You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'யார் இந்த தேவதை..' - பாடகர் ஹரிஹரனின் பிரபல 8 பாடல்கள்
- எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
திருவனந்தபுரத்தில் பிறந்தவர் பாடகர் ஹரிஹரன். அவர் தந்தை எச்.ஏ.எஸ்.மணி திருவாங்கூர் இசைக்கல்லுாரியில் படித்தவர். அவர் தாய் அலுமேலுவும் முறைப்படி இசை பயின்றவர். தந்தையின் திடீர் மரணத்துக்கு பின் ஹரிஹரனின் குடும்பம் மும்பைக்கு குடியேறியது.
ஹரிஹரன் தாய் அலுமேலுவும் சிறந்த இசைக் கலைஞர் என்பதால் மும்பையில் இசைப்பள்ளி நடத்தி வந்தார். அங்கே இசை படித்து, தாயை முதல் குருவாக ஏற்றார் ஹரிஹரன்.
பின்னர், மும்பையில் கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு சின்ன, சின்ன கச்சேரிகள், சினிமாவில் பாடி வந்தார் ஹரிஹரன்.
இந்தியில் பாடிக்கொண்டிந்த ஹரிஹரனை தமிழுக்கு அழைத்து வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தான் இசையமைத்த முதல் படமான ரோஜாவில் அவரை 'தமிழா தமிழா' பாடலை பாட வைத்தார். அந்த பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானார் ஹரிஹரன்.
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான பாடல்களை ஹரிஹரன் இதுவரை பாடியிருக்கிறார்
ஏப்ரல் 3 அன்று ஹரிஹரனுக்கு பிறந்தநாள். தமிழில் அவர் பாடிய பிரபலமான சில பாடல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
1. 'உயிரே உயிரே…'
'பம்பாய்' திரைப்படத்தில் கடல் அலை ஆர்ப்பரிக்க, 'உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு…' என உணர்ச்சிகரமாக அரவிந்த்சாமி பாடும் பாடல் இன்று வரை பாடகர் ஹரிஹரனின் அடையாளமாக உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் 1995இல் வெளியான 'பம்பாய்' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், கேரளாவின் பேக்கால் கோட்டையில் படமாக்கப்பட்டது.
1990களில் இந்த பாடலை கேட்காதவர்கள், பாடாதவர்கள் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு, இந்தப் பாடல் மிகவும் பிரபலமானது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து வரிகளில், சித்ராவுடன் ஹரிஹரன் இணைந்து பாடிய இந்த பாடல் பாடிய அவரது சிறந்த பாடல்களில் ஒன்று.
2. 'விடுகதையா இந்த வாழ்க்கை…'
பொன்னம்பலம் கதாபாத்திரம் அடிக்க ரஜினியின் முத்து கதாபாத்திரம் தவிக்கும்போது 'விடுகதையா…இந்த வாழ்க்கை' என கணீர் குரலில் பாட ஆரம்பிப்பார் ஹரிஹரன்.
அடுத்து தந்தை ரஜினி கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட 'பிளாஷ்பேக்' காட்சிகள் வரும்.
அப்போது ஹரிஹரன் குரலில் ஒலித்த "காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது… வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்…
நாங்கள் போவதெங்கே…" என்ற வைரமுத்து வரிகள் ரஜினி ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது.
3. 'கொஞ்சநாள் பொறு தலைவா…'
ஹரிஹரன் குரலை துள்ளலான இந்த பாடலுக்கு பயன்படுத்தினார் இசையமைப்பாளர் தேவா.
1995இல் வெளியான 'ஆசை' திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் நடனமும், பாடலின் மெட்டும், ஹரிஹரன் குரலும் இந்தப் பாடலை ஹிட்டாக்கின. பாடல் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இன்றும் அஜித் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடுகிறார்கள்.
'காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்...
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்...
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி...
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…' என்ற இளமை துள்ளும் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.
4. 'பொய் சொல்லக்கூடாது காதலி…'
சில பாடல்களின் வரிகளை கவிஞர்கள் சிறப்பாக எழுதியிருப்பார்கள். அதை புரிந்துகொண்டு அந்த பாடலுக்கு உயிர் கொடுத்து இருப்பார்கள் இசையமைப்பாளர்களும், பாடகர்களும்.அந்த மேஜிக் கூட்டணி மூலம் ஒரு நல்ல பாடல் உருவாகும்.
'ரன்' திரைப்படத்தில் வித்யாசாகர் இசையில் அப்படி உருவான பாடல்தான் 'பொய் சொல்ல கூடாது காதலி…பொய் சொன்னாலும் நீயே என் காதலி'.
லிங்குசாமி இயக்கத்தில் 2002இல் வெளியான 'ரன்' திரைப்படம் நடிகர் மாதவனுக்கு 'ஆக்ஷன் ஹீரோ' என்ற அடையாளத்தைக் கொடுத்தது. அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த மெலடி பாடலை அறிவுமதி எழுதியிருந்தார்.
5. 'வெண்ணிலவே வெண்ணிலவே…'
மின்சார கனவு திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, ஹரிஹரன் என்ற மூவர் கூட்டணியில் உருவானது.
'மின்சார கனவு', பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய முதல் திரைப்படம். இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக, நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் திரையில் ஆடிய நடனமும், ஹரிஹரன், சாதனா சர்கம் ஆகியோரது குரலும் 'வெண்ணிலவே வெண்ணிலவே…' பாடலைப் பிரபலப்படுத்தின.
6. 'யார் இந்த தேவதை…'
சிற்பி இசையில் 'உன்னை நினைத்து' திரைப்படத்தில் இடம் பெற்ற மெலோடி பாடல். சூர்யாவும், லைலாவும் திரையில் தோன்றிய இந்தப் பாடலை, பா.விஜய் எழுதியிருந்தார்.
'உன்னை நினைத்து' திரைப்படம் 'செப்பாவே சிருகேலி' என்ற பெயரில் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டபோது, இதே பாடலை ஹரிஹரன் தெலுங்கு பதிப்பிலும் பாட, அதுவும் மிகப்பெரிய ஹிட்டானது.
7. 'ரோசப்பூ சின்ன ரோசப்பூ…'
'சூர்யவம்சம்' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது மட்டுமல்லாது இன்றும் ரசிகர்களால் விரும்பப்படும் பாடலாக உள்ளது.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ஹரிஹரன் பாடிய இந்தப் பாடல், அந்த காலத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான டீக்கடைகள், மற்றும் பேருந்து பயணங்களில் ஒலித்தது என்றே கூறலாம்.
தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்று, பல்வேறு மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்ட 'சூர்யவம்சம்' திரைப்படத்தின் வெற்றிக்கு இந்தப் பாடலும் ஹரிஹரன் குரலும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையில்லை.
8. 'நீ காற்று நான் மரம்…'
'நிலாவே வா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நீ காற்று நான் மரம்…என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…' என்ற இந்த பிரபலமான பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.
ஹரிஹரன் பாடிய பாடலை, திரையில் நடிகர் விஜய் பாட, திரையரங்குகளில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர்.
பாடகர் ஹரிஹரன் குறித்து அவருடன் இணைந்து ஏகப்பட்ட வெற்றி பாடல்கள் கொடுத்த கவிஞர் வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "எந்த வார்த்தையையும் மென்மை ஆக்கிவிடும் ஹரிஹரன் குரல். கல்லை கூட அந்த குரல் கனி ஆக்கிவிடும் என்பேன். கஜல் பாடிபாடி அவர் குரல் பழுத்துவிட்டது" எனக் கூறுகிறார்.
"ரட்சகன் திரைப்பட பாடல் பதிவில் எனக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சண்டை. 'சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா' என எழுதினேன். இதில் மென்மை இல்லை..ஆம்ஸ்ட்ராங் என்பது ஸ்ட்ராங் ஆக இருக்கிறது என்றார் ரஹ்மான். நானோ மானே, தேனே பழசாகிவிட்டது. இது புதுமை என்றேன். தமிழை காப்பாற்ற நான் துடித்தேன். இசையை காப்பாற்ற அவர் துடித்தார். இந்த பாடலை பாடுகிற ஹரிஹரன் முடிவெடுக்கட்டும் என்றேன்."
"அவர் மெட்டு மற்றும் வரிகளைக் கேட்டார். 'ஆம்ஸ்ட்ராங்' என்பதை கேட்டு நைஸ் என்றார். ஒரு முறை பாடி பார்த்து 'பியூட்டில்புல்' என்றார். அந்த ஆம்ஸ்ட்ராங்கா என்பதில் ஒரு சங்கதி போட்டு பாடலை அழகாக்கினார். அந்த பாடகருக்கு வல்லினத்தை மென்மை ஆக்கும் வித்தை தெரிகிறது. தனது திறமை அனுபவத்தில் இப்படி பல மாயங்கள் செய்து இருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
ரன் படத்தில் ஹரிஹரன் பாடிய பொய் சொல்லக்கூடாது காதலி என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் அறிவுமதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "அந்த பாடல் பதிவு இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. சென்னை வித்யாசாகர் ஒலிப்பதிவு கூடத்தில் பாடல் பதிவானது. ஹரிஹரனுக்கு நன்றாக தமிழ் தெரியும் என்பதால் ரசித்து பாடினார். அவர் குரல் தனித்தன்மை வாய்ந்தது" என்கிறார்.
"ஒரு ஏரியில் அந்தி பொழுதில் சிறகை விரித்து பறக்க தயாராகும் அழகியல் மாதிரி அந்த குரலின் தன்மை இருக்கும். இந்த பாடலிலும் அப்படியே. பொதுவாக துள்ளல் பாடல்கள் வெள்ளம் மாதிரி உடனே மக்களிடம் போய் சேரும். ஆனால் மெல்லிசை பாடல்கள் ஆற்று நீரோட்டம் மாதிரி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். பல ஆண்டுகள் ஒலித்து கொண்டே இருக்கும். பொய் சொல்லக்கூடாது காதலி பாடல் ஆரம்பத்தில் உடனே மக்களிடம் போய் சேரவில்லை. ஆனால் இன்றும் நிலைத்து நிற்கிறது" என்று கூறினார் பாடலாசிரியர் அறிவுமதி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு