இடிந்து விழுந்த சுரங்கத்திற்குள் இருந்து 16 நாள் கழித்து உயிருடன் வந்த நபர் - என்ன நடந்தது?

    • எழுதியவர், அசிசுல்லா கான்
    • பதவி, பிபிசி உருது, பெஷாவர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு பெரிய விபத்து நிகழும்போது, ​​அதில் சிக்கிக்கொண்டவர்களின் நிலைமை குறித்து அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைகின்றனர்.

ஆனால், நாம் யாரைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமோ, அந்த நபர் உயிருடன் இருக்கிறார் என்பதை நாம் திடீரென்று அறியும்போது, ​​அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது.

ஆனால் அப்துல் வஹாபின் குடும்பத்தினருக்கு, இந்தச் செய்தி மகிழ்ச்சியானது மட்டுமல்லாமல், மிகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது. அதை நம்புவது அவர்களுக்கு மிகவும் கடினமாகவும் இருந்தது.

ஏனெனில், ஒரு கோர விபத்துக்குப் பிறகு, அப்துல் வஹாப் இறந்துவிட்டதாக எண்ணி அவர்கள் வேறொரு சடலத்தை அடக்கம் செய்தனர். ஆனால், 16 நாட்களுக்குப் பிறகு, அப்துல் வஹாப் உயிருடன் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மார்தான் மாவட்டத்தின் ருஸ்தம் பகுதியில் பளிங்குக் கல் குவாரிகள் அமைந்துள்ளன.

மார்ச் 31 அன்று, ஒரு பளிங்குக்கல் சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது, மலையின் ஒரு பெரும் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அந்தச் சுரங்கத்தில் 12 தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்; இருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

சுரங்கத்தில் பணிபுரிந்த ஒரு நபர் கண்டுபிடிக்கப்படாததால், அவரைத் தேடும் பணி தொடர்ந்தது.

மிக நீண்ட தேடலுக்குப் பிறகு, இடிபாடுகளுக்குள் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். உயிருடன் மீட்கப்பட்ட அந்த நபர் அப்துல் வஹாப் தான். ஆனால், அவரது குடும்பத்தினர் வேறொரு சடலத்தை அப்துல் வஹாப் எனத் தவறாகக் கருதி, ஏற்கெனவே அடக்கம் செய்திருந்தனர்.

அப்துல் வஹாபின் குடும்ப உறுப்பினரான ஃபசல் மன்னன் பிபிசியிடம் கூறுகையில், "அப்துல் வஹாபின் உடல் என்று தவறாகக் கருதி, நாங்கள் ஏற்கெனவே ஒரு சடலத்தை அடக்கம் செய்துவிட்டோம். அந்த உடலிலிருந்த ஆடைகளைப் பார்த்ததும், அது அவருடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்கள் கூறினர். அந்த சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருந்ததால், சரியாக அடையாளம் காண இயலவில்லை," என்றார்.

ஏப்ரல் 16-ஆம் தேதி காலையில், அப்துல் வஹாபின் சகோதரர் நாசிர் அழைத்ததாக ஃபசல் மன்னன் கூறினார்.

"அவர் அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே, அப்துல் வஹாப் உயிருடன் இருப்பதாகச் சொன்னார். இதைச் சொல்லும்போது, ​​நாசிர் மீண்டும் உரக்க அழத் தொடங்கினார்."

ஃபசல் மன்னன் கூறுகையில், "ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு, நான் அப்துல் வஹாபின் பெற்றோருடன் அமர்ந்திருந்தேன். அந்த நேரத்தில், அவருடைய தாய் மிகவும் வருத்தத்துடன் இருந்தார்.

ஏனெனில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களுடைய இரண்டாவது மகன் சௌதி அரேபியாவிலிருந்து திரும்பி வந்திருந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர், அந்த நோயின் காரணமாக அவர் உயிரிழந்தார்." என்றார்.

தற்போது, ​​16 நாட்களுக்குப் பிறகு, அப்துல் வஹாப் ஒரு பளிங்குக் கல் குவாரியில் உயிருடனும் பாதுகாப்பாகவும் மீட்கப்பட்டுள்ளார்; இதனால் அவரது குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அப்துல் வஹாப் உயிருடன் மீட்கப்பட்டது எப்படி?

அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டதாக ஃபசல் மன்னன் தெரிவித்தார்.

பளிங்கு கல் குவாரியில் பணிபுரியும் நஜிபுல்லா கூறுகையில், "எங்கள் சக ஊழியர் ஒருவரைத் தேடும் பணி கடந்த 16 முதல் 17 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக, சுரங்கங்களில் பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன." என்றார்.

"நாங்கள் அப்துல் வஹாபின் நல்லடக்கப் பிரார்த்தனைகளையும் நடத்தினோம்; ஆனால் வியாழக்கிழமை (ஏப்ரல் 16), ஒரு பளிங்குக் கல் குவாரியில் அவர் உயிருடன் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்."

நஜிபுல்லா கூறுகையில், "நாங்கள் சுரங்கத்துக்கு அருகே இருந்த இடிபாடுகளை அகற்றி வந்தோம்; மாலைக்குள் சுரங்கத்துக்குள் இருக்கும் சுரங்கப்பாதையை அடைந்துவிடலாம் என்று நம்பியிருந்தோம். ஆனால், தோண்டிக் கொண்டிருக்கும்போதே, நண்பகலுக்கு முன்னதாகவே, உள்ளிருந்து, "நான் உயிருடன் இருக்கிறேன்; என்னை வெளியே எடுங்கள்," என்று ஒரு குரல் கேட்டது.

"நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்; உடனடியாகக் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றத் தொடங்கினோம். சிறிது நேரத்திலேயே, வஹாபை உயிருடன் கண்டுபிடித்தோம்."

ஆடை காரணமாக தவறாக அடையாளம் காணப்பட்ட சடலம்

சமூக ஆர்வலர் முகமது காசிம், மார்ச் 31 முதல் சுரங்கத்துக்கு அருகிலேயே இருந்து, தொழிலாளர்களைத் தேடும் பணியில் பங்கேற்றதாகக் கூறினார்.

அவர் கூறுகையில், "உடல்கள் வெளியே கொண்டு வரப்பட்டபோது, ஒரு சடலத்தில் இருந்த ஆடைகளை அப்துல் வஹாபின் குடும்பத்தினர் பார்த்துவிட்டு, அது அப்துல் வஹாபாக இருக்கலாம் என்று கூறினர்." என்றார்.

புதைக்கப்பட்ட நபர் யார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று, இவ்விஷயம் தொடர்பாக ரெஸ்க்யூ 1122 அமைப்பின் மார்தான் மாவட்ட செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் கான் தெரிவித்தார்.

சடலத்தை அடையாளம் காணும் பணியை டிஎன்ஏ பரிசோதனை மூலம் மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். அப்துல் வஹாப் தற்போது மார்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காசிம் தெரிவித்தார்.

கடந்த மாதம், சுரங்கங்களில் வேலை செய்வதற்காக வந்திருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் இடங்களையும் இயந்திரங்களையும் சுத்தம் செய்துகொண்டு, அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தபோது, ​​மலையின் ஒரு பகுதி அவர்கள் மீது சரிந்து விழுந்தது.

மார்தான் மாவட்டத்தின் ருஸ்தம் பகுதியில் அமைந்துள்ள பலௌதேரி நங் ஆபாத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக முகமது காசிம் பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததாக முகமது காசிம் கூறினார்.

கைபர் பக்துன்க்வாவில் ஏராளமான பளிங்கு மற்றும் பிற கனிமச் சுரங்கங்கள் உள்ளன. மார்தான் மாவட்டத்திலும் ருஸ்தம், கட்லாங் மற்றும் பைஜாய் ஆகிய பகுதிகளில் பளிங்குச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. இம்மாகாணத்தின் சுரங்கங்களில் சுமார் 75 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு