அமெரிக்கா - இரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட பாகிஸ்தான் எப்படி உதவியது?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், கரோலின் டேவிஸ்
- பதவி, பாகிஸ்தான் செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, பாகிஸ்தானிலிருந்து சில நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் தென்பட்டன.
பெயர் குறிப்பிட விரும்பாத பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வட்டாரம் பிபிசியிடம், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு வருவதால், பேச்சுவார்த்தைகள் "வேகமாக" நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சிறிய குழுவினர் என்றும் சூழல் "கடுமையாகவும் தீவிரமாகவும் இருந்தபோதிலும், போரை நிறுவத்துவதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும் அந்த நபர் கூறினார்.
மேலும், தான் அதில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் இரானுடன் வரலாற்று ரீதியான உறவையும், எல்லையையும் கொண்டுள்ளதுடன், அந்த நாட்டுடனான தனது உறவை "சகோதரத்துவ" உறவு என்று குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இரானுக்கு பாகிஸ்தான் அழுத்தமா?
அமெரிக்காவுடனான உறவைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் ராணுவ தலைவர் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரைத் தனது "விருப்பமான" பீல்ட் மார்ஷல் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு இரானைப் பற்றி "மற்றவர்களை விட நன்றாகத் தெரியும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார், "நேற்று வரை விஷயங்கள் நேர்மறையான திசையில் நகர்வதாக நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்," என்று கூறினார்.
ஆனால் திங்களன்று இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியதுடன், இரான் செளதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான், "முடிந்தவரை நிலைமையைச் சமாளிக்க இன்னும் முயற்சி செய்து வருகிறது" என்றும் அவர் கூறினார்.
பீல்ட் மார்ஷல் முனீர் இன்னும் வெளிப்படையாகவே விமர்சித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று ராணுவ அதிகாரிகளிடம் பேசிய அவர், செளதி அரேபியா மீதான தாக்குதல் "மோதலை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகளைச் சீர்குலைக்கிறது" என்று கூறினார்.
மோதல் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான் இரான் மீது பயன்படுத்திய மிகக் கடுமையான சொற்களில் இதுவும் ஒன்றாகும்.
இது இரானுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
செளதிஅரேபியா மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், பாகிஸ்தான் செளதி அரேபியாவுடன் வைத்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இதுவரை பயன்படுத்தப்படவில்லை.
"தற்போதைய ராஜீய முயற்சிகள்... சீராகவும், உறுதியாகவும், சக்திவாய்ந்த முறையிலும் முன்னேறி வருகின்றன. இது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் சாத்தியம் உள்ளது" என்று பாகிஸ்தான் நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகு, அந்நாட்டின் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
மேலும் காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அதிபர் டிரம்பிடமும், அதே காலக்கட்டத்திற்கு ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்துவிடுமாறு இரானிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானுக்கான இரானிய தூதர் ரெசா அமிரி மொகதம், உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணியளவில் (பிஎஸ்டி நள்ளிரவு), "சிக்கலான, பதற்றமான கட்டத்திலிருந்து ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக" எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.


பட மூலாதாரம், Aamir QURESHI / AFP via Getty Images
இன்னும் உள்ள கேள்வி என்ன?
அதிகாலை 05:00 மணிக்குச் சற்று முன்பு, பாகிஸ்தான் பிரதமர் போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.
மேலும் "இறுதி ஒப்பந்தத்திற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள" ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் சந்திக்குமாறு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.
"நாங்கள் இன்னும் மிகவும் கவனமாகவே இருக்கிறோம்" என்று பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த வட்டாரம் பிபிசியிடம் கூறியது.
மேலும் தொடர்ச்சியான நிலையற்ற தன்மை நிலவுவதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை எனவும் கூறிய அவர் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளில் மிகவும் பிடிவாதமாக உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இரு தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவந்தாலும் அவர்கள் எவற்றில் உடன்பட முடியும் என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































