'நேரமே ஆயுதம்' - தொலைதூர தீவில் கண்ணுக்கு தெரியாத போருக்கு தயாராகும் ஜிபிஎஸ் ஹேக்கர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கேத்தரின் டன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
மின்சார கட்டமைப்பு, தரவு வலையமைப்பு, பங்குச் சந்தைகள் போன்ற நவீன அமைப்புகள் சரியாகச் செயல்படுவதற்கு மிகவும் துல்லியமான நேர மற்றும் இடம் தொடர்பான தகவல்களைச் சார்ந்துள்ளன. நேரத்தையும் இடத்தையும் ஒத்திசைக்கும் அமைப்புகளைத் தாக்குவதன் மூலம் நவீன உலகை முடக்குவது எவ்வளவு எளிது?
இதை ஆராயும் ஜாம்மிங் நிபுணர்களைச் சந்திப்போம்.
மிக உயரமான தோற்றம் கொண்ட ஹரால்ட் ஹாக்லின், நரைத்த தாடி, கம்பி வடிவிலான கண்ணாடி, குறும்புத்தனமான புன்னகை ஆகியவற்றுடன் காணப்படும் நபர்.
2024 செப்டம்பரில் அவரைச் சந்தித்தபோது, அவர் அணிந்திருந்த ஒளி பிரதிபலிக்கும் பாதுகாப்பு மேலங்கியின் பாக்கெட்டில், கடிகாரத்துடன் ஓடும் வெள்ளை முயலைக் காட்டும் ஒரு சின்னம் இருந்தது.
ஹாக்லின், நார்வே மெட்ராலஜி சேவையின் நேரம் மற்றும் அதிர்வெண் அளவியல் பிரிவின் தலைமைப் பொறியாளராக உள்ளார். 2024-ஆம் ஆண்டு ஜாம்மர் டெஸ்ட்டில் பங்கேற்றவர்கள் சூட்டிய "நார்தர்ன் லைட்ஸ் நெர்ட்ஸ்" என்ற பெயராலும் அவர் அழைக்கப்படுகிறார்.
நார்வே அதிகாரிகளால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'ஜாம்மர்டெஸ்ட்', ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 300 கி.மீ. (186 மைல்) தொலைவில் உள்ள தொலைதூரத் தீவில் நடைபெறும் திறந்தவெளி ஹேக்கிங் திருவிழா.
இதன் நோக்கம் எளிமையானது, அதே நேரத்தில் வியப்பை ஏற்படுத்தக்கூடியது.
செயற்கைக்கோள் சிக்னல்களைப் பயன்படுத்தி நேரத்தையே குழப்புவது. கடிகாரங்கள் முதல் டிரோன்கள் வரை அனைத்திலும் உள்ள ரிசீவர்கள் இந்த அழுத்தத்தைத் தாங்குகின்றனவா என்பதைச் சோதிப்பது போன்றவை தான் அதன் நோக்கமாக உள்ளன.
இந்தச் சோதனையின் மையத்தில், நவீன டிஜிட்டல் உலகின் பெரும்பகுதியை இயக்கும் ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அது குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்ஸ் (ஜிஎன்எஸ்எஸ்) எனப்படுகிறது.
ஜிபிஎஸ் போன்ற செயற்கைக்கோள் வலையமைப்புகளை நாம் பொதுவாக வழிகாட்டுதலுக்கான கருவிகளாகவே கருதுகிறோம்.
ஆனால் அவை அதற்கு இணையாக மற்றொரு முக்கியமான பணியையும் செய்கின்றன. அதாவது, மிகத் துல்லியமான நேரத்தை அவை வழங்குகின்றன.
மின் கட்டமைப்பு, தொலைத்தொடர்பு வலைப்பின்னல்கள், பங்குச் சந்தைகள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஜிஎன்எஸ்எஸ் வழங்கும் நேர ஒத்திசைவைச் சார்ந்துள்ளன.
ஆனால் உள்கட்டமைப்புகள் ஜிஎன்எஸ்எஸ் -ஐ சார்ந்திருப்பது ஒரு முக்கியமான பலவீனத்தையும் உருவாக்குகிறது. செயற்கைக்கோள் பரிமாற்றங்கள் மிகவும் பலவீனமானவை. அவற்றை அதிக சக்தி கொண்ட தீங்கிழைக்கும் சிக்னல்கள் மூலம் எளிதில் கையகப்படுத்த முடியும்.
ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, இத்தகைய குறுக்கீடுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் வெளிப்படையான தாக்கங்கள் விமானப் போக்குவரத்தில் காணப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மே மாதம், ரஷ்ய எல்லைக்கு அருகே ராயல் ஏர் ஃபோர்ஸ் விமானம் ஒன்று ஜிபிஎஸ் ஜாமிங்கை எதிர்கொண்டது.
அதேபோல், 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இதுபோன்ற குறுக்கீடுகள் தினசரி நிகழ்வாக இருப்பதாக ஸ்வீடன் போக்குவரத்து முகமை தெரிவித்தது.
ஜிஎன்எஸ்எஸ் எதிர்காலத்தில் ஓர் உத்தி பலவீனமாக மாறக்கூடிய உலகிற்குத் தயாராகும் நாடுகளில் நார்வேயும் ஒன்று.
அப்படியானால், நமது காலம் மற்றும் இடம் குறித்த உணர்வின் மீதான ஒரு தாக்குதலுக்குத் தயாராவது சாத்தியமா?
ஒவ்வோர் ஆண்டும், இதைக் கண்டறிய பல்வேறு பொறியாளர்கள், இயற்பியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்க்டிக் வட்டப் பகுதிக்கு செல்கின்றனர்.
ஜாமர்டெஸ்ட்: செயற்கைக்கோள் ஜாமிங்கிற்கான உலகின் மிகப்பெரிய திறந்தநிலை எதிர்ப்புத்திறன் சோதனை
ஜாம்மர்டெஸ்ட் நடைபெறும் இடம், ஆண்டோயா தீவில் உள்ள ப்ளைக் கிராமம். வடஒளியான ஆரோரா போரியாலிஸை ஆய்வு செய்வதற்காகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்தத் தீவு, இயற்கை அழகால் நிரம்பியதாகும். கண்கவர் ஆர்க்டிக் இயற்கைக் காட்சிகளும், தினசரி வழங்கப்படும் வாஃபிள் விருந்தும் இதன் கவர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்த நிகழ்வின் நோக்கம் மிகவும் தீவிரமானது.
நான் சென்றபோது, ஜாம்மர்டெஸ்ட் தனது மூன்றாவது அதிகாரப்பூர்வ ஆண்டில் தான் இருந்தது.
ஆனால், வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ஜிஎன்எஸ்எஸ் ரிசீவர்களை தீவிரமான, செயற்கையாக உருவாக்கப்பட்ட குறுக்கீடுகளுக்கு உட்படுத்தும்போது அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைச் சோதிக்கும் இந்த நடைமுறை புதிதல்ல.
பல ஆண்டுகளாக, அமெரிக்க ராணுவம் ஜிஎன்எஸ்எஸ் கையாளப்படும்போது ரிசீவர்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைச் சோதித்து வருகிறது. நியூ மெக்சிகோவில் உள்ள வைட் சாண்ட்ஸ் ஏவுகணை சோதனைத் தளத்தில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
எனினும், இந்தச் சோதனைகள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டவை. சோதனை முடிந்த பிறகு எந்தத் தரவுகளைப் பகிரலாம் என்பதும் இதில் அடங்கும்.
நார்வே நாட்டினர் இதிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர். தொழில்நுட்பத் துறையில் பிரபலமான 'ஒயிட்-ஹாட் ஹேக்கத்தான்'களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தச் சோதனை நிகழ்வை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இதுபோன்ற ஹேக்கத்தான்களில், மென்பொருளை மேம்படுத்துவதற்காக, சைபர் பாதுகாப்பில் உள்ள பலவீனங்களைக் கண்டறிய ஹேக்கர்கள் முயற்சிப்பார்கள்.
முக்கியமாக, இந்தச் சோதனைகள் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. ஆண்டோயாவுக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் காணும் வகையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன.
மேலும், நிகழ்வின் இறுதி இரவில், பங்கேற்பாளர்கள் தாங்கள் நடத்திய சோதனைகளின் முடிவுகளை மற்ற அரசு மற்றும் வணிக நிறுவனப் பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.

பட மூலாதாரம், Katherine Dunn
2024-ம் ஆண்டு நடைபெற்ற ஜாம்மர்டெஸ்ட்டில் நான் கலந்துகொண்ட பல நாட்களிலும், மரக்குடில் பாணியில் அமைந்திருந்த ப்ளைக் சமூகக் கட்டடத்தில் ஹாக்லினுக்கு அருகில் அமர்ந்திருந்தேன்.
அவரும் மற்றும் அவரது சக ஊழியர்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தபோது, விலை உயர்ந்த மின்னணு சாதனங்களின் மீது காபி சிந்திவிடாமல் இருக்க நான் கவனமாக இருந்தேன்.
இந்தப் பணியில், விமானங்கள் முதல் கார்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்கள் வரை பல்வேறு சாதனங்களில் உள்ள ரிசீவர்களுக்கு தவறான தகவல்களை வழங்குவது அடங்கும். அவை எங்கு இருக்கின்றன என்பது குறித்தும், பல நேரங்களில், எந்த நேரத்தில் இருக்கின்றன என்பது குறித்தும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டன.
இதை இப்படி கற்பனை செய்துகொள்ளுங்கள்.
2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நீங்கள் லண்டனில் அமர்ந்து இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஜிஎன்எஸ்எஸ் தரவுகளில் திரித்தல் செய்தால், உதாரணமாக, நீங்கள் பெருவில் உள்ள லிமாவில் இருக்கிறீர்கள் என்றும், அது 2017 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் என்றும் உங்களுக்கு தவறான தகவல் வழங்கப்படலாம்.
நீடித்த மற்றும் மெதுவாக நிகழும் 'ஜாமிங்கின்' அபாயங்கள்
ஜிஎன்எஸ்எஸ் குறுக்கீடுகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
முதல் வகை 'ஜாமிங்'.
அதாவது, சிக்னல்களை அதிக அளவில் குறுக்கீடு செய்து, அந்தச் சேவை இனி கிடைக்காத நிலையை உருவாக்குவது.
இரண்டாவது 'ஸ்பூஃபிங்'.
இதில் ரேடியோ அலைகள் கைப்பற்றப்பட்டு, ஜிஎன்எஸ்எஸ் ரிசீவருக்கு தவறான இருப்பிடம் மற்றும் நேரம் வழங்கப்படுகிறது.
ஜிஎன்எஸ்எஸ் மீதான தாக்குதல்களில் மிகவும் ஆபத்தானவை இரண்டு வகைகளாக உள்ளன.
முதல் பெரிய ஆபத்து, நீண்ட நேரம் தொடரும் ஜாமிங்.
அதாவது, ஜிஎன்எஸ்எஸ் முழுமையாகவும் தொடர்ந்து முடக்கப்படுவது. இது நீண்ட நேரம் நீடித்தால், பேக் அப் நேர ஒத்திசைவு அமைப்புகளும் செயலிழக்கத் தொடங்கும்.
இதன் தொடர்ச்சியாக, நவீன உலகை ஒன்றிணைத்து வைத்திருக்கும் டிஜிட்டல் ஒத்திசைவு அமைப்பு சீர்குலையத் தொடங்குவதால், ஏராளமான பாதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படலாம்.
ஜிஎன்எஸ்எஸ் -ஐ அணுக முடியாத நிலையில், ஒரு மின்வலை அல்லது வேறு எந்த நவீன டிஜிட்டல் அமைப்பும் எவ்வளவு காலம் ஒத்திசைவுடன் இயங்க முடியும் என்பது, ஜிஎன்எஸ்எஸ் தேவையற்றதாக மாற்றும் வகையில் இயற்பியல் உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்கு அரசு அல்லது நிறுவனம் எவ்வளவு பணம் செலவிடத் தயாராக உள்ளது என்பதைப் பொறுத்தது.
பெரும்பாலும், இது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கடிகாரங்கள் மற்றும் மிகத் துல்லியமாக நேரத்தைப் பரிமாறுவதற்கான ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் ஆகியவற்றின் சேர்க்கையாக இருக்கும்.
இரண்டாவது, அதைவிட மோசமான சூழல், மெதுவாக நடைபெறும், அதிநவீன 'ஸ்பூஃபிங்' தாக்குதல்.
அது கண்டறியப்படாமலும் கட்டுப்படுத்தப்படாமலும் இருந்தால், பேக் அப் அமைப்புகள் செயல்படத் தொடங்குவதற்கான வாய்ப்பே இருக்காது.
இது அடிப்படையில் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரகசியத் தாக்குதலாகும். ஒரே நேரத்தில் டிஜிட்டல் அமைப்புகளைச் சீர்குலைக்கும் திறன் கொண்டதாக இது இருக்கலாம்.
இந்த இரண்டு வகையான தாக்குதல்களும் ஜிபிஎஸ் நேரத்தை இலக்காகக் கொள்கின்றன. மேலும், இரண்டுமே மிகவும் அதிநவீனமான மற்றும் சக்திவாய்ந்த அளவிலான கையாளுதல் அல்லது சீர்குலைப்பை உள்ளடக்கியவை.
இவை சிக்கலான சைபர் பாதுகாப்புத் தாக்குதல்களுக்கு இணையானவை.
இதுபோன்ற தாக்குதல்களைத் தான் ஹாக்லினும், மெட்ராலஜி சேவையும், தொழில்துறைக்கான நேர சேவைகளை வழங்கும் ஏராளமான நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டோயாவில் சோதித்து வருகின்றனர்.
தாக்குதலுக்குப் பிறகு குறுகிய காலத்தில் மிகப்பெரிய டிஜிட்டல் அமைப்புகள் எவ்வாறு செயல்படும் என்பதை ஆராய்வதே இதன் நோக்கம் என்று பலர் என்னிடம் தெரிவித்தனர்.
உதாரணமாக, மின் கட்டமைப்பு மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் தீவிரமான பாதிப்புகள் தொடங்குவதற்கு முன்பு எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது இதில் அடங்கும்.
வெளியையும் காலத்தையும் எப்படி அகற்றுவது?
2024 ஜாம்மர்ஃபெஸ்ட்டின் முதல் பிற்பகலில், இரண்டு சோதனை விமானங்கள் இயக்கப்பட்டன.
ஒன்று நார்வே மீட்புப் படையின் ஹெலிகாப்டர். மற்றொன்று ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு அமைப்பான யூரோகண்ட்ரோலைச் சேர்ந்த விமானி ஒருவர் இயக்கிய சிறிய விமானம்.
ஜிஎன்எஸ்எஸ் சிக்னல்களைத் திரிப்பதன் மூலம், இரண்டு விமானங்களிலும் இருந்த ரிசீவர்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டதை நான் கவனித்தேன்.
இதனால், விமானிகள் உண்மையில் பறந்த பாதையைப் பிரதிபலிக்காத வகையில், அவற்றின் இருப்பிடப் பாதைகள் உருவாக்கப்பட்டன.
ஃப்ளைட் டிராக்கரில் ஹெலிகாப்டரின் இருப்பிடம், எண்ணற்ற , ஒன்றோடொன்று கலந்த பதற்றமான சுழல்களாக நகர்வது போல் தெரிந்தது.
ஒரு பக்கத்தில் பதற்றத்துடன் கிறுக்கியது போன்ற தோற்றம் அது. உண்மையில், ஒரு ஹெலிகாப்டரால் இதுபோன்ற சாகசங்களைச் செய்யவும் முடியாது. செய்யவும் கூடாது.
பின்னர், டிராக்கரில் யூரோகண்ட்ரோலின் சோதனை விமானம் வானில் வித்தியாசமான, பேப்பர் கிளிப் போன்ற வடிவங்களில் பறப்பது தெரிந்தது. அதில் உடலைக் குலைக்கும் அளவுக்கு தீவிரமான திருப்பங்களும் இருந்தன.
ஆனால் உண்மையில், அந்த விமானம் நகரத்தின் மேலே அகலமான, நேர்த்தியான வட்டங்களில் பறந்துகொண்டிருந்தது.
இரண்டாவது நாள் காலையில், ஹாக்லின் மேலும் அதிநவீனமான ஒரு சீர்குலைப்புச் சோதனையை மேற்கொண்டதை நான் கவனித்தேன்.
