நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன? கவலையில் குடும்பத்தினர்

சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி நிறுவன உரிமையாளர் சையது சாதிக்
படக்குறிப்பு, சூப்பர் யாத்ரா ஏஜென்சி நிறுவன உரிமையாளர் சையது சாதிக்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த குறைந்தது 106 சுற்றுலா பயணிகள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக சுற்றுலா ஏஜென்சிகள் கூறும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மஹாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் மூலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 ஆன்மீகப் பயணிகள் கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். அதேபோல, கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் 57 பேர் நேபாளம் சென்றுள்ளனர்.

அந்த சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்பதால் அவர்களது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் நிறுவனம் மூலம் 49 சுற்றுலாப் பணிகள் கடந்த 17ஆம் தேதி கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேபாளம் வழியாக இவர்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஒன்பது நாட்களாக இவர்கள் நேபாளத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இவர்களின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறுவனத்தைச் சேர்ந்த குமாரவேல் நாகப்பனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "எங்கள் நிறுவனம் மூலமாக 49 பேர் கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் நேபாளத்தில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் இருந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, "இவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இருந்து பரவலாகப் பலர் யாத்திரைக்குச் சென்றனர். அவர்களில் எவ்வளவு பேர் பாதுகாப்பாக உள்ளனர், அவர்களின் நிலை என்ன என்ற தகவலை இதுவரை எங்களால் கண்டறிய முடியவில்லை."

நேபாளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வர குடும்பத்தினர் கோரிக்கை
படக்குறிப்பு, கும்பகோணம் சுற்றுலா ஏஜென்சி மூலமாக நேபாளம் சென்ற சுற்றுலாப் பயணிகள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்திரா ஏஜென்சி என்ற சுற்றுலா நிறுவனம் நேபாளத்தின் கைலாஷ் யாத்திரரைக்கு 57 பயணிகளை அழைத்துச் சென்றுள்ளது. அதன் உரிமையாளர் சையது சாதிக் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடைசியாக எங்களுக்கு நேபாளத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, காத்மாண்டுவில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர்கள் சில இந்தியர்களை மீட்டுள்ளன. ஆனால், அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "எங்கள் நிறுவனம் மூலமாக சுற்றுலா சென்றவர்களில் 30க்கும் மேற்பட்டவர்களை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதில் எனது மகன் உமர் ஃபாரூக்கும் உள்ளார். அவர் கடைசியாக செவ்வாய்க்கிழமை இரவு, இந்த வெள்ளத்திற்கு முன்பாக என்னுடன் பேசினார். அவர் சுற்றுலா குழுவுக்கு வழிகாட்டியாகச் சென்றார்" என்றார்.

கும்பகோணம் கர்ணகொல்லை அக்ராஹாரத்தை சேர்ந்த சாய்நாத் சுப்பிரமணியம், தனது மனைவி ஜெயலக்ஷ்மி ராமநாதன், மகள் கேதார கௌரி ஆகியோருடன் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த மூவரின் நிலை குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை.

நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ள தங்களது உறவினர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள, பொது மக்கள் பலரும் கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா நிறுவனம் முன்பாகக் குவிந்துள்ளனர்.

தங்கள் குடும்பத்தினர் நிலை குறித்து தெரிந்துகொள்ள சுற்றுலா நிறுவனத்தின் முன் காத்திருக்கும் உறவினர்கள்
படக்குறிப்பு, தங்கள் குடும்பத்தினர் நிலை குறித்து தெரிந்துகொள்ள சுற்றுலா நிறுவனத்தின் முன்பாகக் காத்திருக்கும் உறவினர்கள்

கும்பகோணம் சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாளம் சென்றவர்களில் தருமபுரியைச் சேர்ந்த பிரேம வாணி, புஷ்பா ஆகியோரும் அடங்குவர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை அவர்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். அதன் பின்னர் அவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் புஷ்பாவின் குடும்பத்தினரை தருமபுரி வட்டாட்சியர் சுகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேரில் சந்தித்து புஷ்பா, பிரேம வாணி இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். புஷ்பாவுடன் தொலைபேசியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவரது மகள் லட்சுமி பிரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், திருவாரூர் வட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, வடுவூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோரின் நிலை குறித்து தகவல் எதுவும் கிடைக்காமல் தவித்து வருவதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இவர்களில் கலைச்செல்வி நேற்று காலை தனது மகன்கள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோரிடம் நேபாளத்தில் இருப்பதாகப் பேசியுள்ளார். அதன் பிறகு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இந்தத் தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் இளங்கோவன் நேரடியாக திருக்கண்ணமங்கை சென்று கலைச்செல்வி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

கும்பகோணம் பொற்றாமரை வடக்குப் பகுதியைச் சேர்ந்த திருமலை ராஜன் தையல்நாயகி தம்பதியினர் கும்பகோணம் சூப்பர் யாத்திரை ஏஜென்சி மூலம் நேபாளம் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டுமென தையல்நாயகியின் உறவினர் மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, நெய்வேலியைச் சேர்ந்த 15 பேர் கும்பகோணம் சுற்றுலா நிறுவனம் மூலமாக நேபாளம் சென்றனர்.

"அங்கு சீனா எல்லையில் உள்ள திமுரே என்ற இடத்தில் அனைவரும் தங்கினர். இதில் முத்து குமரேசன், மைதிலி, தியாகராஜன், கிருபாகிரி, நாவூ கபிர்தாஸ், விஜயா புவனேஸ்வரி, மாறன், சாந்தி ஆகியோர் சுற்றிப் பார்க்கச் செல்லாமல், அறையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றவர்கள் அனைவரும் வேனில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டனர். அவர்கள் சென்ற இரண்டு வேன்களும் நிலச்சரிவில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வேன்களில் இருந்தவர்களின் நிலை தெரியவில்லை" என்று அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கும்பகோணம் கர்ணகொல்லை அக்ராஹாரம் பகுதியின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுற்றுலா சென்றிருந்தனர்
படக்குறிப்பு, கும்பகோணம் கர்ணகொல்லை அக்ராஹாரம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுற்றுலா சென்றிருந்தனர்

இதற்கிடையில் புதுச்சேரியில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பத்திரமாக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை தரப்பில் கூறப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

கீதா, அவரது மகள் வைஷ்ணவி, உறவினர் ஆனந்த சுந்தரி ஆகிய மூவரும் நேற்று அதிகாலை குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிவித்த கீதாவின் மகன் விஷ்ணு ராம், "நேற்று காலை 6.15 மணிக்கு என்னைத் தொடர்புகொண்ட அவர்கள், சீன எல்லைக்கு செல்ல இருப்பதாகவும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முடிந்ததும் சீனாவுக்குள் சென்று விடுவோம்' எனவும் தெரிவித்தனர்" என்று கூறினார்.

அதன் பின்னர் செய்திகளைப் பார்த்துதான் நேபாளத்தில் இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டிருப்பது தங்களுக்குத் தெரிய வந்ததாகக் குறிப்பிட்ட விஷ்ணு ராம், "அதையடுத்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் எங்களைத் தொடர்புகொண்டு, எங்கள் உறவினர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அது ஓரளவு நிம்மதியளித்தது. இருப்பினும், இதுவரை அவர்களுடன் நேரடியாகப் பேச முடியவில்லை. அவர்களிடம் ஒருமுறை பேசினால்தான் எங்களுக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும்," எனக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு