பிகார்: தானியங்கி டெஸ்லா காரில் காவல் நிலையம் வந்த போலி ஐஏஎஸ் அதிகாரி - ரூ.100 கோடி சொத்து சேர்ப்பா?

பட மூலாதாரம், Ranveer Kumar
- எழுதியவர், சித்து திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிகாரின் ககாரியா காவல்துறையினர் மணிஷ் குமார் (எ) மணிஷ் குமார் குப்தாவைக் கைது செய்தபோது, அவரைத் தங்கள் வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
'முழு தானியங்கி' (FSD - Full Self-Driving) வசதி கொண்ட அந்த விலையுயர்ந்த டெஸ்லா காரின் முன் இருக்கையில் மனிஷை அமர வைத்தே காவல்துறையினரால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடிந்தது.
சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர் பத்திரிகையாளர் ரன்வீர் குமார் கூறுகையில், "முன் இருக்கையில் அமர்ந்தால் ஒழிய கார் நகராது என்று மணிஷ் காவல்துறையினரிடம் கூறினார். அதன்பிறகு, மணிஷ் குமார் குப்தாவும் அவரது ஓட்டுநரும் முன் இருக்கையில் அமர்ந்தனர், அதே சமயம் ஆய்வாளர் பின் இருக்கையில் அமர்ந்தார். இப்போது அந்தக் கார் காவல் நிலையத்தில் உள்ளது, அதைப் பார்ப்பதற்கு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Ranveer Kumar
ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ககாரியா மாவட்டத்தில், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மணிஷ் குப்தா ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ககாரியாவில் உள்ள கோக்ரி காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்த மணிஷ் குப்தா, அப்பகுதியில் தனது ஐஏஎஸ் அந்தஸ்தை வெளிக்காட்டி வந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய முகவர் என்றும், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரி என்றும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.
மணிஷ் குப்தாவின் இந்தக் கூற்றுகள் 'போலியானவை' என்று ககாரியா காவல் கண்காணிப்பாளர் பானு பிரதாப் சிங் கண்டறிந்துள்ளார்.
யார் இந்த மணிஷ் குப்தா?
கோக்ரி காவல் நிலையப் பொறுப்பாளர் அரவிந்த் குமார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் படி, "கண்ணாடி மற்றும் அரைக்கால் சட்டை அணிந்த ஒருவர் வீட்டின் முன் நடந்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது, அவர் தனது பெயரை மணிஷ் குமார் குப்தா என்றும், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் கூறினார்."
"அவர் தனது மொபைலில் அடையாள அட்டையைக் காட்டினார்; அதில் 'மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்' என்று எழுதப்பட்டிருந்தது. அந்த அடையாள அட்டையில் எண் 0577102 மற்றும் பதவி 'தலைமைப் பாதுகாப்பு அதிகாரி' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது."
"விசாரணையின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய முகவர் என்று அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்; இது சரிபார்க்கப்பட்டதில் போலியானது என்று தெரியவந்தது."

பட மூலாதாரம், Ranveer Kumar
மணிஷ் குமாரின் வீட்டின் முன் கருப்பு நிற டெஸ்லாகார் மற்றும் வெள்ளை நிற சஃபாரி கார் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 'இந்திய அரசு' என்ற பலகை பொருத்தப்பட்டிருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்த இரண்டு வாகனங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டபோது, அவை இரண்டும் தனக்குச் சொந்தமானவை என்பதை மணிஷ் குமார் ஒப்புக்கொண்டார்.
சந்தேகம் கொண்ட காவல்துறையினர் மணிஷ் குப்தாவைக் கைது செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் மான் கொம்புகள் கைப்பற்றப்பட்டன.
கோக்ரி துணை காவல் கண்காணிப்பாளர் சந்தன் குமார் பிபிசியிடம் கூறுகையில், "மணிஷ் குப்தாவுக்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர். அவரது பெற்றோர் இறந்துவிட்டனர்; மணிஷ் குப்தாவைத் தவிர மற்ற அனைவரும் ககாரியாவுக்கு வெளியே வசிக்கின்றனர்," என்று தெரிவித்தார்.
"அவரது சகோதரர்களில் ஒருவர் வெளிநாட்டில், அநேகமாக இங்கிலாந்தில் வசிக்கிறார்; மற்ற இருவரில் ஒருவர் டெல்லியில் பணிபுரிகிறார். மணிஷ் குப்தா இந்த வீட்டில் ஒரு பராமரிப்பாளருடன் வசித்து வந்தார்."
மணிஷ் குமாரின் வீட்டில் சோதனை நடத்த காவல்துறைக்கு பல மணிநேரம் தேவைப்பட்டது.
மணிஷின் வீட்டின் சமையலறை மற்றும் வராண்டாவில் இருந்த அலமாரிகளிலிருந்து 31 லிட்டர் வெளிநாட்டு மதுபானத்தை காவல்துறை கைப்பற்றியது.
ககாரியா காவல்துறை 29 வகையான மதுபானங்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக ஒரு பத்திரிகை அறிக்கை மூலம் வெளியிட்டது. வெளிநாட்டு மதுபானங்களைத் தவிர, சுமார் 10 லிட்டர் பீர் மற்றும் 30 லிட்டர் சோடாவும் கைப்பற்றப்பட்டன.
மணிஷிடமிருந்து மொத்தம் 20 கிரெடிட் கார்டுகள், எட்டு டெபிட் கார்டுகள், நான்கு காசோலை புத்தகங்கள், இரண்டு ஆப்பிள் மடிக்கணினிகள் மற்றும் ஐந்து ஆப்பிள் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன.
மணிஷின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் பெரும்பாலும் மணிஷ் குமாரின் பெயரிலேயே உள்ளன; இருப்பினும், ஆர்.என். குமார், முகேஷ் குமார் குப்தா மற்றும் அஜித் குமார் போன்ற பெயர்களிலும் சில உள்ளன.
இது தவிர, மணிஷின் வீட்டிலிருந்து இரண்டு மான் கொம்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Ranveer Kumar
ஆங்கிலப் புலமை, உடல் மொழி மற்றும் தனிமை
மணிஷ் குமாரால் எப்படி இவ்வளவு எளிதாக மோசடி செய்ய முடிந்தது?
உள்ளூர் பத்திரிகையாளர் ரன்வீர் குமார் இது குறித்து விளக்குகையில், அவரது தந்தை பரமேஸ்வர் பிரசாத் குப்தா உள்ளூரில் கேடிஎஸ் (KDS) கல்லூரியில் பணியாற்றியவர் என்றும், அவர் முன்பே சில சொத்துக்களைச் சேர்த்திருந்தார் என்றும் கூறினார்.
மணிஷின் வீட்டில் உள்ள பரந்த தோட்டம் ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்தது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மணிஷ் அந்த நிலத்தைத் தோட்டமாக மாற்றி, ஒரு ஆடம்பரமான வீட்டை கட்டத் தொடங்கினார். மேலும் அவர் கூறுகையில், "பாதுகாவலர்களாக இரண்டு பேர் எப்போதும் வீட்டிற்குள் வெளியே அமர்ந்திருப்பார்கள்; யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள். மணிஷ் தனியாக வசித்து வந்தார், யாருடனும் அதிகம் பழகமாட்டார். அவர் 10-ஆம் வகுப்பில் ககாரியா மாவட்டத்தில் முதலிடம் பிடித்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர், ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை," என்றார்.
மணிஷ் திருமணமாகாதவர்
துணை காவல் கண்காணிப்பாளர் சந்தன் குமார் கூறுகையில், "மணிஷ் சில ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்ததோடு, சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவராகவும் இருந்தார்; அதனால் அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்று யாரும் சந்தேகிக்கவில்லை," என்றார்.
காவல் கண்காணிப்பாளர் பானு பிரதாப் சிங்கும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்: "கடந்த எட்டு முதல் பத்து ஆண்டுகளாக மணிஷ் தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிவந்த போதிலும், சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்தார்."
"ஒரு அதிகாரியைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் அவர் தனது உடல் மொழியை அமைத்துக்கொண்டிருந்தார்," என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Ranveer Kumar
மணிஷ் ரூ.100 கோடி சொத்து சேர்த்துள்ளாரா?
காவல்துறை தகவலின்படி, "மணிஷ் குமார் பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவரது சொத்துகளின் மதிப்பு மதிப்பிடப்பட்டு வருகிறது."
மணிஷ் குமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கொண்டுள்ளதாகப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும், இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
மணிஷ் குமார் கைது செய்யப்பட்ட பிறகு, ககாரியா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பானு பிரதாப் சிங் பேசுகையில் "பொதுவாக டெஸ்லா போன்ற கார்கள் இங்கு காணப்படுவதில்லை. இவ்வழக்கில் பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு போன்ற பல்வேறு அமைப்புகளின் உதவியையும் நாங்கள் நாடி வருகிறோம்." என்றார்.
மணிஷ் குப்தாவின் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டு வருவதாகவும், அந்தச் சொத்துகள் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மணிஷுக்கு பிகாரிலும் வெளிநாடுகளிலும் சொத்துகள் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது; அது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம். இது ஒரு பெரிய அளவிலான விசாரணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