40 நிமிடங்களுக்கு மேலாக, அவரும் அவரது சக ஊழியர்களும் ஸ்பூஃபிங் சாதனத்தின் சக்தியை படிப்படியாக அதிகரித்தனர். இதன் மூலம் போலி சிக்னலின் வலிமையும் அதிகரிக்கப்பட்டது.
இது, ஏதோ தவறு நடக்கிறது என்பதை ஒரு அமைப்பு உணர்வதற்கு முன்பே, அதை மெதுவாகச் செயலிழக்கச் செய்வதற்கு இணையான மின்காந்தச் செயல்முறை. அதாவது, ஆபத்தை உணரும் முன்பே, ஒரு அமைப்பை படிப்படியாகச் செயலிழக்கச் செய்வது போன்றது.
ரகசியமாக செயல்பட்ட அந்த ஆன்டெனாவில் இருந்து வரும் ஒளிபரப்பு படிப்படியாக அதிகரித்தபோது, எங்களுக்கு மேலே சுவரில் பொருத்தப்பட்டிருந்த மானிட்டரில் உள்ள திரையில் அந்தப் பகுதி கூகுள் மேப்ஸில் காட்டப்பட்டது.
நமது இருப்பிடத்தைக் குறிக்கும் அடையாளம், தொடர்ந்து மெதுவாக நகர்ந்து, தவறாக, நார்வே கடலுக்குள் சென்று கொண்டிருந்தது.
நாம் காலத்தை 'ஹேக் செய்யும்போது' அது எப்படி இருக்கும்?
கடிகாரங்களில் ஏற்பட்ட தாக்கத்தை, சிக்கலான உபகரணங்கள் இல்லாமல் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது.
குறுக்கீட்டால் ஏற்படும் "டிரிஃப்ட்" எனப்படும் நேர விலகலைக் கண்காணிக்க, ஜிஎன்எஸ்எஸ் மூலம் ஒத்திசைக்கப்பட்ட கடிகாரம் உண்மையான நேரத்திலிருந்து படிப்படியாக விலகிச் செல்லும் விதத்தை அறிய, ஜிபிஎஸ் நேரத்தை இடையூறு இல்லாத ஒரு குறிப்பு நேரத்துடன் ஒப்பிட வேண்டியிருந்தது.
இந்தக் குறிப்பு நேரம், மலைக்கு மறுபுறம் இருந்த ஜிஎன்எஸ்எஸ் ரிசீவர் ஒன்று வரை முழுமையாக விரிக்கப்பட்டிருந்த ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் மூலம் பெறப்பட்டது. அந்த இடம் குறுக்கீட்டிலிருந்து பாதுகாப்பாக இருந்தது.
ஹாக்லினின் தோளுக்கு மேல் பார்த்தபடி, அவர் எனக்குக் காட்டிய ஒரு வரைபடத்தை நான் கவனித்தேன். அதில், ஸ்பூஃபிங் செய்யப்பட்ட கடிகாரத்தின் நேர விலகல், குறிப்பு நேரத்திலிருந்து எவ்வளவு விலகியுள்ளது என்பது நானோ விநாடிகளில் அளவிடப்பட்டு காட்டப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Katherine Dunn
ஹாக்லின் கூறியதுபோல், பிரச்னை என்னவென்றால், நாம் நேரத்தைப் பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும், அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி நாம் நிச்சயமாக சிந்திக்க விரும்புவதில்லை.
ஹேக்கிங்கைத் தடுக்க முடியுமா?
ஜிஎன்எஸ்எஸ்-ஐ மாற்றுவதற்காகவோ அல்லது அதன் செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காகவோ புதிய வழிமுறைகள் தொடர்ந்து முன்மொழியப்பட்டும், உருவாக்கப்பட்டும் வருகின்றன.
ஹாக்லினின் சட்டையில் இருந்த வெள்ளை முயல் நினைவிருக்கிறதா?
லூயிஸ் கரோலின் 'ஆலிஸின் அட்வென்ச்சர்ஸ் இன் வொண்டர்லேண்ட்' கதாபாத்திரத்தைக் குறிப்பிடுவதுடன், அந்தச் சின்னம் 'வைட் ராபிட்' என்பதையும் குறிக்கிறது. இது சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட துல்லியமான நேர ஒத்திசைவு அமைப்பாகும்.
இது ஒரு நானோ விநாடிக்கும் குறைவான அளவுக்கு துல்லியமாக நேரத்தை வழங்கக்கூடியது.
இந்த அமைப்பு உள்ளிட்ட பிற நேர ஒத்திசைவு அமைப்புகள், பொதுவாக செயற்கைக்கோள்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் அணு குறிப்புக் கடிகாரங்களைப் பயன்படுத்துகின்றன. மேலும், இவற்றை ஹேக் செய்வதும் மிகவும் கடினம்.
ஆனால், ஜிஎன்எஸ்எஸ் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் ஒரே ஒரு மாற்று அமைப்பு கூட இல்லை என்பதில், நான் பேசிய கிட்டத்தட்ட அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர்.
"எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் ஒரே ஓர் அமைப்பு கிடையாது. அதனால்தான் பல்வேறு அமைப்புகளின் கலவை தேவைப்படுகிறது" என்கிறார் டானா கோவர்ட்.
2013-ஆம் ஆண்டு முதல் ஜிபிஎஸ்-ஐ பாதுகாப்பதற்கான கொள்கைகளுக்காக அவர் பிரசாரம் செய்து வருகிறார். ரெசிலியன்ட் டைமிங் அண்ட் நேவிகேஷன் ஃபவுண்டேஷனின் இணை நிறுவனர்களில் அவரும் ஒருவர்.
2024-ஆம் ஆண்டு கோவர்ட் என்னிடம் பேசும்போது, ஸ்பூஃபிங் மேலும் மோசமாகத்தான் போகும் என்று தான் நம்புவதாகக் கூறினார். "இது மலிவானது, எளிதானது" என்றார் அவர்.
மேலும், மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று மற்ற ஜிஎன்எஸ்எஸ் அமைப்புகளிடமிருந்தே வரக்கூடும் என்றும் அவர் கூறினார்.
2026- ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அந்த அச்சங்கள் உண்மையாகின. ரஷ்ய செயற்கைக்கோள்கள் மேலிருந்து குறுக்கீடுகளை அனுப்பி, குறுகிய காலத்திற்கு ஐரோப்பா முழுவதும் ஜிபிஎஸ் சிக்னல்களைச் சீர்குலைத்ததாக நிபுணர்கள் குழு ஒன்று எச்சரித்தது.
கடந்த காலங்களில், ஜிஎன்எஸ்எஸ் குறுக்கீடுகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது எல்லைப் பகுதிக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஏனெனில், பூமியில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செல்ல முடியும்.
ஆனால், இப்போது மேலிருந்தும் குறுக்கீடுகள் வருவதால், எந்த இடமும், எந்தப் பொருளும் இதிலிருந்து தப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஸ்காண்டிநேவியர்களைப் பொறுத்தவரை, ஜாம்மர்டெஸ்ட் நிகழ்வின் பெரும்பகுதி ரஷ்யாவால் நடத்தப்படக்கூடிய ஒருவித தாக்குதலுக்கான தயாரிப்பைப் பற்றியதாகவே மறைமுகமாக இருந்தது. அப்படியிருக்க, 2024-ம் ஆண்டு நிகழ்வு இவ்வளவு வெளிப்படையாக நடத்தப்பட்டதில் எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் அளவும், நார்வே உளவுத்துறை அதிகாரிகளின் இருப்பும் வெளிப்படையாகத் தெரியாத வகையில் இருந்தன.
எனினும், இந்த வெளிப்படைத்தன்மையும் இந்த நிகழ்வின் நோக்கங்களில் ஒன்று தான்.
"'நாங்கள் மேலும் வலுவாகி வருகிறோம். இதை எதிர்கொண்டு வருகிறோம்' என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் இது நடத்தப்படுகிறதா?" என்று ஜாம்மர்டெஸ்ட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், சாலை நிர்வாகத்தின் மூத்த பொறியாளருமான டோமாஸ் லெவினிடம் நான் கேட்டேன்.
"நிச்சயமாக" என்று கூறும் அவர், "அதனால், ரஷ்யாவே, வாருங்கள். முயற்சி செய்து பாருங்கள்"என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































