காணொளி: தமிழ்நாட்டில் பெண்களைவிட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் இறப்பதற்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மட்டும் பார்த்தால், ஆண்களும் பெண்களும் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை கிட்டத்தட்ட சமமாக எட்டுவதாகத் தோன்றுகிறது. 2025ஆம் ஆண்டில் இந்த வயதுப் பிரிவில் 1,55,093 ஆண்களும் 1,50,545 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் அதே தரவுகளை வயது வாரியாகப் பிரித்துப் பார்த்தால் வேறொரு போக்கு தெரிகிறது. முதிய வயதில் இரு பாலரின் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், அதற்கு முந்தைய பல தசாப்தங்களில் ஆண்கள் பெண்களைவிட கணிசமாக அதிக அளவில் உயிரிழக்கிறார்கள்.
சுமார் 55-64 வயது பிரிவில் 81,840 ஆண்களும் 51,365 பெண்களும் உயிரிழந்துள்ளனர். 45-54 வயதில் இந்த இடைவெளி மேலும் பெரிதாகிறது. அந்த வயது பிரிவில் 54,743 ஆண்களும் 26,269 பெண்களும் இறந்துள்ளனர். 25-34 வயதினரில் ஒவ்வொரு பெண் இறப்புக்கும் கிட்டத்தட்ட மூன்று ஆண் இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தமாக 4,01,860 ஆண்களும் 2,91,347 பெண்களும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த வேறுபாட்டின் முக்கியத்துவம் மொத்த எண்ணிக்கையில் இல்லை. ஆண்கள் அதிகம் உயிரிழக்கத் தொடங்கும் வயதில்தான் அதன் அர்த்தம் இருக்கிறது.
அதாவது, 15 முதல் 64 வயது வரை, கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள் வளர்ப்பு, குடும்பப் பொறுப்புகள், முதிய பெற்றோர் பராமரிப்பு ஆகியவை அதிகம் குவியும் வாழ்க்கைக் கட்டத்தில், 1,94,470 ஆண்களும் 99,678 பெண்களும் உயிரிழந்துள்ளனர். ஆண்-பெண் இறப்புகளுக்கு இடையிலான மொத்த எண்ணிக்கை வித்தியாசத்தில் சுமார் 86 சதவிகிதம் இந்த வயது பிரிவிலேயே உருவாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



