இரானுடன் போர்நிறுத்தம் - "தற்காலிக வெற்றிக்காக அதிக விலை" கொடுத்த டிரம்ப்

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், அந்தோனி ஜர்ச்சர்
- பதவி, வட அமெரிக்க செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இறுதியாக, நிதானமான முடிவுகள் தான் வெற்றி பெற்றுள்ளன. குறைந்தபட்சம் இப்போதைக்கு வெற்றி பெற்றுள்ளன எனக் கூறலாம்.
வாஷிங்டன் நேரப்படி 18:32 மணிக்கு, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், அமெரிக்காவும் இரானும் ஓர் "உறுதியான" அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் "மிக நெருக்கமான நிலையை" அடைந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் வகையில் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்குத் தான் சம்மதித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
இது சரியாகக் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனச் சொல்ல முடியாது என்றாலும், ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால் இரானின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதல்களைத் தொடுக்கும் என டிரம்ப் விதித்திருந்த செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி (இந்திய நேரப்படி புதன் கிழமை அதிகாலை) என்ற காலக்கெடு முடிவதற்கு மிக நெருக்கமான நேரத்தில் இது வெளியானது.
இரானும் மோதல்களை நிறுத்திவிட்டு, ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இவை அனைத்தும் அமையும்.
அந்த நீர்வழிப்பாதையின் மீது தங்களுக்கு இன்னும் "ஆதிக்கம்" இருப்பதாக வலியுறுத்தும் அதே வேளையில், அதனைத் திறப்பதாக இரான் அரசு கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தம் டிரம்பை ஒரு இக்கட்டான சூழலிலிருந்து விடுவித்துள்ளது.
அதாவது "இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும்" என்ற தனது வாக்குறுதியின்படி போரைத் தீவிரப்படுத்துவது அல்லது பின்வாங்கித் தனது நம்பகத்தன்மையைக் குறைத்துக்கொள்வது ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வில் இருந்து அவர் தப்பியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு ஒரு தற்காலிக விடுதலையை மட்டுமே பெற்றுத் தந்திருக்கக்கூடும்.
அமெரிக்கர்களும் இரானியர்களும் இப்போது அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள், இது நிரந்தரத் தீர்வை எட்ட முயற்சிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குகிறது. அதே சமயம் இது ஒரு கடினமான பயணமாக இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் அமெரிக்காவில் வர்த்தக நேரத்திற்குப் பிந்தைய சந்தையில், ஒரு பேரல் எண்ணெயின் விலை பல நாட்களில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக 100 டாலருக்குக் கீழ் சரிந்தது மற்றும் அமெரிக்கப் பங்குச்சந்தையின் எதிர்கால வர்த்தகம் (futures) உயர்ந்தன. மோசமான நிலை முடிந்துவிட்டது என்ற ஒருவித நம்பிக்கை நிலவுவது போல் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை காலை வரை கூட இத்தகைய முன்னேற்றம் ஏற்படும் என்பது நிச்சயமற்றதாகவே இருந்தது. அப்போதுதான் இரானிய நாகரிகம் அழிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
ஓர் அமெரிக்க அதிபரிடமிருந்து வந்த இத்தகைய அதிர வைக்கும் அச்சுறுத்தல், இரான் இதற்கு முன்பு நிராகரித்த போர்நிறுத்தத்திற்குச் சம்மதிக்க அழுத்தம் கொடுத்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
டிரம்பின் வியக்கத்தக்க, ஆத்திரமூட்டும் இந்த அறிவிப்பு, அதுவும் இதேபோன்ற ஆபாசமான வார்த்தைகள் கலந்த 'ட்ரூத் சோஷியல்' பதிவிற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்தது, நவீன கால அமெரிக்க அதிபர் எவரும் இதுவரை செய்திராத அல்லது மறைமுகமாகக் கூடக் குறிப்பிடாத ஒன்றாகும்.
இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் ஒரு நிரந்தர அமைதிக்கு வழிவகுத்தாலும் கூட, இரான் போர் மற்றும் டிரம்பின் சமீபத்திய சொற்கள், உலக நாடுகள் அமெரிக்காவைப் பார்க்கும் விதத்தை முற்றிலும் மாற்றியிருக்கக்கூடும்.

