அமெரிக்காவின் 'போலீஸ் நகரத்தில்' உலவிய சீரியல் கில்லர் ஒரு பீட்சா துண்டால் சிக்கிய கதை

    • எழுதியவர், ஷீலா ஃபிளின்
    • பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி அமெரிக்கா
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மசாபேகுவா ஒரு "போலீஸ் நகரம்" என்று அங்கு வசிப்பவர்கள் பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்.

லாங் ஐலேண்டின் அமைதியான தெற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம், மன்ஹாட்டனில் இருந்து ரயிலில் ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் உள்ளது. நியூயார்க் காவல் துறையின் (NYPD) துப்பறியும் அதிகாரிகள், தலைமுறைதலைமுறையாகக் காவல்துறையில் பணியாற்றும் குடும்பங்கள், நாசௌ மற்றும் சஃபோல்க் மாவட்ட அதிகாரிகள் எனப் பல்வேறு சட்ட அமலாக்கத்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றனர்.

உள்ளூர் இளைஞர்கள் உயிர் காப்பாளர்களாகப் பணியாற்றும், கோடையில் குடும்பங்கள் ஒன்று கூடும் கில்கோ கடற்கரையில், 2010-ஆம் ஆண்டில் மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. அப்போதுதான், லாங் ஐலேண்ட் பகுதியில் ஒரு தொடர் கொலையாளி (சீரியல் கில்லர்) பல ஆண்டுகளாக உலவி வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவின. அந்தக் கொலையாளி உள்ளூர் ஆளா? அவன் இன்னும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறானா? இத்தனை காலம் பிடிபடாமல் தப்பிப்பதால், அவன் ஒருவேளை காவல்துறை அடையாள அட்டையை அணிந்திருப்பவனோ? என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால், 2023-ஆம் ஆண்டு கட்டடக் கலைஞர் ரெக்ஸ் ஹியூர்மன் கைது செய்யப்பட்டது இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த வாரம் நீதிமன்றத்தில் எட்டு பெண்களைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டது, லாங் ஐலேண்ட் காவல்துறையினருக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

"இது ஒரு பெரிய நிம்மதி," என்கிறார் ஓய்வு பெற்ற நியூயார்க் காவல்துறை (NYPD) துப்பறியும் அதிகாரியும், மசாபேகுவா குடியிருப்பாளருமான கிரேக் கார்லேண்ட். "இந்தக் கொலைகளுக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாகச் சிலர் பழி சுமத்த முயன்றனர். ஆனால் இந்தத் தொடர் கொலையாளி ஒரு போலீஸ்காரர் அல்ல என்பது ஒட்டுமொத்த சட்ட அமலாக்கத் துறைகளுக்கும் ஒரு பெரிய மனநிறைவைத் தந்துள்ளது," என்றார் அவர்.

62 வயதான ரெக்ஸ் ஹியூர்மன், திருமணமானவர் மற்றும் இரண்டு குழந்தைகளின் தந்தை. மன்ஹாட்டனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே வீசப்பட்ட ஒரு பீட்சா துண்டிலிருந்து அவரது டிஎன்ஏ-வை அதிகாரிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 2023 ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

மசாபேகுவா பூங்காவிலிருந்து அவர் தினமும் நகருக்குச் செல்லும் பாதையில், 'ஜானி மெக்கோரிஸ்' என்ற புகழ்பெற்ற மதுக்கூடம் உள்ளது. ரயில் நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த இடத்தில்தான், காவல்துறையினர் அமர்ந்து அந்த மர்மக் கொலைகாரனைப் பற்றிய தேடுதல் வேட்டை குறித்து விவாதிப்பது வழக்கம். ஹியூர்மன் தனது பாழடைந்த வீட்டிற்குச் செல்லும்போது, இந்த மதுக்கூடத்தைக் கடந்தே சென்றுள்ளார்.

கடற்கரையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட போது, கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் "எங்களது வெள்ளிக்கிழமை இரவு நேர வழக்கமான வாடிக்கையாளர்களாக இருந்தனர்," என்கிறார் அந்த மதுக்கூடத்தின் உரிமையாளர் ஜோன் ஃபவுண்டன். அந்த பயங்கரமான கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு அவர்கள் "அதிர்ச்சியடைந்திருந்தனர்" என்றும் அவர் விவரித்தார்.

"அவர்கள் உள்ளே வரும்போது, 'கடற்கரையில், ஓஷன் பார்க்வேயில் என்னதான் நடக்கிறது?' என்று நாங்கள் ஆச்சரியத்துடன் கேட்போம். அதன்பிறகு செய்திகளில் நாள் முழுவதும் இதுகுறித்த தகவல்களே நிறைந்திருந்தன," என்றார் அவர்.

அவரது வாடிக்கையாளர்கள் இதுகுறித்த ஊகங்களை விவாதித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கொலையாளி அவர்களுக்கு இவ்வளவு அருகிலேயே இருக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பல தலைமுறைகளாகக் காவல்துறையில் பணியாற்றும் குடும்பங்களுக்கும் இது தெரியவில்லை. ஒருகட்டத்தில், அந்தக் கொலையாளி தங்களில் ஒருவனாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட சில அதிகாரிகளுக்கு எழுந்தது.

"அவன் தனது தடயங்களை அவ்வளவு சிறப்பாக மறைத்திருந்தான். அதனால் இது ஒரு போலீஸ்காரராக இருப்பதற்கான வாய்ப்பு உண்டா? என்ற பேச்சு மக்களிடையே நிலவியது," என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கார்லேண்ட். "கவனியுங்கள், யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது," என்றார் அவர்.

காவல் துறை மீது புகார்கள்

"லாங் ஐலேண்டின் மற்ற பகுதிகளை விட மசாபேகுவா மற்றும் மசாபேகுவா பார்க் பகுதிகளில் தான் அதிகளவிலான காவல்துறையினர் வசிக்கின்றனர்," என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பாப் லிவோட்டி. ஏற்கனவே காவல்துறையினர் அதிகம் வசிக்கும் லாங் ஐலேண்ட் பிராந்தியத்தின் "மையப்புள்ளி"யாக இப்பகுதியை அவர் குறிப்பிடுகிறார்.

மசாபேகுவாவில் காணப்படும் இந்தத் தலைமுறை ரீதியான குடும்பப் பின்னணிக்கு, தனது பாரில் பணியாற்றும் ஒரு ஊழியரையே உதாரணமாகக் காட்டுகிறார் பவுண்டன்.

"அவருடைய தந்தை ஒரு போலீஸ்காரர், அவருடைய தாத்தாவும் ஒரு போலீஸ்காரர், இப்போது அவரும் நியூயார்க் காவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார்," என்று கூறும் அவர், மசாபேகுவா காவல்துறை குடும்பங்கள் "காவல்துறையைச் சுவாசிப்பவர்களாகவே வாழ்கிறார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

இந்த மரபு மற்ற அவசரகாலப் மீட்புப் பணிகளிலும் நீடிக்கிறது; மசாபேகுவாவில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள், அவசர மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பிற அரசு ஏஜென்சிகளின் அதிகாரிகள் வசிக்கின்றனர். குறிப்பாக 9/11 தாக்குதலில் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது, சுற்றியுள்ள நாசௌ கவுண்டியில் மட்டும் பல மீட்புப் பணியாளர்கள் உட்பட சுமார் 350 பேர் உயிரிழந்தனர்.

இருப்பினும், கில்கோ கடற்கரை வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் சட்ட அமலாக்கத் துறையை வாட்டி வதைத்தது.

"ஒரு நிர்வாகியாகவும், முன்னாள் காவல்துறை அதிகாரியாகவும், இந்த கொலைகளுக்குக் காரணமானவர் யார் என்பதைக் கண்டறிய இவ்வளவு காலம் எடுத்தது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது," என்கிறார் நாசௌ கவுண்டியின் ஓய்வு பெற்ற கொலை வழக்கு விசாரணைப் பிரிவுத் தலைவர் ஜான் அஸாட்டா.

