பெனாசிர் பூட்டோ ஆட்சி கலைக்கப்பட்டதில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கு என்ன?

பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான், ராணுவம், குலாம் இஷாக் கான்
படக்குறிப்பு, பெனாசிர் பூட்டோ தனது முதல் பதவிக்காலத்தில் 19 மாதங்கள் மட்டுமே பாகிஸ்தான் பிரதமராகப் பணியாற்றினார்.
    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அது 1990 ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரம். பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனாசிர் பூட்டோ, இஸ்லாமாபாத்தில் இருந்து ராவல்பிண்டிக்குச் சென்று கொண்டிருந்தார்.

தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஜாவேத் ஜப்பார் அவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அதிபர் குலாம் இஷாக் கான் விரைவில் அரசாங்கத்தை கலைத்துவிடுவார் என்று பிரதமர் பூட்டோவிடம் ஜப்பார் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, டிசம்பர் 1988-இல் பெனாசிர் பூட்டோ பிரதமரானார்.

'பட், பிரைம் மினிஸ்டர்' (Butt, Prime Minister) என்ற தனது சுயசரிதையில், ஜாவேத் ஜப்பார், இதுபோன்று ஆட்சிக் கலைப்பு குறித்த வதந்திகள் முன்னரும் பரவி வந்ததாக எழுதியுள்ளார்.

ஆனால் அன்று அவருக்கு ஒரு ராணுவ அதிகாரியிடம் இருந்து இது குறித்த தகவல் கிடைத்தது.

'பெனாசிர் பூட்டோவை அடிபணிய வைக்கும் முயற்சி'

ஜாவேத் ஜப்பார் தனது சுயசரிதையில், "பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கத்தை அதன் பதவிக்காலம் முடியும் முன்பே ராஜிநாமா செய்ய வைப்பதற்கான சதியாகவோ அல்லது பெனாசிர் பூட்டோவை அதிபர் மற்றும் ராணுவ தளபதிக்கு அடிபணிய வைக்கும் முயற்சியாகவோ இது இருக்கலாம் என நான் உணர்ந்தேன்" என்று எழுதியுள்ளார்.

ஜாவேத் ஜப்பார் கூறியதை அமைதியாகக் கேட்ட பெனாசிர் பூட்டோ, லேசான புன்னகையுடனும் நம்பிக்கையுடனும், "நம்மைக் கவலையடையச் செய்வதற்காகவே இந்த வதந்திகள் பரப்பப்படுகின்றன. அப்படி எதுவும் நடக்காது, ஜாவேத்" என்று கூறியதாக ஜப்பார் எழுதுகிறார்.

இந்தத் தகவலைத் தன்னால் நம்ப முடியவில்லை என்று பெனாசிர் கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த ஆரம்பகட்ட தகவல் கிடைத்து ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 6, 1990 காலை, பாகிஸ்தானின் ஆங்கில நாளிதழான 'தி நேஷன்' (The Nation) பத்திரிகையின் முதல் பக்க தலைப்புச் செய்தி, பெனாசிரின் அரசாங்கம் கலைக்கப்பட உள்ளதாக எச்சரித்தது.

அப்போதும் பெனாசிர் அதை நம்பவில்லை.

பிரதமர் செயலகத்தை ராணுவம் முற்றுகையிட்ட பிறகும் கூட, தான் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்பதை பெனாசிர் ஏற்கத் தயாராக இல்லை என்று கிறிஸ்டினா லாம்ப் 'வெயிட்டிங் ஃபார் அல்லா' (Waiting for Allah) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அந்த ஆண்டு செப்டம்பரில் லாகூரில் கிறிஸ்டினா லாம்பிடம் பேசிய 'தி நேஷன்' ஆசிரியர் ஆரிஃப் நிஜாமி, பிரதமர் இல்லத்தில் இருந்து தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறினார்.

லாம்ப் தனது புத்தகத்தில், "நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் தாரிக் ரஹீம் தொலைபேசியில் பேசினார். அந்தச் செய்திக்கான ஆதாரம் என்னவென்று கேட்ட அவர், ராணுவ உளவுத்துறை வழங்கும் தகவல்களைத் தான் நாளிதழ் வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்" என்று எழுதுகிறார்.

இதற்கிடையில், அமெரிக்க தூதரையும் அதிபர் குலாம் இஷாக் கானையும் சந்திப்பதற்காக பெனாசிர் பூட்டோ தனது நெருங்கிய உதவியாளர் ஹேப்பி மன்வாலாவை அனுப்பினார். தான் எந்தவொரு 'அசாதாரண' நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என அதிபர் அவருக்கு உறுதியளித்தார்.

பெனாசிர் இதில் திருப்தி அடைந்தார்.

பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான், ராணுவம், குலாம் இஷாக் கான்
படக்குறிப்பு, டிசம்பர் 2, 1988 பெனாசிர் பூட்டோ முதல் முறையாக பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றார்.

இருப்பினும், பெனாசிரின் அமைச்சர் தாரிக் ரஹீமுக்கு இதில் திருப்தி ஏற்படவில்லை.

ரஹீமை மேற்கோள் காட்டி கிறிஸ்டினா லாம்ப் தனது புத்தகத்தில், "ஆகஸ்ட் 8-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் கூட்டுமாறு அதிபர் அலுவலகத்திற்கு அவர் கோரிக்கை அனுப்பினார், ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை. இறுதியாக, அந்தக் கோப்பு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது" என எழுதியுள்ளார்.

லாம்பின் கூற்றுப்படி, தாரிக் ரஹீம் கோபமாக, "நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், வரலாறு உங்களை மன்னிக்காது" என்று கூறினார்.

மாலை 4 மணி அளவில், தலைமைச் செயலகத்தைச் சுற்றி ராணுவ வாகனங்கள் காணப்பட்டன.

கிறிஸ்டினா லாம்பின் கூற்றுப்படி, பெனாசிர் பூட்டோ உண்மையான நிலைமையை முன்கூட்டியே உணர்ந்திருந்தால், அவரே ஆட்சியைக் கலைத்துவிட்டு புதிய தேர்தல்களை அறிவித்திருக்கலாம்.

இது அவர்கள் பதவியில் தொடர்வதற்கும், தேர்தல் செயல்பாட்டின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கும் சாதகமாக அமைந்திருக்கும்.

ராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் மறுப்புகளும்

பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான், ராணுவம், குலாம் இஷாக் கான்
படக்குறிப்பு, டிசம்பர் 12, 1989: 'ஸர்ப்-இ-மோமின்' ராணுவப் பயிற்சியின் போது ஜெனரல் அஸ்லம் பேக்.

நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் பார்பரா க்ரோசெட்டிடம் பேசிய பெனாசிர் பூட்டோ, தனது அரசாங்கம் கலைக்கப்பட்டதை "ராணுவ தலையீடு" என்று விவரித்தார்.

இந்த நடவடிக்கை நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட ஒன்று என்று அவர் கூறினார். தனக்கும், தனது குடும்பத்தினர், தன் கூட்டாளிகள் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் எதிரான முழு வழக்கும் ராணுவத்தால் சோடிக்கப்பட்டது என்று பெனாசிர் பூட்டோ கூறினார். அரசாங்கத்தைக் கலைப்பது மற்றும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான உத்தரவும் ராணுவத்தினாலேயே உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பெனாசிரை பதவியிலிருந்து நீக்கியதில் ராணுவத்திற்கு பங்கு இருந்ததா?

"இக்திதார் கி மஜ்பூரியான்" (Iqtidar Ki Majbooriyan) என்பது ஜெனரல் மிர்சா அஸ்லம் பேக் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற கர்னல் அஷ்பாக் ஹுசைன் ஆகியோர் இணைந்து எழுதிய ஜெனரல் பேக்கின் சுயசரிதையாகும்.

அந்தப் புத்தகத்தின்படி, "பதவியேற்பதற்கு முன்பு, ஜெனரல் பேக் பெனாசிரை தனது வீட்டிற்கு அழைத்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்: ராணுவத்தைப் பற்றி ஏதேனும் புகார்கள் இருந்தால், என்னிடம் கூறுங்கள், நான் அவற்றைத் தீர்த்து வைக்கிறேன். ஜெனரல் ஜியா-உல்-ஹக்கின் குடும்பத்தினரிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வரும்போது, குலாம் இஷாக் கானை மனதில் கொள்ளுங்கள்."

"பெனாசிர் பூட்டோ இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை தீவிரமாக எடுத்துக் கொண்டார்."

ஜெனரல் அஸ்லம் பேக் தனது சுயசரிதையில், பெனாசிர் பூட்டோ தன்னை ராணுவ தளபதி பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப் பரிசீலித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

"தி கம்பல்ஷன்ஸ் ஆஃப் பவர்" (The Compulsions of Power) என்ற நூலில் ஜெனரல் பேக் குறிப்பிடுகையில் "இந்தத் தகவலின் அடிப்படையில், நான் ஃபார்மேஷன் கமாண்டர்களின் கூட்டத்தைக் கூட்டி, எந்தவொரு அதிகாரியும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவுபடுத்தினேன். எவர் பெயர் பரிசீலிக்கப்பட்டதோ அந்த கார்ப்ஸ் கமாண்டரும் கூட்டத்தில் இருந்தார், அநேகமாக அவர் இதை பிரதமருக்குத் தெரிவித்திருக்கலாம்." என்று தெரிவித்துள்ளார்.

'அதிபர் - பிரதமர் கருத்து வேறுபாடுகள்'

பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான், ராணுவம், குலாம் இஷாக் கான்
படக்குறிப்பு, அதிபர் குலாம் இஷாக் கான்.

இருப்பினும், ஜெனரல் பேக்கின் அதே புத்தகத்தில், 'அதிபருக்கும் பிரதமருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள்' என்ற தலைப்பின் கீழ், '1990-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சில விஷயங்களில் தமக்கும் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக அதிபர் குலாம் இஷாக் கான் முறைசாரா கடிதம் மூலம் எனக்குத் தெரிவித்தார்' என்று எழுதப்பட்டுள்ளது.

அந்தப் புத்தகத்தில், ஜெனரல் பேக், "நான் இந்தப் பிரச்னையை கார்ப்ஸ் கமாண்டர்கள் மாநாட்டில் எழுப்பினேன். அதிபர் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், பிரதமர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அவருக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் அனைத்து கமாண்டர்களும் ஒருமனதாகத் தெரிவித்தனர்" என்று எழுதுகிறார்.

ஆனால், இரு தரப்புக்கும் இடையிலான முறையான தகவல் தொடர்பு முறிந்து, கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. இறுதியாக, 1990 ஆகஸ்ட் 6 அன்று, அரசியலமைப்பின் 58(2)(பி) பிரிவின் கீழ் அரசாங்கத்தை கலைத்த அதிபர், 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

முன்னாள் பாகிஸ்தான் தூதர் இக்பால் அகுந்த், ஜெனரல் பேக்கின் கருத்தில் இருந்து மாறுபட்ட ஒரு கருத்தைக் கொண்டுள்ளார்.

'ட்ரையல் அண்ட் எரர்: தி அட்வென்ட் அண்ட் எக்லிப்ஸ் ஆஃப் பெனாசிர் பூட்டோ' (Trial and Error: The Advent and Eclipse of Benazir Bhutto) என்ற தனது புத்தகத்தில், 'அரசாங்கம் கலைக்கப்படுவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே பெனாசிரை பதவியில் இருந்து நீக்க ஜெனரல் அஸ்லம் பேக் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது' என்று அகுந்த் எழுதுகிறார்.

அகுந்தின் கூற்றுப்படி, இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் உண்மையான மூளையாகச் செயல்பட்டவர் அதிபர் குலாம் இஷாக் கான் தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு பெனாசிர் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். தன்னை பதவியிலிருந்து நீக்க அதிபர் குலாம் இஷாக் கானுக்கு ஜூலை 1990இல் பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேட்ஸ் பச்சைக்கொடி காட்டியதாக அகுந்திடம் பெனாசிர் தெரிவித்தார்.

எனினும், அதிபருக்கும் ராபர்ட் கேட்ஸுக்கும் இடையிலான சந்திப்பின் போது தானும் அங்கு இருந்ததாகவும், பெனாசிர் அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்து அப்போது எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் அகுந்த் எழுதுகிறார்.

முன்னாள் அதிகாரியான ருதாயித் கான் தனது நினைவுக் குறிப்புகளில், தனது அரசாங்கத்தின் மீது சூழ்ந்திருந்த நெருக்கடி குறித்து பெனாசிர் பூட்டோ முற்றிலும் அறியாமல் இருந்ததாகவும், வழக்கம்போல தனது அதிகாரப்பூர்வ பணிகளைத் தொடர்ந்ததாகவும் எழுதியுள்ளார்.

ருதாயித் கான், அதிபர் குலாம் இஷாக் கானின் ஆதரவாளராகக் கருதப்படுகிறார்.

ருதாயித் கானின் கூற்றுப்படி, "வதந்திகள் பரவியபோது, அதிபரிடம் இருந்து உண்மையைக் கண்டறிய பெனாசிர் தனது நெருங்கிய உதவியாளர் ஹேப்பி மன்வாலாவை அனுப்பினார். அரசியலமைப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கும் எண்ணம் அதிபருக்கு இல்லை என்ற செய்தியுடனேயே மன்வாலா திரும்பினார்."

ஆனால், ஜெனரல் அஸ்லம் பேக் ஏற்கெனவே அதிபரின் நம்பிக்கையான வட்டாரத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தார் என்றும் ருதாயித் கான் எழுதுகிறார்.

பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான், ராணுவம், குலாம் இஷாக் கான்
படக்குறிப்பு, பெனாசிரின் அரசாங்கம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குலாம் முஸ்தபா ஜடோயி இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அரசாங்கம் கலைக்கப்பட்ட பிறகு, ஒரு இடைக்கால பிரதமரை நியமிக்க வேண்டிய அவசியம் அதிபருக்கு ஏற்பட்டது.

பல ஆண்டுகளாக குலாம் முஸ்தபா ஜடோயி பிரதமராகக் கூடும் என செய்தி உலாவிக் கொண்டிருந்தது, நாளிதழ்கள் அவரை 'பிரதமர் பதவிக்கான போட்டியாளர்' என்று கூட விவரித்தன, இறுதியில் அவரது குறுகிய கால பதவிக்காலம் வந்தது.

ஆனால் அகுந்தின் கூற்றுப்படி, அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளும் நேரடியாக அதிபருக்கு அனுப்பப்படும் வகையில் அரசாங்க நடைமுறைகளை குலாம் இஷாக் கான் மாற்றியமைத்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு

பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான், ராணுவம், குலாம் இஷாக் கான்
படக்குறிப்பு, ஆகஸ்ட் 8, 1990: தனது முதல் அரசாங்கம் கலைக்கப்பட்ட பிறகு, கராச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் பெனசீர் பூட்டோ.

ஆகஸ்ட் 6, 1990 அன்று, நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதாகவும், உறவினர்களுக்கு சலுகை காட்டுதல் மற்றும் ஊழல் மலிந்துவிட்டதாகவும் கூறி, பெனாசிர் பூட்டோவின் அரசாங்கத்தை அதிபர் குலாம் இஷாக் கான் கலைத்தார். நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டப்பேரவைகளையும் அவர் கலைத்தார்.

அகுந்தின் கூற்றுப்படி, தன் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகளை பெனாசிர் பூட்டோ மறுத்தார். சிலவற்றுக்கு விளக்கமும் அளித்தார். உதாரணமாக, தனது உறவினர்களுக்கும் நெருங்கிய கூட்டாளிகளுக்கும் சில தொழில்துறை அனுமதிகளை வழங்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அரசாங்கத்தைக் கலைத்ததன் மூலம் குலாம் இஷாக் கான் தனது அரசியலமைப்பு உரிமைகளுக்கு உட்பட்டு சரியான நடவடிக்கையை எடுத்துள்ளார் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1990 ஆகஸ்ட் கடைசி வாரத்தில், அதாவது அரசாங்கம் கலைக்கப்பட்டு சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, கராச்சியில் உள்ள பிலாவல் மாளிகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தை பெனாசிர் பூட்டோ கூட்டினார் என்றும், அதில் தானும் கலந்து கொண்டதாகவும் ஜாவேத் ஜப்பார் எழுதுகிறார்.

பெனாசிரின் அமைச்சரவையில் ஜப்பார் இருபது மாதங்கள் பதவி வகித்திருந்தார்.

அக்கூட்டத்தில், அரசாங்கம் கலைக்கப்பட்டது அதிபர் மற்றும் சில ராணுவ அதிகாரிகளின் சதி என்று பெனாசிர் பூட்டோ விவரித்திருந்தார். ஜாவேத் ஜப்பாரும் இந்தக் கூட்டத்தில் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

"மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நமது அரசாங்கத்தில் சில தனிநபர்கள் செய்த ஊழலும் நமது ஆட்சி கலைக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், ஊழல் நமது செயல்பாட்டையும் மக்கள் மத்தியில் நமது பிம்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளது." என்று அவர் கூறினார்.

பெனாசிர் பூட்டோவுக்கு தான் பேசியது பிடிக்கவில்லை என்று ஜாவேத் ஜப்பார் எழுதுகிறார்.

ஜப்பாரின் கூற்றுப்படி, "பெனாசிர் பூட்டோ என்னைப் பார்த்து மிகவும் கோபமான மற்றும் கடுமையான தொனியில் பேசினார்- 'ஊழலா? ஊழலா! ஒருபோதும் இல்லை ஜாவேத், இங்கே எந்த ஊழலும் நடக்கவில்லை.'"

"இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் சோடிக்கப்பட்டது, நம்மை குறித்து அவதூறு பரப்புவதற்காகவே திட்டமிடப்பட்ட ஒரு பிரசாரம். ஊழல் எங்கே இருக்கிறது? எனக்கு உதாரணம் கொடுங்கள், ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்டுங்கள். உங்கள் எதிரிகள் சொல்வதைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்குப் பதிலாக, உண்மையைச் சொல்லுங்கள். எந்த ஊழலும் இல்லை."

"நமது அரசாங்கம் ஒரு சதியால்தான் கலைக்கப்பட்டது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு