'சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்' : த.வெ.க எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகப் புகார்

தவெக எம்எல்ஏ, இளையராஜா, சபாநாயகர்

பட மூலாதாரம், Ilayaraaja

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதற்கு தன்னிடம் பேரம் பேசியதாக, ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின்பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கில் கைதான மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வருகின்ற15-ஆம் தேதி வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா கடந்த 29-ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், 'சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் இந்தியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜீஸ் (ஐபிடிஎஸ்) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் ஒரு முக்கியக் கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேரில் சந்திக்க வேண்டும்' எனக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வேறு பணிகளில் இருப்பதாகக் கூறி அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ளார். 'ஆனால், மீண்டும் தன்னைத் தொடர்பு கொண்டு சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகப் பேசினர்' எனவும் புகாரில் கூறியுள்ளார்.

அப்போது அவர்கள் கேட்டுக் கொள்ளும்படி நடந்து கொள்வதற்காக 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். "இதில் எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டேன். இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் நானும் என் குடும்பத்தினரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்'" என மிரட்டியதாகப் புகார் மனுவில் இளையராஜா கூறியுள்ளார்.

'மக்களால் தேர்வு செய்யப்பட்ட பொது ஊழியரான என்னிடம் மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும் தனது பேச்சுக்கு உடன்படுவதற்கு லஞ்சம் தர முயற்சித்ததோடு, குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்விடும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் புகார் மனுவில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

தவெக எம்எல்ஏ, இளையராஜா, சபாநாயகர்

பட மூலாதாரம், GCP

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பின்னணியாக செயல்பட்டதாக கருதப்படும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறையின் புலன் விசாரணையில் தி.மு.க முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் என்பவர், வழக்கில் கைதான நரேஷ் என்பவரை சென்னையில் சந்தித்துள்ளதாகக் காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின்பேரில் கைதான திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான இளையராஜாவைத் தொடர்பு கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.

வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'10 எம்.எல்.ஏக்களிடம் பேரம்' - எம்.எல்.ஏ இளையராஜா

தன்னிடம் பேரம் பேசியதாகப் புகார் அளித்த எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

"புகார் மனுவில் அனைத்தையும் கூறியுள்ளேன். செல்போன் மூலமாக அழைத்தார்கள். அவர்கள் கூறிய விஷயங்கள் எதுவும் எனக்கு சரியானதாகத் தெரியவில்லை," என்கிறார்.

''அவர்கள் கட்சிப் பெயரை எதுவும் பயன்படுத்தவில்லை'' எனக் கூறிய அவர், ''முக்கியமான கட்சிக்காகப் பேசுவதாகக் கூறினர். யார் பெயரையும் குறிப்பிட்டுப் பயன்படுத்தவில்லை. அவர்கள் கூறியதன் அடிப்படையில் புரிந்து கொண்டேன்,'' எனக் கூறினார்.

''இதுதொடர்பாக, பத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஓர் அமைச்சரிடம் பேசியதாக அவர்கள் என்னிடம் கூறினர். இதன் பின்னணி மிக முக்கியமானதாக இருந்ததால் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். காவல்துறையிலும் புகார் அளித்தேன்,'' எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல்குமார் கூறியது என்ன?

தவெக எம்எல்ஏ, இளையராஜா, சபாநாயகர்

பட மூலாதாரம், X/CTR Nirmalkumar

படக்குறிப்பு, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

எம்.எல்.ஏக்களிடம் பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது சில தகவல்களைத் தெரிவித்தார்.

''வழக்கில் கைதான நரேஷ் என்பவர் நேரடியாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாரிடமும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.'' எனக் கூறினார்.

''இந்த வழக்கில் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது,'' என சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.

எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரை பதவி விலகச் செய்வதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

இதனைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், ''கைது நடந்த உடன் அதனைச் சமாளிப்பதற்கு ஆளுநருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆதாரம் இருந்தால் கொடுக்கட்டும். எங்களுக்குப் பேரவையில் 120 என்ற எண்ணிக்கை உள்ளது,'' எனக் கூறினார்.

`பொய்யான புகார்` - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

தவெக எம்எல்ஏ, இளையராஜா, சபாநாயகர்

பட மூலாதாரம், X/RS Bharathi

படக்குறிப்பு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் பேசியது.

''அப்படியொரு பேரத்தில் தி.மு.க ஈடுபடவில்லை. ஒரு பொய்யான, முகாந்திரம் இல்லாத புகார்களுக்குப் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது,'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, ''தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு வென்ற ம.தி.மு.க எம்.எல்.ஏக்களை ராஜிநாமா செய்யுமாறு கூறியதாக வைகோ வாக்குமூலம் அளித்துள்ளார். இங்கு கைது செய்கிறார்கள் என்றால் அங்கும் அதே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' எனக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு