'வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் வலி': சென்னை ஐஐடி மீது தொடரும் சாதிய பாகுபாடுகள் புகார் - முன்னாள் மாணவர்கள் கூறுவது என்ன?

இரண்டாம் ஆண்டு பி.டெக் செமஸ்டர் தேர்வின்போது செயற்கை நுண்ணறிவு செயலியைப் பயன்படுத்தி தேர்வு எழுதியதாக சாகில் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். மாணவர் உயிரிழந்த வழக்கை மும்பை குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து வருகிறது. இறந்துபோன மாணவரின் பெற்றோர் ஐஐடி மும்பை மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் கடந்தகாலங்களில் சென்னை ஐஐடி மீதும் கூறப்பட்டுள்ளன.
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை தொடர்பான விவரிப்புகள் உள்ளன.

"ஐஐடி சென்னையில் சாதி இயல்பாகவே இருக்கும். 'தாங்கள் ஆதிக்க சாதி' என்பதைப் பல்வேறு குறியீடுகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். இங்கு பின்தங்கிய சாதியைச் சேர்ந்த மாணவர்கள், 'மற்றவர்' என்ற பிரிவில் வகைப்படுத்துவார்கள்" எனக் கூறுகிறார் சுவாமிநாதன்.

இவர் சென்னை ஐஐடியில் 2018-ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளார்.

"சாதிய அணுகுமுறையை எதிர்த்தால் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டும்" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சமீபத்தில் ஐஐடி மும்பையில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த சாகில் ரவீந்திர வகோடே என்ற மாணவர், கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி தற்கொலை கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, ஐஐடி மும்பையில் சாதிப் பாகுபாடு காரணமாக தனது மகன் தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டதாக அவரது தந்தை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இதனைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் போராடிய நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பேசுபொருளாக மாறியுள்ளன.

ஐஐடி மும்பையின் இயக்குநர் மற்றும் பேராசிரியர் ஒருவர் மீது சாகிலின் பெற்றோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

"வளாகத்தில் சாதிப் பாகுபாடு நிலவுவது தொடர்பான ஆதாரத்தைக் காவல்துறையிடம் அளித்துள்ளோம்" என சாகிலின் தந்தை ரவீந்திர வகோடே தெரிவித்தார்.

தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர், "செப்டம்பர் 13-ஆம் தேதி சாகிலை சந்தித்தபோது, தனக்கு எதிராக சாதியரீதியான கருத்துகள் முன்வைக்கப்படுவது குறித்துக் கூறினான். ஆனால், 'ஐஐடியில் இடம் கிடைப்பது எளிதல்ல. படிப்பில் கவனம் செலுத்து' எனக் கூறினோம்" என்கிறார்.

தங்கள் மகனுக்கு முதலாம் ஆண்டு பி.டெக் படிப்பு சுமூகமாகச் சென்றதாகவும் இரண்டாம் ஆண்டில் இருந்து சாதிய பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இரண்டாம் ஆண்டு பி.டெக் செமஸ்டர் தேர்வின்போது செயற்கை நுண்ணறிவு செயலியைப் பயன்படுத்தி தேர்வு எழுதியதாக சாகில் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மாணவர் உயிரிழந்த வழக்கை மும்பை குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து வருகிறது.

இறந்துபோன மாணவரின் பெற்றோர் ஐஐடி மும்பை மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் சென்னை ஐஐடி மீதும் கூறப்பட்டுள்ளன.

'சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு'

ஐஐடி மெட்ராஸ்

2021-ஆம் ஆண்டு ஐஐடி சென்னையில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய விபின் பி வீட்டில் சாதிப் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை அவர் ஐஐடி சென்னை நிர்வாகத்துக்கு அனுப்பியிருந்தார்.

அதில், '2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்ந்தேன். அப்போது இருந்தே சாதியப் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறேன். எனக்கு மட்டுமல்ல இன்னும் சிலரும் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர்' எனக் கூறியிருந்தார்.

மானுடவியல் துறையில் இருக்கும் சில தனி நபர்கள் இவ்வாறு செயல்படுவதாகக் கூறிய விபின் பி வீட்டில், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவு ஆசிரியர்களின் குறைகளைக் கேட்பதற்காக தனி குழு ஒன்றை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கடிதத்தில் கூறியிருந்தார்.

'அக்குழுவில் எஸ்.சி, எஸ்.டி ஆணையம், ஓபிசி ஆணையம் மற்றும் உளவியல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். சாதிய பாகுபாட்டுக்கு ஆளாகும் நபர்கள் அக்குழுவில் புகார் அளிப்பதன் மூலம் பயனடையலாம்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

'வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் வலி' - உதவிப் பேராசிரியர்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"நான் தொடக்கநிலையில் ஊடகங்களிடம் பேசவில்லை. நிர்வாகத்தில் (சென்னை ஐஐடி) முதலில் புகார் அளித்தேன். அது தோல்வியடைந்தது. அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே ஊடகங்களிடம் பேசினேன்" என்கிறார் விபின் பி வீட்டில்.

"நான் எழுதிய ராஜிநாமா கடிதத்தை யாரோ ஊடகங்களுக்குத் தெரிவித்துவிட்டனர். ஆனால், அவ்வாறு எந்த சாதிப் பாகுபாடும் இல்லை என ஐஐடி சென்னை நிர்வாகம் கூறியது. நான் அளித்த புகார் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது எவ்வாறு இப்படிக் கூற முடியும்?" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் அவர் கூறுகிறார்.

"ஐஐடி சென்னையில் பணிபுரியும் பேராசிரியர்களில் எத்தனை பேர் முற்பட்ட சாதியில் இருந்து வந்துள்ளனர்? எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவில் எத்தனை பேர் உள்ளனர் எனக் கேட்டேன். அதன்பிறகே எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஒரு துறைக்குத் தலைவராக நியமித்தனர்" என்கிறார்.

"சொந்த நாட்டிலேயே மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக உணர்ந்தேன். இந்தியாவில் சாதி காரணமாக கிடைக்கும் அனுபவம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்" எனவும் அவர் வேதனைப்பட்டார்.

ஐஐடி சென்னையில் தனது பணியை ராஜிநாமா செய்த விபின் பி வீட்டில், தற்போது கேரளாவில் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

விபின் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதே காலகட்டத்தில் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த சென்னை ஐஐடி நிர்வாகம், "ராஜிநாமா குறித்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை" எனக் கூறியுள்ளது.

அதேநேரம், ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் அனைத்தும் குறைகளைத் தீர்ப்பதற்கான அமைப்பின் மூலம் உடனுக்குடன் கவனிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

'மற்றவர்கள் 'அந்நியர்கள்' தான்'

"வளாகத்துக்குள் முற்பட்ட பிரிவு மாணவர்களில் சிலர் வெளிப்படையாக தங்கள் சாதியை முன்னிறுத்துகின்றனர். பேராசிரியர்கள், ஊழியர்களில் சிலர் தாங்கள் முற்பட்ட சாதி என்பதை பல்வேறு குறியீடுகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்" எனக் கூறுகிறார், சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் சுவாமிநாதன்.

"இப்படியொரு சூழல் உள்ள வளாகத்துக்குள் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் படிக்க வந்தால் அவர், மற்றவர் என முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறார். அவர்களிடம் இருந்து தன்னை அந்நியராகவே அவர் உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் 13,500 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து விலகியதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனைக் குறிப்பிட்டுப் பேசும் சுவாமிநாதன், "சென்னை ஐஐடியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு காரணங்களால் விலகியுள்ளனர். ஐஐடியின் சூழலுக்கு ஏற்ப செயல்பட முடியாவிட்டால் அது அவரது சொந்தப் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இதுவே இடைநிற்றலுக்கு காரணமாக அமைகிறது" எனக் கூறுகிறார்.

சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் உள்ளதாகக் கூறுகிறார் அபிநவ். இவர் சென்னை ஐஐடியில் பி.டெக், எம்.டெக் முடித்துள்ளார்.

'மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்'

"மாணவர்கள் தேர்வை எழுதி உள்ளே வருகிறோம். வளாகத்துக்குள் வந்த பிறகு வேறுவிதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது" என்கிறார் அபிநவ்.

தொடர்ந்து பேசிய அவர், "எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவு மாணவர்கள் தவறு செய்தால், 'கோட்டாவில் வந்தவன் தானே நீ?' என சில மாணவர்கள் பேசுவார்கள். இதனை மறைமுகமாக பேராசிரியர்கள் சொல்லிக் காட்டுவார்கள். இதுபோன்ற அவமானத்தை என் சக மாணவர்களில் பலரும் அனுபவித்தனர்" எனக் குறிப்பிட்டார்.

"ஒரே சாதியாக இருந்தால் ஆராய்ச்சியில் உதவி செய்வது, மாநாடுகளுக்கு அனுப்பி வைப்பது என ஆசிரியர்கள் கூடுதல் கவனம் கொடுப்பார்கள். சாதிய மனநிலை கூடாது என்ற மனநிலையில் உள்ள பேராசிரியர்களும் உள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர் போராட்டங்கள் காரணமாக சாதிய பாகுபாடுகள் குறைந்துள்ளதாகக் கூறும் அபிநவ், "வளாகத்தில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், எஸ்.சி, எஸ்.டி புகார் மையங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும்" என்கிறார்.

'20 ஆண்டுகளில் 29 தற்கொலைகள்'

உதவிப் பேராசிரியர் விபின் எழுப்பிய சர்ச்சை ஓய்ந்த ஓரிரு நாட்களில் (2021-ஆம் ஆண்டு) ஆராய்ச்சிப் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வந்த உன்னிகிருஷ்ணன் என்ற நபர் ஐஐடி சென்னை வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

வழக்கை விசாரித்த கோட்டூர்புரம் போலீசார், மனஅழுத்தம் காரணமாக உன்னிகிருஷ்ணன் தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டதாகத் தெரிவித்தனர். இதுதொடர்பான கடிதம் ஒன்றும் உன்னிகிருஷ்ணன் அறையில் இருந்து மீட்கப்பட்டது.

முன்னதாக, சென்னை ஐஐடியில் 2019-ஆம் ஆண்டு பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவர் மானுடவியல் படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவி உயிரிழந்த காலகட்டத்தில் பிபிசி தமிழிடம் பேசிய மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், பல்வேறு துன்புறுத்தல்களை தங்கள் மகள் எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

முஸ்லிம் என்ற அடையாளம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் முக்காடு அணியாமல் தங்கள் மகள் வகுப்பறைக்குச் சென்றதாகவும் அவரது தாய் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) 171 மாணவர்கள் தற்கொலை மற்றும் இயற்கைக்கு முரணான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக, செப்டம்பர் 22 ஆம் தேதியன்று ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் ஆதரவுக் குழு நிறுவனரும் ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவருமான தீரஜ் சிங் இந்தத் தரவுகளைத் தொகுத்துள்ளார்.

இவற்றில் சுமார் 82 சதவிகித மரணங்கள் ஐஐடி வளாகங்களுக்குள் நடந்துள்ளதாகவும் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தீரஜ் சிங்கின் பகுப்பாய்வு கூறுகிறது.

மாணவர் மரணங்களில் ஐஐடி கோரக்பூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரையில் 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சென்னை ஐஐடியில் 29 மாணவர் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மூன்றாவது இடத்தில் ஐஐடி கான்பூர் உள்ளது.

மனஅழுத்தம், கல்வி சார்ந்த பிரச்னைகள், சாதிய பாகுபாடு, பொருளாதார பிரச்னைகள் ஆகியவை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஐடி சென்னை கூறுவது என்ன?

பலமுறை நினைவூட்டல் தகவல் அனுப்பியும் ஐஐடி சென்னை நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் பெற முடியவில்லை.
படக்குறிப்பு, காமகோடி

இதுதொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியிடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. "ஊடக தொடர்பாளர் சாய்ராமிடம் பேசுங்கள்" என இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

சாய்ராமை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, "உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்" எனக் கூறி இமெயில் முகவரியைப் பகிர்ந்தார். அவர் தெரிவித்த இமெயில் முகவரிக்குக் கேள்விகளை அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக, பலமுறை நினைவூட்டல் தகவல் அனுப்பியும் ஐஐடி சென்னை நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் பெற முடியவில்லை. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்பட்சத்தில் இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.

ஆனால், ஐஐடி சென்னையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த குறைகள், புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓர் உயர்மட்டக் குழுவை இயக்குநர் அமைத்துள்ளதாக, அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'புகார் அளித்த காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களோ, சாட்சிகளோ மீண்டும் துன்புறுத்தப்படவோ, பாகுபாட்டுக்கு ஆளாகவோ இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் விசாரணை நடவடிக்கைகள் ரகசியமாக பராமரிக்கப்பட வேண்டும்' எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு