வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு தராததால் அதிருப்தி; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், Oli SCARFF / AFP via Getty Image
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், 'லிட்டில் மாஸ்டர்' என்று அழைக்கப்படுபவருமான சுனில் கவாஸ்கர் கூறுகையில், "வைபவ் சூர்யவன்ஷி தனது சர்வதேச அறிமுகத்திற்காக எவ்வளவு காலம் காத்திருக்க நேரிடுகிறதோ, அந்த அளவுக்கு அவர் மீதான அழுத்தம் அதிகரித்துக்கொண்டே செல்லும்," என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் மற்றும் இலங்கை சுற்றுப்பயணத்தில் 'இந்தியா ஏ' அணிக்காகச் சிறப்பாக விளையாடிய பிறகு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைத்தது.
ஆனால், அயர்லாந்துக்கு எதிராக நடந்த இரண்டு டி-20 போட்டிகளிலும் அவருக்கு விளையாடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன; மேலும் அணி நிர்வாகத்தின் முடிவுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில், புதன்கிழமை அன்று அவர் மீண்டும் விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை.
செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்டில் நடந்த இந்தப் போட்டி மழையின் காரணமாக முழுமையாக நடைபெறவில்லை.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 189 ரன்கள் எடுத்தது.
இருப்பினும், மழையின் காரணமாக இங்கிலாந்தின் இன்னிங்ஸ் தொடங்கப்படாமலேயே போனது. இதனால், இந்தப் போட்டி எந்தவித முடிவும் இன்றி கைவிடப்பட்டது.
இந்திய மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், Mark Cosgrove/News Images/NurPhoto via Getty Images
சுனில் கவாஸ்கர் 'சோனி ஸ்போர்ட்ஸ்' ஊடகத்திடம் கூறுகையில், "அவருக்கு (சூர்யவன்ஷி) எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அவர் மீது அழுத்தம் அதிகமாகவே இருக்கும். ஆனால், 15 வயதில் இதைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட மாட்டீர்கள். இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தால், உடனடியாகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அந்தச் சவால் அவர் முன்னால் உள்ளது," என்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியும், அயர்லாந்துக்கு எதிரான தொடரிலேயே சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். அவரை விரைவில் களமிறக்க வேண்டும் என்பது அவரது கருத்து.
சோனி ஸ்போர்ட்ஸில் அவர் கூறுகையில், "அவர் அயர்லாந்தில் விளையாடியிருக்க வேண்டும். அங்குள்ள ஆடுகளங்கள் மெதுவாகவும், மென்மையாகவும் இருந்தன. வைபவ் அங்கு விளையாடியிருந்தால், நீண்ட சிக்ஸர்களை விளாசியிருப்பார்," என்றார்.
மேலும் அவர், "ஐபிஎல் தொடரில் அனைத்து பந்துவீச்சாளர்களையும் அவர் துவம்சம் செய்துள்ளார். எந்த வேகப்பந்து வீச்சாளரை அவர் விட்டுவைத்தார்? அப்படிப்பட்ட வீரரை நீங்கள் பெஞ்சில் அமரவைத்திருக்கிறீர்கள்," என்று சாடினார்.

பட மூலாதாரம், Prodip Guha/Getty Images
சூர்யவன்ஷியிடம் 'எக்ஸ்-பேக்டர்' (தனித்திறமை) இருப்பதாகவும், எந்தவிதமான சுமையுமின்றி அவர் விளையாடுவதாகவும் சாஸ்திரி குறிப்பிட்டார். "அவருக்கு வயது 15 தான். அவருக்குப் பயமே இல்லை. அவர் 2-3 ஓவர்கள் நின்றாலே, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு அதிரடி தொடக்கத்தைத் தருகிறார். அவருக்கான இடத்தைப் பெற்றுத் தந்தே ஆக வேண்டும்," என்றார்.
இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டிக்கு முன்னதாக ஒரு போட்காஸ்டில் பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், "அந்தச் சிறுவனை ஏன் அயர்லாந்துக்கு எதிராக விளையாட வைக்கவில்லை என்று பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினரிடம் நாம் கேட்க வேண்டும்," என்றார்.
அவருடன் இருந்த இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அலிஸ்டர் குக் கூறுகையில், "நாளை ஒரு ரசிகனாக நான் அவரது ஆட்டத்தைக் காணச் செல்வேன்," என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் தற்போதைய கேப்டன் ஹாரி ப்ரூக்கும் வைபவின் ஆட்டத்தால் கவரப்பட்டுள்ளார். போட்டிக்கு முன்னதாக அவர் கூறுகையில், "அவர் ஒரு அற்புதமான வீரர். 15 வயதில் அவர் செய்திருப்பது வியக்கத்தக்கது. அவருக்கு எதிராக விளையாட நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அவர் விளையாடினால், அவரை எதிர்கொள்ள எங்களிடம் திட்டம் உள்ளது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற, நாங்கள் திரைக்குப் பின்னால் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்," என்று தெரிவித்தார்.
'வைபவ் காத்திருக்க வேண்டும்'

பட மூலாதாரம், ANI
வைபவ் தனது சர்வதேச அறிமுகத்திற்காக இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும், பெஞ்சில் அமர்ந்திருப்பதன் மூலமே சர்வதேச கிரிக்கெட்டின் நுணுக்கங்களை அவர் கற்றுக்கொள்ள முடியும் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் ஒரு போட்காஸ்டில் பேசுகையில், "பெஞ்சில் அமர்ந்து போட்டியைப் பார்ப்பது அவ்வளவு மோசமானதல்ல. நீங்கள் களத்திற்கு மிக அருகில் இருந்து கிரிக்கெட்டைக் கவனிக்கிறீர்கள். மற்றவர்களின் அனுபவங்களிலிருந்தும், தவறுகளிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள முடியும்," என்றார்.
தொடர்ந்து அவர், "அபிஷேக் அல்லது சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவர்கள் மோசமான வீரர்கள் என்று அர்த்தமல்ல," என்று குறிப்பிட்டார்.
வைபவை விளையாடும் லெவன் அணியில் சேர்க்காததற்காக அணி நிர்வாகம் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது எழும் கேள்விகளை அவர் தவறானவை என்று வர்ணித்தார். "கவுதம் கம்பீரை மக்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்," என்றும் அவர் கூறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் புஜாராவும் அஸ்வினின் கருத்தையே எதிரொலித்தார். ஜியோ ஹாட்ஸ்டாரில் போட்டிக்கு முன்னதாகப் பேசிய அவர், "அவருக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில், இந்திய அணி தனது டாப் 3 பேட்ஸ்மேன்களை மாற்ற விரும்பாது. அபிஷேக், சஞ்சு மற்றும் இஷான் கிஷன் என மூவருமே அபாரமான வீரர்கள். முதல் இரண்டு-மூன்று போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அணி சிறப்பாகச் செயல்படத் தொடங்கினால், சுழற்சி முறை அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்," என்றார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன், 'ஸ்கை ஸ்போர்ட்ஸ்' ஊடகத்தில் பேசுகையில், வைபவ் சந்தேகத்திற்கு இடமின்றி திறமையானவர் தான், ஆனால் அவரது சர்வதேச அறிமுகத்திற்கு என்று காலக்கெடுவை நிர்ணயிப்பது சரியாக இருக்காது என்றார்.
"15 வயதில் வைபவ் செய்திருப்பது பிரமிக்க வைக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் அவர் அடித்த அளவுக்கு வேறு யாரும் சிக்ஸர்களை அடிக்கவில்லை. 10-12 ஆண்டுகளாக நீடித்த கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை அவர் முறியடித்தார். சர்வதேசத் தரத்திலான மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் 700 ரன்களைக் குவித்துள்ளார்," என்று மோர்கன் பாராட்டினார்.
மேலும் அவர், "அவருக்கு நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை காத்திருக்கிறது. எனவே, அவர் எப்போது அறிமுகமாவார் என்று எந்தக் காலக்கெடுவையும் நான் நிர்ணயிக்க விரும்பவில்லை. சரியான தருணம் வரும்போது அவர் நிச்சயம் விளையாடுவார்," என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























