அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி வெளியில் தோன்றாதது இரானில் யாருக்கு சாதகம்?

மொஜ்தபா கமேனி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மொஜ்தபா காமனெயியின் இந்தப் புகைப்படம் 2024-ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள ஹெஸ்பொலாவின் அலுவலகத்தில் எடுக்கப்பட்டது.
    • எழுதியவர், அர்மான் ஷரிஃபி மற்றும் கோன்சே ஹபிபியாசாத்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி, மார்ச் 8 அன்று நியமிக்கப்பட்டதிலிருந்து பொதுவெளியில் தோன்றவில்லை.

இது அவரது உடல்நிலை மற்றும் அதிகாரம் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.

தலைமையின் தொடர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, அதிகாரிகள் இந்த இடைவெளியை எழுத்துப்பூர்வ அறிக்கைகள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் மூலம் நிரப்ப முயன்றுள்ளனர்.

இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) தலைமையின் கைகளில்தான் உண்மையான அதிகாரம் உள்ளது என்ற நம்பிக்கையை இது மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி, மார்ச் 8 அன்று நியமிக்கப்பட்டதிலிருந்து பொதுவெளியில் தோன்றவில்லை.

மொஜ்தபா காமனெயி எங்கே இருக்கிறார்?

பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும், இரானின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை.

56 வயதான மதத் தலைவரான மொஜ்தபா காமனெயி, மார்ச் 8 அன்று தலைவராகப் பொறுப்பேற்றது முதல் இதுவரை எந்த உரையும் நிகழ்த்தவில்லை, கேமராவுக்கு முன்னால் தோன்றவில்லை

அவர் அடிக்கடி பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது, அவரது அதிகாரத்தை நிலைநிறுத்த பாதுகாப்பு மற்றும் மத அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 28ம் தேதி அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை அலி காமனெயி கொல்லப்பட்ட நிலையில், அதே தாக்குதலில் மொஜ்தபா காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அவரது தந்தையின் உரைகள் இரானிய அரசியலில் ஒரு வழக்கமான அங்கமாக இருந்தன.

ஆனால் இதுவரை அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்கள் மட்டுமே மொஜ்தபா காமனெயின் அறிக்கையை வாசித்துள்ளனர்.

சைப்ரஸுக்கான இரானிய தூதரை மேற்கோள் காட்டி, மொஜ்தபா காமனெயி தனது தந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது காயமடைந்ததாக மார்ச் 11 அன்று 'தி கார்டியன்' இதழ் செய்தி வெளியிட்டது.

காமனெயியின் கால் மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டதாக அந்த தூதரக அதிகாரி தெரிவித்தார்.

இருப்பினும், அதே நாளில், அதிபர் மசூத் பெசெஷ்கியனின் மகன், அதி உயர் தலைவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறினார்.

மொஜ்தபா காமனெயியின் முதல் செய்தியை மார்ச் 12 அன்று ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் வாசித்தார்.

அதில் அவர் பழிவாங்க அழைப்பு விடுத்ததுடன், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாகவும் அச்சுறுத்தினார்.

இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் தளபதி ஆகியோரின் மரணத்திற்குப் பழிவாங்கப்போவதாக மார்ச் 18 அன்று காமனெயி உறுதியளித்தார்.

மார்ச் 20 அன்று, 'நவ்ரூஸ்' பண்டிகையை முன்னிட்டு, அவர் மீண்டும் ஒரு எழுத்துப்பூர்வ செய்தி மூலம் மட்டுமே நாட்டு மக்களிடம் உரையாடினார். வழக்கமாக அவரது தந்தை இரானிய புத்தாண்டு தொடக்கத்தில் தொலைக்காட்சியில் தோன்றுவார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

அதனைத் தொடர்ந்து, மார்ச் 21 அன்று, தெஹ்ரானில் நடைபெற்ற ஈகைத் திருநாள் தொழுகையை அவர் தவிர்த்தார். பாரம்பரியமாக இது அதி உயர் தலைவரால் வழிநடத்தப்படும்.

அவருக்குப் பதிலாக ஒரு மூத்த கடும்போக்கு மதகுரு அந்தத் தொழுகையை வழிநடத்தியதுடன், காமனெயியின் நவ்ரூஸ் செய்தியை "வாழ்வின் செய்தி" என்று புகழ்ந்தார் .

மார்ச் மாத இறுதியில், இரானின் மீதான "தாக்குதல்" குறித்து "தெளிவான நிலைப்பாட்டை" எடுத்ததற்காக இராக் மதகுருமார்களுக்கும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

ஏப்ரல் 1 அன்று, லெபனானின் ஹெஸ்பொலா அமைப்பிற்கு இரான் அளிக்கும் ஆதரவை அதன் தலைவர் நைம் காசிமுக்கு அனுப்பிய செய்தி மூலம் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதே நாளில், அவர் மற்றொரு எழுத்துப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார், அதில் இயற்கை தினத்தன்று மக்கள் மரங்களை நட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது இரானின் சுற்றுச்சூழலைக் குறிவைக்கும் "அமெரிக்க மற்றும் சியோனிச பிசாசுகளுக்கு" எதிரான ஓர் எதிர்ப்பு என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், அப்போதும் அவரது புகைப்படங்களோ, குரலோ அல்லது அவர் பொதுவிலோ தோன்றவில்லை.

தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடமானது பரப்புரைகள், இணையத்தில் பரப்பப்படும் நகைச்சுவைகள் மற்றும் குழப்பங்களால் நிரப்பப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

செயற்கை நுண்ணறிவுப் படங்கள், மீம்கள் மற்றும் அமெரிக்காவின் மதிப்பீடு

தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடமானது பரப்புரைகள், இணையத்தில் பரப்பப்படும் நகைச்சுவைகள் மற்றும் குழப்பங்களால் நிரப்பப்பட்டுள்ளது.

மொஜ்தபாவின் சமீபத்திய மற்றும் சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் இல்லாததால், அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தத் தொடங்கின.

டெஹ்ரானின் புரட்சிச் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பேனரும் இதில் அடங்கும். அதில் அதி உயர் தலைவர் ஐஆர்ஜிசி தளபதிகளுடன் இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

அவரது புதிய எக்ஸ் கணக்கின் சுயவிவரப் படமும் ஏஐ கருவிகளால் மாற்றியமைக்கப்பட்டது என அடையாளம் காணப்பட்டது. டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட இந்த உருவம் விரைவில் கேலிப் பொருளாக மாறியது.

புதிய தலைவரின் அட்டைப்பட உருவத்தை ஆதரவாளர்கள் திறந்து வைப்பது போன்ற ஒரு வைரல் வீடியோ, உண்மையில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ ஆகும்.

இது முன்னதாக கோம் என்ற புனித நகரில் எடுக்கப்பட்ட ஒரு உண்மையான வீடியோவைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்தது.

உண்மையான வீடியோவில் புகைப்பட சட்டகம் மட்டுமே இருந்ததாகவும், அட்டையில் தோன்றும் உருவம் இல்லை என்றும், ஏஐ பதிப்பில் எழுத்துக்கள் சிதைந்துள்ளதாகவும் உண்மைச் சரிப்பார்ப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இருப்பினும், "கார்ட்போர்டு ஆயதுல்லா"என்ற மீம் பிரபலமடைந்து, போராட்டக்காரர்கள் மற்றும் சாதாரண பயனர்களிடையே பரவலாகப் பரவியது.

லாஸ் வேகஸில் நடந்த ஒரு திருவிழாவில் இரானிய புலம்பெயர் ஆர்வலர்கள் அட்டையில் செய்யப்பட்ட அவருடைய உருவ பொம்மையுடன் ஆடும் ஒரு காட்சியினை லண்டனைச் சேர்ந்த 'இரான் இன்டர்நேஷனல்' சேனல் பகிர்ந்தது. இது இணையத்தில் கேலிக்குள்ளானது.

அமெரிக்க அதிகாரிகளும் இது குறித்த தங்களது மதிப்பீடுகளை வழங்கினர்.

அந்தத் தாக்குதலில் காமனெயி "காயமடைந்திருக்கலாம் மற்றும் அவரது முகம் சிதைந்திருக்கலாம்" என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறினார்.

இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், மொஜ்தபா "இறந்திருக்கலாம் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கலாம், ஏனென்றால் அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை" என்று தெரிவித்தார்.

இரானிய அதிகாரிகள் இதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.

ஐநா-வின் இரானிய தூதர், காமனெயி வெளியில் வராததற்குக் "பாதுகாப்பு காரணங்களே" காரணம் என்று கூறினார்.

அவர் "முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் மற்றும் தனது அனைத்துக் கடமைகளையும் கவனித்து வருகிறார்" என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வலியுறுத்தினார்.

இருப்பினும், இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஒரு ஆடியோவோ அல்லது வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை.

அவரது நியமனத்திற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் ஐஆர்ஜிசி , இந்தப் போர்க்காலத்தில் உண்மையான அதிகார மையமாகச் செயல்படுகிறது என்ற உணர்வை இது வலுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, போரின் போது ஐ.ஆர்.ஜி.சி. நடைமுறை அதிகார மையமாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

சிம்மாசனத்தின் பின்னணியில் உள்ள சக்தியா?

காமனெயி காயத்திலிருந்து குணமடைந்து வருகிறாரா, படுகொலை அச்சுறுத்தலைத் தவிர்க்கிறாரா அல்லது வேறு காரணங்களால் நேரில் தோன்ற முடியாமல் இருக்கிறாரா என்பது ஒருபுறம் இருக்க, அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது அரசியல் மாற்றத்தின் போக்கையே தீர்மானிக்கிறது.

அவரது நியமனத்திற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் ஐஆர்ஜிசி , இந்தப் போர்க்காலத்தில் உண்மையான அதிகார மையமாகச் செயல்படுகிறது என்ற உணர்வை இது வலுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதிய அதி உயர் தலைவர் பொதுவெளியில் தோன்றி, கூட்டங்களை வழிநடத்தி, அடையாளபூர்வ சடங்குகளைச் செய்வதன் மூலம் தனது அதிகாரத்தை நிரூபிக்க வேண்டிய நேரத்தில், அவர் வராதது இந்த அதிகார மாற்றத்தின் சட்டபூர்வத்தன்மையைக் குலைத்து, அமைப்பை நிலைப்படுத்துவதைக் கடினமாக்கும்.

இப்போதைக்கு, இரானின் மிகவும் சக்திவாய்ந்த மனிதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

நாளுக்கு நாள், வெறும் எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்களையே தலைமைக்கான ஆதாரம் அல்லது அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் என்பதற்கான சான்றாகக் காட்டுவது அதிகாரிகளுக்கு கடினமாகி வருகிறது.

பிரச்னைகளைப் பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு