You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடற்படையை அழித்ததாக டிரம்ப் கூறினாலும் இரான் எப்படி 3 கடல்களில் அச்சுறுத்தல் விடுக்க முடிகிறது?
- எழுதியவர், கோன்சே ஹபிபியாசாத், ஃபிராங்க் கார்ட்னர்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் ஓமன் கடலில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்படும் என இரான் ராணுவம் அச்சுறுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்து,"இரானின் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை" உருவாக்கினால், அது "போர் நிறுத்தத்தை மீறுவதற்கான ஒரு முன்னோடியாக" அமையும் என்று இரானில் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் நாட்டின் மிக உயர்ந்த செயல்பாட்டுக் கட்டளையகமான காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்துல்லாஹி கூறியுள்ளார்.
இதன் விளைவாக, இரானின் ஆயுதப் படைகள் "பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடலில் எந்தவொரு ஏற்றுமதி அல்லது இறக்குமதியையும் தொடர அனுமதிக்காது" என்று அப்துல்லாஹி மேலும் கூறினார்.
அவர் குறிப்பிட்ட நீர்நிலைகள் ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், எந்தெந்த நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை திங்களன்று தொடங்கியது.
முதல் 24 மணிநேரத்தில் "எந்தக் கப்பல்களும் முற்றுகையைத் தாண்டிச் செல்லவில்லை" என்றும், ஓமன் வளைகுடாவில் ஆறு வணிகக் கப்பல்கள் திருப்பி விடப்பட்டதாகவும் புதன்கிழமை அன்று அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
அப்துல்லாஹி குறிப்பிட்ட அமெரிக்க - இரான் போர் நிறுத்தம், இரான் மற்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கிட்டத்தட்ட ஆறு வார கால மோதலுக்குப் பிறகு ஏப்ரல் 8 அன்று அறிவிக்கப்பட்டது.
இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்க - இரான் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
உத்தி என்ன?
அமெரிக்கா இரானின் கடற்படையை முற்றிலும் அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறினாலும், இன்னும் இரானால் எப்படி மூன்று கடல்களில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்க முடிகிறது?
ஆனால், இதற்கு இரானுக்கு வழக்கமான கடற்படை அவசியமில்லை.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வளைகுடா பகுதியில் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இவர்கள் சிறப்பு நடவடிக்கைகளுக்காகப் பயிற்சி பெற்றுள்ளனர்.
சிறிய மற்றும் ரகசிய குழுக்கள் மூலம் கப்பல்களில் கண்ணி வெடிகளை பொருத்துவது, வெடி பொருட்கள் கொண்ட மலிவு விலை டிரோன்களை ஏவுவது போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் கடற்கரையில் மறைவான இடத்தில் இருந்து திடீர் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவர்கள்.
மேலும், ஏமனில் உள்ள ஹூத்தி குழுவும் இரானின் கூட்டாளியாக உள்ளது. இரானை போலவே இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை இவர்கள் கொண்டுள்ளனர்.
மிகப்பெரிய அபாயம் என்னவென்றால், ஹூத்திகள் மீண்டும் முழுமையான தாக்குதலை தொடங்கினால் செங்கடலில் செல்லும் கப்பல்கள் பெரிய ஆபத்தில் சிக்கும், உலக வர்த்தகம் பாதிக்கப்படும்.
செளதி அரேபியா தினமும் சுமார் 7 மில்லியன் பேரல்கள் எண்ணெயை செங்கடலில் உள்ள யன்பு துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்கிறது.
இந்த பாதை பாதிக்கப்பட்டால், உலக பொருளாதாரத்துக்குக் கடுமையான தாக்கம் ஏற்படும்.
டிரம்ப் கூறியது என்ன?
இரானின் அச்சுறுத்தல்களுக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்ட 'பாக்ஸ் பிசினஸ்' உடனான நேர்காணலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலதிக விவரங்களை வழங்காமல், ஹோர்மூஸ் நீரிணை "திறக்கப்படுகிறது" மற்றும் "கப்பல்கள் திரும்பி வருகின்றன" என்று கூறினார்.
இரான் விஷயத்தில், "நாங்கள் இன்னும் முடிக்கவில்லை" என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கு "மிகவும் நெருக்கமாக" இருப்பதாகத் தான் கருதுவதாகவும், அமெரிக்கா இரானுடன் ஒரு "சிறந்த ஒப்பந்தத்தை" ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு