காணொளி: அல்பேனியா நீதித்துறை அமைச்சக கட்டடத்துக்கு தீ வைப்பு
அல்பேனியாவின் தலைநகர் திரானாவில், அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் அரசுக்குச் சொந்தமான பல கட்டடங்களைத் தாக்கிச் சேதப்படுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, போராட்டக்காரர்கள் அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகக் கட்டடத்திற்குத் தீ வைத்தனர்.
காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.
மறுபுறம் திரானா நகரின் மத்திய பகுதியில் அரசு அலுவலகக் கட்டடங்களுக்கு அருகே ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.
அல்பேனியாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் வாய்ப்பைப் பெற்றார் எடி ரமா. இவர் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளால் மக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியை எதிர்கொண்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களுக்கு ஏற்ற, மாற்றுத் தலைமையாக இல்லை என்று போராட்டக்காரர்கள் கருதுகின்றனர்.
அல்பேனியாவில் பிரதமர் ராமா அரசாங்கத்துக்கு எதிராக இதுவரை நடைபெற்ற போராட்டங்களிலேயே இது மிகவும் வன்முறை நிறைந்தத போராட்டமாக பார்க்கப்படுகிறது.
அல்பேனியாவின் தெற்குக் கடற்கரையில் ஆடம்பர விடுதி ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டதைத் தொடர்ந்து, கோடைக்காலம் முழுவதும் ரமா அரசுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள் நடைபெற்றன. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது சட்டரீதியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்தப் பின்னணியில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



