அமீரகத்திடம் பட்ட கடனை மொத்தமாக தீர்க்க பாகிஸ்தான் திடீர் முடிவு - பின்னணியில் சௌதியா?

    • எழுதியவர், தன்வீர் மாலிக்
    • பதவி, பிபிசி உருது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 3.5 பில்லியன் டாலர் வைப்புத்தொகையை திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவிடம் கடன் வாங்குவது உட்பட 'அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன' என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் இருக்கும் பாகிஸ்தான் நிதியமைச்சர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக யூரோ பாண்டுகள் மற்றும் பிற நாடுகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வணிக வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது போன்ற வழிமுறைகளைப் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போரின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் அதன் மூலோபாய பெட்ரோலிய கையிருப்பை உருவாக்க வேண்டும் என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர வேண்டும் என்றும் இந்த நேர்காணலில் அவர் வலியுறுத்தினார்.

சௌதி அரேபியாவிடம் கடன் வாங்குவது குறித்து பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது , 'அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன' என்று நிதியமைச்சர் பதிலளித்தார்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி வைப்புத்தொகையைத் திருப்பித் தருவதை உறுதிப்படுத்தியதுடன், இது ஓர் "இயல்பான நிதிப் பரிவர்த்தனை" என்றும் குறிப்பிட்டது.

யூரோ பத்திரங்கள் இந்த ஆண்டு வெளியாகிறது

கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, வெள்ளிக்கிழமை இரவு சௌதி நிதியமைச்சர் முகமது பின் அப்துல்லா அல்-ஜடான், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மறுநாள், சனிக்கிழமை, பாகிஸ்தானில் இருந்து ஒரு ராணுவக் குழு கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஷா அப்துல் அஜீஸ் விமான தளத்திற்கு வந்துள்ளதாக சௌதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

இதில் பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தின் போது பேசிய முகமது ஔரங்கசீப், பாகிஸ்தான் தனது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டது என்று கூறினார்.

அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது தோராயமாக 2.8 மாத இறக்குமதிக்கு சமமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த அளவைப் பராமரிப்பது வருங்காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மைக்கு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் யூரோ பாண்டுகள், இஸ்லாமிய சுகோகு மற்றும் டாலர் மதிப்பில் ரூபாயுடன் இணைக்கப்பட்ட பத்திரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஔரங்கசீப் கூறினார்.

இந்த ஆண்டு யூரோ பாண்டுகள் வெளியிடப்படும் என்றும், வர்த்தகக் கடன்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் 3.5 பில்லியன் டாலரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திருப்பி தருவது ஏன்?

முன்னதாக, ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி முதிர்ச்சியடைந்த வைப்புத்தொகையை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திருப்பி அளிப்பதாகவும், இது வழக்கமான நிதிப் பரிவர்த்தனைதான் என்றும் பாகிஸ்தான் உறுதிப்படுத்தியிருந்தது.

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் பாகிஸ்தானும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் நீண்டகால சகோதரத்துவ உறவுகளைக் கொண்டுள்ளன என்றும், அவை காலப்போக்கில் வலுவடைந்துள்ளன என்றும் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.

வெளியுறவு அமைச்சகத்தின் இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து பெற்ற வைப்புத்தொகை மற்றும் கடன்களைத் திருப்பித் தருவது குறித்த செய்திகள் பாரம்பரிய மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய பிறகு, பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வைப்புத்தொகையை திருப்பித் தருகிறது என்பது தெளிவாகியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானில் எவ்வளவு வைப்புத்தொகை வைத்திருந்தது? பாகிஸ்தான் அரசாங்கம் அவற்றை திடீரெனத் திருப்பி அளிக்க எடுத்த முடிவு பிராந்தியத்தில் மாறிவரும் உலக அரசியல் சூழலுடன் தொடர்புடையதா அல்லது அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றா?

நிபுணர்களிடம் பிபிசி இதுகுறித்து பேசியது.

பாகிஸ்தானிடம் ஐக்கிய அரபு எமிரேட்சின் வைப்பு நிதி எவ்வளவு உள்ளது ?

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு தற்போது தோராயமாக 21 பில்லியன் டாலர்களாக உள்ளது,

இதில் 16 பில்லியன் டாலர் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியிடமும், 5 பில்லியன் டாலர்கள் வணிக வங்கிகளிடமும் உள்ளன.

பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியிடம் உள்ள 16 பில்லியன் டாலரில், 12 பில்லியன் டாலர் சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வைப்புத்தொகைகளாக உள்ளன. இவை பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைப்படுத்த உதவுகின்றன.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பில் சுமார் 2 பில்லியன் டாலர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வைப்புத்தொகை ஆகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானுக்கு 1.5 பில்லியன் டாலர் கடனையும் வழங்கியது. அதில் 450 மில்லியன் டாலர் 1990-களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. மொத்தத்தில், பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சுமார் 3.5 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக வைப்புத்தொகை எப்போது புதுப்பிக்கப்படுகின்றன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2018-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர்களை வைப்புத்தொகையாக வழங்கியது.

அந்தத் தொகையை பாகிஸ்தான் கடந்த 8 ஆண்டுகளாகத் தன்வசம் வைத்திருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவற்றை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்குப் பதிலாக, குறுகிய கால அடிப்படையில் புதுப்பிக்க ஒப்புக்கொண்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 2 பில்லியன் டாலர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டு மாத காலத்திற்கு புதுப்பித்தது.

ஏப்ரல் மாதத்துடன் அந்தக் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், தற்போது பாகிஸ்தான் அதைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளது.

பின்னணியில் உள்ள காரணம் என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 2 பில்லியன் டாலர் வைப்புத்தொகையைத் திருப்பித் தரும் பாகிஸ்தானின் முடிவு, மத்திய கிழக்கில் இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எடுக்கப்பட்டது.

இந்தப் போர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் ஆட்கொண்டது.

இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 2 பில்லியன் டாலர்களைத் திருப்பித் தருவது குறித்து, உலக அரசியல் விவகார நிபுணர் ஜாஹித் ஹுசைன் பிபிசியிடம் கூறுகையில், இதற்கும் உலக அரசியல் சூழலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மாறாக அதனைத் திருப்பி அளிக்கும் நடவடிக்கை அதற்கென ஒரு தனி பின்னணியைக் கொண்டது என்றும் தெரிவித்தார்.

இந்த வைப்புத்தொகைகளுக்கான அதிக வட்டி விகிதத்தைக் குறைக்குமாறு பாகிஸ்தான் கேட்டிருந்ததாகவும், அவற்றை புதுப்பிக்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவற்றை குறுகிய கால அடிப்படையில் மட்டுமே புதுப்பிக்கத் தொடங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

இது திடீரென நிகழ்ந்தது என்ற கருத்தையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவற்றை திருப்பித் தருமாறு கோரியது என்ற கருத்தையும் அவர் நிராகரித்தார்.

இந்த வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாக இருந்ததால் தான், அவற்றைத் திருப்பித் தர முடிவு செய்யப்பட்டதாக ஜாஹித் ஹுசைன் கூறினார்.

பொருளாதார விவகாரங்களுக்கான மூத்த பத்திரிகையாளர் மெஹ்தாப் ஹைதர் கூறுகையில், நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவது பிராந்தியத்தின் உலக அரசியல் சூழலுடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

இத்தகைய விஷயங்கள் தெளிவாகத் தென்படுவதில்லை, ஆனால் அவை எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை இது எவ்வாறு பாதிக்கும்?

பாகிஸ்தானிடம் பெரிய அளவில் அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை.

பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியிடம் உள்ள 16 பில்லியன் டாலர்களில், 12 பில்லியன் டாலர்கள் சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வைப்புத்தொகைகளாகும்.

அரசாங்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான வைப்புத்தொகையைத் திருப்பித் தந்த பிறகு, பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து மெஹ்தாப் ஹைதர் கூறுகையில், இரண்டு பில்லியன் டாலர்களைத் திரும்பத் தருவதால் நிச்சயமாகச் சில பாதிப்புகள் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.2 பில்லியன் டாலர் தவணைத் தொகை கிடைக்கும், இது அந்நியச் செலாவணி கையிருப்பை நிலையாக வைத்திருக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் பிற ஆதாரங்களிலிருந்தும் தனது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க முயன்று வருவதாகக் கூறிய அவர், இது தொடர்பாக பாகிஸ்தான் சௌதி அரேபியாவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு