ஜெய்ஸ்வால் – சூர்யவன்ஷி அதிரடி: ராஜஸ்தானிடம் மும்பை அணி சரிந்தது எப்படி?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கோப்புப்படம்)
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026-ன் 13வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டி மழை காரணமாக 11 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி களம் இறங்கினர்.

தீபக் சஹார் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் 4 ரன்கள் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல், இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்ததுடன், அடுத்து மூன்று பந்துகளிலும் தொடர்ச்சியாக பவுண்ட்ரி விளாசினார் ஜெய்ஸ்வால். இதனால் முதல் ஓவரிலேயே 22 ரன்கள் வந்தது.

இரண்டாவது ஓவரை பும்ரா வீசியபோதும் அதிரடி மழை நிற்கவில்லை. அந்த ஓவரின் முதல் பந்திலும், நான்காவது பந்திலும் சூர்யவன்ஷி சிக்ஸர்கள் அடித்தார்.

மூன்றாவது ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீச, அந்த ஓவரின் முதல் மற்றும் இரண்டாவது பந்துகளில் ஜெய்ஸ்வால் சிக்ஸர்கள் அடித்தார். நான்காவது பந்தில் சூர்யவன்ஷி மற்றொரு சிக்ஸர் அடிக்க ரன் வேகம் மேலும் உயர்ந்தது.

ஷர்துல் தாகூர் வீசிய 5வது ஓவரும் சூர்யவன்ஷியின் அதிரடி சிக்ஸருடன் தொடங்கியது. அந்த ஓவரில் மேலும் ஒரு பவுண்ட்ரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த நிலையில், கடைசி பந்தில் சூர்யவன்ஷி 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் இறங்கிய துருவ் ஜுரெல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரியான் பராகுடன் இணைந்து தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெய்ஸ்வால்.

இருவரும் சேர்ந்து 19 பந்துகளில் 37 ரன்கள் குவித்தனர். ரியான் பராகும் தன் பங்கிற்கு ஒரு பவுண்ட்ரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த நிலையில், 20 ரன்களில் கஸன்ஃபர் பந்தில் ஆட்டமிழந்தார்.

11வது ஓவரில் ஜெய்ஸ்வால் மற்றும் ஹெட்மையர் இணைந்து 3 பவுண்ட்ரிகள் அடிக்க, ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்ட்ரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.

 சூரியவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூர்யவன்ஷி (கோப்புப்படம்)

மும்பை ஆட்டம் எப்படி?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, மும்பை அணியின் ரயான் ரிக்கெல்டன் சிக்ஸர் அடித்தார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில், ரயானின் விக்கெட்டை ஆர்ச்சர் வீழ்த்தினார்.

இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடித்த நிலையில், அதே ஓவரில் அவரும் அவுட் ஆனார்.

மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மாவும் அவுட் ஆக, மும்பை அணி திணறியது.

இந்த நிலையில், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இணைந்து மூன்று பவுண்ட்ரிகள் அடித்தனர். ஆனால் ஹர்திக் பாண்ட்யா 9 ரன்களில் ரவி பிஷ்னாய் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் திலக் வர்மாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் 4.6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 46 ரன்கள் மட்டுமே.

இந்த நிலையில், நமன் திர் மற்றும் ரதர்ஃபோர்ட் ஆகியோர் கூட்டணி அமைத்து ரன்கள் சேர்க்கத் தொடங்கினர்.

ஆனால் இந்த கூட்டணியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இருவரும் சேர்ந்து 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 7.5வது ஓவரில் ரதர்ஃபோர்ட் அவுட் ஆனார். அடுத்ததாக நமன் திரும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். சரியான கூட்டணி இல்லாததால், மும்பை அணி 103 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹார் ஆகியோரால் அதிரடியாக இலக்கை எட்ட முடியவில்லை. ஒரு சிக்ஸர் அடித்த ஷர்துல் தாகூரும் அவுட் ஆனார்.

இறுதியில், மும்பை அணி 11 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு