இரானின் புதிய ஆட்சி முந்தைய ஆட்சியிலிருந்து எவ்வாறு மிகவும் வேறுபட்டது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பால் ஆடம்ஸ்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
கடந்த மாதம் வெர்சாய்ஸ் அரண்மனையில் இரவு விருந்தின் போது இரானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, பலரும் அதில் ஒரு முரண்பாட்டைக் கண்டனர்.
அவருக்கு விருந்தளித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோங், டொனால்ட் டிரம்ப் தனது மனதை மாற்றுவதற்கு முன்பாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை உறுதி செய்ய விரும்பியிருக்கலாம், மேலும் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி மண்டபம் அவரது விருந்தினரைக் கவரும் என்று கணக்கு போட்டிருக்கலாம்.
ஆனால் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது, அந்த ஒன்றரை பக்க ஒப்பந்தத்திற்கும் முதலாம் உலகப் போரின் முடிவில் 1919-இல் கையெழுத்தான மிக நீண்ட வெர்சாய்ஸ் உடன்படிக்கைக்கும் இடையே தவிர்க்க முடியாமல் ஒப்பீடுகளை தூண்டியது. 1919 உடன்படிக்கை ஐரோப்பாவை மறுவடிவமைத்தது, ஆனால் பெரும் இழப்பீடுகளுக்கான அதன் அம்சங்கள் கோபமும் கசப்பும் நிறைந்த ஜெர்மனியை விட்டுச் சென்றதுடன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்க உதவியது.
பல வழிகளில் வேறுபட்ட இந்த இரான் ஒப்பந்தம், அதேபோன்றதொரு விதிகொண்ட ஓர் ஒப்பந்தமாக பார்க்கப்படுமா?
கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு பலவீனமான போர்நிறுத்தம் ஓரளவுக்கு நீடிக்கிறது. ஆனால் ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட சில மோதல்களுக்கு பிறகும், போருக்கு வழிவகுத்த எந்தவொரு பிரச்னையும் தீர்க்கப்படுவதை நெருங்காத நிலையிலும் மத்திய கிழக்கின் நிலைமை முன்பு இருந்ததைப் போலவே ஆபத்தானதாகவே தோன்றுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், இரான் ஆழமான மாற்றத்தின் மத்தியில் உள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்பு, போரைத் தொடங்கி வைத்து இரானின் ஆட்சியின் பெரும்பகுதியை அழித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அந்த நாடு விடைகொடுத்து வருகிறது.
இது ஒரு பெரிய தருணம்: பழையவர்கள் புதியவர்களுக்கு வழிவிட்டிருக்கிறார்கள் என்பதன் பெரிய நினைவூட்டல். புதிய முகங்களுடன் அதற்கே உரிய தாக்கங்களைக் கொண்ட ஒரு புதிய அணுகுமுறையும் வருகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நாட்டின் முன்னாள் தலைவர்கள் பலரை கல்லறைகளுக்கு அனுப்பியிருக்கலாம், ஆனால் அவர்களுக்குப் பதிலாக இன்னும் வலிமையான எதிரிகள் வந்துள்ளார்களா?
சதுரங்கப் பலகையை மாற்றி அமைத்தல்
"இந்தப்போர் நாம் இதுவரை நினைத்ததை விடவும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது மற்றும் மிகவும் பரந்தது," என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் 'மேம்பட்ட சர்வதேச ஆய்வுகள்' பள்ளியின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் மத்திய கிழக்கு ஆய்வுகள் பேராசிரியரான வாலி நஸ்ர் என்னிடம் கூறினார்.
"இவ்வளவு பெரிய அளவிலான அனைத்து முக்கிய போர்களும் இறுதியில் சதுரங்கப் பலகையை மாற்றி அமைக்கும்," என்று அவர் கூறுகிறார். "இது மத்திய கிழக்கில் அதைச் செய்யும்."
கடந்த ஜனவரியில், இரானில் மக்கள் போராட்டம் வெடித்தது. இது இஸ்லாமிய குடியரசின் வீழ்ச்சியைக் குறிக்கக்கூடும் என்று டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் கணித்திருந்தனர்.
பல தசாப்த கால சர்வதேச பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, இரானின் பொருளாதாரம் ஏற்கனவே சீர்குலைந்திருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போருக்குப் பிறகு அந்த நாடு ஏற்கனவே மோசமாகக் காயப்பட்டிருந்தது.
இரானின் அணுசக்தித் திட்டம், நீண்ட காலமாக ஒரு ராஜதந்திர கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது டிரம்ப் பெருமையாகக் கூறியது போல் முழுமையாக அழிக்கப்படவில்லை, ஆனால் கணிசமாக சேதமடைந்திருந்தது.
