'மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்கள்'- லக்னௌ சென்னையை வீழ்த்தியது எப்படி?

38 பந்துகளில் 90 ரன்கள் விளாசி எல்எஸ்ஜி வெற்றி பெறக் காரணமாக அமைந்தார் மிட்செல் மார்ஷ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 38 பந்துகளில் 90 ரன்கள் விளாசி எல்எஸ்ஜி வெற்றி பெறக் காரணமாக அமைந்தார் மிட்செல் மார்ஷ்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 59வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எல்எஸ்ஜி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய எல்எஸ்ஜி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்கள் விளாசி அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்தத் தோல்வி சூப்பர் கிங்ஸின் பிளே ஆஃப் வாய்ப்பில் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது.

சிஎஸ்கே இதுவரை 12 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகள் பெற்றிருக்கிறது. 12 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணியால் டாப் 4 இடங்களுக்குள் முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், 21 பந்துகள் மீதமிருக்கையில் தோற்றதால் ரன்ரேட் குறைந்து 6வது இடத்துக்குப் பின்தங்கியிருக்கிறது.

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றிருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

முதல் போட்டியிலேயே மிரட்டிய ஆகாஷ் சிங்

இந்தப் போட்டியில் முதல் முறையாகக் களமிறக்கப்பட்ட ஆகாஷ் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். உயரமான அவர், தனது லென்த் மூலம் பெரும் சவால் ஏற்படுத்தினார். அதனால், சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 3 விக்கெட்டுகளையுமே அவர் கைப்பற்றினார்.

ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் முதல் விக்கெட்டாக வெளியேறினார். 'ஹார்ட்' லென்த்தில் வீசப்பட்ட பந்தை அவர் 'புல்' செய்ய முற்பட்டார். ஆனால், பந்து பேட்டில் நன்கு படாததால் மிட் ஆன் திசையில் ருதுராஜ் கேட்ச் ஆனார். அவர் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.

ஆகாஷ் வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சனும் வெளியேறினார். 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த சாம்சன், டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த முகுல் சவுத்ரியிடம் கேட்ச் ஆனார். தன் முதல் 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆகாஷ், தான் வீசிய கடைசி ஓவரிலும் விக்கெட் வீழ்த்தத் தவறவில்லை. கடந்த போட்டியில் 13 பந்துகளில் அரைசதம் அடித்த உர்வில் பட்டேலை 6 ரன்களுக்கே (7 பந்துகள்) பெவிலியனுக்கு அனுப்பினார் ஆகாஷ் சிங்.

4 ஓவர்கள் பந்துவீசிய ஆகாஷ், 26 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். எட்டாவது ஓவரில் அவருடைய ஸ்பெல் முடிந்தபோது 61/3 என்ற நிலையில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த சீசனில் தான் ஆடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் ஆகாஷ் சிங்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் தான் ஆடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் ஆகாஷ் சிங்

கரைசேர்த்த கார்த்திக் ஷர்மா

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிஎஸ்கே விரைவில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், அணியை சரிவிலிருந்து மீட்டார் இளம் வீரர் கார்த்திக் ஷர்மா.

நான்காவது விக்கெட்டுக்கு கார்த்திக் ஷர்மா - டெவால் பிரெவிஸ் ஜோடி 44 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் மெதுவாக ஆடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தவர்கள், சரியான ஓவர்களைத் தேர்ந்தெடுத்து பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தார்கள். ஷபாஸ் அஹமது வீசிய 11வது ஓவரில் 15 ரன்களும், பிரின்ஸ் யாதவ் வீசிய 13வது ஓவரில் 16 ரன்களும் எடுத்தார்கள்.

சிறப்பாக விளையாடிய கார்த்திக் ஷர்மா 35 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார். இது அவருடைய 2வது ஐபிஎல் அரைசதம்.

சரியாகத் தன் வேகத்தை அதிகரித்திருந்த நேரத்தில் மொஹம்மது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டெவால் பிரெவிஸ். அவர் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.

ஷபாஸ் அஹமது வீசிய 16வது ஓவரில் 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசிய கார்த்திக் ஷர்மா, அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும்.

கடைசி கட்டத்தில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். பிரின்ஸ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் அவர் தலா 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார். அந்த அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

இந்தப் போட்டியில் 42 பந்துகள் சந்தித்த கார்த்திக் ஷர்மா 71 ரன்கள் எடுத்தார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 42 பந்துகள் சந்தித்த கார்த்திக் ஷர்மா 71 ரன்கள் எடுத்தார்

அதிரடியாக மிரட்டிய மிட்செல் மார்ஷ்

கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கம் கிடைத்தது. சேப்பாக்கத்தில் ஜாஷ் இங்லிஸ் சிஎஸ்கே பௌலர்களுக்கு சவால் கொடுக்க, இந்தப் போட்டியில் அந்த வேலையை மிட்செல் மார்ஷ் செய்தார்.

முகுல் சவுத்ரி வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்தார் மிட்செல் மார்ஷ். லெக் பை மூலமும் ஒரு பவுண்டரி கிடைத்துவிட, அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. இரண்டாவது ஓவரை வீசிய ஸ்பென்சர் ஜான்சன் இரண்டு எல்எஸ்ஜி ஓப்பனர்களுக்கும் ஓரளவு சவால் கொடுத்தார். அந்த ஓவரில் 5 ரன்கள் தான் எடுக்கப்பட்டது. 2 ஓவர்களில் 20/0.

முதல் ஓவரில் முகேஷ் சவுத்ரி ரன்கள் கொடுத்துவிட்டதால், உடனடியாக பௌலரை மாற்றி அன்ஷுல் கம்போஜைக் கொண்டுவந்தார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அந்த ஓவரில் 11 ரன்கள் கொடுத்த கம்போஜ், இன்னிங்ஸின் 5வது ஓவரில் 28 ரன்கள் கொடுத்துவிட்டார். அந்த ஓவரின் முதல் 4 பந்துகளிலுமே தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசினார் மிட்செல் மார்ஷ்.

ஸ்பென்சர் ஜான்சன் வீசிய அடுத்த ஓவரிலும் அதிரடியைத் தொடர்ந்தார் மார்ஷ். அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்பட 19 ரன்கள் எடுக்கப்பட்டன. அதனால் பவர்பிளேவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 86 ரன்கள் குவித்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ். பவர்பிளே முடிவதற்குள்ளாகவே தன் அரைசதத்தையும் நிறைவு செய்திருந்தார் மார்ஷ். அதற்கு அவர் எடுத்துக்கொண்டது 21 பந்துகள் தான்.

பவர்பிளே முடிந்த பிறகும் கூட மிட்செல் மார்ஷ் அதிரடி முடிவுக்கு வரவில்லை. நூர் அஹமது வீசிய 7வது ஓவரில் 1 சிக்ஸர், குர்ஜப்னீத் சிங் வீசிய 8வது ஓவரில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என அடித்துக்கொண்டே இருந்தார்.

மறுபக்கம் ஜாஷ் இங்லிஸ் சற்றே நிதானமாக விளையாட 11 ஓவர்கள் முடிவில் விக்கெட்டே இழக்காமல் 129 ரன்கள் குவித்திருந்தது எல்எஸ்ஜி.

முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது ஜாஷ் இங்லிஸ் - மிட்செல் மார்ஷ் கூட்டணி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது ஜாஷ் இங்லிஸ் - மிட்செல் மார்ஷ் கூட்டணி

சற்றே தடுமாறி பின்னர் வெற்றி பெற்ற எல்எஸ்ஜி

கடைசி 9 ஓவர்களில் லக்னௌ அணிக்குத் தேவைப்பட்டது என்னவோ 59 ரன்கள் தான். ஓவருக்கு 6.55 ரன்கள் தேவை. அதனால் அந்த அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், 12வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு ஓப்பனர்களுமே வெளியேறினார்கள்.

முகேஷ் சவுத்ரி வீசிய ஆஃப் கட்டரை சரியாக அடிக்காமல் உர்வில் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் இங்லிஸ். அவர் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து களமிறங்கிய நிகோலஸ் பூரன், அந்தப் பந்தை நேராக அடித்தார். பௌலர் முகேஷ் கையில் பட்டு திசைதிரும்பிய பந்து, பௌலர் பக்கமிருக்கும் ஸ்டம்பை தகர்த்தது. அப்போது நான் ஸ்டிரைக்கர் மிட்செல் மார்ஷ் கிரீஸுக்கு வெளியே இருந்ததால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 38 பந்துகள் சந்தித்த அவர், 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உதவியுடன் 90 ரன்கள் குவித்தார்.

அந்த விக்கெட்டுகள் விழுந்ததும் லக்னௌ அணியின் வேகம் சற்று குறையத் தொடங்கியது. நிகோலஸ் பூரனால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. அடுத்த வந்த அப்துல் சமத்தும் 7 ரன்கள் எடுத்து ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீச்சில் வெளியேறினார். இருந்தாலும், அதன்பிறகு மெல்ல தங்கள் வேகத்தைக் கூட்டியது பூரன் - முகுல் சவுத்ரி கூட்டணி. கடைசி 4 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில், அன்ஷுல் கம்போஜ் வீசிய 17வது ஓவரின் முதல் 4 பந்துகளிலுமே சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தை முடித்தார் நிகோலஸ் பூரன். இறுதியில் 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது லக்னௌ.

இது இந்த சீசனில் அந்த அணி பெறும் 4வது வெற்றி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 6வது தோல்வியாக அமைந்தது.

பிளேயிங் லெவனில் யார்?

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்

இந்தப் போட்டிக்கான எல்எஸ்ஜி அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகுல் சவுத்ரி, அப்துல் சமத், மயாங்க் யாதவ் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்கள். ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, அக்‌ஷத் ரகுவன்ஷி மற்றும் ஹிம்மத் சிங் ஆகியோர் நீக்கப்பட்டார்கள். ஆகாஷ் சிங் இந்த சீசனில் முதல் முறையாகக் களமிறங்கினார்.

பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம், முகுல் சவுத்ரி, அப்துல் சமத், ஷபாஸ் அஹமது, மொஹம்மது ஷமி, மயாங்க் யாதவ், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஜாஷ் இங்லிஸ், எம்.சித்தார்த், திக்வேஷ் ராதி, ஹிம்மத் சிங், ஆயுஷ் படோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயமடைந்த ஜேமி ஓவர்டன் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோருக்குப் பதிலாக ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் சேர்க்கப்படுவதாக டாஸின்போது ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். குர்ஜப்னீத் சிங் சிஎஸ்கே பந்துவீசியபோது இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, பிரஷாந்த் வீர், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சர்ஃபராஸ் கான், அகீல் ஹொசைன், குர்ஜப்னீத் சிங், மேத்யூ ஷார்ட், மேட் ஹென்றி.