தமிழ்நாடு அரசின் புதிய உத்தரவால் பயிர்க்கடன் மறுப்பா? விவசாயிகள் புகாரும் அமைச்சர் பதிலும்

தமிழ்நாடு, விவசாயிகள், பயிர்க்கடன், டெல்டா மாவட்டங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"கடந்த 10 நாட்களாக பயிர்க்கடன் வாங்க முடியவில்லை. வேறு வங்கிகளில் பயிர்க்கடன் நிலுவையில் இல்லை என்ற சான்று கொடுத்தால் மட்டுமே கடன் கொடுப்போம் என்று கூட்டுறவு வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை" எனக் கூறுகிறார், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வாழை விவசாயி வேலுசாமி.

பயிர்க்கடன் தொடர்பாக ஜூன் 12-ஆம் தேதி கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையே இதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆனால், விவசாயிகள் இரு இடங்களில் கடன் பெறுவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன். என்ன பிரச்னை?

விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் என்ன சிக்கல்?

தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கிஷான் கிரடிட் கார்டு (கேசிசி) மூலம் 7 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.

இது தவிர, நகைக்கடன், விசைத்தறி கடன், கால்நடைக் கடன் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதை ஓராண்டு காலத்துக்குள் செலுத்திவிட்டால் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மே 26-ஆம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட உத்தரவில், "கூட்டுறவு கடன் பெறும் நபர்களின் சிபில் ஸ்கோர் (CIBIL) அடிப்படையில் கடன் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குணசேகரன், "கடனை வாங்கிய விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்திய முறைகளைக் அடிப்படையாக வைத்து கடன் தகுதி தீர்மானிக்கப்பட்டால் பெரும்பாலான விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது" எனக் கூறுகிறார்,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரிடர்களைத் தாண்டி விவசாயத்தில் முதலீட்டைத் திரும்ப எடுக்கும் வரை ஏராளமான துன்பங்களை விவசாயிகள் அனுபவிக்கின்றனர். எனவே இப்படிப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.

கடன் தர மறுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"சிபில் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கூறுகின்றன. அவ்வாறு சமர்ப்பிக்கும் போது வேறு வங்கிகளில் பயிர்க்கடன் இருப்பது தெரிய வந்தால் கடன் தர மறுக்கின்றனர். இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" எனக் கூறுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி வேலுசாமி.

இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் தென்னை, வாழை ஆகியவற்றை விவசாயம் செய்து வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய வேலுச்சாமி, " தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிகபட்சம் 3 லட்ச ரூபாய் வரை பயிர்க்கடன் தருகின்றனர். ஓர் ஆண்டுக்குள் கட்டிவிட்டால் வட்டி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறுகிறார்.

பயிர்க்கடன் பெறுவதற்கு பட்டா, சிட்டல், அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் உறுதியானதும் விவசாயிகள் அந்தத் தொகையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பெற்றுக் கொள்கின்றனர்.

பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்க்கடன் பெற்றுள்ளதாகக் கூறும் வேலுச்சாமி, "அங்கு ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கட்டினால் போதும். நான் முறையாக வட்டி செலுத்தி வருவதாக சிபில் ஸ்கோர் கூறுகிறது. ஆனால், எனக்கு வேறு வங்கியில் பயிர்க்கடன் உள்ளதாகக் கூறி கடன் தர மறுக்கின்றனர்" என்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பயிர்க்கடன் பெற முடியாததால் வேளாண்மையில் ஈடுபட முடியாமல் ஏராளமான விவசாயிகள் தவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றறிக்கையில் என்ன உள்ளது?

தமிழ்நாடு, விவசாயிகள், பயிர்க்கடன், டெல்டா மாவட்டங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

பயிர்க்கடன் தொடர்பாக கடந்த ஜூன் 12ஆம் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கேசிசி (Kisan credit card) கடன் பெறும் விண்ணப்பதாரர்கள் இதர வங்கிகளில் கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்து கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"உழவர் கடன் அட்டை மூலம் வழங்கப்படும் குறுகியகால பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, "விண்ணப்பதாரர்கள் கடன் கோரும் போது இதர வங்கிகளில் கடன் பெறவில்லை என்பதற்கான உறுதிமொழிக் கடிதம் பெற்று, அதை உறுதி செய்வதற்கு சிபில் அறிக்கையைப் பெற்று கடன் கோப்பில் இணைக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது, சிபில் அறிக்கையில் இதர வங்கிகளில் கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே பணப் பட்டுவாடாவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

உரத்திற்கு 18% ஜி.எஸ்.டி

தமிழ்நாடு, விவசாயிகள், பயிர்க்கடன், டெல்டா மாவட்டங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
படக்குறிப்பு, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன்

"தமிழ்நாட்டில் சுமார் 80% விவசாயிகள் பயிர்க் கடனுக்கான அசல் தொகையைக் கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். உரத்திற்கு 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் விவசாயப் பணிகளுக்கான செலவுகள் அதிகம்" எனக் கூறும் விவசாயி வேலுசாமி, "விவசாய செலவுகளை ஈடுகட்டுவதற்கு பொதுத்துறை வங்கிகளில் பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் மிகவும் குறைவு" என்கிறார்.