ஒரு காலத்தில் உலகளவில் நிலைத்தன்மைக்கான சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒரு நாடு, இப்போது சர்வதேச ஒழுங்கின் அடித்தளத்தையே உலுக்கி வருகிறது.
உள்நாட்டு அரசியலில் விதிமுறைகளையும் மரபுகளையும் உடைப்பதில் மகிழ்ச்சியடைவதாக காட்சியளித்த ஓர் அதிபர், இப்போது உலக அரங்கிலும் அதையே செய்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை டிரம்பின் வார்த்தைகளுக்கு ஜனநாயகக் கட்சியினர் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தனர், சிலர் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறினர்.
"அதிபரின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதும், அவர் தலைமை தாங்கத் தகுதியற்றவர் என்பதும் தெளிவாகிறது," என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோவாகின் காஸ்ட்ரோ 'எக்ஸ்' தளத்தில் எழுதியுள்ளார்.
இரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பில் இணையாத எந்தவொரு குடியரசுக் கட்சியினரும், "இந்த மோசமான செயலின் ஒவ்வொரு விளைவிற்கும் பொறுப்பாவார்கள்," என்று அமெரிக்க செனட் சபையின் மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பலர் அவருக்கு ஆதரவாக நின்ற போதிலும், அவர் பொதுவாகப் பெறும் முழுமையான ஆதரவு இம்முறை அவருக்குக் கிடைக்கவில்லை.
ஜார்ஜியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஆஸ்டின் ஸ்காட், ஒரு நாகரிகமே அழிந்துவிடும் என்பது குறித்த டிரம்பின் அச்சுறுத்தல்களைக் கடுமையாக விமர்சித்தார்.
"அதிபரின் கருத்துக்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும், நான் அவற்றுடன் உடன்படவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பொதுவாக டிரம்பின் விசுவாசியாகக் கருதப்படும் விஸ்கான்சின் செனட்டர் ரான் ஜான்சன், டிரம்ப் தனது குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்தால் அது "மிகப்பெரிய தவறாக" இருக்கும் என்று கூறினார்.
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நதானியேல் மோரன், "ஒரு முழு நாகரிகத்தின் அழிவை" தான் ஆதரிக்கவில்லை என்று சமூக வலைதளத்தில் எழுதினார்.
"இது நமது அடையாளம் அல்ல, மேலும் இது அமெரிக்காவை நீண்டகாலமாக வழிநடத்தி வரும் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதிபரின் நிலைப்பாட்டோடு அடிக்கடி முரண்படும் அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி, அதிபரின் அச்சுறுத்தலை "இரானுடனான பேச்சுவார்த்தைகளில் சாதகமான நிலையைப் பெறுவதற்கான ஒரு முயற்சி என்று கூறி நியாயப்படுத்த முடியாது," என எழுதினார்.
இருப்பினும், அந்த அழுத்தம் பலனளித்தது என்று வெள்ளை மாளிகை பதிலளிக்க வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சரிந்து வரும் கருத்துக்கணிப்புகளும், சொந்தக் கட்சியிலேயே அதிகரித்து வரும் விமர்சகர்கள் மற்றும் அதிக எரிசக்தி விலைகளால் திணறும் பொருளாதாரம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் ஓர் அதிபருக்கு, இந்த மோதலில் இருந்து கிடைக்கும் எந்தவொரு தளர்வும் ஒரு நிம்மதியாகவே அமையும்.
போர்நிறுத்தத்தை அறிவித்து தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், அமெரிக்கா தனது அனைத்து ராணுவ இலக்குகளையும் "நிறைவேற்றியுள்ளது, மேலும் அவற்றை விஞ்சியும் செயல்பட்டுள்ளது" என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இரானின் ராணுவம் கணிசமாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சி இன்னும் அதிகாரத்தில் இருந்தாலும், அதன் உயர்மட்டத் தலைவர்கள் பலர் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தற்போது அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட பல இலக்குகள் இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளன. இரானின் அணு ஆயுதத் திட்டத்தின் அடித்தளமாக விளங்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை.
ஏமனில் உள்ள ஹூத்திக்கள் போன்ற பிராந்திய நிழற்படை அமைப்புகளின் மீது அந்த நாடு இன்னும் செல்வாக்கு செலுத்துகிறது.
சுங்கக்கட்டணம் அல்லது பிற கட்டணங்கள் போன்ற நிபந்தனைகள் இன்றி இரான் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்தாலும் கூட, அந்த முக்கியமான உலக அரசியல் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதன் திறன் முன்னெப்போதையும் விட இப்போது தெளிவாகத் தெரிகிறது.
டிரம்பின் போர்நிறுத்தச் செய்திக்குப் பிறகு ஒரு அறிக்கையில், இரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, இரான் தனது "பாதுகாப்பு நடவடிக்கைகளை" நிறுத்தும் என்றும், "இரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம்" ஹோர்முஸ் வழியாகப் பாதுகாப்பான பயணத்தை அனுமதிக்கும் என்றும் கூறினார்.
இரானின் 10 அம்சத் திட்டத்தின் "பொதுவான கட்டமைப்பை" அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தில் அமெரிக்கா இப்பகுதியிலிருந்து தனது ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுதல், இரானின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை இரான் தக்க வைத்துக்கொள்ள அனுமதித்தல் ஆகியவை அடங்கும்.
இந்த நிபந்தனைகள் எதற்கும் டிரம்ப் உண்மையில் உடன்படுவார் என்று கற்பனை செய்வது கடினம். இது, அடுத்த இரண்டு வார காலப் பேச்சுவார்த்தைகள் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.
இருப்பினும், தற்போதைக்கு இது டிரம்பிற்கு கிடைத்த ஒரு பகுதி அரசியல் வெற்றியாகும்.
அவர் ஒரு கடுமையான அச்சுறுத்தலை விடுத்து, விரும்பிய முடிவை எட்டியுள்ளார். ஆனால் இந்த போர்நிறுத்தம் ஒரு தற்காலிக விடுதலையே தவிர, நிரந்தரத் தீர்வு அல்ல.
அதிபரின் சொற்களாலும் செயல்களாலும், ஒட்டுமொத்தப் போரினாலும் ஏற்பட்ட நீண்டகால பாதிப்புகள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை.

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































