ஈலோன் மஸ்க் அம்பானி குழுமத்தை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty / Reuters
- எழுதியவர், நிகிதா யாதவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் தொடங்கத் தேவையான இறுதிக்கட்ட அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது. இந்நிலையில், "இந்தியாவில் உண்மையான அதிகாரம் படைத்தவர் முகேஷ் அம்பானிதானா?" என்று மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதைப் பெயர் குறிப்பிடாத சில சக்தி வாய்ந்த தொழில் குழுக்கள் தடுக்க முயல்வதாக மஸ்க் குற்றம்சாட்டிய மறுநாளே இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ஜியோவின் உரிமையாளரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியை அவர் நேரடியாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொடர்பான விதிமுறைகள் நியாயமானவை என்றும், எந்த நிறுவனத்திற்கும் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும் கூறி, மஸ்க்கின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு நிராகரித்துள்ளது.
மஸ்க் தெரிவித்த கருத்துகள் குறித்து அம்பானியோ ரிலையன்ஸ் குழுமமோ இதுவரை பதிலளிக்கவில்லை. இதுகுறித்து கருத்து கேட்பதற்காக பிபிசி அவர்களைத் தொடர்புகொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவும் பாரதி ஏர்டெல்லும் செயற்கைக்கோள் இணைய சேவைகளைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், இந்திய சந்தையில் போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில்தான் மஸ்க் - அம்பானி இடையிலான கருத்து மோதல் எழுந்துள்ளது.
ஸ்டார்லிங்க் நிறுவனம், அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களுடனும் கூட்டாண்மை ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதால், இந்தப் போட்டி மேலும் சிக்கலானதாகியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய அரசின் அனுமதிக்கு உட்பட்டு, ஸ்டார்லிங்க் உபகரணங்கள் மற்றும் சேவைகளை இந்தியாவில் விநியோகிப்பதற்காக ஜியோவும் ஏர்டெல்லும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. நெட்வொர்க் உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராயத் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இதுகுறித்து கருத்து கேட்பதற்காக பிபிசி, பாரதி ஏர்டெல் நிறுவனத்தையும் தொடர்புகொண்டுள்ளது.
புதன்கிழமை இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த மஸ்க், "சில பெரும் கோடீஸ்வரர்கள்" இந்திய நுகர்வோர் மீதான சந்தைக் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் வைத்திருக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
"அவர்கள் யார் என்பதை உங்களால் ஊகிக்க முடியும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், ஸ்டார்லிங்க் சேவையைத் தடுப்பது "இந்திய மக்களுக்குச் செய்யப்படும் ஒரு குற்றம்" என்றும் கூறினார்.
வியாழக்கிழமை இதற்குப் பதிலளித்த இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், "ஸ்டார்லிங்க், யூடெல்சாட் ஒன்வெப், ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் அனுமதி பெறும் நடைமுறையில் ஒரே நிலையில்தான் உள்ளன" என்று தெரிவித்தது. வணிக சேவைகளைத் தொடங்கும் முன்பு, மூன்று நிறுவனங்களுமே பாதுகாப்பு அனுமதிகளையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டையும் பெறக் காத்திருப்பதாகவும் அமைச்சகம் கூறியது.

பட மூலாதாரம், Getty Images
மஸ்க்கின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், "இந்த நடைமுறையோ அல்லது அதன் செயல்பாடுகளோ நியாயமற்றவை அல்லது பாகுபாடானவை என்று கூறுவது அடிப்படையற்றது; அது தவறான புரிதலைப் பிரதிபலிக்கிறது" என்று அமைச்சகம் தெரிவித்தது.
இருப்பினும், அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து மஸ்க் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். ஸ்டார்லிங்க் ஏற்கெனவே 165க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவைகளை வழங்குவதற்கான உரிமங்களைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"ஸ்டார்லிங்க் 165க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது. இந்திய அரசின் ஒவ்வொரு சட்டத்தையும் தேவையையும் பூர்த்தி செய்வதற்காக ஐந்து ஆண்டுகளாக முயன்று வருகிறது. அப்படியிருக்க, ஏன் இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான முதலாளியா?" என்று வியாழக்கிழமை எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டார்.
மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க், பூமிக்கு அருகிலுள்ள குறைந்த உயரச் சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய சேவையை வழங்குகிறது. குறிப்பாக, மொபைல் நெட்வொர்க் இணைப்புகளை ஏற்படுத்துவதும் பிராட்பேண்ட் கேபிள்களை பதிப்பதும் கடினமான அல்லது அதிக செலவு பிடிக்கும் தொலைதூரப் பகுதிகளுக்கு இணைய வசதியை வழங்குவது இதன் முக்கிய நோக்கம்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஸ்டார்லிங்க் இந்தியாவில் சேவையைத் தொடங்க முயன்று வருகிறது. இதற்கான முக்கிய உரிமங்களில் சிலவற்றையும் பெற்றுள்ளது. இருப்பினும், வணிக சேவைகளைத் தொடங்குவதற்கு முன்பு இறுதிக்கட்ட பாதுகாப்பு அனுமதிகளையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டையும் பெற வேண்டியுள்ளது.

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
டெல்லியில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில், ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று, தங்களது செயற்கைக்கோள் இணைய சேவைகள் குறித்த திட்டங்களை விவாதித்தனர். அப்போதுதான் புதன்கிழமை இந்தக் கருத்து மோதல் வெடித்தது.
இந்த நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவருமான ஆகாஷ் அம்பானி, தங்கள் நிறுவனம் சொந்தமாக செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும், அதற்குத் தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈலோன் மஸ்க்கின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்குப் பதிலளிக்க ஆகாஷ் அம்பானி மறுத்துவிட்டார். "எங்கள் பணியில் முழு கவனத்தையும் செலுத்தி, இந்திய நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம்" என்று மட்டும் அவர் கூறினார்.
பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டலும், தங்கள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் திட்டம் அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார். ஸ்டார்லிங்கின் வணிக செயல்பாடுகளைக் கவனித்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன அதிகாரி லாரன் ட்ரேயர், தங்கள் நிறுவனம் இந்திய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறினார். இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தங்களது நெட்வொர்க்கில் பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார் அவர்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவது தொடர்பான விவாதங்களில், தேசிய பாதுகாப்பு முக்கியக் கவலையாக இருந்து வருகிறது. 2024ஆம் ஆண்டு, தொலைதூரப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விசாரணையின்போதும், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ராணுவ நடவடிக்கையின்போதும் ஸ்டார்லிங்க் உபகரணங்களைக் கைப்பற்றியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பதிலளித்த மஸ்க், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை ஒருபோதும் செயல்பாட்டில் இருந்ததில்லை என்றும், அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் தங்களது செயற்கைக்கோள் நெட்வொர்க்கை பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களால் ஸ்டார்லிங்க் சேவையை எந்த அளவுக்கு மலிவு விலையில் பெற முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய இணைய சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இருப்பினும், இணைய இணைப்பு வசதி அனைத்துப் பகுதிகளிலும் சமமாகக் கிடைப்பதில்லை. குறிப்பாக, மொபைல் நெட்வொர்க் வசதிகளை ஏற்படுத்துவதும் பிராட்பேண்ட் கேபிள்களைப் பதிப்பதும் கடினமான அல்லது அதிக செலவு பிடிக்கும் தொலைதூரப் பகுதிகளில் இந்தப் பிரச்னை நீடிக்கிறது.
இந்த இடைவெளியைக் குறைக்க ஸ்டார்லிங்க் உதவும் எனத் தெரிவித்த மஸ்க், "இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகமானால், தற்போதைய கட்டணங்களைச் செலுத்த முடியாதவர்களும், இணைய இணைப்பே இல்லாதவர்களும் அதிவேகமான, மலிவு விலையிலான இணைய சேவையைப் பெறுவது சாத்தியமாகும்" என்று அவர் புதன்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தியாவுக்கான கட்டண விவரங்களை ஸ்டார்லிங்க் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், பிற நாடுகளில் அந்நிறுவனம் வழங்கும் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்த சேவை பல இந்திய குடும்பங்களால் வாங்கிப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அதிக விலை கொண்டதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவில், ஸ்டார்லிங்கின் வீட்டு உபயோக இணையத் திட்டங்களுக்கான மாதக் கட்டணம் 55 டாலரில் இருந்து தொடங்குகிறது. எனினும், தேர்வு செய்யப்படும் திட்டம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து மாதக் கட்டணமும் உபகரணங்களுக்கான செலவும் மாறுபடும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