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் இந்த ஆண்டு விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெல்டா மாவட்டங்களில் என்ன சிக்கல்?

நடப்பு ஆண்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. இதற்கான செலவுகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

"ஆனால், அவர்களால் கடன் பெற முடியாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" எனக் கூறுகிறார், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடன் பெறுவதற்கு தனி நபர் உத்தரவாதம், ஜாமின்தாரர் உத்தரவாதம், பான் கார்டு, ரேஷன் கார்டு, கணினி சிட்டா ஆகியவற்றைக் கேட்கின்றனர். குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்பவர்கள் இவற்றில் சில ஆவணங்களைக் கொடுப்பது சிரமம்" எனக் கூறுகிறார்.

தமிழ்நாடு, விவசாயிகள், பயிர்க்கடன், டெல்டா மாவட்டங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

உழவர் கடன் அட்டை தொடர்பாக ஜனவரி 1, 2025 முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துமாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

சுமார் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் கடன் பெறுவதை மேம்படுத்துவதாகவும் கடன் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் கடன்களைப் பெறுவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

"விவசாயத்தை விட்டுப் பலரும் வெளியேறி வருகின்றனர். அதை ஊக்குவிப்பதற்குப் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, புதிய விதிகளால் சாகுபடியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" எனக் கூறுகிறார் பி.ஆர்.பாண்டியன்.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் மறுக்கப்படும் போது, விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

'ஒரு சர்வே எண்... 2 கடன்கள்'

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இதுதொடர்பாக பிபிசி தமிழ் பேசியது.

"பயிர்க்கடனுக்கு நிறைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் கொடுக்க நினைத்தால் அதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். பேரிடர்க் காலங்களில் பயிர்க்கடன் செலுத்த முடியாவிட்டால் அடுத்த கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்" என்கிறார்.

பயிர்க்கடனை விரைவாகச் செலுத்தும் தன்மையை வைத்து 300 முதல் 900 வரை மதிப்பெண் வரை சிபில் அறிக்கையில் குறிப்பிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய கிருஷ்ணமூர்த்தி, "ஒரே சர்வே எண்ணை வைத்துப் பல்வேறு வங்கிகளில் விவசாயிகள் பயிர்க்கடன்களைப் பெறுகின்றனர். இதைக் கண்டறிவதற்காக சிபில் அறிக்கையை அதிகாரிகள் கேட்கின்றனர். இதனால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் கூறுகிறார்.

தமிழ்நாடு, விவசாயிகள், பயிர்க்கடன், டெல்டா மாவட்டங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதில்

இதுதொடர்பாக, தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.

சிபில் ஸ்கோர் தொடர்பாகப் பல்வேறு விளக்கங்கள் துறை ரீதியாக கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், "பயிர்க்கடனுக்கு 7 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி மானியத்தில் 3 சதவிகிதத்தை மத்திய அரசும் 4 சதவிகிதத்தை மாநில அரசும் கொடுக்கின்றன" என்றார்.

மானியத்தை கூட்டுறவு வங்கிகளில் மட்டுமல்லாமல் வேறு வங்கிகளிலும் விவசாயிகள் பெறுவதாகக் கூறும் கே.ஆர். பெரியகருப்பன், "ஒரே திட்டத்தின் கீழ் இரண்டு இடங்களில் விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதால் சிக்கல் ஏற்படுகிறது" எனக் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"கடந்த ஆண்டு மத்திய அரசு தர வேண்டிய 3% வட்டி மானியத்திற்கான தொகையைப் பெறுவதற்கு மாநில அரசு முயன்றது. விவசாயிகள் இருவேறு இடங்களில் கடன் பெற்றிருந்ததாகக் கூறி அந்த தொகையை மத்திய அரசு தரவில்லை" எனவும் கே.ஆர்.பெரியகருப்பன் குறிப்பிட்டார்.

இதைத் தவிர்க்கும் வகையிலேயே சரிபார்ப்புப் பணிகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"விவசாயிகள் நான்கு வங்கிகளில்கூட கடன் பெறலாம். ஆனால், உழவர் கடன் அட்டை திட்டத்தைப் பொறுத்தவரை ஓரிடத்தில் பெறும் பயிர்க்கடனுக்கு மட்டுமே பொருந்தும்" என்றார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு