இரான் மாலுமிகளை திருப்பி அனுப்பிய இலங்கை - 15 பேர் மட்டும் ஏன் செல்லவில்லை?

 'ஐரிஸ் டெனா' கப்பல்

பட மூலாதாரம், @DeptofWar/ US Department of Defense

    • எழுதியவர், கேப்ரியேலா போக்காசியோ
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலுக்குப் பிறகு இலங்கையில் தத்தளித்த 200-க்கும் மேற்பட்ட இரானிய மாலுமிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சிக்கியிருந்த நிலையில் தற்போது தாயகம் திரும்புகின்றனர்.

புதன்கிழமை அன்று, இலங்கையின் பாதுகாப்பு இணை அமைச்சர் அருண ஜெயசேகர, 'ஐஆர்ஐஎஸ் தேனா' கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், 'ஐஆர்ஐஎன்எஸ் புஷெர்' கப்பலில் இருந்த 206 மாலுமிகளும் நாட்டை விட்டு செல்வதை உறுதிப்படுத்தினார்.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி, இலங்கை தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்) தொலைவில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட நீர்மூழ்கி ஏவுகணை தாக்கியதில் இரானியப் போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' மூழ்கியது.

இந்தத் தாக்குதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

மார்ச் 5-ஆம் தேதி, இரானிய கடற்படைக் கப்பலான 'புஷெர்'-இன் எஞ்சின்களில் ஒன்று பழுதடைந்ததால், அக்கப்பல் இலங்கைத் துறைமுகங்களில் ஒன்றில் நிறுத்த அனுமதி கோரியது. அதன் பிறகு இலங்கை அக்கப்பலை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

ராய்ட்டர்ஸ் செய்திய நிறுவனத்திடம் பேசிய ஜெயசேகர, இரு கப்பல்களின் பணியாளர்களும் செவ்வாய்க்கிழமை இரவு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
ஐஆர்ஐஎஸ் புஷெர்

பட மூலாதாரம், SL Navy

படக்குறிப்பு, புஷெர்

போர் தொடங்கிய சில நாட்களிலேயே நடந்த தாக்குதல்

சிக்கித் தவித்த மாலுமிகளுக்கு இலங்கை அரசாங்கம் 30 நாள் நுழைவு விசாக்களை வழங்கியதுடன், அவர்கள் கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்தியாவால் நடத்தப்பட்ட ராணுவப் பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது 'தேனா' தாக்குதலுக்கு உள்ளானது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட வீடியோவில், கப்பல் ஒன்று தாக்கப்படுவதும், அதன் பின்பகுதி மேலே எழும்பி வெடிப்பதும் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 84 இரானிய மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, பின்னர் இரானால் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானம் மூலம் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சர்வதேசக் கடற்பரப்பில் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு, இரான் மீதான தற்போதைய அமெரிக்க - இஸ்ரேலியப் போர் தொடங்கிய சில நாட்களிலேயே நடந்தது.

இது அந்த மோதல் வியத்தகு அளவில் விரிவடைவதையும் குறித்தது.

அதன் பின்னர், அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள வளைகுடா நாடுகளை இலக்கு வைத்து, மத்திய கிழக்கு முழுவதும் இரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியது.

தீவின் வடகிழக்கே திருகோணமலைக்கு அருகே நங்கூரமிடப்பட்டுள்ள 'புஷெர்' கப்பலை இயக்குவதற்காக சுமார் 15 இரானிய மாலுமிகள் இலங்கையிலேயே தங்கவுள்ளனர்.

பல மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மார்ச் 5-ஆம் தேதி இரானியக் கப்பலை வடகிழக்குத் துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்திருந்தது.

அப்போது "மனிதநேயத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்" என்று அந்நாட்டு அதிபர் கூறியிருந்தார்.

"எங்கள் மனிதாபிமான விழுமியங்களை வெளிப்படுத்தும் அதே வேளையில், எங்களின் நடுநிலைமையைப் பாதுகாப்பதே எங்களின் நிலைப்பாடாக இருந்து வருகிறது" என்று அதிபர் அநுர குமார திஸாநாயக்க அப்போது ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"சர்வதேச மரபுகளில் எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும், எங்கள் நாட்டின் நற்பெயர் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், மனித உயிர்களைக் காக்கும் வகையிலும் [இலங்கை] தலையிட்டது" என்று அவர் கூறினார்.

இலங்கை 1948-இல் சுதந்திரம் அடைந்தது முதல் நீண்டகாலமாக அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் இலங்கை வலுவான பொருளாதார மற்றும் ராஜீய உறவுகளைக் கொண்டுள்ளது.


உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு