை பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே மட்டுமல்லாமல், ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் மேலும் அதிகரிக்கும் என்று குண்டுபள்ளி நம்புகிறார்.

"நாம் சமத்துவமின்மை நிரம்பிய உலகில் வாழ்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு