பிரிந்து சென்ற மனைவி; ஆத்திரத்தில் இரண்டரை வயது மகனை உயிருடன் எரித்துக் கொன்றதாக தந்தை கைது

பட மூலாதாரம், Kalpesh Thakor
- எழுதியவர், பார்கவ பரிஹ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில விவரங்களும் படங்களும் மனவேதனையை ஏற்படுத்தக்கூடும்.)
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சுய்காம் பகுதியில், தந்தை ஒருவர் தனது இரண்டரை வயது மகனை உயிருடன் எரித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, அசோக் ராவல் என்பவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், அனைவருடனும் சண்டையிடும் குணம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அடிக்கடி அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை வருவது வழக்கம். இந்நிலையில், மனைவி தன்னைப் பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தனது இரண்டரை வயது மகனைத் தீயிட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவரின் சித்தப்பா பாபுபாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "எனது அண்ணன் மகன் காதல் திருமணம் செய்துகொண்டு, எங்களிடம் இருந்து தனியாக வசித்து வந்தார். இருப்பினும், அவரது மகனை குடும்பத்தினர் அனைவரும் மிகவும் நேசித்தார்கள். மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த அசோக், தனது சொந்த மகனை உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டு, உடலைச் சுடுகாட்டில் புதைத்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், சுய்காமில் உள்ள ராவல்வாஸ் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக அசோக் ராவலை கைது செய்தனர். மேலும், புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலையும் மீட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக, ராவல் குடும்பத்தினரிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் பிபிசி பேசியது.

பட மூலாதாரம், Kalpesh Thakor
கட்ச் பகுதியிலுள்ள முந்த்ராவில் தனியார் நிறுவனம் ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரியும் 40 வயதான பாபுபாய் கூறுகையில், "எனது சகோதரரும் அவரது மனைவியும் இறந்த பிறகு, அசோக்கை நாங்கள்தான் வளர்த்தோம். உடல் உழைப்பு சார்ந்த வேலைக்காக அவன் ஹிம்மத் நகருக்குச் சென்றிருந்தான். அங்கு ரமிலா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, மீண்டும் இங்கு வந்துவிட்டான்" எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "அவனுக்குப் போதைப் பழக்கம் இருந்ததால், ஹிம்மத் நகரில் எங்களிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வந்தான். சில காலத்துக்கு முன்பு சுய்காமுக்கு திரும்பி வந்த அவன், எங்கள் வீட்டுக்கு அருகிலேயே தற்காலிகக் குடிசை ஒன்றை அமைத்து, மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தான்.
அவர்களது மகன் நாவ்கன், எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தான். குறிப்பாக, என் தாய்க்கு பேரன் நாவ்கனை மிகவும் பிடிக்கும்" என்றார்.
பிபிசியிடம் பேசிய பாபுபாயின் உறவினரான தாகிபென் கூறுகையில், "அசோக்குக்கு போதைப்பழக்கம் இருந்தது. போதையில் இருக்கும்போது எங்களுடன் சண்டைபோடுவான். ஒரு கட்டத்தில், எங்களுடனான உறவையே துண்டித்துக்கொண்டான். அவனது மனைவி ரமிலா எங்களிடம் பேச முயன்றால், அவளிடமும் சண்டைபோடுவான். அவனது சண்டையிடும் குணம் மற்றும் போதைப்பழக்கம் காரணமாக, அவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சண்டையில் ரமிலா கோபித்துக் கொண்டு அவனைப் பிரிந்து, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்," என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "நவராத்திரி சமயமாக இருந்ததால், எனது மைத்துனர் பாபுபாய், அம்மனுக்குப் படைப்பதற்கான பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கட்ச் பகுதியில் இருந்து சுய்காமுக்கு வந்துகொண்டிருந்தார். நாங்கள் அவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென நாவ்கன் அலறும் சத்தம் கேட்டது. அப்போது, அசோக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடுவதைப் பார்த்தோம். நான் அவனை அழைத்தபோது, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினான்.

பட மூலாதாரம், Getty Images
அதே நேரத்தில், எனது மைத்துனர் அங்கு வந்து சேர்ந்தார். நாங்கள் பல மருத்துவமனைகளில் தேடிப் பார்த்தோம். ஆனால், எங்கும் அசோக்கை காணவில்லை" என்று தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்தைப் பற்றி பாபுபாய் கூறுகையில், "மருத்துவமனைகளில் தேடிவிட்டு நாங்கள் திரும்பியபோது, தண்ணீர் குடிப்பதற்காக வீட்டுக்குள் சென்றேன். அப்போது, அசோக் தனது மகனுடன் கட்டிலில் அமர்ந்திருந்தான். எனது உறவினரான தாகிபென், நாவ்கனின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கதறினார். நான் சிறுவனை நெருங்குவதற்குள் அவன் உயிரிழந்துவிட்டான். கடுமையான தீக்காயங்களால் அவனது உடல் முழுவதும் கருகியிருந்தது" என்றார்.
"நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அசோக் பதிலளிக்கவில்லை. மாறாக, சிறுவனைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அன்று இரவு, சிறுவனின் உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதை அறிந்தோம். எனது உறவினரான தாகிபென், 'அவன் நாவ்கனை தீவைத்துக் கொன்றுவிட்டான்' என்று கூறினார்.
அசோக்கின் வீட்டில் பெட்ரோல் இருந்த காலி கேன் ஒன்றைக் கண்டெடுத்தோம். இதையடுத்து, உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் பிறகு காவல்துறையினர் அசோக்கை கைது செய்தனர்" என்று பாபுபாய் தெரிவித்தார்.
பாபுபாய் ராவல் அளித்த புகாரில், "நாவ்கனின் உடலை அடக்கம் செய்வதற்காக நாங்கள் நான்கைந்து பேர் மட்டுமே சுடுகாட்டுக்குச் சென்றோம். வீட்டுக்குத் திரும்பிய பிறகுதான், அசோக் தனது சொந்த மகனை வளர்ப்பதைச் சுமையாகக் கருதியதால், அவனைத் தீவைத்துக் கொன்றுவிட்டதை அறிந்தோம். எனவே, இந்தச் சம்பவம் குறித்து சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Kalpesh Thakor
நடந்தது என்ன?
தராத் துணைக் காவல் கண்காணிப்பாளர் வரோதாரியா கூறுகையில், "சம்பவம் நடந்த அன்று இரவு, அசோக்கின் மாமா காவல் நிலையத்துக்கு வந்து, தனது மருமகன் அசோக், தனது சொந்த மகனையே உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டதாகப் புகார் அளித்தார். அவரது புகாரைப் பெற்றுக்கொண்டோம். அவர்களுடைய சமூக வழக்கப்படி, சிறுவனின் உடல் சுடுகாட்டில் புதைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளைச் சரிபார்த்த பிறகு, அன்றிரவே புகாரைப் பதிவு செய்தோம். சட்ட நடைமுறைகளை முடித்ததும், அதிகாலை 2 மணிக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், சிறுவனின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்குக் காவல்துறையினரை அனுப்பினோம். அக்டோபர் 15-ஆம் தேதி சிறுவனின் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அசோக், ஆரம்பகட்ட விசாரணையின்போது, குடும்பப் பிரச்னைகள் காரணமாகத் தனது மகனை உயிருடன் எரித்ததாகக் கூறியுள்ளார். கடுமையான தீக்காயங்களால் சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தக் குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சிறார் நீதிச் சட்டத்தின் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை தொடர்பான பிரிவு 75ஐ, இந்த வழக்கில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து நீதிமன்றத்துக்கும் தெரிவித்துள்ளோம். குற்றப் பத்திரிகையிலும் இந்தப் பிரிவு சேர்க்கப்படும்.
அசோக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஏன் குழந்தையைக் கொன்றார் என்பதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம். இதன் பின்னணியில் உள்ள ஆழமான காரணங்களைப் புரிந்துகொள்ள மனநல மருத்துவரின் உதவியையும் கோர திட்டமிட்டுள்ளோம்.
சிறுவனின் உடற்கூராய்வு முடிந்துள்ளது. தீக்காயங்களே மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தடயவியல் ஆய்வு மற்றும் உடற்கூராய்வின் இறுதி அறிக்கைகள் ஒரு வாரத்துக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவை கிடைத்ததும், உரிய சட்டப்பிரிவைச் சேர்த்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வோம். வழக்கின் விசாரணை விரைவாக நடைபெறுவதை உறுதி செய்வோம்" என்று கூறினார்.
பிபிசியிடம் பேசிய மனநல மருத்துவர் பிரசாந்த் பிமானி, இதுபோன்ற சம்பவம் 'மிகவும் அரிதானது' என்று குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப வரலாற்றில், அவரது பெற்றோரும் மாமா ஒருவரும் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொரு மாமா மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அசோக் சிறுவயதிலிருந்தே மனநலப் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இருப்பினும், தினக்கூலி வேலை செய்து பிழைக்கும் சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பம் என்பதால், அவருக்கு மனநலச் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அசோக்குக்கு போதைப்பொருள் பயன்படுத்திய வரலாறு இருந்ததாகவும், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அசோக்கைப் போன்றவர்கள் தீவிரமான அச்சம் மற்றும் சந்தேக உணர்வுகளால் பாதிக்கப்படக்கூடும் என்றும், அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கலாம் என்றும் டாக்டர் பிமானி கூறினார்.
அசோக் தனது குழந்தைப் பருவத்தில் ஏதேனும் அதிர்ச்சிகரமான அனுபவத்தைச் சந்தித்திருக்கலாம் என்றும், அது அவருக்கு மனநலப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மனநலப் பாதிப்புடன் போதைப்பொருள் பயன்பாடும் இணைந்ததால், அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனது மகனுக்குத் தீ வைத்திருக்கலாம் என்றும் டாக்டர் பிமானி கருதுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































