காதல் உறவை காக்க காதலர், நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்றதாக மனைவி கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Nizamabad police
- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
(குறிப்பு: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்)
"கணவருக்கு போதையேற்றி, மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி, பின்னர் அவரது நரம்புகளில் கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை (டாய்லெட் கிளீனர்) செலுத்தி கொலை செய்த வழக்கில், அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவிய இருவரைக் கைது செய்துள்ளோம்" என்று நிஜாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.
நிஜாமாபாத் தெற்கு ஊரக ஆய்வாளர் சுரேஷ் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், சமீபத்தில் வளைகுடாவில் இருந்து திரும்பிய கணவர், "தனது திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருப்பார்" என்ற எண்ணத்தில் மனைவியும் அவரது காதலனும் இந்தத் திட்டத்தை தீட்டியதாகவும், ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர்களுக்கு மற்றொரு நபர் உதவியது தெரிய வந்துள்ளதாகவும் கூறினார்.
தெளிவான திட்டத்துடன் 24 மணிநேரத்திற்குள் அவர்கள் அவரை இரண்டு முறை கொலை செய்ய முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். பிரஷாந்த் ஜூன் 30 அன்று உயிரிழந்தார்.
காவல்துறை மற்றும் இறந்தவரின் குடும்பத்தினர் அளித்த விவரங்களின்படி, நிஜாமாபாத் மாவட்டம் மோப்பால் மண்டலத்தில் உள்ள நியால்கல்லை சேர்ந்த தயானி பிரஷாந்திற்கு (36), 12 ஆண்டுகளுக்கு முன்பு நந்திபேட் மண்டலம் வெல்மாலை சேர்ந்த சந்தியாவுடன் திருமணம் நடந்தது.
இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இவர்களுக்கு ஒரு மகனும் (9), ஒரு மகளும் (7) உள்ளனர்.
பிரஷாந்த் சில காலம் நிஜாமாபாத்தில் உள்ள எல்லம்மகுட்டா சந்திப்பில் ஒரு பாஸ்ட் ஃபுட் சென்டர் நடத்தி வந்தார். திருமணத்திற்கு முன் செவிலியர் படிப்பை முடித்த அவரது மனைவி சந்தியா, நிஜாமாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார்.

பட மூலாதாரம், Nizamabad police
இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?
பிரஷாந்த் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சௌதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்தார். இந்தக் காலகட்டத்தில், அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தனது சொந்த ஊருக்கு வந்து சென்றார்.
பிரஷாந்த் சில மாதங்களுக்கு முன் தனது மனைவி சந்தியாவை அழைத்து, தான் ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக ஊர் திரும்புவதாகவும், அதன் பிறகு மீண்டும் அங்கு செல்லப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். அவர் சொன்னபடியே ஜூன் 27 அன்று ஊர் திரும்பினார்.
ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரஷாந்தை, சந்தியா வரவேற்று காரில் நியால்கல்லுக்கு அழைத்து வந்ததாக இறந்தவரின் உறவினரான ராகுல் பிபிசியிடம் தெரிவித்தார்.
இருப்பினும், பிரஷாந்தின் தாயார் தயினி ஷியாமளா, தனது மகன் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துள்ளதாக ஜூலை 1 அன்று மோப்பால் போலீசில் புகார் அளித்தார். தனது மருமகள் சந்தியா மீது தனக்குச் சந்தேகம் இருப்பதாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பத்தில் இது அதிகப்படியான மது போதையால் தற்செயலாக ஏற்பட்ட மரணம் எனக் கருதப்பட்டாலும், சந்தியா மேலும் இருவரின் உதவியுடன் தனது கணவரை திட்டமிட்டுக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
"சந்தியாவுக்கு நிஜாமாபாத் நகரைச் சேர்ந்த அனில் என்பவருடன் சில காலமாக திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்து வந்தது. பிரஷாந்தின் வருகை தங்கள் உறவுக்கு இடையூறாகி, தங்கள் உறவு தொடர்வதைத் தடுக்கும் எனக் கருதி, சந்தியாவும் அனிலும் சேர்ந்து பிரஷாந்தை கொல்லத் திட்டமிட்டனர்" என்று ஆய்வாளர் சுரேஷ் குமார் கூறினார்.
"ஜூன் 29 அன்று, மதுபோதையில் இருந்த பிரஷாந்தை, பன்டி என்ற மற்றுமோர் இளைஞருடன் சேர்ந்து மாடியில் இருந்து தள்ளிவிட்டனர். அவர் நிஜாமாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சந்தியாவால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு, பிரஷாந்த் கையில் பொருத்தப்பட்டிருந்த கேனுலா (மருந்து செலுத்தப் பயன்படும் கருவி) மூலம் மயக்க மருந்து மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தைச் செலுத்தியதால், அவர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்" என்று சுரேஷ் குமார் விளக்கினார்.
"தனது கணவர் உடல்நலக் குறைவால்தான் இறந்தார் என்று நம்ப வைக்க அவர்கள் முயன்றதாகவும்" காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சந்தியாவின் காதலன் அனிலுடன் சேர்ந்து, நியால்கல்லை சேர்ந்த வெங்கடசாய் என்கிற பன்டி இந்தக் குற்றத்திற்கு உதவியுள்ளார். முழு விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வோம். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது முறையான விசாரணையில் தெரிய வரும். தற்போது மூன்று குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Nizamabad police
'சிறு வயது நண்பர்'
தனது கணவருக்கு மது ஊற்றிக் கொடுப்பது குறித்து, ஜூன் 29 அன்று சந்தியா வெங்கடசாயுடன் பேசும் தொலைபேசி பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், வெங்கடசாய் என்பவருடையது என்று கூறப்படும் ஒரு வீடியோவில், பிரஷாந்துக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவருக்கும் பிரஷாந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அவர் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆடியோ மற்றும் வீடியோவை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பன்டியும், பிரஷாந்தும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் என்று இறந்தவரின் உறவினரான கொல்லப்பள்ளி ராகுல் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இருவரும் ஒரே தெருவில் வசிக்கிறார்கள். அவர்கள் கிராமத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிவார்கள். மற்றொரு குற்றவாளியான அனில், சந்தியா பணிபுரியும் மருத்துவமனையில் அவரோடு வேலை பார்ப்பவர். தனது கணவர் ஊர் திரும்புவதை அறிந்தவுடன் சந்தியா வேலையை விட்டுவிட்டார். அவர் அனிலுடன் சேர்ந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டார். அதன் ஒரு பகுதியாகவே, அவர்கள் இருவருடனும் சேர்ந்து பன்டி விமான நிலையத்திற்குச் சென்றார்" என்று ராகுல் குற்றம் சாட்டினார்.
ஜூன் 27 முதல் தனது மாமா போதையிலேயே வைக்கப்பட்டு இருந்ததாக ராகுல் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
'என் மகனின் உடலைக் காட்டுமாறு கெஞ்சினேன்'
"எனது இளம் வயதில் என் கணவர் என்னை விட்டுப் பிரிந்ததால் (விவாகரத்து பெற்றதால்), நான் ஹோட்டல்களில் வேலை செய்து என் மகனை வளர்த்தேன். எத்தனை வரன்கள் வந்திருந்தாலும், சந்தியாவை பிடித்திருந்ததால் என் மகனுக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைத்தேன். இறுதியில், என் மகன் நிராதவராக விடப்பட்டான்" என்று பிரஷாந்தின் தாயார் தயினி ஷியாமளா பிபிசியிடம் தெரிவித்தார்.
நிஜாமாபாத்தில் தனியாக வசித்து வரும் ஷியாமளா, தன் மகன் சௌதி அரேபியாவில் இருந்து திரும்பிவிட்டான் என்பதைக்கூட அவர்கள் தன்னிடம் சொல்லவில்லை என்கிறார்.
மேலும், "அன்றிரவு, அவர்கள் என் மகனை, ஏதோ ஆதரவற்ற ஒருவரின் உடலைப் போல மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றுவிட்டனர். நான் சென்று என் மகனின் முகத்தைக் காட்டுமாறு உடற்கூறாய்வு செய்யும் ஊழியர்களிடம் கெஞ்சினேன். அன்றிரவு, உடற்கூறாய்வுக் கூடத்தின் படிக்கட்டுகளில் மழையிலேயே தூங்கினேன். எனக்கு இருந்தது ஒரேயொரு மகன். அவன் இறப்புக்கு நீதி வேண்டும்" என்று கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க சந்தியாவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
"நாங்கள் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். இரண்டு குழந்தைகளும் எங்கள் பராமரிப்பில்தான் உள்ளனர்" என்று சந்தியாவின் சகோதரர் சாகர் பிபிசியிடம் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரான வெங்கடசாய், அனில் ஆகியோரின் உறவினர்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