கில்கோ கடற்கரை கொலை வழக்கு விசாரணையை அப்போது கவனித்து வந்த சஃபோல்க் கவுண்டி காவல்துறைத் தலைவர் ஜிம்மி பர்க் , 2013-ஆம் ஆண்டில் பாலியல் பொம்மைகள், ஆபாச படங்கள், சாட்சிகளைக் கட்டாயப்படுத்துதல் மற்றும் உண்மைகளை மறைத்தல் போன்ற பரபரப்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டது, நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி, "நன்னடத்தை விதிகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் லோப் என்பவரது வீட்டிற்குள் ஜிம்மி பர்க் அத்துமீறி நுழைந்தார். தனது அதிகாரப்பூர்வ வாகனத்தில் இருந்து லோப் திருடிய பாலியல் பொம்மைகள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய பையை மீட்பதற்காக அவர் அங்கு சென்றார். பின்னர், காவல்துறை காவலில் இருந்த லோப்பை அவர் தாக்கினார், மேலும் இந்த விவகாரத்தைக் மூடி மறைக்க மற்றவர்களையும் அவர் மிரட்டினார்."

2016-ஆம் ஆண்டில் அவர் தன் மீதானக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 46 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் சஃபோல்க் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் தாமஸ் ஜே. ஸ்போட்டா மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவரும், முரணாக அரசு ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தவருமான கிறிஸ்டோபர் மெக்பார்ட்லேண்ட் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் தொழிலாளர்களின் கொலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டிய அதே சஃபோல்க் அதிகாரிகள் மீதான இத்தகைய புகார்கள், தொடர் கொலைகாரனுக்கும் சட்ட அமலாக்கத் துறைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சதித் திட்டக் கோட்பாடுகளுக்கு மேலும் வலு சேர்த்தன. அதோடு, இந்த விசாரணையில் எஃப்.பி.ஐ அமைப்புடன் இணைந்து செயல்படுவதை ஜிம்மி பர்க் நிறுத்திவிட்டதும், பல லாங் ஐலேண்ட் காவல்துறையினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

"அங்கே பெரும் அதிருப்தி நிலவியது," என்கிறார் ஏ.ஆர்.பி.ஓ தலைவர் லிவோட்டி. "இதைப் பற்றி நான் படித்தபோது, 'இவ்வளவு விஷயங்களைச் செய்த பிறகும் இந்த ஆள் எப்படித் தப்பித்தார்?' என்று ஆச்சரியப்பட்டேன். நம்பவே முடியவில்லை. பல எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தும், யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்றார் அவர்.

இருப்பினும், இந்த புகார்கள் புலனாய்வு ஆர்வலர்களுக்கும் சதித் திட்டக் கோட்பாட்டாளர்களுக்கும் மிகச்சிறந்த தீனியாக அமைந்தன. இதன் காரணமாக லாங் ஐலேண்ட் தொடர் கொலையாளி பற்றிய கட்டுக்கதைகளும் மர்மங்களும் தொடர்ந்தன. இறுதியில், 2023-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி ஹியூர்மன் கைது செய்யப்படும் வரை இந்த நிலை நீடித்தது.

அவர் ஒரு கட்டடக் கலைஞர் என்பதைக் கண்டு காவல்துறையினர் நிம்மதி அடைந்த வேளையில், மசாபேகுவா பகுதியில் வசிப்பவர்கள் "ஆச்சரியத்தில் உறைந்து போயினர்" என்கிறார் லிவோட்டி. "இந்த ஆள் இங்கே வசிப்பார் என்று யார் நினைத்திருப்பார்கள்?"

"எல்லோரும் அதிர்ச்சியடைந்தார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்," என்கிறார் கார்லேண்ட். தான் ஒருங்கிணைக்க உதவிய சிறுவர் பேஸ்பால் போட்டியில் ஹியூர்மனின் குழந்தையும் பங்கேற்றதை அவர் பின்னர் உணர்ந்தார். "இந்த நபருடன் தொடர்பில் இருந்த எவருக்கும் இது ஒரு பெரும் அதிர்ச்சிதான்."

'பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு என்பது கிடையாது'

மசாபேகுவாவில் உள்ள செயின்ட் ரோஸ் ஆஃப் லிமா ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் காவல்துறையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அதிகளவில் உறுப்பினர்களாக உள்ளனர். அங்குள்ள மக்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு, எப்படி மற்றவர்கள் மீது அக்கறை காட்டத் தொடங்கினர் என்பதைப் பாதிரியார் ஜெரார்ட் ஜென்டில்மேன் குறிப்பிடுகிறார்.

"ஹியூர்மனின் குடும்பத்திற்காக நாம் என்ன செய்கிறோம்? நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா? என்று கேட்டு மக்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர்," என்கிறார் அந்தப் பாதிரியார். "நாங்கள் அவர்களுக்குச் சில உதவிகளைச் செய்தோம். எங்களது ஊழியர்களில் ஒருவர் ஹியூர்மனின் மனைவியுடன் சிறிது நேரம் செலவிட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்."

"நிச்சயமாக அங்கே ஒரு கவலையும் இருந்தது: 'கடவுளே, இது நமது நகரத்திலேயே நடந்திருக்கிறது. அவன் நமக்கு மத்தியிலேயே இருந்திருக்கிறான்' என்று மக்கள் பேசிக்கொண்டனர்," எனக் கூறும் ஜென்டில்மேன், "இது கடந்த கால மர்மமாக மாறப்போகிறது என்ற நிம்மதி ஒருபுறம் இருந்தாலும், ஆழ்ந்த சோகமும் உள்ளது," என்று தெரிவித்தார். "மக்கள் மசாபேகுவாவை ஒரு நெருக்கமான சமூகமாகப் பார்க்கிறார்கள், ஆனால் இந்தச் சம்பவம் அதைச் சிதைத்துவிட்டது," என்றார் அவர்.

சட்ட அமலாக்கத் துறையினரின் ஒற்றுமையை இந்தத் தேவாலயம் பலமுறை நேரில் கண்டுள்ளது. உதாரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது கொல்லப்பட்ட மசாபேகுவா குடியிருப்பாளரும், நியூயார்க் காவல்துறையின் துப்பறியும் அதிகாரியுமான ஜொனாதன் தில்லரின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். (அதிகாரியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டது அப்போது தலைப்புச் செய்தியானது. மசாபேகுவா சமீபத்திய ஆண்டுகளில் குடியரசுக் கட்சியின் கோட்டையாக மாறி வருகிறது, 2024 அதிபர் தேர்தலில் இரண்டு தசாப்தங்களில் முதன்முறையாக நாசௌ கவுண்டி குடியரசுக் கட்சி பக்கம் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது).

"இது துயரமான நேரங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நின்று பலத்தைக் கண்டறியும் ஒரு சமூகம். இது நடுத்தர வர்க்க உழைக்கும் மக்களின் பகுதி. இங்கே நிறைய காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் உள்ளனர் - அதுவே இந்தச் சமூகத்தின் அடையாளம்," என்கிறார் அவர். ஹியூர்மன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, இந்தச் சமூக அடையாளம் அவர்களுக்குப் பெரும் துணையாக இருக்கும்.

"இந்த நபர் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பது அனைவருக்கும் ஒரு பெரிய நிம்மதியைத் தருகிறது," என்கிறார் கார்லேண்ட். "சரியான நபர்தான் பிடிபட்டிருக்கிறார், இனிமேல் இதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை."

அஸாட்டா தனது பங்கிற்கு, "இந்த நபர் கைது செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

காவல்துறை தனது நேர்மையை நிரூபித்துவிட்டதாக உணரலாம், மசாபேகுவா மற்றும் லாங் ஐலேண்ட் பாதுகாப்பாக உணரலாம். ஆனால், குற்றத்தை ஒப்புக்கொள்வது என்பது கொல்லப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்குப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று அஸாட்டா சுட்டிக்காட்டுகிறார்.

"மக்கள் தங்களுக்குத் தீர்வு கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்; ஆனால் உண்மையில் தீர்வு என்பது கிடையாது," என்கிறார் அவர். "உங்களுக்கு நீதி கிடைக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அந்த இழப்பில் இருந்து முழுமையான விடுதலை என்பது எப்போதும் கிடைப்பதில்லை."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு