எஸ்ஐஆர்: படிவம் 6-ல் மாற்றம் செய்தது யார்? அதனால் யாருக்கு சிக்கல்? படிவங்கள் 6, 7 மற்றும் 8-ன் முக்கியத்துவம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வ விண்ணப்பம் தான் படிவம் 6.
ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள ஒரு அறிவிப்பைச் சுற்றி தற்போதைய சர்ச்சை எழுந்துள்ளது.
அதில், விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி ஆகியோரின் பெயர்கள் முந்தைய வாக்காளர் பட்டியல்களில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த தகவல்கள் கோரப்படுகின்றன.
இந்தக் கூடுதல் தகவல் கோருவதற்கு உண்மையில் யார் ஒப்புதல் அளித்தது என்ற விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளது.
படிவம் 6-இன் பயன்பாடு
தகுதியான வாக்காளரைப் பதிவு செய்வதற்குத் தேவையான பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிற தொடர்புடைய விவரங்களை படிவம் 6 சேகரிக்கிறது.
இந்தப் படிவம் 1960-ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை தேர்தல் ஆணையம் தனது வசதிக்கேற்ப சுதந்திரமாக மாற்றிக்கொள்ளக்கூடிய வெறும் ஆன்லைன் படிவமாகக் கருத முடியாது.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 அல்லது அக்டோபர் 1 ஆகிய நான்கு தகுதி தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் 18 வயதை எட்டிய அல்லது எட்டவிருக்கும் எந்தவொரு இந்தியக் குடிமகனும் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதற்கு, சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதுடன், வேறு எந்த அடிப்படையிலும் தகுதியிழந்தவராக இருக்கக்கூடாது.
உங்களது 18-வது பிறந்த நாள் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 அல்லது அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சம்பந்தப்பட்ட தகுதித் தேதியில் உங்களுக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
இவை வயதைக் கணக்கிடுவதற்கான இறுதி தேதிகளே தவிர, பிறந்தநாளுக்கான தேதிகளோ அல்லது விண்ணப்பிக்கக்கூடிய ஒரே தேதியோ அல்ல.
உதாரணமாக, நீங்கள் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று 18 வயதை எட்டுகிறீர்கள் என்றால், ஜனவரி 1 ஆம் தேதி அன்று உங்களுக்கு 17 வயதுதான் இருக்கும்.
ஆனால், ஏப்ரல் 1-க்குள் உங்களுக்கு 18 வயது நிறைவடைந்திருக்கும்.
எனவே, ஏப்ரல் 1, 2026 ஆம் ஆண்டு உங்களுக்குப் பொருந்தக்கூடிய முதல் தகுதி தேதியாக இருக்கும்.
இதற்காக நீங்கள் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

பட மூலாதாரம், Getty Images
என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன?
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புலன் விசாரணையின் படி, ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையில் எஸ்ஐஆர் தொடர்பான ஒரு பகுதி சேர்க்கப்பட்டிருந்தது. அதில், விண்ணப்பதாரர்கள் மூன்று வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது.
- கடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரரின் பெயர் இடம்பெற்றிருந்ததா?
- முந்தைய வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் பெயர் இடம்பெற்றிருந்ததா?
- அந்த முந்தைய பட்டியலில் விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் பெயர் இடம்பெறவில்லையா?
இந்த மூன்று தெரிவுகளும் புலனாய்வில் குறிப்பிடப்பட்டிருந்தன.
முக்கியமாக, இந்தப் பகுதி கட்டாயமாக்கப்படவில்லை.
ஆனால், இதற்குப் பதிலளிக்காமல் விண்ணப்பதாரர்களால் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்று அந்த புலனாய்வு தெரிவித்தது.
பெறப்பட்ட பதிலின் அடிப்படையில், விண்ணப்பதாரரோ அல்லது அவரது உறவினரோ பழைய வாக்காளர் பட்டியல் தொடர்பான பெயர், உறவுமுறை, ஈபிஐசி (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) எண், மாநிலம், மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி, பாகம் எண் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்களை வழங்குமாறு கேட்கப்படலாம்.
உதாரணமாக, 18 வயதுடைய ஒருவர் 2000-களின் தொடக்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பதிவு நடைமுறைகளின் வாக்காளராக இருந்திருக்க முடியாது.
எனவே, இந்தக் கூடுதல் கேள்வி, அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் கடந்தகால விவரங்களை வாக்காளர் பதிவு நடைமுறையில் தொடர்புடையதாக மாற்றியது.
இதனால், பழைய வாக்காளர் பட்டியல்களில் பெயர் இடம்பெறாத குடும்பங்கள் தொடர்பாக கேள்விகள் எழுந்தன.
இருப்பினும், பழைய வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இடம்பெறாதது மட்டுமே, அவர் தற்போது வாக்களிக்கத் தகுதியற்றவர் என்று கூறுவதற்கான காரணமாகாது.

பட மூலாதாரம், Getty Images
அதை மாற்றியது யார்?
ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையில் கூடுதல் தேவைகளைச் சேர்த்தது யார், படிவம் 6-ல் மாற்றங்களைச் செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் யாருக்கு உள்ளது போன்ற இரண்டு தனித்தனி கேள்விகள் உள்ளன.
இந்தக் கூடுதல் பகுதி, தேர்தல் ஆணையத்தின் ஈசிஐநெட் (ECInet) பதிவு இணையதளத்தில் இடம்பெற்றது.
கூடுதல் எஸ்ஐஆர் (SIR) அறிவிப்புப் படிவங்கள் இருப்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், சட்டப்பூர்வமான படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று கூறியுள்ளது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், மென்பொருளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு யார் ஒப்புதல் அளித்தார்கள் என்பது குறித்துத் திட்டவட்டமாகத் தெரியவில்லை.
ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஆனால், இந்த மாற்றத்துக்கு அவர் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார் என்று எந்த நீதிமன்றத் தீர்ப்பும் தெரிவிக்கவில்லை.
1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 28-வது பிரிவின் படி, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பிறகு, மத்திய அரசு தொடர்புடைய விதிகளை உருவாக்கவோ திருத்தவோ முடியும்.
சட்டப்பூர்வமான மாற்றங்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அறிவிப்பு மற்றும் நாடாளுமன்ற நடைமுறை தேவைப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி, மற்ற இரு தேர்தல் ஆணையர்களான விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
1960-ஆம் ஆண்டின் விதிகளில் திருத்தம் செய்யாமல் சட்டப்பூர்வமான படிவத்தை மாற்ற முடியாது என்று அவர்கள் வாதிட்டனர்.
2021-ஆம் ஆண்டின் தேர்தல் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, சட்ட அமைச்சகத்தின் சட்டமியற்றல் துறை, விதிகள் மற்றும் படிவம் 6-ல் செய்யப்பட்ட தொடர்புடைய திருத்தங்களை 2022 ஜூன் 17 அன்று முறையாக அறிவித்தது.
இது ஒரு முறையான சட்டத் திருத்தமாகும். தற்போதைய ஆன்லைன் மாற்றம் சர்ச்சைக்குரியதாக உள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த மாற்றம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் குறிவைத்து விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் படிவம் 6-ல் மாற்றங்களைச் செய்தார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. பாஜகவுக்கு உதவுவதற்காக அவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பது இப்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈடுபட்ட அவர் மற்றும் மற்ற அனைவரும் பொறுப்புக்கூற வைக்கப்படுவார்கள்" என்று அந்தப் பதிவு கூறுகிறது.
ராகுல் காந்தியின் பதிவுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், "2025 ஜூன் 24 அன்று பிஹாரில் எஸ்ஐஆர் நடத்துவதற்கான உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த ஒப்புதலுடன் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு, 2026 மே 27 அன்று இந்தியாவின் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது.
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியிட்ட தனது செய்திக்குறிப்பு எண் 120-ன் புள்ளி 1(iii)-ல், "எஸ்ஐஆர் -க்கான படிவம் 6 உடன் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சர்ச்சையின் காலவரிசை
ஜூன் 24, 2025: பிஹாரில் எஸ்ஐஆர் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்களுடன், இணைப்பு டி (Annexure D) என்று அழைக்கப்படும் தனி அறிவிப்புப் படிவம் இணைக்கப்பட்டது.
மே 16 2026: எஸ்ஐஆர் உத்தரவு அல்லது வழிகாட்டுதல்கள் மூலம் சட்டப்பூர்வமான படிவங்கள் 6 மற்றும் 8-ஐத் திருத்த முடியாது என்று விவேக் ஜோஷி குறிப்பிட்டார். விதிகளில் திருத்தம் செய்வதற்காக இந்த முன்மொழிவை அரசிடம் அனுப்ப வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மே 19, 2026 : கோப்பு தொடர்பான ஜோஷியின் ஆட்சேபனையை சுக்பீர் சிங் சந்து ஏற்றுக்கொண்டார்.
மே 27, 2026 : பிஹாரில் எஸ்ஐஆர் நடைமுறையை மேற்கொள்வதற்கான தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆவணங்கள் தயாரிக்கும் நடைமுறை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உள்ள சில அதிகாரங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அந்த அதிகாரங்கள் முழுமையானவை அல்ல என்று தெரிவித்தது.
ஆகஸ்ட் 13, 2026 : "அங்கீகரிக்கப்படாத/சட்டவிரோதமான மாற்றங்கள்" எனக் கூறப்பட்டவற்றை நீக்க வேண்டும் என்று சந்து வலியுறுத்தினார்.
செப்டம்பர் 23, 2026 : தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய ஆட்சேபனைகள் தொடர்பான தனது புலனாய்வு செய்தியை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.
செப்டம்பர் 26, 2026 : எஸ்ஐஆர் அறிவிப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், எஸ்ஐஆர் காலகட்டத்துக்கு அப்பால் வழக்கமான சட்டப்பூர்வப் படிவங்களே பயன்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அக்டோபர் 5, 2026 : திருத்தப்பட்ட படிவம் 6-க்கு தான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்ததுடன், அதில் மாற்றம் செய்தது யார் என்பதைக் கண்டறிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
தற்போது என்னென்ன பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன?
1. இது ஒரு திருத்தமா அல்லது தனி அறிக்கையா?
விண்ணப்பச் செயல்முறையில் ஒரு கட்டாயக் கூடுதல் கேள்வியைச் சேர்ப்பது, சட்டப்பூர்வப் படிவத்தை மாற்றியமைத்து, விதிகளில் திருத்தம் தேவைப்படச் செய்தது என்று விமர்சகர்களும், பதிவு செய்யப்பட்ட உள்ளக ஆவணங்களும் கூறுகின்றன.
ஆனால், படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அது அறிவிப்புப் படிவத்திலிருந்து தனியான ஒரு தேவையாகும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
2. உச்ச நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்ததா?
செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில், பிஹார் எஸ்ஐஆர் தொடர்பான தீர்ப்பை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது.
ஆனால், அந்த வழக்கில் பரிசீலிக்கப்பட்ட அறிவிப்பு, 2025 ஜூன் மாத உத்தரவுடன் இணைக்கப்பட்ட இணைப்பு டி (Annexure D) ஆகும்.
பின்னர் சேர்க்கப்பட்ட அறிவிப்பில், விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் முந்தைய எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த தகவல்கள் கோரப்பட்டன. இதிலிருந்து இந்த அறிவிப்பு வேறுபட்டது.
அக்டோபர் 5 ஆம் தேதி, தலைமை நீதிபதி சூர்ய காந்த், "திருத்தப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை. இது தெளிவாகத் தெரிகிறது. ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் போது, அதை யார் திருத்தியது என்பதைப் பார்க்க விரும்புகிறோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த விளக்கம் முக்கியமானது. ஆனால், சர்ச்சைக்குரிய அறிவிப்பு சட்டவிரோதமானது என்று இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
நீதிமன்றம் ஆவணங்களையும், ஒப்புதல் அளிக்கப்பட்ட நடைமுறையையும் ஆய்வு செய்து வருகிறது.
3. இது தகுதியுள்ள வாக்காளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறதா?
பழைய வாக்காளர் பட்டியல்களில் தங்களது குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெறாத 18 வயது நிரம்பியவர்கள், கூடுதல் நிச்சயமற்ற நிலை அல்லது சரிபார்ப்பை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதே கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
தகுதியுள்ள இளம் விண்ணப்பதாரர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் சந்து தனது ஆட்சேபனையில் வலியுறுத்தியிருந்தார்.
எனினும், மூன்றாவது தெரிவில், தங்களது பெயர்களோ அல்லது தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோ முந்தைய பட்டியலில் இடம்பெறவில்லை என்று விண்ணப்பதாரர்கள் குறிப்பிட முடியும்.
எனவே, வாக்காளர் பதிவுக்கு பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் பெயர் பழைய பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஒரு கட்டாயத் தேவை என்று கூறுவது சரியாக இருக்காது.
4. தேர்தல் ஆணையத்தில் கூட்டு முடிவெடுக்கும் செயல்முறை புறக்கணிக்கப்பட்டதா?
மற்ற தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளையும் மீறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்ததாக தொடர்புடைய ஒரு மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அக்டோபர் 5 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்ததுடன், படிவம் 6 தொடர்பான மனுவையும் அதனுடன் இணைத்தது.
இருப்பினும், தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது பரிசீலனையில் உள்ளன.
எஸ்ஐஆர் செயல்முறை நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இந்தக் கூடுதல் அறிவிப்புப் படிவம் ஆன்லைன் விண்ணப்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்ஐஆர் நடைபெறும் காலகட்டத்தில் இந்த அறிவிப்பு பயன்படுத்தப்படுவதாகவும், எஸ்ஐஆர் காலத்துக்கு அப்பால் வழக்கமான சட்டப்பூர்வமான படிவம் 6 பயன்படுத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
தற்போது, இந்தக் கூடுதல் அறிவிப்புக்கான சட்டப்பூர்வ அடிப்படை என்ன, இதற்கு யார் அங்கீகாரம் அளித்தது, ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையில் இதைச் சேர்த்ததன் மூலம் தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறியதா? என்பன போன்ற விடை காணப்படாமல் உள்ள பிற முக்கிய கேள்விகளும் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
படிவம் 7 என்பது என்ன?
வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயரை நீக்கக் கோருவதற்கோ அல்லது ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கோ படிவம் 7 பயன்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில், ஏற்கனவே வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட ஒருவர் வேறு வாக்குச்சாவடிக்கு மாறவும், தகவல்களில் திருத்தம் செய்யவும், வாக்காளர் அடையாள அட்டையை மாற்றிக்கொள்ளவும் அல்லது மாற்றுத்திறன் தொடர்பான தகவல்களைப் பதிவு செய்யவும் படிவம் 8 பயன்படுத்தப்படுகிறது.
முக்கிய வேறுபாடு என்னவென்றால், படிவம் 7 என்பது ஒரு பதிவை எதிர்ப்பதற்கு அல்லது நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
அதேசமயம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளரின் பதிவை மாற்றுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு படிவம் 8 பயன்படுத்தப்படுகிறது.
படிவம் 7 மூன்று முக்கிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது:
- ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரின் பெயரை நீக்கக் கோருதல்.
- மற்றொரு நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தல்.
- ஒருவரது சொந்த பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கோருதல்.
மற்றொரு நபரின் பெயரை நீக்குவதற்கான காரணங்களாக இந்தப் படிவத்தில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.
- பதிவு செய்யப்பட்ட வாக்காளர் இறந்துவிட்டார்.
- அந்த நபர் வாக்களிப்பதற்கான வயதை எட்டவில்லை.
- வாக்காளர் தனது பதிவு செய்யப்பட்ட முகவரியில் வசிக்கவில்லை / நிரந்தரமாக வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டார்.
- ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அந்த நபர், அதே இடத்திலோ அல்லது வேறு ஏதேனும் இடத்திலோ பதிவு செய்யப்பட்டுள்ளார்.
- அந்த நபர் குடியுரிமைக்குத் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை.

பட மூலாதாரம், Getty Images
படிவம் 8 என்பது என்ன?
படிவம் 8 நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமானதைத் தேர்வு செய்ய வேண்டும்.
குடியிருப்பு மாற்றம்: நீங்கள் புதிய முகவரிக்கு குடிபெயர்ந்துள்ளதால், உங்கள் வாக்காளர் பதிவை புதிய முகவரிக்கு மாற்ற விரும்பினால்.
விவரங்களில் திருத்தம்: வாக்காளர் பட்டியல் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களில் திருத்தம் செய்ய வேண்டுமெனில்.
வாக்காளர் அடையாள அட்டை மாற்றம்: ஏற்கனவே உள்ள விவரங்களில் எந்த மாற்றமும் செய்யாமல், புதிய ஈபிஐசி (EPIC) தேவைப்பட்டால்.
மாற்றுத்திறன் குறித்த தகவலைப் பதிவு செய்தல்: வாக்காளர் பதிவுகளில் மாற்றுத்திறன் தொடர்பான தகவலைப் பதிவு செய்ய வேண்டுமெனில்.
ஈபிஐசி (EPIC) என்பது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்பதன் சுருக்கமாகும்.
விவரங்களில் திருத்தம் செய்வதற்கான ஒரு விண்ணப்பத்தில் அதிகபட்சம் நான்கு விவரங்களைத் திருத்த முடியும். கோரப்படும் மாற்றங்களுக்கு சான்றாக தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவர் தனது குடியிருப்பை மாற்றினால், புதிய முகவரி அமைந்துள்ள தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்பித்து, முகவரிக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
பழைய முகவரியை நீக்கி, புதிய முகவரிக்கு வாக்காளர் பதிவை மாற்றுவதற்கான கோரிக்கையை இந்தப் படிவம் கொண்டுள்ளது.
உதாரணமாக, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வாக்காளர் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தால், புதிய வாக்காளராகப் படிவம் 6-ஐ பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, படிவம் 8 மூலம் தனது பதிவை புதிய முகவரிக்கு மாற்ற வேண்டும்.
எந்த தேவைக்கு எந்தப் படிவம்?
படிவம் 6 - முதல் முறையாக வாக்காளராகப் பதிவு செய்ய
படிவம் 7 - ஒரு பெயருக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஒரு பெயரை நீக்குமாறு கோருவதற்கு
படிவம் 8 - ஏற்கனவே வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டு, முகவரி மாறியிருந்தால்
படிவம் 8 - வாக்காளர் பட்டியலில் உங்களைப் பற்றிய தகவல் தவறாக இருந்தால்
படிவம் 8 - வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்திருந்தால்
படிவம் 8 - மாற்றுத்திறன் தொடர்பான தகவலைப் பதிவு செய்ய
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































