எதிர்காலத்தில் உங்கள் குழந்தையின் தோற்றத்தையும் பண்புகளையும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியுமா?

பட மூலாதாரம், Andriy Onufriyenko/Jackyenjoyphotography via Getty Images
- எழுதியவர், கேத்தரின் ஹீத்வுட்
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மனிதர்கள் இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்களா?
நமது எதிர்கால வடிவங்கள் சிறியதாகவோ அல்லது உயரமானதாகவோ, வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டதாகவோ, அல்லது குறிப்பிட்ட தேவைக்கேற்ப மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டதாகவோ கூட இருக்க முடியுமா?
நாகரிகம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், நமது இனத்தை ஒரு காலத்தில் வடிவமைத்த நோய், பஞ்சம் மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகள் போன்ற பல இயற்கை அழுத்தங்கள் நவீன மருத்துவம், சுகாதாரம் மற்றும் உணவுக்கான அணுகல் ஆகியவற்றால் குறைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பிரிட்டனில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் மானிடவியலாளரும் பரிணாம மரபியல் நிபுணருமான ஜேசன் ஹாட்ஜ்சன், பரிணாம வளர்ச்சி இன்று "சந்தேகத்திற்கு இடமின்றி" தொடர்கிறது என்று கூறுகிறார்.
சில மக்கள்குழுக்களில் குறிப்பிட்ட மரபணுக்கள் அதிகமாகப் பரவி வருவதன் மூலம் இதை நாம் அறிய முடிகிறது. ஆனால், இந்த மாற்றங்கள் பல தலைமுறைகள் கடந்து நிகழ்வதால், ''ஒருவரின் வாழ்நாளுக்குள் பரிணாம வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை நேரடியாகக் காண முடியாது'' என்கிறார் ஜேசன் ஹாட்ஜ்சன்.
மனித மாறுபாடு
நமது சமீபத்திய பரிணாம வளர்ச்சியில் உணவு முறை முக்கியப் பங்கு வகித்துள்ளதாக அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தொல்மானிடவியலாளர் பிரியானா போபினர் கூறுகிறார்.
"இன்று பூமியில் உள்ளவர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினரால் பெரியவர்களாக வளர்ந்த பிறகும் பாலை ஜீரணிக்க முடிகிறது" என்று கூறும் அவர், அதே சமயம் 5,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு யாராலும் அதைச் செய்ய முடியவில்லை என்கிறார்.
மேலும்,"இது மிக வேகமான ஒரு பரிணாம மாற்றம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மனிதர்கள் பால் தரும் விலங்குகளை வளர்க்கத் தொடங்கியபோது இவ்வாறு நிகழ்ந்தது. பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், கொழுப்பும் புரதமும் நிறைந்த பாலை ஜீரணிக்கும் திறன் கொண்டவர்கள் உயிர்வாழவும், அந்த மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் அதிக வாய்ப்புகள் இருந்தன, இது "மிகவும் விரைவாகப் பரவியது" என்று போபினர் விளக்குகிறார்.
இன்னும் பின்னோக்கிச் சென்றால், மற்ற சுற்றுச்சூழல் காரணிகளும் மனித பரிணாம வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம், Sabrina Bracher via Getty Images
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நமது இனம் ஆப்பிரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்தபோது, அவர்கள் பல்வேறு வகையான மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளை எதிர்கொண்டனர் மற்றும் புதிய உடல் ரீதியான தகவமைப்புகளைப் பெற்றனர்.
உதாரணமாக, வைட்டமின் டி-ஐ பெற உதவும் வகையில், புற ஊதாக் கதிர்கள் குறைவாக இருந்த இடங்களில் வெளிர் நிறத் தோல் பரிணாம வளர்ச்சியடைந்தது.
"மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து சென்றதால்" உள்ளூர் அளவிலான வேறுபாடுகள் உருவாயின என்று கூறும் ஹாட்ஜ்சன், "இப்போது நாம் அனைவரும் புலம்பெயர்வு, உலகமயமாக்கல் போன்ற பல்வேறு வழிகளில் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளோம்" என்கிறார்.
இந்த உலகமயமாக்கலால் உயிரியல் வேறுபாடுகள் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால் விஷயங்கள் அவ்வளவு எளிமையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஹாட்ஜ்சன் 'அசார்டேடிவ் மேட்டிங்' (ஒத்த பண்புடைய இணையைத் தேர்ந்தெடுத்தல்) என்று அழைக்கப்படுவதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். இதை அவர், "உயிரினங்கள் தங்களைப் போன்றே இருக்கும் இணைகளை முன்னுரிமை கொடுத்து தேர்ந்தெடுப்பது" என்று விவரிக்கிறார்.

பட மூலாதாரம், imaginima via Getty Images
இந்த அசார்டேடிவ் மேட்டிங் முறை ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் எந்தவொரு இயற்கை தேர்வையும் "தீவிரப்படுத்த" முடியும் என்றும், ஒரு மக்கள் தொகையில் சில குறிப்பிட்ட பண்புகளை அதிகரிக்க இது உதவும் என்றும் ஹாட்ஜ்சன் கூறுகிறார்.
உதாரணமாக, "நீங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு உயரமாக உங்கள் துணையும் இருக்க வாய்ப்புள்ளது" என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர்.
"உயரம், எடை, முக அமைப்பு மற்றும் அனைத்து வகையான விஷயங்களும் சில குழுக்களில் ஒத்த பண்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் காட்டப்பட்டுள்ளது, ஆனால் எல்லா குழுக்களில் அவ்வாறு இல்லை. இது இறுதியில் மரபணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கிறது" என்கிறார் ஹாட்ஜ்சன்.
இதில் சில விஷயங்கள் சமூக மற்றும் கலாசார காரணிகளால் ஏற்படுகின்றன.
மக்கள் தங்கள் சொந்த இனக்குழுவிற்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆனால் சில சமூகங்களில் இந்தப் போக்குகள் தற்போது மாறி வருகின்றன.
"மனித பரிணாம வளர்ச்சியை எப்போதும் பாதிக்கும் ஏராளமான விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன" என்று கூறுகிறார் ஹாட்ஜ்சன்.
'மனிதர்களின் கைகளில்'
ஆனால், நாம் எடுக்கும் சில முடிவுகள் பரிணாம வளர்ச்சியைப் பாதிப்பதில்லை.
உதாரணமாக, "நீங்கள் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்து பெரிய தசைகளை உருவாக்கினால், அதற்காக நீங்கள் பெரிய தசைகளுக்கான மரபணுக்களை உங்கள் குழந்தைகளுக்குக் கடத்தப் போகிறீர்கள் என்று அர்த்தமல்ல" என்று போபினர் கூறுகிறார்.
பல் சீரமைப்பு முதல் அழகுசாதன நடைமுறைகள் வரை, பல குணாதிசயங்களை இப்போது ஒருவரது வாழ்நாளுக்குள்ளேயே மாற்றிக்கொள்ள முடியும்.
இவை இயற்கை தேர்வால் அல்லாமல், சமூக விருப்பங்களால் வடிவமைக்கப்படுகின்றன.
அழகுசாதன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச சங்கத்தின் கூற்றுப்படி, உலகளவில் 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 38 மில்லியன் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அல்லாத அழகுசாதன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது 2020 ஆம் ஆண்டை விட 40% அதிகமாகும்.

பட மூலாதாரம், GMint via Getty Images
நமது தோற்றத்தை மாற்றியமைத்துக் கொள்ள உதவக்கூடிய, வளர்ந்து வரும் இந்தத் திறன் என்பது, "உங்கள் மரபணுக்கள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறதோ, அதே போல் நீங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை" என்பதைக் குறிக்கிறது என்று டென்மார்க்கின் ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல் முன்னாள் இணைப் பேராசிரியர் தாமஸ் மைலண்ட் கூறுகிறார்.
எதிர்காலத்தில், நாம் நமது தோற்றத்தில் செய்துகொள்ளும் மாற்றங்கள் வெறும் மேலோட்டமான திருத்தங்களாக மட்டுமே இருக்காது.
விஞ்ஞானிகள் மனித மரபணுக்களைத் திருத்துவதற்கு 'கிரிஸ்பர்' என்று அழைக்கப்படும் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது அடிப்படையில் ஒரு 'மாலிக்யூலர் சிசர்' (மூலக்கூறு கத்தரிக்கோல்) போல செயல்படுகிறது. இதன் ஒரு பகுதி இலக்கு டிஎன்ஏவைக் கண்டறிகிறது, மற்றொரு பகுதி அதைத் திருத்துகிறது.
இந்தத் தொழில்நுட்பம் மேம்பட்டு வருகிறது, மேலும் சில குறிப்பிட்ட ரத்தக் கோளாறுகள் போன்ற ஒரு சில மரபணுக் குறைபாடுகளுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொழில்நுட்பம் மேலும் முன்னேறி, பரவலாகப் பயன்படுத்தப்படும் நிலையை எட்டினால், கோட்பாட்டளவில் மனிதர்களின் பல்வேறு பண்புகளை மரபணு மட்டத்திலேயே மாற்றுவது சாத்தியமாகலாம். அது பல தலைமுறைகளாக படிப்படியாக நடப்பதாக இருக்காது, மாறாக ஒரே படியில் திட்டமிட்டுச் செய்யப்படுவதாக இருக்கும்.
மேலும், இந்த மாற்றங்கள் விந்தணு மற்றும் கருமுட்டையாக உருவாகும் இனப்பெருக்க உயிரணுக்களில் செய்யப்பட்டால், திருத்தப்பட்ட மரபணுக்கள் எதிர்கால தலைமுறைகளுக்கும் கடத்தப்படலாம்.
ஆனால், உறுதியான முடிவுகளுடன் இதை பாதுகாப்பாகச் செய்யும் நிலையை அடைய நாம் இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.
"டிசைனர் பேபிக்கள்" (விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் குழந்தைகள்) உருவாக்குவது மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீதான சமூக பார்வை உள்ளிட்ட பல கவலைகளையும், தார்மீக ரீதியான கேள்விகளையும் இந்த தொழில்நுட்பம் எழுப்புகிறது.

பட மூலாதாரம், Just_Super via Getty Images
"இதை நாம் மனிதர்களிடம் செய்யக்கூடாது என்பதில் இப்போது உலகளவில் ஒருமித்த கருத்து உள்ளது, இது முற்றிலும் தார்மீக நெறிகளுக்கு முரணானது," என்று ஹாட்ஜ்சன் கூறுகிறார்.
ஆனால் எதிர்காலத்தில் இது மாறக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
"இன்னும் 5,000 ஆண்டுகளில்… இது அநேகமாக வேறு திசையில் செல்லக்கூடும் என்பது எனது யூகம். மரபணுத் திருத்தம் செய்வது தார்மீக நெறிகளுக்கு முரணானது என்ற நிலையிலிருந்து மாறி, அதைச் செய்யாமல் இருப்பதுதான் தார்மீக நெறிகளுக்கு முரணானது என்ற ஒரு காலம் வரும், ஏனென்றால் பரம்பரை நோய்கள் போன்ற விஷயங்களை நம்மால் முற்றிலுமாக ஒழிக்க முடியும்" என்று ஹாட்ஜ்சன் கூறுகிறார்.
இந்தத் தொழில்நுட்பம் பரவலாகக் கிடைக்கப்பெற்றால், பெற்றோர்கள் தங்களுக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்பதற்காக மரபணுக்களைத் திருத்துவதன் மூலம், தங்கள் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வாய்ப்பைக்கூட இது வழங்கக்கூடும்.
"பரந்த நோக்கில், மனித பரிணாம வளர்ச்சியின் எதிர்காலம் உண்மையில் மனிதர்களின் கைகளுக்குள் இருக்கும் ஒன்றாக மாறும் என நான் நினைக்கிறேன், ஆனால் நாம் இன்னும் அந்த நிலைக்கு அருகில் கூட வரவில்லை" என்று கூறும் அவர், இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருப்பதால், "எனது வாழ்நாளில் இதில் எதையும் நான் பார்க்க மாட்டேன் என்று நம்புகிறேன்" என்றும் குறிப்பிட்டார்.
புதிய இனம் உருவாகுமா?
நமது சுற்றுச்சூழல் எவ்வாறு மாறும் என்பதை அறியாமல், எதிர்காலத்தில் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என கணிப்பது சாத்தியமில்லை என்று மைலண்ட் கூறுகிறார்.
பல நூற்றாண்டுகள் கடந்த எதிர்காலத்தில் நாம் ஒரு புதிய இனமாகவே மாறியிருக்கக் கூடும்.
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 'ஹோமோ எரெக்டஸ்' போன்ற மனித இனங்கள் பூமியில் சுற்றித் திரிந்தன. நமது சொந்த இனமான 'ஹோமோ சேபியன்ஸ்' சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தோன்றவில்லை.
"எனவே ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை காத்திருந்தால், நம்மை விட ஹோமோ எரெக்டஸ் எந்தளவு வேறுபட்டிருக்கிறதோ, அந்தளவிற்கு நமது சந்ததியினர் நம்மிடமிருந்து வேறுபட்டிருப்பார்கள்" என்று கூறுகிறார் மைலண்ட்.

பட மூலாதாரம், 3quarks/Stocktrek Images via Getty Images
அப்படியிருந்தும், உயிரினங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் நாம் நினைப்பதை விடக் குறைவாகவே வெளிப்படையாகத் தெரியக்கூடும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
"யாராவது ஒருவர் ஹோமோ எரெக்டஸ் ஆக இருந்தால், அவர் முற்றிலும் மாறுபட்டவர் என்பதை நம்மால் அடையாளம் காண முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை" எனக் கூறுகிறார் மைலண்ட்.
நம்மில் சிலர் விண்வெளி போன்ற ஒரு புதிய சூழலில் குடியேறினால், நமது இனம் இரண்டாகப் பிரிவதற்குக் கூட சாத்தியமுள்ளது.
"நீங்கள் நிலவில் வாழ்ந்தால், அங்கு ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும். செவ்வாய் கிரகத்திலும் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும். நீங்கள் அதற்கு ஏற்ப உங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்" என்று மைலண்ட் கூறுகிறார்.
ஒரு புதிய இனம் உருவாவதை உண்மையாகக் காண வேண்டுமானால், இந்த மக்கள் தொகையினர் பூமியில் உள்ளவர்களிடமிருந்து பல தலைமுறைகளாக முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், நாம் பரிணாம வளர்ச்சியை தற்செயலாக நடக்கும் ஒன்றாக விட்டுவிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது மரபணுக்களை மாற்றியமைக்கும் திறன் உள்ளதால், "உண்மையான கேள்வி 'நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்?' என்பதுதான், 'உயிரியல் நமக்கு என்ன செய்யும்?' என்பது அல்ல" என்று மைலண்ட் கருதுகிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























