பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுமா? ஆதரவும் எதிர்ப்பும்

பட மூலாதாரம், DIPR
"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் முதலீட்டு வாய்ப்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்," என, செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
இதற்கு விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "மக்கள் பாதிக்கப்படாமல் விளைநிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்." எனக் கூறினார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு விமான நிலையம் அவசியம் என்ற கருத்தை தொழில்துறையினர் முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று 110 விதியின்கீழ் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.
அவர் பேசும்போது, "புதிய விமான நிலையம் அமைப்பதற்குத் தேவைப்படும் இடம் விவசாயிகளைப் பாதிக்காத வகையிலும் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும்." எனக் கூறினார்.
"துறைசார்ந்த வல்லுநர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசித்து விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு கண்டறியப்பட்ட இடங்களில் தொழில்நுட்பரீதியான சாத்தியக் கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் இறுதி செய்யப்பட உள்ளதாகவும் தனது பேச்சில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டார்.
மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுவது குறித்துப் பேசிய அவர், "தற்போது நடைபெற்று வரும் டெர்மினல் 3 முனையம் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும். டெர்மினல் 5 முனையம் பயன்பாட்டுக்கு வரும்போது 55 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும்" எனத் தெரிவித்தார்.
இரண்டாவது நாளாக நீடித்த வாக்குவாதம்

பட மூலாதாரம், DIPR
முதலமைச்சரின் அறிவிப்புக்கு தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த இரண்டு நாட்களாக பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக தி.மு.க - த.வெ.க இடையே சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
செவ்வாய்க் கிழமையன்று சட்டப்பேரவையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "திட்டத்துக்காக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. அதில் பட்டா நிலங்கள் 3,774 ஏக்கராக உள்ளன. அதில் மூன்று போகம் விளையக் கூடிய 2,681 ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தன" எனக் கூறினார்.
திங்கள்கிழமையன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்காக 90 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன." எனக் கூறினார்.
இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "90 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. அங்கு 48 சதவிகித நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன." எனப் பேசினார்.
"ஏகனாபுரம், காரை, தண்டலம் போன்ற கிராமங்களில் ஒரு சென்ட் கூட கையகப்படுத்தப்படவில்லை," எனக் கூறிய அவர், "விவசாயிகளைக் கணக்கில் வைத்து திட்டம் ரத்து செய்யப்பட்டது" எனக் கூறினார்.
மாற்று இடங்கள் என்னென்ன?
இதையடுத்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்துப் பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
நில அமைப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, வான்வெளி கட்டுப்பாடுகள், மக்கள் அடர்த்தி உள்பட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தனது பேச்சில் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக் கடல், வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர், தெற்குப் பகுதியில் தாம்பரம் விமானப்படை வான்வெளி எல்லைக்குள் வருவது, கல்பாக்கம் அணுமின்நிலையம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்றவை விமான நிலைய இடத்தேர்வுக்கு தடையாக கருதப்பட்டதாக அவர் கூறினார்.
"சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்கள் புதிய விமான திட்டத்துக்காக தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன," என்கிறார் தங்கம் தென்னரசு.
பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசின் தனிப்பட்ட முடிவு அல்ல எனவும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை உள்பட சம்பந்தப்பட்ட உயர்மட்ட அமைப்புகள் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, "இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் அமைவது மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இதனைக் கைவிடுவது எதிர்கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்." என்கிறார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த விவகாரத்தில் சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.
'பெருவெள்ள பாதிப்பைத் தடுத்த அறிவிப்பு'

"பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்து அரசு வெளியிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சென்னைக்கு பெருவெள்ள பாதிப்பைத் தடுப்பதில் இந்த அறிவிப்பு முக்கியமானது" எனக் கூறுகிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜன்.
பரந்தூரின் புவியியல் அமைப்பு குறித்து விவரித்த அவர், "ஜவ்வாது மலையில் இருந்து பாலாறு அணைக்கட்டுக்கு வரும் நீர், காவேரிப்பாக்கம் ஏரிக்கு வருகிறது. சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை உள்ளடக்கியதாக இந்த ஏரி உள்ளது." என்கிறார்.
ஏரி நிரம்பிய பிறகு அதன் உபரி நீர் நூற்றுக்கணக்கான ஏரிகளுக்குச் செல்வதாகக் கூறிய ஜனகராஜன், "அதில் உள்ள ஒரு கால்வாயின் பெயர் கம்பன் கால்வாய். இந்தக் கால்வாய் தான் பரந்தூரை சுற்றியுள்ள 13 ஏரிகளுக்கு நீரைக் கொண்டு செல்கிறது." எனக் கூறுகிறார்.
"கம்பன் கால்வாயில் இருந்து வெளியேறும் நீர் ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்கிறது. கூவத்துக்கும் இந்த நீர் செல்கிறது. விமான நிலைய திட்டத்துக்காக கான்கிரீட் தளங்களாக பரந்தூர் மாற்றப்பட்டிருந்தால் கூவத்தில் அடித்து வரும் நீரால் சென்னைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும்." என்கிறார் அவர்.
'மாற்று இடம் தேர்வு செய்தாலும் சிக்கல்'
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் நான்காயிரம் ஏரிகளுக்கு மேல் உள்ளதாகக் கூறும் ஜனகராஜன், "விமான நிலையத்துக்காக எந்த மாவட்டத்தில் இடத்தைத் தேர்வு செய்தாலும் இதே பிரச்னை தான் வரும். இவை பெரும்பாலும் விவசாய நிலங்களாக உள்ளன" எனக் குறிப்பிட்டார்.
"ஓர் ஏரியில் இருந்து இன்னொரு ஏரிக்கு நீர்வரத்து இருந்து கொண்டே இருக்கும். கால்வாய் மூலமாக ஏரிக்கு நீர் வருகிறது. தவிர ஈர நிலங்களும் அதிகம் உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் எங்கு திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் விவசாயிகள் பாதிப்படைவார்கள்." என்கிறார் அவர்.
ஆனால், "தொழில் வளர்ச்சிக்கு விமான நிலையம் மிக அவசியமாக உள்ளது" எனக் கூறுகிறார், இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் சங்கர்.
"சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளைக் கையாளும் திறன் என்பது 2035-ஆம் ஆண்டு வரை மட்டுமே இருக்கும். அதற்குள் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்," என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
இரண்டாவது விமான நிலையம் தேவை என்பவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Sankar
ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள், விமான நிலையம் காரணமாக வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறிய சங்கர், "வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சென்னைக்கு வரவேண்டும் என்றால் டெல்லி வந்த பிறகே வருகிறார்கள். மாறாக, சென்னைக்கு நேரடியாக சர்வதேச விமானங்கள் வரவேண்டும்." என்கிறார்.
"சென்னையில் இருந்து அனைத்து நாடுகளுக்கும் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது. பெங்களூரு அல்லது ஐதராபாத் சென்று தான் செல்ல முடியும். அதற்காகவே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் அனுமதியும் கிடைத்தது," எனத் தெரிவித்தார்.
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை தமிழ்நாடு தருகிறது. தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் எனப் பல துறைகள் இங்கு சிறப்பாக இயங்குகின்றன. அவை மேலும் வளர்ச்சி பெறுவதற்கு புதிய விமான நிலையம் தேவையாக உள்ளது," என்கிறார் சங்கர்.
மாற்றுத் தீர்வு என்ன?
கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விமான நிலையங்கள் உள்ளன. மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கின்றன.
இவற்றைப் பசுமைவெளி பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதில் என்ன சிரமம் என்கிற கேள்வியை பிபிசி தமிழ் அவரிடம் முன்வைத்தது.
அதற்குப் பதிலளித்த அவர், "சென்னை தலைநகரமாக உள்ளது. தொழில்துறையினரை ஈர்ப்பதற்கு தலைநகரத்தில் சிறந்த விமான நிலையம் இருக்க வேண்டும். புதிய விமான நிலையம் வருவதற்கு முன்னதாக தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்." எனக் கூறினார்.
இதனை மறுக்கும் நீரியல் நிபுணர் ஜனகராஜன், "மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களை விரிவுபடுத்தி பசுமைவெளி விமான நிலையங்களாக மாற்றலாம்." என்கிறார்.
சென்னையின் புவியியல் அமைப்பு முற்றிலும் வேறாக உள்ளதாகக் கூறும் அவர், "சென்னையில் துறைமுகம் உள்ளது. இதனை மேம்படுத்தி சரக்கு போக்குவரத்தைக் கையாளலாம். விமான நிலையம் வந்தால் தான் வளர்ச்சி என்பதை ஏற்க முடியாது" எனக் குறிப்பிட்டார்.

"முதலீட்டாளர்களும் அதிகமாக பயணம் மேற்கொள்கிறவர்களும் புதிய விமான நிலையம் கேட்கின்றனர். அது தேவையானது தான். ஆனால், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதற்கு ஏற்ற நிலங்கள் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்," என்கிறார்.
"ஏரிகளை அழித்து பசுமைவெளி விமான நிலையத்தை உருவாக்குவது ஏற்புடைய ஒன்றாக இல்லை" என்கிறார், தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறையின் முன்னாள் துணைத் தலைவரும் பொறியாளருமான இளங்கோவன்.
"சென்னைக்கு வெள்ள பாதிப்பைக் குறைக்கக் கூடிய பல ஏரிகள் பரந்தூரில் உள்ளன. சென்னை ஏற்கெனவே நன்றாக வளர்ச்சியடைந்துவிட்டது. மாறாக, திருச்சி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக கொண்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு மையமாக இருக்கும்" என்கிறார் அவர்.
புதிய விமான நிலையம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சத்தியகுமாரிடம் கேட்டபோது, "வரப்போகும் திட்டத்தால் சூழலியல் பாதிப்புகளை முழுமையாக தடுக்க முடியாது. ஆனால் குறைக்க முடியும். அதற்கான பணிகளில் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார்" என்கிறார்.
"சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் அதனை மீட்டெடுப்பது சிரமம். அதேநேரம், தொழில்துறையின் வளர்ச்சியும் முக்கியம். இரண்டையும் சரிசெய்யும் வகையில் திட்டம் அமைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































