சௌதியில் ஹூத்தி தாக்குதலில் பலியான இந்தியர் யார்? உம்ரா பயணிகள் இருந்த போது விமான நிலையத்தில் தாக்குதல்

பட மூலாதாரம், @IndianEmbRiyadh
இரான் ஆதரவு ஹூத்திக்கள் சௌதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடந்த மறுநாளான அக்டோபர் 11-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்தது.
உயிரிழந்த இந்தியர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சௌதி அரேபியாவில் 26 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு அக்டோபரில் சௌதி அரேபியாவுக்குப் பயணம் செய்தபோது பிரதமர் நரேந்திர மோதி, "26 லட்சம் இந்தியர்கள் சௌதி அரேபியாவைத் தங்களின் இரண்டாவது தாயகமாகக் கொண்டுள்ளனர். அந்நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்கள் பங்களித்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் ஹஜ் பயணம் மற்றும் வணிகத்திற்காக இங்கு வருகின்றனர். சௌதி அரேபியாவில் நீங்கள் உருவாக்கியுள்ள இடத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என்பதே அவர்களுக்கான எனது செய்தி" என்று கூறியிருந்தார்.
அக்டோபர் 10-ம் தேதி, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் 3 மற்றும் 4-வது முனையங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 300 பேர் காயமடைந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் படி, ஞாயிற்றுக்கிழமை ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் 4-வது முனையத்தில் ஏவுகணை போன்ற வெடிபொருள் ஒன்று விழுந்தது.
இதற்கு முந்தைய நாளில், அதே விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, சௌதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தம்மாம் நகரின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மற்றும் சௌதி அராம்கோ நிறுவனத்தின் இரண்டு தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலையும் அந்நாடு உறுதிப்படுத்தியது.
ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, உம்ரா புனிதப் பயணிகள் விமானங்களில் ஏற தயாராக இருந்ததைக் காட்டும் பிரத்யேகக் காணொளியை அல் அரேபியா ஆங்கிலம் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல விமானங்களுக்கு அருகே ஓடுபாதைப் பகுதியில் வெடிபொருள் ஒன்று விழுந்து தீப்பற்றியதாக நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதையடுத்து, விமானம் மீண்டும் நிறுத்துமிடத்திற்குத் திரும்பியது. பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
சௌதி அரேபியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமான தம்மாம் விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஃப்ளைட்ரேடார்24 இணையதளம் தெரிவித்தது.
சேத மதிப்பீடு மற்றும் பாதுகாப்புச் சோதனைகள் நடைபெற்று வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
பின்னர், தாக்குதலில் சிலர் காயமடைந்ததை சௌதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியது. எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
விமான நிலையத் தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சேதங்களைத் தொடர்ந்து மதிப்பிட்டு வருவதுடன், அவற்றைக் கண்காணித்து வருவதாகவும் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இதற்கிடையில், முந்தைய நாள் அதே விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக சௌதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஏமனைச் சேர்ந்த, இரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சௌதி அரேபிய விமான நிலையங்கள் மீது தாக்குதல்களை அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
உயிரிழந்த அந்த இந்தியர் யார்?

பட மூலாதாரம், Getty Images
தாக்குதலில் உயிரிழந்தவர் ஹைதராபாத்தின் மெஹ்திப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் என்று அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
"இந்தத் தாக்குதலில் யூசுப் சாஹிப் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது" என ஓவைசி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் .
"அவரது மகனுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. மற்றொரு மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் இருந்த மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. அவரது மகளும் மனைவியும் பாதுகாப்பாக உள்ளனர். அவருடன் இருந்த அவரது உறவினருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அவர் ஆபத்திலிருந்து மீண்டுள்ளார்.
ரியாத்தில் உள்ள யூசுப்பின் மைத்துனருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தக் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்பு உறுதி செய்யப்படுவதற்கு முன்பு, ஒவைசி தனது எக்ஸ் தளத்தில், "ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதலில் முகமது யூசுப் அலி என்ற நபர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்தியத் தூதரகம் கூறியது என்ன?

பட மூலாதாரம், @IndianEmbRiyadh
சௌதி அரேபியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 300-க்கும் மேற்பட்டவர்களில் குறைந்தது 10 இந்தியர்களும் அடங்குவதாக அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தாக்குதலில் காயமடைந்த இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டபடி, இந்தியர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும் இரண்டு பேர் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட "கோழைத்தனமான தாக்குதலைத்" தொடர்ந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடான சௌதி அரேபியாவில் பொதுமக்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று இந்தியா ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11, 2026) கடுமையாகக் கண்டித்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில நாட்களாக ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை, குறிப்பாக அக்டோபர் 10-ம் தேதி உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
"உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"ரியாத் தாக்குதலில் இந்தியக் குடிமகன் ஒருவர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தக் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியத் தூதரகம் வழங்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சௌதி அரேபியா மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் பாதுகாப்பு அறிவுறுத்தலையும் வெளியிட்டிருந்தது.
சௌதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதில், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவைப்பட்டால் வீடுகளுக்குள்ளேயே இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































