நெல்லையில் தந்தை, 5 வயது மகன் கொலையின் அதிர்ச்சி பின்னணி - கைதான 3 பேர்

இரட்டைக் கொலை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்

"குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு தகராறால் பல பேர் இறந்துவிட்டனர். இது தொடரக் கூடாது என சமரசம் செய்து கொண்டோம். ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை"

திருநெல்வேலியில் ஜூலை 2-ஆம் தேதியன்று தந்தை மற்றும் 5 வயது மகன் கொல்லப்பட்டது தொடர்பாக இறந்தவரின் சகோதரர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரட்டைக் கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய சேரன்மாதேவி டி.எஸ்.பி, "முன்விரோதம் காரணமாக கொலைகள் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்கிறார்.

திருநெல்வேலி, வீரவநல்லூர் அருகே கடந்த வியாழக்கிழமையன்று (ஜூலை 2) மாலையில் நடந்த இரட்டைப் படுகொலைகள் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

விவசாய வேலை செய்துவிட்டு தனது 5 வயது மற்றும் 15 வயது மகன் ஆகியோருடன் மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அம்பாசிடர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர், தனது தந்தையின் வாகனத்தை இடித்துத் தள்ளிவிட்டு கொலைச் செயலில் ஈடுபட்டதாக, அவரது 15 வயது மகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அவரது மூத்த மகனுக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

"காயம் பலமாக இருப்பதால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சகோதரர் மகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என, காளிமுத்துவின் சகோதரர் பரமசிவம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் காளிமுத்துவும் அவரது 5 வயது மகனும் உயிரிழந்துவிட்டனர். அங்கு ஆய்வை மேற்கொண்ட திருநெல்வேலி எஸ்.பி விஷ்வேஸ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி, செய்தியாளர்களிடம் சில தகவல்களைத் தெரிவித்தார்..

காளிமுத்துவின் 15 வயது மகன் கூறிய தகவலை விசாரணைக்கு எடுத்துள்ளதாகக் கூறிய அவர், "கூடுதல் நபர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

"கைது நடவடிக்கைக்குப் பிறகு குற்றத்தில் ஈடுபட்டதாகக் கைதான நபர்களின் விவரங்கள் தெரிவிக்கப்படும்" எனவும் காவல்துறை எஸ்.பி தெரிவித்தார்.

இரட்டைக் கொலை

இரட்டைக் கொலை... கைதான 3 பேர்

ஆனால், இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் கைதான நபர்களின் விவரங்களைக் காவல்துறை வெளியிடவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று இரட்டைப் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைதானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்தத் தகவலை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. சேரன்மாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று அவர் பதில் அளித்தார்.

தந்தை, மகன் கொலை வழக்கில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதர நபர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சேரன்மாதேவி டி.எஸ்.பி தெரிவித்தார்.

’கொலைகளில் முடிந்த குளிர்பான தகராறு’

2008 ஆம் ஆண்டு மூலச்சி கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில் குளிர்பானம் வாங்கிக் கொடுப்பதில் ஏற்பட்ட சிறு தகராறு, தற்போது வரை ஆறு பேருக்கும் மேற்பட்டோர் படுகொலைக்கு காரணமாகிவிட்டதாகக் கூறுகிறார் பரமசிவம்.

இவர் காளிமுத்துவின் சகோதரர்களில் ஒருவர். இவரது தந்தை சித்திரபுத்திரனுக்கு பத்து குழந்தைகள் இருந்துள்ளனர். இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவர்களில் நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பரமசிவம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "என் சகோதரர் குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தபோது அதை பெருமாள் பாண்டியனின் மைத்துனர் தட்டிவிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் என் சகோதரரை பெருமாள் பாண்டியன் தரப்பினர் கொலை செய்துவிட்டனர்" என்கிறார்

கொலையின் பின்னணி

'சமரசம் எடுபடவில்லை'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதன்பிறகு பெருமாள் பாண்டியன் தரப்பினர் தலைமறைவாக இருந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு பெருமாள் பாண்டியன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் காளிமுத்து, பாபநாசம், பெருமாள், குமார் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

"இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தபோது பாபநாசம், பெருமாள் ஆகியோரை பழிதீர்க்கும் வகையில் கொன்றுவிட்டனர். சில வருடங்கள் கழித்து குமாரும் கொல்லப்பட்டார்" என்கிறார் பரமசிவம்.

இரு தரப்பிலும் தொடர்ந்து மரணங்கள் ஏற்படவே, பெருமாள் பாண்டியன் குடும்பத்தினடம் காளிமுத்து தரப்பினர் பேசி சமரசம் செய்து கொண்டுள்ளனர்.

"ஆனால், இந்த சமரசம் எடுபடவில்லை" எனக் கூறுகிறார், காளிமுத்துவின் சகோதரர் பரமசிவம். "இது தொடரக் கூடாது என நினைத்தோம். ஆனால், அவர்கள் பழிக்குப் பழி வாங்கும் வகையில் செயல்படுகின்றனர்" எனக் கூறுகிறார்.

"மூலச்சி கிராமத்தில் காலம்காலமாக விவசாயம் செய்து வருகிறோம். எதிர்த்தரப்பில் சிறுவர்களாக இருந்தவர்கள் எல்லாம் தற்போது பெரியவர்களாகிவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படுகின்றனர்" எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இதுதொடர வேண்டாம் என இருந்தாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் இப்படியொரு செயலில் ஈடுபடுகிறார்கள். இது முடிவுக்கு வர வேண்டும்" எனக் கூறிய அவர், "சட்டப்படி அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும்" எனக் கூறுகிறார்.

"முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் கொலை நடந்ததா?" என சேரன் மாதேவி டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"அது ஒரு காரணமாக இருந்தாலும் வேறு சில காரணங்களும் உள்ளன. தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு விவரங்கள் தெரியவரும். இதுதொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு