சீன இறக்குமதியை ஆபத்தான வகையில் சார்ந்திருக்கும் இந்தியா - எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தியாவில் உள்ள ஒரு பொம்மைக் கடைக்குச் சென்று பாருங்கள்.
ஒரு குழந்தைக்குப் பிடித்த புதிய பொம்மையை வாங்குவதுடன், சக்திவாய்ந்த அண்டை நாடான சீனாவுடனான சிறந்த பொருளாதார உறவுக்காக இந்தியா எவ்வாறு போராடி வருகிறது என்பது பற்றிய ஒரு புரிதலையும் நீங்கள் பெறக்கூடும்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரம் குறைந்த பொம்மைகள் இந்தியச் சந்தைக்குள் வருவதைத் தடுக்கவும், இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் மீதான வரியை இந்தியா 20 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகவும், இறுதியில் 70 சதவீதமாகவும் உயர்த்தியது.
சில்லறை விற்பனையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உள்நாட்டு நிறுவனங்களால் ஒருபோதும் போட்டியிட முடியாது என்று அவர்கள் கூறினர்.
ஆனால், அதிகரிக்கப்பட்ட சுங்க வரியும், தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளும் பலனளித்தன.
இந்தியாவின் பொம்மை இறக்குமதி 2020-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு 100 மில்லியன் டாலராக மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது.
அதே காலகட்டத்தில், ஏற்றுமதி சுமார் 129 மில்லியன் டாலரில் இருந்து 200 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு பொம்மைச் சந்தையில் 70 சதவீதப் பங்கைக் கொண்டிருந்த சீனாவைச் சார்ந்திருப்பதையும் இந்தியா பெருமளவில் குறைக்க முடிந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய அண்டை நாடுடனான வர்த்தக உறவு தொடர்ந்து சமநிலையற்றதாக மாறி வரும் நிலையில், அதைச் சீரமைக்க இந்தியா மேற்கொண்ட மற்ற முயற்சிகள் பெரும்பாலும் வெற்றியடையாத சூழலில், இந்தத் துறை அரிதான விதிவிலக்காகத் திகழ்கிறது.
இது தற்போது உலகின் மிகவும் சமச்சீரற்ற வர்த்தக உறவுகளில் ஒன்றாக இருப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் முற்றிலுமாக முறிந்தபோதிலும் , இந்தியா பல வகையான இறக்குமதி வரி விதிப்புகளையும், டிக்டாக் போன்ற சீன செயலிகளுக்குத் தடையையும் அறிவித்தபோதிலும், சீனாவுடனான அதன் வர்த்தப் பற்றாக்குறை 2020-ல் 44 பில்லியன் டாலரிலிருந்து இந்த ஆண்டு பிரமிக்க வைக்கும் வகையில் 112 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
"அரசியல், பாதுகாப்பு மற்றும் முதலீட்டு உறவுகள் மிகக் குறைந்த நிலையில் இருந்தபோதிலும், சீனாவைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் பொருளாதார நிலை தொடர்ந்து ஆழமடைந்தது" என்று வாஷிங்டனைச் சேர்ந்த ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட்டின் சீனா பகுப்பாய்வு மையத்தின் ஆய்வாளர் கெவின் சோங்ஷே லி பிபிசியிடம் தெரிவித்தார்.
இன்னும் கவலைக்குரிய வகையில், இந்த காலகட்டத்தில் இறக்குமதி இரட்டிப்பாக அதிகரித்த போதிலும், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கொரோனா தொற்றுக்கு முந்தைய அளவைவிடக் குறைவாகவே இருந்தது.
"தற்போது இந்தியாவின் தொழில்துறை இறக்குமதிகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை சீனா வழங்குகிறது. 100-க்கும் மேற்பட்ட முக்கியமான பொருட்களுக்கு இந்தியா சீனாவையே சார்ந்துள்ளது. இந்தச் சமநிலையற்ற சூழல் மேலும் மோசமடைந்து வருகிறது" என்று டெல்லியைச் சேர்ந்த குளோபல் டிரேட் அண்ட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) அமைப்பின் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
இறக்குமதி வேகமாகத் தொடர்ந்து அதிகரித்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 134 பில்லியன் டாலராக உயரக்கூடும். இதன் மூலம் இந்தியத் தொழில்துறை மீது சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, ஆசியாவின் இரு பெரிய நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்த "கட்டமைப்பு ரீதியான வர்த்தக சமநிலையின்மை மற்றும் விநியோகச் சங்கிலி பிரச்னைகளுக்கு" தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.
ஆனால், இந்தியாவின் தொழில்துறைப் பொருளாதாரத்தில் சீன இறக்குமதிகள் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இதற்கு முக்கிய காரணம், இந்தியா சீனாவிடம் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல், தொழில்துறைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் அதிகளவில் சார்ந்திருப்பதுதான்.
உண்மையைச் சொல்லப்போனால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சூரியசக்தி உபகரணங்கள் போன்ற தயாராக உள்ள பொருட்களின் இறக்குமதியை இந்தியா குறைத்துள்ளது. தற்போது உலகின் ஐபோன்களில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானவற்றை இந்தியா உற்பத்தி செய்கிறது.
"ஆனால், இந்திய தொழில்துறை உற்பத்தி பெரும்பாலும் பாகங்களை ஒன்றிணைப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களை அதிகளவில் சார்ந்துள்ளது" என்று ஸ்ரீவத்சவா கூறுகிறார்.
தொழில்துறை இயந்திரங்கள், பேட்டரி உற்பத்திக்கான மூலப்பொருட்கள், ரசாயனங்கள், சூரிய மின்கலங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.
அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) ஆய்வு அமைப்பின் தரவுகளின் படி, மின்சார இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டும் மொத்த இறக்குமதியில் 36% பங்கைக் கொண்டுள்ளன.
இதற்கு அடுத்ததாக இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் 21.7% பங்கைக் கொண்டுள்ளன. கரிம ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.
"இவற்றின் விநியோகம் தடைபட்டால், அது நுகர்வை மட்டும் பாதிக்காது; உற்பத்தியையே சீர்குலைக்கும்" என்று ஓஆர்எப்ஃ -ன் நியூ எகனாமிக் டிப்ளமசி மையத்தின் ஃபெலோ சௌம்யா பௌமிக் கூறுகிறார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி உள்ளீடுகளுக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தியை உருவாக்குவதில் இந்தியா எதிர்கொள்ளும் சிரமத்தை இது பிரதிபலிப்பதாக அவர் கூறுகிறார்.
உற்பத்திக்குத் தேவையான உள்ளீடுகள் மற்றும் மூலப்பொருட்களைச் சார்ந்திருப்பது அதிகரித்து வருவதுடன், பிற பெரும் பொருளாதாரப் போக்குகளும் இந்தியாவுக்கான சீன இறக்குமதியை அதிகரித்து வருகின்றன.
எஃகு முதல் சூரிய மின்தகடுகள் மற்றும் மின்சார வாகனங்கள் வரை பல்வேறு துறைகளில் சீனாவிடம் மிகப்பெரிய உற்பத்தித் திறன் உபரியாக உள்ளது.
அதேசமயம், அந்நாட்டின் மந்தமடைந்து வரும் பொருளாதாரத்தால் இந்த உற்பத்தியை முழுமையாக உள்வாங்க முடியவில்லை.
இதனால், உற்பத்தியாளர்கள் வெளிநாட்டுச் சந்தைகளை அதிகளவில் நாடி, பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
சீனாவின் வர்த்தக உபரி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 1 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் உற்பத்தி வேகமாக விரிவடைந்து வருவதால் இந்தப் பொருட்களில் பல இந்தியச் சந்தைக்கு வருகின்றன. அதேநேரத்தில், மேற்கத்திய சந்தைகள் வரிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை விதிப்பதும் இதற்கு ஒரு காரணம்" என்று ஸ்ரீவத்சவா கூறுகிறார்.

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
மறுபுறம், சீனச் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு இல்லாதது இந்திய நிறுவனங்களுக்கு தொடர்ந்து பெரும் சவாலாக உள்ளது.
"சீனாவில் இந்தியப் பொருட்கள் பல்வேறு விதமான வரி மற்றும் வரி சாரா தடைகளை எதிர்கொள்கின்றன. இதனால் ஏற்றுமதியை அதிகரிப்பது கடினமாகிறது" என்று லி கூறுகிறார்.
"இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், இருதரப்பு சந்தை அணுகலுக்காக தீவிர முயற்சி எடுக்கப்படாவிட்டால், அரசியல் உறவு மேம்படும் சூழ்நிலை ஏற்படலாம். ஆனால், பொருளாதார ரீதியான சார்பு அதே நிலையில் தொடரும் அபாயம் இந்தியாவுக்கு உள்ளது."
தவிர்க்கக்கூடிய இறக்குமதிகளைக் குறைப்பதற்கும், ஏற்றுமதித் திறனை மேம்படுத்துவதற்கும் நீண்ட காலத் தீர்வு உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதே என்று ஸ்ரீவத்சவா கூறுகிறார்.
ஆனால், இதற்கு ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற தொழில்துறை கொள்கையும், வலுவான அடிப்படை வசதிகளும் தேவை. குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் கடன் வசதி, திறமையான சரக்கு போக்குவரத்து மற்றும் நிலையான விதிமுறைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பகுதிகளில் இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளது.
இந்தியா சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளையும் தளர்த்தியுள்ளது. இதனால், இந்தியாவில் முதலீடுகளை விரிவுபடுத்த விரும்பும் சீன நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஆனால், இவற்றையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
"சீன உதிரிபாகங்களைப் பயன்படுத்தி வெறுமனே பொருட்களை ஒன்றிணைப்பது அல்லது விநியோக வலையமைப்புகளை விரிவுபடுத்துவது மட்டுமே முதலீட்டின் நோக்கமாக இருந்தால், அது இறக்குமதியை அதிகரித்து, சார்புநிலையை மேலும் ஆழப்படுத்தக் கூடும். எனவே, தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்நாட்டு மதிப்புக் கூட்டல், உள்நாட்டு உதிரிபாக உற்பத்தி மற்றும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்."
உடனடியாக, வர்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காக, குறிப்பிட்ட துறைகளில் சீனாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதில் இந்தியா கவனம் செலுத்தலாம் என்று லி கூறுகிறார்.
சீனாவின் மக்கள் தொகை முதுமையடைந்து வருவதுடன், சுகாதாரச் செலவுகளும் அதிகரித்து வருவதால், மருந்துத் துறை போன்றவை இந்தியாவுக்கு இயல்பான வாய்ப்பாக இருக்கலாம்.
"ஆனால், 112 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பது என்பது குறிப்பிட்ட சில ஏற்றுமதித் துறைகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகாது" என்று அவர் கூறுகிறார்.
"இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பரந்த அளவில் இயல்புநிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சந்தை அணுகல் தொடர்பாக சில சலுகைகளை வழங்க சீனா தயாராகவும் விருப்பமாகவும் இருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. அல்லது, அந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா தனது சொந்த செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























