காணொளி: அமெரிக்காவில் சேமித்து வைத்த தங்கம் பற்றி ஐரோப்பிய நாடுகள் கவலை ஏன்?
நியூயார்க்கின் லிபர்டி ஸ்ட்ரீட்டில், தரையிலிருந்து சுமார் 25 மீட்டர் கீழே… ஒரு பாதுகாப்பு அறை உள்ளது.
அது சாதாரண பாதுகாப்பு அறை அல்ல.
அதன் உள்ளே அரை மில்லியனுக்கும் அதிகமான தங்க கட்டிகள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், அதுதான் ஃபெடரல் ரிசர்வின் தங்கக் களஞ்சியம்.
உலகின் மிகப்பெரிய தங்க சேமிப்பு மையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இங்கு சுமார் 6,300 டன் தங்கம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
இதன் இன்றைய மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகம்.
ஆம்… நீங்கள் கேட்டது சரிதான், ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகம்.
அதாவது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4% ஆகும்.
ஆனால் உண்மையான கதை இங்கிருந்துதான் தொடங்குகிறது.
இந்தத் தங்கம் முழுவதும் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்ல.
இதில் பெரும்பகுதி மற்ற நாடுகளுக்கு சொந்தமானது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு .
பல தசாப்தங்களாக, உலகம் முழுவதுமிருந்து மத்திய வங்கிகள், அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் தங்கத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க அமெரிக்க ஃபெடரல் ரிசர்வை நம்பி வந்திருக்கின்றன.
ஏன் அப்படி?
1944-ல், பிரெட்டன்உட்ஸ் உடன்படிக்கையின்படி, டாலரை தங்கத்துடன் இணைக்கும் நிலையான மாற்று விகிதத்தை நிறுவியது. இதனால் தங்கத்துடன் டாலரும் மிகவும் நம்பகமான சொத்துகளாக மாறின.
1950-களிலிருந்து, ஐரோப்பிய தங்கம் அங்கே குவியத் தொடங்கியது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச நாணய அமைப்பு நிபுணர் பார் ஐகென்க்ரீன் கூற்றுப்படி "அந்த நேரத்தில், ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. அதற்கான தொகை தங்கமாகவும் டாலராகவும் வழங்கப்பட்டது.
தங்கத்தை கப்பல் அல்லது விமானம் மூலம் எடுத்துச் செல்லவும், காப்பீடு செய்யவும் பெரும் செலவு ஏற்பட்டதால், பெடரல் ரிசர்வ் களஞ்சியத்திலேயே பாதுகாப்பாக வைத்திருப்பது சிறந்தது என அந்த நாடுகள் கருதின. அதனோடு அங்கு சேமிப்புக் கட்டணம் எதுவும் இல்லை." என்கிறார் அவர்.
ஜெர்மன் ஊடக மதிப்பீட்டின்படி, ஃபெடரல் ரிசர்வ் சுமார் 1,200 டன் ஜெர்மன் தங்கத்தை வைத்திருக்கிறது. இதன் தோராயமான மதிப்பு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஆனால் இப்போது, நிலைமைகள் மாறி வருகின்றன.
டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
வரிகள், வெளியுறவுக் கொள்கை, கிரீன்லாந்து போன்ற பிரச்னைகளில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.
ஜெர்மனியை சேர்ந்த வங்கியான புந்தெஸ்பேங்க்-ன் முன்னாள் தலைமை ஆராய்ச்சியாளர் இமானுவேல் மொன்ச், நியூயார்க்கில் சேமிக்கப்பட்டிருக்கும் ஜெர்மனியின் தங்கத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதை திரும்பக் கொண்டுவருவது ஜெர்மனிக்கு அதிக உத்திசார் சுதந்திரத்தை அளிக்கும் என்று அவர் நம்புகிறார்.
அதேபோல், ஜெர்மன் வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் மைக்கேல் ஏகர் ,"டிரம்ப் கணிக்க முடியாதவர், வருவாயை அதிகரிக்க எதையும் செய்யக்கூடியவர். அதனால்தான் நமது தங்கம் ஃபெடரல் ரிசர்வ் வால்ட்டில் இனி பாதுகாப்பாக இல்லை", எனக் கூறுகிறார்.
"கிரீன்லாந்து விவகாரம் மேலும் தீவிரமடைந்தால், என்ன நடக்கும்? புந்தெஸ்பேங்க் தனது தங்கத்தை அணுக முடியாமல் போகும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே அது தனது இருப்புக்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும்." என்கிறார் மைக்கேல் ஏகர்
இருப்பினும், இது குறித்து அனைவரும் கவலைப்படவில்லை.
புந்தெஸ்பேங்க் தலைவர் ஜோவாகிம் நாகல் இந்த கவலைகளை தணிக்க முயன்றுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த சர்வதேச நாணய நிதியம் கூட்டத்தில் அவர் பேசுகையில், "கவலைப்பட வேண்டியதில்லை" எனக் கூறினார்.
ஆனால் சந்தேகங்கள் நிச்சயமாக வளர்ந்து வருகின்றன.
இது முதல் முறை அல்ல.
2014-ல், நெதர்லாந்து ஃபெடரல் ரிசர்வில் சேமிக்கப்பட்ட தனது தங்க இருப்புகளின் பங்கை 51% இலிருந்து 31% ஆகக் குறைத்தது.
பல தசாப்தங்களுக்கு முன்பு, 1960-களில், ஃபிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கால் டாலரின் திடீர் மதிப்பிழப்புக்கு அஞ்சி, ஃபெடரல் ரிசர்விலிருந்து தனது நாட்டின் தங்கத்தை திரும்பப் பெற்றார்.
அதிலிருந்து, நியூயார்க் வால்ட்டில் சேமிக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் அளவு குறைந்து வருகிறது. 1970-களில் 12,000 டன்னுக்கும் அதிகமாக இருந்தது இன்று சுமார் 6,300 டன்னாக குறைந்துள்ளது.
இருப்பினும், பல நாடுகள் தங்கள் தங்கத்தை அங்கேயே வைத்திருக்கின்றன.
இப்போதைக்கு, டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் எந்த ஐரோப்பிய நாடும் தங்கள் தங்கத்தை திரும்பக் கொண்டு வர முடிவு செய்ததாக எந்த பதிவும் இல்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



