இரான் போரால் இந்தியாவில் ஆணுறை விலை உயரும் ஆபத்து ஏன்?

இரான் போர் இந்தியாவில் ஆணுறை விலைகளை உயர்த்தும் ஆபத்து – நிபுணர்கள் கவலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரான் போர் பல தொழில்துறைகளைப் பாதித்துள்ளது. தற்போது அது எதிர்பாராத வகையில், வாழ்க்கைமுறை நுகர்வுப் பொருளாகக் கருதப்படும் ஆணுறை உற்பத்தித் துறையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

ஆணுறைகளைத் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியா, சிலிக்கான் எண்ணெய் போன்ற முக்கியமான பெட்ரோகெமிக்கல் பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த விநியோகத் தடங்கல்கள் காரணமாக, ஆணுறைகளின் விலை உயரக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

சுமார் 8000 கோடி மதிப்புள்ள இந்தியாவின் ஆணுறை துறையைச் சேர்ந்த வட்டாரங்களின்படி, அம்மோனியா விலை 40 முதல் 50% வரை உயரக்கூடும் என்று விநியோகஸ்தர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சிலிக்கான் எண்ணெயும் இந்த விநியோகச் சங்கிலிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதால், அதன் விலையும் உயரக்கூடும்.

பெயர் குறிப்பிட விரும்பாத இந்த துறைசார் அதிகாரி, பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "இந்தத் துறையில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஏனெனில், ஆணுறை இப்போது ஒரு வாழ்க்கைமுறை பொருளாக மாறிவிட்டது. மேலும் அதன் வர்த்தகம் மக்களின் வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறினார்.

ஆணுறை உற்பத்தியில் அம்மோனியா ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. லேடெக்ஸ் (ஆணுறை தயாரிப்பில் பயன்படும் முக்கிய மூலப்பொருள்) கெட்டுப்போகாமல் நிலைப்படுத்தவும், அதிலுள்ள கூடுதல் புரதங்களை நீக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. சிலிக்கான் எண்ணெய் ஒரு மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆணுறையின் மீது ஓர் உயவுப் பொருளாகச் செயல்பட்டு, அதன் பயன்பாட்டை எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது.

இருப்பினும், இந்தப் பிரச்னை வெறும் விலை உயர்வு பற்றியது மட்டுமல்ல. இந்த விநியோகத் தடங்கல்களால் ஏற்படக்கூடிய பரந்த அளவிலான தாக்கங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொது சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோர், குறிப்பாகக் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் பணியாற்றுவோர், இந்தப் பாதிப்புகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்துக் கவலை கொண்டுள்ளனர்.

"பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா" அமைப்பின் செயல் இயக்குநர் பூனம் முத்ரேஜா, இந்தச் சூழலின் தீவிரத்தன்மையை பிபிசி ஹிந்தியிடம் விளக்கினார்.

அப்போது அவர், "சிறந்த சுகாதார விளைவுகளை அடைவதற்கு, ஆணுறைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதும், கருத்தடை முறைகளில் ஆண்களின் பொறுப்பை இயல்பானதாக மாற்றுவதும் மிக முக்கியம். எனவே, ஆணுறைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதோ அல்லது அவற்றின் விலை உயர்வதோ, பதின்ம வயதுப் பெண்களின் கர்ப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம்" என்று தெரிவித்தார்.

''எளிதாகக் கூறுவதெனில், ஆணுறைகளின் விலை உயர்ந்தாலோ அல்லது அவை கிடைப்பது கடினமானாலோ, அது நுகர்வோரை மட்டுமின்றி பொது சுகாதார முயற்சிகளையும் பாதிக்கும். இதன் விளைவாக, திட்டமிடப்படாத கர்ப்பங்கள் மற்றும் பிற சுகாதாரப் பிரச்னைகள் அதிகரிக்கக்கூடும்.''

இரான் போர் இந்தியாவில் ஆணுறை விலைகளை உயர்த்தும் ஆபத்து – நிபுணர்கள் கவலை

பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஏன் விலை உயரலாம்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முக்கியமான மூலப்பொருட்களின் விநியோகப் பற்றாக்குறை மற்றும் நிலையற்ற விலைகள் காரணமாக, உற்பத்தி மற்றும் ஆர்டர்களின் விநியோகம் பாதிக்கப்படலாம் என்று ஹெச்.எல்.எல். லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.

