'17 நாட்கள் உண்ணாவிரதம்': 8.2 கிலோ எடை இழந்த சோனம் வாங்சுக் - உடல்நிலை குறித்து அதிகரிக்கும் கவலை

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே மற்றும் நிகிதா யாதவ்
- இருந்து, Jantar Mantar, Delhi
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"நான் வெளியிலிருந்து பலவீனமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் வலிமையாக இருக்கிறேன்."
டெல்லியில் கடந்த 17 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பார்ப்பதற்கு மெலிந்த தோற்றமளிக்கும் சோனம் வாங்சுக், திங்கள்கிழமை பிபிசியிடம் இவ்வாறு கூறினார்.
திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்ட சமீபத்திய உடல்நிலை அறிக்கையின்படி, வாங்சுக் 8.2 கிலோ எடை இழந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் 107/70 ஆகவும், ரத்தச் சர்க்கரை அளவு 67 ஆகவும் குறைந்துள்ளது.
அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது ஆதரவாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு ஆயிரக்கணக்கானோர் அவருக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், 59 வயதான வாங்சுக் தனது முடிவில் உறுதியாக உள்ளார். "நான் தொடங்கிய இந்தப் போராட்டத்தை அதன் தர்க்கரீதியான இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும்," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
18-ஆம் நூற்றாண்டின் வானியல் ஆய்வகமும் தலைநகரின் மிகவும் பிரபலமான போராட்டக் களமுமான ஜந்தர் மந்தரில் இந்தியாவில் கல்விச் சீர்திருத்தங்களைக் கோரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சி.ஜே.பி) என்ற இணையவழி நையாண்டி இயக்கத்தால் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.
கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் நடைபெறும் போராட்டத்தின் உடனடி கோரிக்கை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும்.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, மே மாத தொடக்கத்தில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தக் கோரிக்கை வலுத்துள்ளது.
வாங்சுக் மட்டும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரும் அவருடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வினாத்தாள் கசிவுக்கு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால் பதவி விலக மறுத்துவிட்ட கல்வி அமைச்சர், சி.ஜே.பி மற்றும் அதன் ஆதரவாளர்களை "நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கை இல்லாத சீர்குலைக்கும் சக்திகளின் பி-டீம்" என்று நிராகரித்துள்ளார்.
லடாக் பகுதியைச் சேர்ந்த பொறியாளரும், கல்வியாளரும், காலநிலைச் செயற்பாட்டாளருமான சோனம் வாங்சுக், ஜூன் 29ஆம் தேதி இந்தப் போராட்டத்தில் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுபவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாங்சுக், அகிம்சை வழிப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், காந்தியைப் போலவே உண்ணாவிரதத்தின் மூலம் அரசின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப முயல்கிறதாகவும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Geeta Pandey/BBC
"சோனம் சார்" என்று பரவலாக அறியப்படும் வாங்சுக், லடாக்கின் மிகவும் பிரபலமான பொது ஆளுமைகளில் ஒருவராவார். இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பெயரான இவரது பணிகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
இயந்திரப் பொறியியலாளர் வாங்சுக், லடாக் பகுதி காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ள உதவும் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பௌத்த தூபிகளால் ஈர்க்கப்பட்டு, கூம்பு வடிவில் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கைப் பனிப்பாறையான "ஐஸ் தூபி"-யை உருவாக்கியதற்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். இது குளிர்காலத்தில் தண்ணீரைச் சேமித்து வைத்து, விவசாயிகளுக்கு அதிகம் தேவைப்படும் வசந்த காலத்தின் பிற்பகுதியில் அந்தத் தண்ணீரை வெளியிடுகிறது.
"இவரது சாதனைகளைப் பாராட்டிப் பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆசியாவின் நோபல் பரிசு என்று பரவலாகக் கருதப்படும் 2018-ஆம் ஆண்டின் 'ராமன் மகசேசே' விருதும் ஒன்றாகும்."
2009-ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படமான 'த்ரீ இடியட்ஸ்' திரைப்படத்திற்கு அவர்தான் உத்வேகமாக இருந்தார். மேலும் 2017-ஆம் ஆண்டில், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய 'கௌன் பனேகா க்ரோர்பதி' என்ற பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், போராட்டங்களைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டி வாங்சுக்கை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். வழக்குகளை அதிகாரிகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து 170 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
கடுமையான கோடை வெப்பநிலை நிலவினாலும், சோனம் வாங்சுக் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் ஜந்தர் மந்தரில் பகல், இரவு பாராமல் திரண்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை டெல்லியின் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. ஆனால் வானிலை செயலிகள் கணக்கிட்ட 'உணரப்படும் வெப்பநிலை' சுமார் 46 டிகிரி செல்சியஸ் வரை இருந்ததாகக் கூறப்பட்டது. இருந்தபோதிலும், போராட்டக்காரர்களின் ஆதரவு தொடர்ந்து நீடித்து வருகிறது.

பட மூலாதாரம், Reuters
"இன்று அவரது உண்ணாவிரதப் போராட்டத்தின் 16-வது நாளாகும். ரத்த சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் மிக அபாயகரமாகக் குறைந்துவிட்டன. அவர் உட்காரவோ அல்லது எழுந்து நிற்கவோ முயன்றாலே, கடுமையான தலைச்சுற்றலால் நிலைகுலைந்து போகிறார்" என்று தீப்கே, திங்கள்கிழமை பிபிசியிடம் தெரிவித்தார்.
"கழிவறைக்குச் செல்வதற்குக்கூட அவரால் சிரமமின்றி நடக்க முடியவில்லை. அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். கடுமையான வலியிலும் இருக்கிறார். ஆனால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு நான் கூறும் போதெல்லாம், 'என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்' என்று கூறிவிடுகிறார்."
வாங்சுக் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது அவரது உடல்நிலைக்கு ஏற்றதல்ல என்றும், அவரது ஆரோக்கியம் குறித்து கடுமையான கவலைகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக திப்கே கூறினார்.
மேலும், வாங்சுக்கை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளச் சம்மதிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான செய்திகள் தனக்குக் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"இருப்பினும், அவர் தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கிறார். 'கல்வித் துறையில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வரை நான் போராட்டத்தை நிறுத்த மாட்டேன்' என்று என்னிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்."
ஜந்தர் மந்தரிலும் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அங்கு திரண்டிருந்த பலர், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவது குறித்து கவலைப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தனர்
"சோனம் சார்"-ஐ காண்பதற்காக வந்துள்ளவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம் பொறியாளரான அனிமேஷ் சாஹுவும் ஒருவர்.
"அவரது காணொளிகளைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் எனக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு உள்ளது. அவரது உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். அரசு அவர் மீது கவனம் செலுத்த வேண்டும்" என்று சாஹு அரசிடம் கோரிக்கை வைக்கிறார்.
சத்யபிரகாஷ் பரத்வாஜ் என்ற விவசாயி, வாங்சுக்கை அடுத்த தலைமுறைக்காக "தன்னையே அர்ப்பணிக்கத் துணியும் ஒரு வைரம்" என்று வர்ணித்தார்.
"அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் ஆரோக்கியத்தோடு இருந்தால்தான் நம் குழந்தைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.
கல்வியாளர் பேராசிரியர் நந்திதா நரேன், "பொது வாழ்க்கைக்கு இவ்வளவு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ள வாங்சுக் போன்ற ஒரு ஆளுமை, அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டியிருப்பது இந்த ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம்" என்றார்.
வாங்சுக்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுமாறு தானும் அவரிடம் நேரில் வலியுறுத்தப் போவதாகக் கூறிய அவர், "நாம் இன்னும் நீண்ட காலம் தொடர வேண்டிய ஒரு பெரும் யுத்தம் நம் முன்னே உள்ளது. அதற்குத் தொடர்ச்சியான மக்கள் இயக்கமும், நீடித்த போராட்டங்களும் தேவை. அந்தப் போர்க்களத்தை வழிநடத்த அவர் உயிரோடு இருப்பது மிக முக்கியம்," என்று கூறினார்.

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது முதல், இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்கள் பலர் போராட்டக் களத்திற்கு வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எவரும் "இதுவரை எங்களைச் சந்திக்கவோ அல்லது எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ எவ்வித ஆர்வமும் காட்டவில்லை" என்று ஆதங்கப்படுகிறார் அபிஜீத் தீப்கே.
"இந்த நாட்டின் குடிமக்களை அரசாங்கம் ஏன் இவ்வளவு அலட்சியப்படுத்துகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் எங்களையோ அல்லது சோனம் வாங்சுக்கையோ கல்வி அமைச்சராக்கச் சொல்லிக் கேட்கவில்லை. தேர்வுகளைச் சரியாக நடத்தத் தவறிய நபரை மாற்றி, கல்வித் துறையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்று மட்டும்தான் கேட்கிறோம்.''
அரசாங்கம் தங்களை நாடி வராத பட்சத்தில், தாங்களே அரசாங்கத்தை நோக்கிச் செல்லப் போராட்டக்காரர்கள் தற்போது திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளான ஜூலை 20 அன்று அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருக்கிறார்கள்.
"நாங்கள் கடந்த 24 நாட்களாக இங்கு களத்தில் இருக்கிறோம்.சோனம் சார் 16 நாட்களாக உண்ணாவிரதத்தில் இருக்கிறார். இவ்வளவு நடந்தும், மத்திய அரசு இதில் தலையிடவில்லை. எங்களுடன் ஒரு சாதாரண பேச்சுவார்த்தையைக் கூடத் தொடங்கவில்லை" என்று அபிஜீத் தீப்கே கூறினார்.
"எனவே, நாங்களே நேரடியாக அரசாங்கத்திடம் சென்று, இந்திய நாடாளுமன்றத்தின் வாயிலிலேயே எங்கள் நியாயமான கோரிக்கைகளை வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று கருதுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































