போருக்கு மத்தியில் சதாம் உசேன் ஹாலிவுட் பாணி திரைப்படத்தை எடுத்தது எப்படி?

பட மூலாதாரம், Iraqi Film Corporation
- எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
1983-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 'க்ளாஷ் ஆஃப் லாயல்டீஸ்' என்கிற திரைப்படம் முதலும் கடைசியுமாக திரையிடப்பட்டது. இராக்கில் சதாம் உசேனால் பெரும் கனவுகளுடன் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் பாணியிலான இந்த திரைப்படம் என்ன ஆனது? படப்பிடிப்பின்போது நடந்தது என்ன?
2020-இல் பிபிசியிடம் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் கட்டாய ராணுவ சேவை, விசாரணைகள் மற்றும் போதையில் இருந்த நடிகர் ஆலிவர் ரீட் எனப் பல விஷயங்களைப் பற்றி பேசினார்.
சதாம் உசேன் காவியமாக கருதிய இந்தப் படத்திற்கு, படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலே அரங்கேறிய இரான்-இராக் போர் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. படத்தில் நடித்தவர்கள் போரில் சண்டையிட அழைக்கப்பட்டு சொல்லிக் கொள்ளாமல் சென்றதும் பெரிய தடையாக இல்லை. படப்பிற்கான ஆயுதங்களை துருக்கி எல்லை வழியாகக் கொண்டு செல்வதும் பெரிய சவாலாக இருக்கவில்லை. துருக்கி எல்லையில் படக் குழுவின் லாரிகளை நிறுத்திய சுங்க அதிகாரிகள் அவை இராக் படைகளுக்கு உதவ கொண்டு செல்லப்படும் உண்மையான ஆயுதங்கள் என நினைத்தனர்.
மாறாக படத்தின் கதாநாயகனான ஆலிவர் ரிட்லி, விடுதி உணவகத்தில் காலியான வைன் பாட்டிலில் சிறுநீர் கழித்த சம்பவத்தால் படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் நிலைக்கு வந்தது.
"அந்தப் பாட்டிலை எனது வாழ்த்துகளுடன் பக்கத்து மேசைக்கு எடுத்துச் செல்லுமாறு பரிமாறுபவரிடம் அவர் கூறினார்," எனப் படத்தின் தயாரிப்பாளர் லத்தீஃப் ஜோரேஃபானி 2020-இல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் தெரிவிக்கிறார்.
"அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். எனக்கு இராக்கில் உள்ள மந்திரிகளிடம் இருந்து தந்தி வந்தது, 'இந்த நபரை படத்தில் இருந்து வெளியேறுங்கள். எங்களுக்கு அவர் இங்கு இருக்கக்கூடாது' என்று கூறினர். பல மில்லியன் பவுண்ட் செலவு செய்து எடுக்கப்படும் படத்தின் தயாரிப்பாளராக நான் எப்படி தயாரிப்பு பாதி கட்டத்தில் இருக்கும்போது முக்கியமான நட்சத்திரத்தை வெளியேற்ற முடியும்." என்று அவர் தெரிவித்தார்.
முழு படத்தை திரும்பவும் எடுப்பதற்குப் பதிலாக ரீட் படத்தில் தொடர்வதற்கு அதிகாரிகளை சம்மதிக்க வைத்தார் ஜோரேஃபானி. ஆனால் அது கடினமான ஒன்றாகவே இருந்தது.
'நான் விடாப்பிடியாக சண்டையிட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பில் இந்தச் சம்பவம் ஒரு விதிவிலக்கான நிகழ்வு மட்டுமே. இந்தப் படம் 30 மில்லியன் டாலர் மதிப்பில் (இன்றைய மதிப்பில் 100 மில்லியன் டாலர்) எடுக்கப்பட்டது.
சமீபத்தில் 'ரிட்டர்ன் ஆஃப் தி ஜேடி' படத்தின் பட்ஜெட்டும் அதேதான். படம் இறுதியாக முடிக்கப்பட்டபோது சில முறை மட்டுமே திரையிடப்பட்டது. 1983 ஜூலையில் மாஸ்கோவில் நடைபெற திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. அதன்பிறகு பிரிட்டனின் சர்ரேவில் உள்ள ஜோரேஃபானியின் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள கொல்கலன்களில் வைக்கப்பட்டன.
இத்தகைய முடிவு சதாம் உசேனின் நோக்கங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. 1979 ஜூலையில் அதிகாரத்திற்கு வந்த இராக் சர்வாதிகாரியான சதாம் உசேன், மேற்கத்திய பார்வையாளர்களுக்கு தேசப்பற்றுள்ள படங்களை எடுப்பதற்கான நோக்கத்துடன் இராக் திரைப்படத் துறையை நிறுவினார்.

"சர்வதேச படத் தயாரிப்புகளின் மைய இடமாக இரான் மாற வேண்டும் என்று ஊக்குவிப்பதில் சதாம் உசேன் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஒருநாள் பாக்தாத்தும் (இராக் தலைநகர்) பாலிவுட் போல ஆகலாம் என அவர் நினைத்திருக்கலாம்," என்று ஜோரேஃபானி பிபிசியிடம் தெரிவித்தார்.
இராக்கின் பிம்பத்தை உலக அரங்கில் முன்னேற்றும் பல தொடர் திட்டங்களை சதாம் உசேன் வகுத்திருந்தார். அதில் முதலாவதாக தனது பாத் கட்சியை 1920-இல் பிரிட்டன் ஆட்சியைக் கவிழ்த்த இராக் புரட்சியாளர்களுடன் தொடர்புபடுத்தி ஹாலிவுட் தரத்திற்கு படம் ஒன்று எடுக்க வேண்டும் என நினைத்தார்.
கிளாஷ் ஆஃப் லாயல்டீஸ் அல்லது அல்-மாஸ்'அலா அல்-குப்ரா (மிகப்பெரிய கேள்வி) மெசபொட்டோமியாவில் இருந்து இராக் உருவான கதையை தெரிவிக்கிறது. இந்தப் படம் "லாரன்ஸ் ஆஃப் அரேபியா படத்தின் சதாமின் வடிவம்' என நடிகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
"இது 1920-இல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது," என்றார் ஜோரேஃபானி.
இராக்கை காலனிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்கான தேசியவாத இயக்கத்தின்போது பிரிட்டன் லெஃப்டினன்ட் கர்னல் ஜெரால்டு லீச்மேன், ஃபலுஜா நகர் அருகே ஒரு கிளர்ச்சியாளரால் கொல்லப்படுகிறார். கிளாஷ் ஆஃப் லாயல்டீஸ் என்பது தேசம் பிறந்த கதையை சதாம் உசேன் காவியத்தன்மை வாய்ந்த விதத்தில் மீண்டும் சொல்லும் முயற்சியாகும்.
1950களில் இருந்தே ஜோரேஃபானி திரைப்பட வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். பல குறைந்த பொருட் செலவு உள்ள படங்களை எடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக சதாம் உசேன் அரசாங்கத்தில் உள்ள அவரின் தொடர்புகள் மூலம் அணுகப்பட்டார். 1970களில் அதிகரித்த எண்ணெய் விலைகளால் இராக் செழிப்பானதால் படத்திற்கான நிதி பிரச்னையாக இருக்கவில்லை.
"பாக்தாத்தில் இருந்த எங்களின் நண்பர்கள் சதாம் உசேனிடம் சென்று 'சர்வதேச திரைப்பட வணிகத்தில் இறங்க வேண்டுமென்றால் நாம் பணம் செலவு செய்ய வேண்டும் எனக் கூறினர். 'அதற்காக எதைச் செய்ய வேண்டியிருந்தாலும் சரி.' என்று சதாம் உசேன் பதிலளித்தார்." என்றார் அவர்.
அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்காக ஹாலிவுட் பாணியிலான செட், சிறப்பு எஃபெக்டுகள் மற்றும் நூற்றுக்கணக்கான நடிகர்களும் பணியாளர்களும் பாக்தாத் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு தான் சதாம் உசேன் இரான் மீது படையெடுத்தார். "போரின்போது என் குழுவினர் 140 போர் இராக்கில் இருந்தனர்," என்று 2016-இல் வெளியான 'ஹாலிவுட்டிற்குச் சென்ற சதாம் உசேன்' ஆவணப்படத்தில் ஜோரேஃபானி தெரிவித்திருந்தார்.
"இவர்கள் அனைவரும் ஷெப்பர்டன், பைன்வுட் மற்றும் ஹாலிவுட்டில் படம் எடுத்துக் பழக்கப்பட்டவர்கள். சுற்றி அனைத்து இடங்களிலும் நிஜமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளுக்கு மத்தியில் இவர்கள் இருந்ததில்லை," என்று அவர் கூறியிருந்தார்.
போர்க்களத்தில் படப்பிடிப்பு
படையெடுப்பால் சில சிக்கல்கள் எழுந்தன. "நாங்கள் படப்பிடிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால் வாழ்க்கை எப்பவும் போல இருக்கிறது என்கிற பிம்பத்தை நாங்கள் கொடுக்க வேண்டும் என மேலிடத்தில் இருந்து வழிகாட்டுதல்கள் வந்தது," என 2016-இல் பிபிசி அவுட்லுக்கில் ஜோரேஃபானி கூறினார்.
"இராக் தலைமையைப் பொருத்தவரை, 'பரவாயில்லை, இன்று சில வார காலத்தில் இது முடிந்துவிடும். எல்லோரும் தொடருங்கள், எல்லாமும் சரியாகிவிடும்' என்பதே அவர்களின் செய்தியாக இருந்தது." என்றார் ஜோரேஃபானி. இரண்டு வாரங்கள் கழித்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
எல்லாம் இயல்பாக இருக்கிறது, கவலைப்படுவதற்கு எதுவுமில்லை எனக் காட்டுவதற்கு அதிகாரிகள் முயன்றாலும் சமிக்ஞைகள் இருக்கவே செய்தன. ரீட் மற்றும் இதர படக் குழுவினருடன் இராக் சென்றபோது அந்நாட்டின் வான்பரப்பிற்குள் நுழைந்த உடன் ஒரு போர் விமானம் அவர்களின் விமானத்தைத் தொடர்ந்ததை நடிகர் ஒருவர் நினைவு கூர்ந்தார்.
ஏவுகணைத் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக அவர்கள் மின்விளக்கை அணைத்தபடி தரையிறங்கினர். உள்ளூர் நடிகர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்பட்டதால் பல காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட வேண்டியிருந்தது. பிரிட்டனிலிருந்து துருக்கி எல்லை வழியாக ராணுவ உபகரணங்களை எடுத்து வருவதில் தளவாடம் சார்ந்த சிக்கல்கள் இருக்கவே செய்தன.
ஜோரேஃபானி கூற்றுப்படி ஒரு கட்டத்தில், துருக்கி தரப்பினர், 'இந்தப் போரில் நாங்கள் நடுநிலை வகிப்பதால், நீங்கள் இதை எடுத்துச் செல்ல முடியாது' எனத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விளக்க ஜோரேஃபானி முயன்றுள்ளார்.
"இது முதலாம் உலகப் போர் பொருட்கள் இதை வைத்துச் சுட முடியாது. இது படப்பிடிப்பிற்கான துப்பாக்கி எனக் கூறியும் எந்தப் பலனும் இல்லை," என ஜோரேஃபானி நினைவு கூர்கிறார்.
"அதனால் மாற்று ஏற்பாடாக லாரிகளை கிரீஸ் வழியாக கப்பல்களில் லெபனான் கடந்து, சிரியா கடந்து பாலைவனத்தையும் கடந்து அனுப்ப வேண்டியதாயிற்று. அப்போது சிரியா இராக்கியர்களை விடவும் இரானியர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. நான் அப்போது மிகவும் ஆதங்கப்பட்டேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Iraqi Film Corporation
ஆனால் படத் தயாரிப்பில் மிகவும் மோசமான நிகழ்வு வெடிக்கும் ரயில் சம்பந்தப்பட்ட காட்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. "அது இராக் கிளர்ச்சியாளர்களால் தாக்கப்படும் ஆயுதம் நிறைந்த ராணுவ ரயிலாக இருக்க வேண்டும். உண்மையான சண்டை நடைபெறும் இடங்களில் இருந்து வெகு தொலைவிலே படப்பிடிப்பு நடந்தாலும் அவர்களால் இரான் எல்லை அருகே தான் பயன்படுத்த முடியாத ரயில்வே பாதையைக் கண்டுபிடிக்க முடிந்தது.
"படப்பிடிப்பிற்கு அடுத்த நாள், புரட்சிகர காவல்படை இராக்கிற்கு உள்ளே தாக்கி ராணுவ ரயிலை அழித்து பல இராக் வீரர்களைக் கொன்றதாக இரானிய ஊடகங்கள் கூறின," என்றும் அவர் தெரிவிக்கிறார்.
நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் நடிகர்களைப் போல நாடகத்தன்மை வாய்ந்தவையாக இருந்தன. வைன் பாட்டில் சம்பவத்திற்கு அப்பால் கை குத்துச்சண்டை, கதவுகளில் உதைப்பது, சண்டைகளை இழுப்பது போன்ற சம்பவங்களும் ரீட்டின் நடவடிக்கைகளில் அடங்கும்.
அப்படத்தின் சக நடிகரான மார்க் சின்டென் 2014-இல் எஸ்கொயருக்கு அளித்த நேர்காணலில், "நான் முதல்முறை ரீட்டைப் பார்த்தபோது, அவரது பாதுகாவலரை அதிருப்திக்கு உள்ளாக்கியதால், பாக்தாத்தில் உள்ள அல்-மன்சூர் மெலியா விடுதியின் ஐந்தாவது மாடி ஜன்னல் வழியாக அவரது கணுக்கால்களால் பிடித்து தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தார்." என்றார். படத்தின் மற்றுமொரு நடிகரான வெர்ஜினியா டென்ஹாம், "ஆலிவர் ரீட் பேரழிவிற்கான ஆயுதம்." எனத் தெரிவித்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது சின்டெனுக்கு வேறு விதமான அனுபவம் ஒன்றும் கிடைத்திருந்தது. 2014-இல் அளித்த நேர்காணலில் அதை விவரித்த சின்டென், "சூட் அணிந்திருந்த இரண்டு பேர் என்னைப் பார்க்க வந்தனர். வெளியுறவு அலுவலகத்தில் இருந்து தாங்கள் வருவதாகத் தெரிவித்தனர். நான் இராக்கிற்குச் செல்கிறேனா என்று கேட்டார்கள். நாம் ஆமாம் என்றேன். தேதியைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை. நான் எப்போது கிளம்புகிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது." என்றார்.
திரையிடலுக்குப் பிறகு கைவிடப்பட்ட திரைப்படம்

பட மூலாதாரம், Getty Images
அவரது விடுமுறைப் புகைப்படங்களைக் காண பாதுகாப்பு சேவையினர் ஆர்வமுடன் இருப்பதாக சின்டெனிடம் தெரிவிக்கப்பட்டது. தொலைதொடர்பு ஆண்டெனா, அரசாங்க கட்டடம் அல்லது அரண்மனைகள் என ராணுவ மதிப்பு கொண்ட எதுவாக இருந்தாலும் அதைப் பார்ப்பதற்கு அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால் சதாம் உசேனின் ரகசிய போலிஸ் அவரைப் பின் தொடர்ந்ததால், துர்திருஷ்டவசமாக இந்தப் புகைப்படங்கள் இராக்கில் ஒரு விசாரணை மையத்திற்கு அவரை அழைத்துச் சென்றது. அவர் வந்த உடனே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் தன்னை விசாரித்த அதிகாரியிடம், "நான் உங்களின் மகத்தான தலைவர் சதாம் உசேனின் வேண்டுகோளின் பேரில் வந்திருக்கிறேன். நான் எடுக்கும் படத்திற்கு அவர் தான் நிதியுதவி அளிக்கிறார். கடந்த வாரம் தான் நான் அவருடன் உணவருந்தினேன், பாருங்கள்," என்றதும் உடனடியாக அவரை விடுவித்தனர். அதற்கு அடுத்த நாள் 1920களின் ராணுவ உடையில் பித் ஹெல்மெட் மற்றும் கைத்துப்பாக்கி உடன் இராக்கில் இருந்து வெளியேறினார்.
இந்தப் படத்தின் படத்தொகுப்பை ஜோரேஃபானி லண்டனில் மேற்கொண்டார். சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பிறகு படம் கைவிடப்பட்டது. 1990-இல் குவைத்தை சதாம் உசேன் ஆக்கிரமித்தது தொடங்கி, 2003-இல் அவரது ஆட்சி கழிவும் வரை இராக் ஐநா விதித்த பொருளாதார தடைகள் அமலில் இருந்தன. அந்தப் படம் மீண்டும் திரையிடப்படவில்லை. பல முக்கிய சர்வதேச தயாரிப்புகளை பாக்தாத்தில் மேற்கொள்ள வேண்டும் என்கிற சர்வாதிகாரியின் பெருங்கனவு ஒரு படத்துடன் சுருங்கி, சில நூறு பேர் மட்டுமே பார்த்த ஒன்றாக மாறிப் போனது.
"இராக்கியர்கள் நினைத்தபடி அனைத்தும் நடந்திருந்தால் இது போன்ற ஆறாவது அல்லது ஏழாவது படத்தை எடுத்திருப்போம்," என 2016-இல் பிபிசியின் நிக் எரிக்சனுக்கு அளித்த பேட்டியில் ஜோரேஃபானி தெரிவித்திருந்தார்.
2020-இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "30 ஆண்டுகால போர், குண்டுகள், பேரழிவு, கொலை மற்றும் பிரிவினைவாதத்திற்குப் பிறகு படத்தயாரிப்பு என்பது என்ன? அதற்கு முன்பு இது ஒன்றுமே இல்லை," எனத் தெரிவித்திருந்தாலும் இராக்கியர்கள் உடன் மேலுமொரு படத்தை தயாரிக்க முடியவில்லை என்பதால் அவர் ஏமாற்றமடைந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























