ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா சுங்கம் வசூலிக்க முடியுமா? சர்வதேச சட்டம் பற்றிய ஒரு பார்வை

அமெரிக்கா - இரான், ஹோர்மூஸ் நீரிணை, சுங்கக் கட்டணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் போருக்குப் பிறகு ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது (கோப்புப் படம்).
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பதற்றத்தின் முக்கிய மையமாக ஹோர்மூஸ் நீரிணை தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் கட்டுப்பாடு குறித்த விவகாரம், இரு நாடுகளையும் மீண்டும் நேருக்கு நேர் மோதும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

முதலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா இருப்பதாகவும், இந்த கடல் வழியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக 20 சதவிகித சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்ம் அல்-அன்பியா, ஹோர்மூஸ் நீரிணை நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை குறித்த டிரம்பின் அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எக்ஸ் தளத்தில், "அமெரிக்க அதிபர் கூறுவது முற்றிலும் சரியானது தான். ஹோர்மூஸ் நீரிணை வழியாக சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை யார் உறுதி செய்கிறார்களோ, அவர்களுக்கு இந்த சேவைக்கான கட்டணம் வழங்கப்பட வேண்டும்"எனக் கூறப்பட்டுள்ளது.

"இரான் எப்போதும் ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாவலனாக இருந்து வருகிறது, எப்போதும் இருக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

"20% என்பது நிச்சயமாக மிக அதிகம். நாங்கள் நியாயமாக நடந்து கொள்வோம்" என்று அரக்சி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

'எங்களுக்கு வளைகுடா நாடுகள் தேவையில்லை'

அமெரிக்கா - இரான், ஹோர்மூஸ் நீரிணை, சுங்கக் கட்டணம்

பட மூலாதாரம், SAUL LOEB/AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இதற்கிடையில், அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இரான் இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது.

இதைக் குறிப்பிட்டு, வெள்ளை மாளிகையில் ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த நாடுகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பை வழங்கும் என்றும், ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

"நாங்கள் உலகின் மிகவும் வளமான ஒரு பகுதியைப் பாதுகாத்து வருகிறோம். அதற்காகப் பணம் செலவழிக்கிறோம். எனவே, எங்களுக்கு பணம் வழங்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார் .

"நாங்கள் பாதுகாத்து வரும் நாடுகளிடமிருந்து பணம் பெறுவோம். சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகள் அதில் அடங்கும். எங்களுக்கு இந்த நாடுகள் தேவையில்லை. அவர்களுக்குத்தான் நாங்கள் தேவை. வெனிசுவேலாவையும் சேர்த்து எங்களிடம் ஏராளமான எண்ணெய் வளம் உள்ளது"என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா சுங்கம் வசூலிக்க முடியுமா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உலகெங்கிலும் உள்ள கடல்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான சர்வதேச கடல்சார் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், "சர்வதேச கடல்வழிப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் நீரிணைகள் வழியாகச் செல்வதற்குக் கட்டணம் விதிப்பதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்" என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஒரு நீரிணையைக் கடப்பதற்காக மட்டுமே கட்டாய சுங்கக் கட்டணம் விதிப்பதற்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை" என்று அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்த சமீபத்திய நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமையும் என்று அவர்கள் நம்புவதாகவும் கூறியுள்ளனர்.

"இது அந்த வழியில் கப்பல்கள் பயணிப்பதை எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றும், இது எத்தகைய உத்தரவாதங்களை வழங்கும்?" என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் டிரம்பின் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாகக் கூறினார்.

டிரம்பின் இந்த சமீபத்திய அறிவிப்பு, நடைமுறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள், நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் (13.8 மைல்கள், தோராயமாக 22 கிலோமீட்டர்) வரை பிராந்தியக் கடற்பரப்பைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன.

ஹோர்மூஸ் நீரிணையின் மிகக் குறுகிய பகுதியும் அதன் கப்பல் போக்குவரத்துப் பாதைகளும் முழுமையாக இரான் மற்றும் ஓமனின் பிராந்தியக் கடற்பரப்பிற்குள்ளேயே அமைந்துள்ளன.

இதன் பொருள், ஐ.நா விதிகளின்படி இரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இப்பகுதியின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன என்பதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட உடன்படிக்கையின் பிரிவு 38, ஹோர்மூஸ் நீரிணை உட்பட உலகெங்கிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நீரிணைகள் வழியாக கப்பல்கள் எந்தவித தடங்கலுமின்றி "கடந்து செல்வதற்கான" உரிமையை வழங்குகிறது.

ஹோர்மூஸ் விவகாரத்தில் தொடரும் பதற்றம்

அமெரிக்கா - இரான், ஹோர்மூஸ் நீரிணை, சுங்கக் கட்டணம்

பட மூலாதாரம், Shady Alassar/Anadolu via Getty Images

படக்குறிப்பு, இரான் போருக்குப் பிறகு ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது (கோப்புப் படம்).

பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தின, இதனால் உலகளவில் தோராயமாக 25% எண்ணெய் மற்றும் 20% எல்என்ஜி விநியோகத்திற்கு பயன்பட்ட ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டது.

இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேல் மற்றும் பல வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), அனுமதியின்றி ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சரக்குக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவற்றில் இரண்டைக் கைப்பற்றியிருந்தது. இது நீரிணை வழியிலான கடல்சார் போக்குவரத்தில் கடுமையான வீழ்ச்சிக்கு வழிவகுத்ததுடன், எண்ணெய் விலைகள் கணிசமாக உயரவும் காரணமாக அமைந்தது.

இரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அமெரிக்கா முதன்முதலில் ஏப்ரல் மாதத்தில் அனைத்து இரானிய துறைமுகங்களுக்கும் கடற்படை முற்றுகையை விதித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஜூன் மாதத்தில் அமெரிக்கா இந்த முற்றுகையை நீக்கியது, ஆனால் ஹோர்மூஸ் நீரிணை மீதான இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு