காணொளி: வயநாட்டில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 2 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, வயநாட்டில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 2 பேர் உயிரிழப்பு.
காணொளி: வயநாட்டில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 2 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் காணவில்லை என தெரியவந்துள்ளது. இந்த நிலச்சரிவு தொடர்பாக இதுவரை தெரியவந்தது என்ன?

வயநாடு அருகே கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனக்கம்போயில் - கள்ளாடி - மேப்பாடி' இரட்டைச் சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் மீனாட்சி பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலச்சரிவின் போது சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த ஒரு சில வீடுகள், தங்கும் விடுதிகள் ஆகியவை மண் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கின.

முதற்கட்டமாக, தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 3 பேரை உள்ளூர்வாசிகள் மீட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 பேர் மீட்கப்பட்டு மேப்பாடி விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கேரள மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சி ஒன்றில் நிலச்சரிவில் சிக்கி வாகனங்கள் அடித்துச்செல்வதை காண முடிகிறது.

காயம் அடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது.

"இதை இயற்கையான நிலச்சரிவு" எனக் கூற முடியாது என செய்தியாளர்களிடம் கூறிய வயநாட்டில் உள்ள கல்பெட்டா தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சித்திக், "சுரங்கப் பாதை கட்டுமானப் பணிக்காக தோண்டி எடுக்கப்பட்ட மண் இடம்பெயர்ந்தது தான் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதை பணிக்காக அகற்றப்பட்ட மண், கட்டுமானப் பகுதிக்கு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் சித்திக் குறிப்பிட்டார்.

இது இயற்கையான நிலச்சரிவு அல்ல. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நிலச்சரிவு.

நாங்கள் ஆலோசனை கூட்டத்திலும், அறிக்கை வாயிலாகவும் இதுபற்றி முன்கூட்டியே வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தோம்.

நிலச்சரிவுக்கான வாய்ப்பு இருப்பதாக தெளிவாக அதில் குறிப்பிட்டிருந்தோம். மேலும் உடனடி நடவடிக்கையும் எடுத்தோம்.

கேரள முதலமைச்சர் தெரிவித்தது என்ன?

கேரள மாநில முதலமைச்சர் வி.டி.சதீஷன், சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் இருந்து மண்ணை அகற்றுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையமும் மாவட்ட ஆட்சியரும் கடந்த ஜூன் 20 ஆம் தேதியே உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

"ஆனால், கட்டுமானப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மண்ணை அகற்றுமாறு ஆட்சியர் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றவில்லை" எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மறுபுறம், ஜூன் 12ஆம் தேதிக்குபின்னர் எவ்வித சுரங்கப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் கட்டமைப்பு வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்ததாக சுரங்க திட்டத்துடன் தொடர்புடைய பொறியாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

பொறியாளர்களின் கூற்றுப்படி, நிலச்சரிவு ஏற்பட்டபோது, ​​ஒதுக்கப்பட்ட மண் கொட்டும் பகுதியில் 'கேபியன்' சுவர் அமைப்பதற்கும், சரிவுப் பகுதியைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்கும் சுமார் 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக, கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. சில பகுதிகளுககு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தன.

கனமழை எச்சரிக்கை காரணமாக திங்கள்கிழமை முதலே சுரங்கப்பாதை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக, கேரள மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 265 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு