You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிசிஎஸ் ஊழியர்கள் மீது பாலியல் கொடுமை குற்றச்சாட்டு - ஒரு பெண் உட்பட 7 பேர் கைது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் எட்டு பெண்கள் மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தங்களது அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மிரட்டப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மற்றும் மன ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் அந்தப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுவரை இந்த விவகாரத்தில் மொத்தம் 9 முதல் தகவல் அறிக்கை பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஊழியர்கள், மனிதவளத்துறையைச் சேர்ந்த சில நபர்கள் என பலர் அடங்குவர்.
பாலியல் வன்கொடுமை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி பழகுதல், மோசடி மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதேசமயம் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு பெண் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஊழியரின் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஒரு பெண் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களின் வழக்கறிஞர்களது கருத்துகளைப் பெற பிபிசி மராத்தி முயற்சி செய்து வருகிறது. அவர்களின் பதில் கிடைத்தவுடன் இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும்.
புகார்தாரர் கூறியிருப்பது என்ன?
புகார் அளித்த பெண், 2023-ஆம் ஆண்டு முதல் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
முதல் தகவல் அறிக்கையின்படி, "அந்தப் பெண்ணிற்கு 2022-ல் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே கல்லூரியில் படித்த நண்பர்கள். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், அந்தப் பெண்ணிற்குத் தனது நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், 2022 ஜூலை மாதத்தில் அவர் அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொள்ள விரும்புவதாகக் கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அந்தப் பெண் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து யோசித்துச் சொல்வதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்."
மேலும் அந்த முதல் தகவல் அறிக்கையில், "அதன்பிறகு, கல்லூரி முடிந்ததும் அந்தப் பெண்ணை அடிக்கடி சந்திப்பிற்கு அவர் அழைத்துள்ளார். படிப்பு முடிந்த பிறகு, அதே நிறுவனத்தில் நேர்காணலில் பங்கேற்கச் சொன்னதன் அடிப்படையில், அந்தப் பெண் அங்கு உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்திலேயே குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரின் நண்பர்களான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை அந்தப் பெண் சந்தித்துள்ளார். இவர்கள் நால்வரும் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து உணவகத்திற்குச் செல்வது மற்றும் சுற்றுலா செல்வது போன்றவற்றை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
"இந்தக் காலக்கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்ட நபரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, 'உன்னுடைய மதம் மோசமானது, எங்களுடைய மதம் சிறந்தது' என்று அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளனர்" என்றும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் மதம் குறித்துப் பல அவமதிப்புக்குரிய கருத்துகளும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண்ணை ஒரு சுற்றுலா விடுதிக்கு அழைத்துச் சென்று அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
"இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அவரது நண்பர் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர்களது உறவு குறித்துப் பெண்ணின் குடும்பத்தாரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி, தானும் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார்" என்றும் புகார் எழுந்துள்ளது.
"அந்த இரண்டு நண்பர்களும் அந்தப் பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்."
இந்தக் காலக்கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னிடம் நெருக்கத்தை அதிகரிக்கத் தொடர்ந்து முயன்றதாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
'குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏற்கெனவே திருமணம்'
பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, 2026 பிப்ரவரி மாதத்தில் அவருக்கு மற்றொரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதன் மூலமே, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அந்தப் பெண் அந்த ஆணிடம் கேட்டபோது, "உன்னைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை," என்று கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், அவரது நண்பர் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் சேர்ந்து தனது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்வதாகப் பொய் வாக்குறுதி அளித்துத் தன்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
9 முதல் தகவல் அறிக்கை
இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 9 முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
எஃப்ஐஆர் 1: மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மிரட்டல் விடுத்தல், உடலுறவு கொள்ளுதல் மற்றும் அலுவலக வரவேற்பு அறையில் தவறாக நடந்துகொள்ளுதல்.
எஃப்ஐஆர் 2: இரண்டு நபர்கள் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு மற்றும் புகாரை மறைக்க முயன்றதாக மனிதவளத்துறை மீது புகார்.
எஃப்ஐஆர் 3: தனிப்பட்ட மற்றும் திருமண வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துகள், குறிப்பாகக் குழந்தையின்மை குறித்து இழிவாகப் பேசுதல்.
எஃப்ஐஆர் 4: தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவமானகரமான கேள்விகளை எழுப்புதல், உடல் மற்றும் அந்தரங்க உறுப்புகள் குறித்து சைகை செய்தல்.
எஃப்ஐஆர் 5: குறிப்பிட்ட மதம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள், குறிப்பிட்ட மதச் சடங்குகளைச் செய்ய வற்புறுத்துதல், அசைவ உணவை உண்ணக் கட்டாயப்படுத்துதல் மற்றும் மதமாற்றத்திற்கு அழுத்தம் கொடுத்தல்.
எஃப்ஐஆர் 6: பெண்ணின் உடல் குறித்து ஆபாசமான கருத்துகளைத் தெரிவித்தல், வேண்டுமென்றே தொடுதல் மற்றும் பாலியல் சீண்டல்.
எஃப்ஐஆர் 7: பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல், ஆபாசக் கருத்துகள் மற்றும் பணியிடத்தில் தவறான முறையில் தொடுதல்.
எஃப்ஐஆர் 8: தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கேள்விகள் எழுப்புதல், காதல் மற்றும் உடலுறவு கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தல்.
எஃப்ஐஆர் 9: பணியிடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டுதல், மோசமாக நடத்துதல் மற்றும் உடல் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தல்.
78 மின்னஞ்சல்கள்
இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நாசிக் நீதிமன்றம் அவரது போலீஸ் காவலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
நிறுவனத்தின் சர்வரில் இருந்து இந்த பெண்ணிற்கு 78 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது, அவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் இந்தப் பெண் தொடர் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட புகார்தாரருக்கு உதவ முற்படுவதற்குப் பதிலாக, அவரது குரலை ஒடுக்க இந்தப் பெண் முயன்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அந்தப் பெண்ணின் வழக்கறிஞர், "எங்கள் தரப்பு நபர் மனிதவளத் துறையில் பணியாற்றவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரின் கூற்றுப்படி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட 'பாஷ்' குழுவில் 2026-ஆம் ஆண்டு முதல் அவர் உறுப்பினராக இருந்துள்ளார்.
அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், அந்த 78 மின்னஞ்சல்கள் ஏற்கனவே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் அறிக்கை
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நிறுவனத்தில் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தைக்கும் எதிராக கடுமையான கொள்கையைப் பின்பற்றுகிறோம். பணியிடத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலன் ஆகியவற்றிற்கு நாங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறோம்," என்று தெரிவித்துள்ளது.
நாசிக் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக உள்விசாரணை தொடங்கப்பட்டதாகவும், விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் கூறியுள்ளது.
மேலும், உள்ளூர் காவல்துறை மற்றும் புலனாய்வு முகமைகளுக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
அதே சமயம், ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பாபா சையத், இந்த விவகாரத்தை ஒரு "தவறான புரிதல்" என்று குறிப்பிட்டதுடன், இது குறித்து மேலதிக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு