'தொடர்ந்து 7வது தோல்வி' - சேப்பாக்கத்தில் சிஎஸ்கே கோட்டைவிட்டது எங்கே?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

2026 ஐபிஎல் சீசனின் 7வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி எம்எஸ் தோனி அல்லது சுரேஷ் ரெய்னா இல்லாமல் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கிய முதல் போட்டி இது.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் 209 ரன்கள் எடுத்தது. அதை 18.4 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் சேஸ் செய்தது.

இதன்மூலம் சேப்பாக்கத்தில் தொடர்ந்து 7வது போட்டியாகத் தோற்றிருக்கிறது சூப்பர் கிங்ஸ். கடந்த சீசன் இங்கு விளையாடிய கடைசி 6 போட்டிகளிலுமே அந்த அணி தோற்றிருந்தது.

மாத்ரே அதிரடி

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியிலும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சேப்பாக்கத்தில் முதல் முறையாக சிஎஸ்கே வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 7 ரன்களிலேயே வெளியேறினார். ஜேவியர் பார்ட்லெட் பந்துவீச்சில் அவர் பிரப்சிம்ரன் சிங் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய இளம் பேட்டர் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடி சிஎஸ்கே ரன் விகிதத்தை உயர்த்தினார். தான் சந்தித்த முதல் 4 பந்துகளையும் டாட் பால்களாக ஆடிய அவர், அதன்பிறகு பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார்.

பார்ட்லெட் வீசிய ஆட்டத்தன் நான்காவது ஓவரில் 3 பவுண்டரிகள், வைஷாக் விஜயகுமார் வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸர், அர்ஷ்தீப் வீசிய ஆறாவது ஓவரில் ஒரு பவுண்டரி என அனைத்து ஓவர்களிலுமே பவுண்டரியோ சிக்ஸரோ அடித்தார்.

மாத்ரே அதிரடி காட்டியதால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சற்று நிதானமாகவே பேட்டிங் செய்தார்.

சிஎஸ்கே பவர்பிளேவில் 1 விக்கெட்டை இழந்து 57 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகும் மாத்ரேவின் அதிரடி தொடர்ந்தது. யான்சன் வீசிய 7வது ஓவரிலும், ஸ்டாய்னிஸ் வீசிய 9வது ஓவரிலும் தலா 2 சிக்ஸர்கள் அடித்தார் அவர். யுஸ்வேந்திர சஹல் ஓவரைத் தவிர மற்ற அனைத்து ஓவர்களிலும் ரன்கள் வேகமாக வந்துகொண்டே இருந்தன.

29 பந்துகளில் அரைசதம் கடந்த மாத்ரே, 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஸ்கொயர் திசையைக் குறிவைத்த சர்ஃபராஸ்

மாத்ரேவுக்கு முன்னதாகவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (22 பந்துகளில் 28 ரன்கள்) சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார். அடுத்து வந்த கார்த்திக் ஷர்மாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, சூப்பர் கிங்ஸின் ரன் விகிதம் சற்று குறைந்தது.

இந்நிலையில் சர்ஃபராஸ் கான் மிகவும் சாதுரியமாக விளையாடினார். ஸ்கொயர் திசையில் இலகுவாக பந்துகளைத் தட்டி தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசினார் அவர். 12 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்பட 32 ரன்கள் எடுத்தார் சர்ஃபராஸ்.

கடைசி கட்டத்தில் ஷிவம் துபே சென்னை அணிக்கு நல்லபடியாக இன்னிங்ஸை முடித்துக் கொடுத்தார். 17வது ஓவரின் முடிவில் 14 பந்துகளுக்கு 14 ரன்கள் எடுத்திருந்த துபே, 18வது ஓவர் முதல் அதிரடியைக் கையில் எடுத்தார்.

யான்சன் வீசிய 18வது ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. பார்ட்லெட் வீசிய 19வது ஓவரில் 13 ரன்கள் வந்தது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் துபே 3 பவுண்டரிகள் அடிக்க அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டன.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. துபே 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் வைஷாக் விஜயகுமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பார்ட்லெட், யான்சன், சஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தடுமாறிய சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு

210 என்ற இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் பவர்பிளேவில் வேகமாக ரன் சேர்த்தது. பிரியான்ஷ் ஆர்யா ஒவ்வொரு பௌலருக்கு எதிராகவும் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்தார்.

கலீல் அஹமது வீசிய முதல் ஓவரில் தலா ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் அடித்தார் பிரியான்ஷ். மேட் ஹென்றி வீசிய அடுத்த ஓவரில் அவர் 2 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் விளாசினார். பிரப்சிம்ரன் சிங்கும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டன.

அவர்கள் இருவரும் அதே அதிரடியைத் தொடர, 3.2 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது பஞ்சாப் கிங்ஸ்.

ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட நினைத்த பிரியான்ஷ் ஆர்யா மேட் ஹென்றியின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவர் 11 பந்துகளை மட்டுமே சந்தித்து 39 ரன்கள் விளாசினார்.

தொடர்ச்சியான அதிரடியால் பவர்பிளேவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 67 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.

பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது வெற்றி

பவர்பிளேவில் ஆடிய அணுகுமுறையை முழு இன்னிங்ஸிலும் தொடர்ந்த்து பஞ்சாப் கிங்ஸ். பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் என களமிறங்கிய அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்தார்கள்.

சீராக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் வந்துகொண்டே இருந்ததால் தேவைப்படும் ரன்ரேட் கட்டுக்குள்ளேயே இருந்தது.

பிரப்சிம்ரன் சிங் 43, கூப்பர் கானலி 36, ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் சஷாங்க் சிங், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் வெற்றியை உறுதி செய்தார்கள்.

இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து இலக்கை எட்டியது பஞ்சாப் கிங்ஸ். இதன்மூலம் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக அந்த அணி 2 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. சூப்பர் கிங்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோற்றிருக்கிறது.

வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர், மேட் ஹென்றி, நூர் அஹமது, கலீல் அஹமது, அன்ஷுல் கம்போஜ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், மேத்யூ ஷார்ட், ராகுல் சஹர், குர்ஜப்னீத் சிங்

பஞ்சாப் கிங்ஸ்

பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, சஷாங்க் சிங், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ யான்சன், ஜேவியர் பார்ட்லட், அர்ஷ்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யுஸ்வேந்திர சஹல்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: பிரியான்ஷ் ஆர்யா, மிட்ச் ஓவன், சூர்யான்ஷ் ஷெட்கே, ஹர்ப்ரீத் பிரார்.