மேலும் செறிவூட்டப்பட்டால் 10 அல்லது 11 அணு ஆயுதங்களுக்குப் போதுமானதாகக் கருதப்படும் அதன் யுரேனியம் இருப்பு எங்கிருக்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் அதன் பெரும்பகுதி இஸ்ஃபஹான் அணுசக்தி வளாகத்திற்கு அருகிலுள்ள இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருப்பதாகக் கருதப்பட்டது.
மேலும் பரவலாகப் பார்த்தால், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அதன் கூட்டாளிகள் மற்றும் ஆதரவு அமைப்புகளின் தளர்வான கூட்டணியான, இரானின் 'எதிர்ப்பு அச்சு தொடர்ச்சியான பெரிய பின்னடைவுகளைச் சந்தித்திருந்தது.
சிரியாவில், இரானின் நெருங்கிய கூட்டாளியான பஷர் அல்-அசாத்தின் ஆட்சி, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சில விறுவிறுப்பான வாரங்களில் துடைத்தெறியப்பட்டு இல்லாமல் போனது.
லெபனானில், இரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா குழுவின் முன்னணி உறுப்பினர்களை இஸ்ரேல் படுகொலை செய்ததுடன், வெடிக்கும் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் மூலம் அதன் போராளிகளை அழித்தது.
காஸா பகுதியில், இரானின் மற்றொரு கூட்டாளியான ஹமாஸும் இதேபோன்ற விதியைச் சந்தித்தது. 2023 அக்டோபரில் அந்தக் குழு நடத்திய பேரழிவுத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதலால் பதிலடி கொடுத்தது, இது காஸாவின் பெரும்பகுதியை அழித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றது.
காஸா போருக்குப் பதிலடியாக - ஏமனில் இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியபோது, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய அனைத்தும் எதிர்த்தாக்குதல்களைத் தொடங்கின, அவற்றில் சில அந்தக் குழுவின் தலைமையை இலக்காகக் கொண்டிருந்தன.

பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத்தனை பின்னடைவுகளுக்குப் பிறகு, இரான் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாகவே ஒருமித்த கருத்து நிலவியது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இரான் எப்போதையும் விட இப்போது பலவீனமாக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் பல உளவுத்துறை அறிக்கைகளைப் பெற்றதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து நின்று போரை முடக்க நிலைக்குக் கொண்டு வர முடியும் என்ற எண்ணம் கற்பனைக்கு எட்டாததாகத் தோன்றியது.
இருப்பினும், அதுதான் நடந்தது. உலகிலேயே மிக முக்கியமான நீர்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை மூடி, உலகப் பொருளாதாரத்தை முடக்கும் அதன் திறனே, இஸ்லாமியக் குடியரசு இன்னும் வீழாமல் இருப்பதற்குக் ஓரளவுக் காரணமாகும்.
சாதகம், இரானுக்கா?
இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவதை டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார். வாலி நாசர் இதை மறுக்கவில்லை, ஆனால் இது உண்மையில் இரானுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று கூறுகிறார்.
"ஒரு புதிய தலைமுறை பொறுப்பேற்றுள்ளது," என்று அவர் கூறுகிறார். "அவர்களிடம் மிகத் தெளிவான செயல்திட்டம் உள்ளது. அவர்கள் போரை சமாளித்தனர், இப்போது அவர்கள் அமைதியையும் நிர்வகிக்கப் போகிறார்கள்."
புதிய தலைமை "மழுங்கிய மூளையுடைய உலகப் பேரழிவு சித்தாந்தவாதிகள்" என்று அமெரிக்கா அழைக்கப் பழகிய மனிதர்களால் ஆனது அல்ல, மாறாக பொதுவாகப் புரட்சிக்குப் பிந்தைய தலைவர்களால் ஆனது. அவர்கள் அரசைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் அவர்களின் முன்னோடிகளை விட தீர்க்கமாகச் செயல்படத் தயாராக இருக்கிறார்கள் என்று நாசர் கூறுகிறார்.
56 வயதான நாட்டின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி, போர் தொடக்கத்தில் கொல்லப்பட்டபோது பலவீனமான உடல்நிலையில் இருந்ததாகக் கருதப்பட்ட அவரது தந்தை அலி காமனெயியை விட 30 ஆண்டுகள் இளையவர்.
அதிபர், மசூத் பெசெஷ்கியன், 71-க்கு அதிக வயதானவர். ஆனால் 1979 புரட்சியை நடத்திய தலைமுறையினர் அனைவரும் மறைந்துவிட்டனர்.
நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் மற்றும் புரட்சிகர காவல்படையின் தலைமை தளபதி அகமது வாஹிதி ஆகிய இரு முக்கிய நபர்களும் தங்களது 60களில் உள்ளனர்.
புதிய அதி உயர் தலைவரைப் போலவே, இருவருக்கும் மிகவும் சக்திவாய்ந்த இரானிய புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
"அவர்கள் புரட்சியின் பிள்ளைகள்" என்று லண்டனின் சாட்ஹம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் இயக்குநர் சனம் வக்கீல் கூறுகிறார்.
"இனியும் 86 வயது முதியவர் இஸ்லாமியக் குடியரசு என்ற கப்பலை வழிநடத்தவில்லை. அமைப்பின் பரிணாம வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருந்தவர் அலி காமனெயி."
பல தசாப்தங்களாக, எச்சரிக்கை உணர்வுடன் இருந்த காமனெயி சில சமயங்களில் "போரும் இல்லை, அமைதியும் இல்லை" என்று அழைக்கப்படும் ஓர் உத்தியைப் பின்பற்றினார். அவருக்குப் பின் வந்தவர்கள் மிகவும் தைரியமாகச் செயல்பட்டிருக்கின்றனர், பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர், பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு, இரானுக்கு எந்த வகையிலும் அவமானகரமாக இல்லாத நிபந்தனைகளின் அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டுவர உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருந்தனர்.
"முந்தைய தலைமுறையை விட அவர்கள் மிகவும் ஆக்ரோஷமான முறையில் போரில் ஈடுபடத் தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் காட்டியுள்ளனர்" என்று நாசர் கூறுகிறார்.
முன்னாள் புரட்சிகர காவல்படை தளபதி காசெம் சுலைமானியைக் கொன்ற வான்வழித் தாக்குதலுக்கு 2020 இல் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டபோது, இராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது 12 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பு, பதிலடி கொடுக்கும் தனது நோக்கத்தை இரான் வேண்டுமென்றே வெளிப்படுத்தியது. அமெரிக்க ராணுவ வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
இந்த ஆண்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முழு அளவிலான தாக்குதலை எதிர்கொண்ட இரான், அத்தகைய கட்டுப்பாடு எதையும் காட்டவில்லை, பஹ்ரைனில் உள்ள ஐந்தாவது கடற்படையின் தலைமையகம் மற்றும் கத்தாரில் உள்ள அல்-உதைத் விமானத் தளம் உட்பட பிராந்தியம் முழுவதும் உள்ள பல அமெரிக்க தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
குவைத்தில் ஆறு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். சண்டையின் போது நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் வளைகுடா கூட்டாளிகளைத் தாக்க, கப்பல்களை இலக்காகக் கொள்ள மற்றும் ஒரு முக்கிய கப்பல் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை மூட இரான் காட்டிய ஆர்வமும் வெள்ளை மாளிகையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகத் தோன்றியது.
பல தசாப்தங்களாக, அமெரிக்கா தனது ராணுவ வசதிகளின் வலைப்பின்னல் மற்றும் வளைகுடா நாடுகளுடனான வளர்ந்து வரும் உறவுகள் மூலம் இரானைக் கட்டுப்படுத்த முயன்றது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களுக்கு இரானின் பதில், அந்த உத்தி இனியும் வேலை செய்யவில்லை என்று காட்டியது.
"இந்த நாடுகளில் பல தங்களின் எல்லைக்குள் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் தங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் என்று நம்பின, தங்களை ஓர் இலக்காக மாற்றும் என்று அல்ல" என்று சர்வதேச நெருக்கடி குழுவின் இரான் திட்ட இயக்குநர் அலி வேஸ் கூறுகிறார்.
"வளைகுடா நாடுகள் இப்போது அமெரிக்க பாதுகாப்பு குடையின் நம்பகத்தன்மையையும் தங்களின் சொந்த தடுப்பு உத்தியையும் கேள்விக்குள்ளாக்குகின்றன."
பெரும்பாலான வளைகுடா நாடுகள் தங்களின் ஆபத்தான அண்டை நாட்டுடனான உறவைச் சரிசெய்யும் நோக்கில் காய் நகர்த்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல தசாப்த கால பகைக்குப் பிறகு 2023 இல் இரானுடன் உறவை மீட்டெடுத்த செளதி அரேபியா, இரான் மற்றும் வளைகுடா அண்டை நாடுகளை ஒன்றிணைத்து ஒரு "சமரசம் உச்சிமாநாட்டை" நடத்தத் தயாராகி வருவதாக பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஎஃப்பி ஒரு பெயர் குறிப்பிடவிரும்பாத தூதரக அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் தாங்கள் விரும்பாத மற்றும் தவிர்க்க கடுமையாக முயற்சித்த ஒரு போரின் நடுவில் சிக்கியதில் கோபம் இருந்தபோதிலும், அமெரிக்க ராணுவத்துடனான தங்களின் உறவை முழுமையாகத் துண்டிக்க யாரும் தயாராக இல்லை என்று வேஸ் சந்தேகிக்கிறார்.
"பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அவர்கள் அமெரிக்காவை மிகவும் நம்பியிருப்பதால் முழுமையாக துண்டித்துக் கொள்ள முடியாது," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் வேறு இடங்களை பார்க்க நினைக்கலாம், ஆனால் முடிவில், அவர்கள் செல்வதற்கு இதைவிட சிறந்த இடம் வேறு எங்கும் இல்லை."
பெரிய வரலாற்று ஒப்பீடுகளை தவிர்த்து, தற்போதைய நிலைமையை ஒரு "நெகிழ்வான தருணம்" என்று அழைக்கும் வேஸ் பழைய எதிரிகள் வேறுபட்ட உறவுகளைப் பற்றி சிந்திப்பதால் இது சாத்தியக்கூறுகள் நிறைந்தது என கூறுகிறார்.
"கடந்த காலத்தில் இல்லாத ஒரு யதார்த்தத்தை நான் உணர்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இரான் மக்கள் நிலை என்ன?
புதிய நடைமுறைவாதிகள்
கடந்த ஜனவரியில், இரானிய குடிமக்களுக்கு "உதவி வரப்போகிறது" என்று டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார். பிப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கிய அவர், அதை இன்னும் தெளிவாகக் கூறினார்.
"நாங்கள் முடித்ததும், உங்கள் அரசை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்," என்று அவர் அவர்களிடம் கூறினார். "அதை எடுத்துக்கொள்ள அது உங்களுடையதாக இருக்கும்."
இத்தகைய வாக்குறுதிகள் இதுவரை மாயையாகவே நிரூபிக்கப்பட்டுள்ளன. இரானில் ஒரு புதிய தலைமுறை பொறுப்பில் இருக்கலாம், ஆனால் அது இன்னும் தன் மக்களுக்கு சுதந்திரமான, அதிக வளமான எதிர்காலத்திற்கான வாய்ப்பை வழங்கவில்லை.
ஆட்சி முற்றிலும் பிழைத்திருப்பதில் கவனம் செலுத்துவதால் கருத்து வேறுபாடுகளுக்கு வேறுபட்ட அணுகுமுறையைக் காண எதிர்பார்க்கவில்லை என அபுதாபியை தளமாகக் கொண்ட சாட்ஹம் ஹவுஸ் ஆய்வாளர் அனிசெ பாசிரி தப்ரிசி என கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"அவர்கள் தெருக்களில் மிக மிக தீவிரமாக கவனத்தை செலுத்துவார்கள்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால் போருக்கு முன்பே அரசு நிறுவனங்களுக்கு வெளியே ஹிஜாப் கட்டாயமாக்கப்படாததாலும், தெஹ்ரான் உணவகங்களில் மதுபானங்கள் கிடைப்பதாலும், முன்பு ஏற்றுக்கொள்ளாத சிலவற்றை அரசு படிப்படியாகக் கைவிட்டு வருவதற்கான அறிகுறிகளும் உள்ளன.
அரசின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியமே இதற்குக் காரணம் என்று வாலி நாசர் கூறுகிறார்.
"தங்களின் நாட்டின் நலனுக்காக இந்த விஷயங்களைத் தளர்த்த வேண்டும் என்று அவர்கள் ஒரு நடைமுறை முடிவை எடுத்தனர்," என்று அவர் கூறுகிறார்.
இரானியர்களுக்கு, போர் ஆழமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுகள் தங்கள் நாட்டின் மீது பொழிந்து, பொதுமக்களைக் கொன்று, அத்தியாவசிய உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியதால், அரசின் மிருகத்தனத்தின் மீதான பீதி படிப்படியாக வேறு வகையான பீதிக்கு வழிவகுத்தது.
போரின் முதல் நாளில், மினாப்பில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் இறந்த நிகழ்வு, உண்மையான எதிரி யார் என்று சிலரை யோசிக்க வைத்தது. அவர்களை விடுவிப்பதாக உறுதியளித்த இஸ்ரேலும் அமெரிக்காவும் நாட்டை அழிப்பதில் குறியாக இருப்பது போல் தோன்றியது.
ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வலிமையை எதிர்த்து நின்ற இரானின் புதிய தலைமை, சிதைந்துபோன அரசின் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த சாத்தியமான மெல்லிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா?
" எதையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை முழு அமைப்பும் அங்கீகரிக்கிறது என்ற வகையில் இது மாவோவுக்கு பிந்தைய சீனா போன்ற ஒரு தருணம் என வேஸ் கூறுகிறார். ஒரு புதிய சமூக ஒப்பந்தம் தேவை என்பதை இந்த புதிய தலைமை புரிந்து கொண்டுள்ளது."
அவர்களால் அதை வழங்க முடியுமா என்பது ஒரு திறந்த கேள்வி. முன்னெப்போதையும் விட இப்போது இரான் புரட்சிகர காவல் படையின் உயரடுக்கினரால் நடத்தப்படுகிறது, அதே நேரத்தில் ஜனவரியின் கொடூரமான ஒடுக்குமுறையில் தங்களின் ஆயிரக்கணக்கான நண்பர்களை இழந்ததற்காக இன்னும் துக்கத்தில் இருக்கும் ஏராளமான படித்த இளைஞர்கள், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் தங்களுக்கு உண்மையான பங்கு இல்லை என்று உணர்கிறார்கள்.
இது ஒரு திருப்புமுனை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பழைய நிச்சயத்தன்மைக்கும் எதிர்கால சாத்தியக்கூறுகளுக்கும் இடையில் இரான் ஆபத்தான நிலையில் உள்ளது.
வளைகுடாவில் சமீபத்திய தொடர்ச்சியான மோதல்கள் இருந்தபோதிலும், இரான் அமெரிக்காவுடன் ஒரு ராஜதந்திர செயல்முறையைத் தொடங்கியுள்ளது, இது அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஏற்கனவே "அடிப்படையில் மாற்றப்பட்ட உறவு" என்று அழைத்த ஒரு உறவுக்கு வழிவகுக்கும்.

பட மூலாதாரம், Getty Images
அணுசக்தி சலுகைகளுக்குப் பதிலாக தடைகள் நீக்கப்படும் என்ற வாய்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அரசின் திறன் அதன் சிதைந்த உள்நாட்டு நற்பெயரை மீட்டெடுக்க உதவும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து, இரான் அமெரிக்கத் தடை விலக்குகளால் பயனடைந்துள்ளது, இது 60 நாட்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.
60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்தின் போது, முடக்கப்பட்ட பல பில்லியன் டாலர் இரானிய சொத்துக்களை விடுவிப்பது போன்ற சலுகைகளும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் போது, அனைத்து சர்வதேச தடைகளையும் நீக்கும் இறுதிப் பரிசு உட்பட பிற வகையான சலுகைகளும் தொடரலாம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் 300 பில்லியன் டாலர் "மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு" திட்டத்தை உருவாக்குவதையும் குறிப்பிடுகிறது, இருப்பினும் அதற்கு யார் பணம் செலுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஒன்றாகப் பார்க்கும்போது, இந்த நிதி ஊக்கத்தொகைகள் இரானின் புதிய தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒரு சக்திவாய்ந்த தூண்டுதலாக இருக்கின்றன.
பிராந்தியம் "வாய்ப்புகளின் சாளரத்தை" எதிர்கொள்கிறது என்பதை சனம் வக்கீல் ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார்.
" ஓர் ஒப்பந்தம் கிடைக்காமல் இது நீண்டு கொண்டே சென்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பொறுமையிழந்து. 'சரி, இது மூன்றாவது சுற்றுக்கான நேரம்' என்று கூறுவது போன்ற ஒரு சூழல் ஏற்படுவதற்கும் வாய்ப்பும் உள்ளது."
நான் பேசிய நிபுணர்கள் யாரும் எதிர்காலம் நிச்சயம் என்று நம்பவில்லை.
இரான், அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு இடையேயான பல தசாப்த கால மோசமான உறவுகள், ஆழமான சந்தேகம் மற்றும் முழுமையான நம்பிக்கையின்மை கொண்ட ஒரு நச்சு மரபை விட்டுச் சென்றுள்ளன.
இரானின் அணுசக்தி திட்டம் குறித்த கருத்து வேறுபாடு, ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலம், லெபனான் போர், அத்துடன் எல்லா இடங்களிலும் உள்ள கடும்போக்குவாதிகளின் வேரூன்றிய கருத்துக்கள் என தோல்விக்கான வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.
ஆறு கொந்தளிப்பான மாதங்களுக்குப் பிறகு, பிராந்தியம் வித்தியாசமாகத் தோன்றத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த நெகிழ்வான தருணம் சிறந்த ஒன்றாக மாறுவதற்கு பல விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