''இவற்றில் பிவிசி ஃபாயில், அலுமினியம் ஃபாயில், பாலி கெமிக்கல்கள், பேக்கேஜிங் பொருட்கள் ஆகியவை அடங்கும். இவற்றுடன், தளவாடப் பிரச்னைகளும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.''

ஹெச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட 60 ஆண்டுகள் பழமையான அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.

இன்று இந்த நிறுவனம் இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்தி, ஆணுறைகள், மருத்துவமனைப் பொருட்கள் மற்றும் மருந்துகளைத் தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் தற்போது ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் ஆணுறைகளை உற்பத்தி செய்கிறது. இது நாட்டின் மொத்த உற்பத்தியில், கிட்டத்தட்ட 50% ஆகும். மேலும், இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை 87 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

போரால் ஏற்பட்ட விநியோகம் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களே, இந்தத் துறையில் தற்போது நிலவும் பதற்றத்திற்கு முக்கியக் காரணம்.

கப்பல் கொள்கலன்களுக்கு உலகளாவிய பற்றாக்குறை நிலவுவதாகவும், இது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதில் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும் அதிகாரி ஒருவர் விளக்கினார்.

தற்போது மூலப்பொருட்கள் விநியோகம் எவ்வளவு குறையும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம் எனவும், மிகுந்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

''மூலப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது, பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இவையனைத்தின் விளைவாகவும், விநியோகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.'' என அந்த வட்டாரம் கூறுகிறது.

மகாராஷ்டிராவின் மாலேகானை தளமாகக் கொண்ட க்யூபிட் லிமிடெட் நிறுவனம் ஏற்கெனவே கடுமையான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

க்யூபிட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் ஆர்.பாபு பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, "சிலிக்கான் எண்ணெய் மற்றும் அலுமினிய சுருள் விலைகள் கட்டுப்பாட்டில் இல்லை. பொதுவாக, இந்தக் காலகட்டத்தில் லேடெக்ஸின் விலையும் அதிகரிக்கும். எனவே, இது உற்பத்திச் செலவை பாதிக்கிறது. விற்பனையாளர்கள் இதற்குத் தயாராக இல்லாததால், எங்களால் அதே விலையில் அவர்களுக்குத் தர முடியவில்லை என்பதுதான் சிக்கல். எனவே இதுவொரு பெரிய பிரச்னையாக உள்ளது," என்று கூறினார்.

மேலும் அவர், "எங்கள் உற்பத்தியில் 80 சதவிகிதத்தை முக்கியமாக ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்த இடங்களுக்கு அனுப்ப கப்பல்கள் கிடைப்பதிலும் எங்களுக்குச் சிக்கல் நிலவுகிறது" என்றும் கூறினார்.

இரான் போர் இந்தியாவில் ஆணுறை விலைகளை உயர்த்தும் ஆபத்து – நிபுணர்கள் கவலை

பட மூலாதாரம், Viviane Moos/CORBIS/Corbis via Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மருந்து உற்பத்தித் துறையிலும் எதிரொலிக்கும் பாதிப்பு

பரந்த அளவிலான மருந்து உற்பத்தித் துறையையும் இந்த போர் பாதித்து வருகிறது. இந்தத் துறை தற்போது இரண்டு முக்கிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

முதல் சிக்கல் குறித்து விளக்கிய இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் விரஞ்சி ஷா, மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கடுமையான இடர்பாடுகள் நிலவுவதாகத் தெரிவித்தார்.

''குறிப்பாக ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா போன்ற பிராந்தியங்களுக்கு, கடல் மற்றும் வான்வழி என இரு மார்க்கங்களிலும் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது. போக்குவரத்து சேவைகள் முன்பைவிடக் குறைந்த இடைவெளிகளிலேயே இயக்கப்படுகின்றன என்பதே இதற்கு முக்கியக் காரணம். கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறைவாகவே கிடைப்பதால், சரக்குகளை அனுப்புவதற்கான செலவு அதிகரித்துள்ளது.''

இருப்பினும், இந்தப் பிரச்னை இன்னும் சமாளிக்கக்கூடிய நிலையிலேயே இருப்பதாக ஷா தெளிவுபடுத்துகிறார்.

"ஆனால் இந்தியாவுக்குள் மருந்துகளின் இருப்பு பொறுத்தவரை, எவ்வித சவாலும் இல்லை," என்றார் அவர்.

பிரச்னைகளைப் பேசுவோம்
படக்குறிப்பு, உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும்

இரண்டாவது சவால், மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் முறையுடன் தொடர்புடையது. மருந்துகள் பலவற்றைத் தயாரிக்க கரைப்பான்கள் (solvents) அல்லது செயற்கைப் பொருட்கள் போன்ற பெட்ரோகெமிக்கல் சார்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

''தற்போது நிலவும் உலகளாவிய சூழலின் விளைவாக, சந்தையில் ஊக வணிகம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் இந்த மூலப்பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று மக்கள் கவலை கொள்கின்றனர். இந்த அச்சத்தின் காரணமாக, மருந்துகளின் விலைகள் இப்போதே உயரத் தொடங்கியுள்ளன.'' என்கிறார் ஷா.

விலை உயர்வதற்குக் காரணம் தற்போது மருந்துகளுக்கு உண்மையான பற்றாக்குறை நிலவுவதல்ல என்றும், மாறாக அது பெரும்பாலும் ஊக வணிகம் மற்றும் நிச்சயமற்ற தன்மையாலேயே ஏற்படுவதாகவும் ஷா விளக்கினார்.

இரான் போர் இந்தியாவில் ஆணுறை விலைகளை உயர்த்தும் ஆபத்து – நிபுணர்கள் கவலை

பட மூலாதாரம், Kuni Takahashi/Bloomberg via Getty Images

ஆணுறை தயாரிப்புத் துறை மீதான தாக்கம் ஏன் முக்கியம்?

ஆணுறைகளின் விலை அதிகரித்தாலோ அல்லது உற்பத்தி குறைந்தாலோ, அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற கவலை குடும்பக் கட்டுப்பாடு துறையில் நிலவுகிறது.

"விலைகள் உயர்ந்தாலோ அல்லது கிடைப்பதில் தடை ஏற்பட்டாலோ, ஆணுறை பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் குழு மத்தியில் அது நடந்து, முன்னேற்றத்தைப் பாதிக்கும்," என்று கூறுகிறார் பூனம் முத்ரேஜா.

''ஆணுறைகளின் விலை உயர்ந்தாலோ அல்லது அவற்றைக் கண்டுபிடிப்பது கடினமானாலோ, குறைவான மக்களே அவற்றைப் பயன்படுத்தக்கூடும். இது திட்டமிடப்படாத கர்ப்பங்கள் அதிகரிக்க வழிவகுத்து, பிறப்புக் கட்டுப்பாடு குறித்த பொறுப்பை அதிகமாகப் பெண்கள் மீதே சுமத்தும் நிலையை ஏற்படுத்தலாம்'' என்று அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், இந்தியாவில் ஆணுறை பயன்பாடு இன்னும் "ஒப்பீட்டளவில் குறைவாகவே" உள்ளதாகவும் பூனம் முத்ரேஜா சுட்டிக்காட்டினார்.

''சமச்சீரான, நியாயமான குடும்பக் கட்டுப்பாடு முறைக்கு அதன் பயன்பாட்டை அதிகரிப்பது முக்கியம்''

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பை குறிப்பிட்ட அவர், ''அதன்படி, தற்போது திருமணமான தம்பதிகளில் சுமார் 9% பேர் மட்டுமே கருத்தடைக்கான முக்கிய வழியாக ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.'' என்கிறார்

ஆணுறைகள் முக்கியமானவை என்றாலும், அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க இன்னும் நிறைய வாய்ப்புள்ளது என்பதை இது காட்டுவதாகவும், அதோடு பல இளைஞர்கள் ஆணுறைகளைச் சார்ந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, "இந்தியா போன்ற ஒரு நாட்டில், பொது சுகாதாரத் திட்டங்கள் பெருமளவிலான கொள்முதலைச் சார்ந்துள்ள நிலையில், குறுகிய கால பற்றாக்குறைகூட இலவச அல்லது மானிய விலையில் வழங்கப்படும் ஆணுறைகளைச் சார்ந்து இருப்போருக்கு அவை கிடைப்பதைப் பாதிக்கக்கூடும்," என்று கூறினார் அவர்.

ஆகவே, இப்போதுள்ள பெரிய கேள்வி இதுதான் - நுகர்வோர் ஆணுறைகளுக்கு அதிக விலை கொடுக்கத் தொடங்குவதற்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது?

தொழில்துறை அதிகாரிகளே எதிர்காலம் குறித்துக் கவலையுடனும் நிச்சயமற்ற நிலையிலும் உள்ளனர். அவர்களில் ஒருவர், "இந்தப் போர் எவ்வளவு விரைவாக முடிகிறதோ, அனைவருக்கும் அவ்வளவு நல்லது," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு