இரானை காப்பாற்றிய 'உத்தி' போர் நிறுத்தத்திற்கு ஆபத்தாக முடியலாம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவும், இரானும் இரண்டு வார காலத்திற்குத் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ள போதிலும், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் இன்னும் இரானிடமிருந்து தாக்குதல்கள் வருவதாகத் தெரிவித்து வருகின்றன.
இந்தத் தாக்குதல்கள் அந்த நாட்டின் தலைமையால் உத்தரவிடப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், தாக்குதல்களை நடத்த இரான் தனது பிராந்தியத் தளபதிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனவே, போர்நிறுத்த உத்தரவுகள் அவர்களைச் சென்றடையச் சிறிது காலம் எடுக்கலாம்.
உள்ளூர் நேரப்படி காலை 08:00 மணி முதல் "இரானியத் தாக்குதல்களின் தீவிர அலையை" தாங்கள் கையாண்டு வருவதாக குவைத் ராணுவம் கூறுகிறது.
28 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ராணுவம், இந்தத் தாக்குதல்கள் எண்ணெய் உள்கட்டமைப்பு, மின் நிலையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களுக்கு "கடுமையான பொருள் சேதத்தை" ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, ஏவுகணைகள் மற்றும் டிரோன்களுக்கு எதிராகத் தாங்கள் "தீவிரமாகப் பதிலடி" கொடுத்து வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
இந்தத் தாக்குதல்கள் இரானில் இருந்து உருவானதாக அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது. மேலும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை அது வலியுறுத்துகிறது.
முன்னதாக, இரானிய டிரோன் தாக்குதலுக்குப் பிறகு இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பஹ்ரைனிடமிருந்தும் தகவல்கள் வந்தன.
இந்தத் தாக்குதல் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நடந்ததா என்பதை அந்த அரசு உறுதிப்படுத்தவில்லை.


பட மூலாதாரம், Getty Images
இரானின் தற்காப்பு உத்தி போர் நிறுத்தத்தை கடினமாக்கலாம்
ஜோ இன்வுட், பிபிசி
பொதுவாக, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ராணுவத் தலைமை கொல்லப்படுவது குழப்பத்திற்கும், ஒருவேளை வீழ்ச்சிக்கும் கூட வழிவகுக்கும். இரானில் இது நடக்கவில்லை.
'பரவலாக்கப்பட்ட தற்காப்பு உத்தி' என்று அழைக்கப்படுவதை அவர்கள் பின்பற்றியதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இது செயல்பாட்டு அதிகாரத்தை உள்ளூர் தளபதிகளுக்கே வழங்குகிறது.
அவர்களிடம் இலக்குகளின் பட்டியல் இருக்கும், மேலும் தெஹ்ரானில் உள்ள ஆட்சியிடம் இருந்து எந்தத் தொடர்பையும் எதிர்பார்க்காமல் சுயமாகச் செயல்பட அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்.
ஏறக்குறைய இரானின் ஒட்டுமொத்த உயர் மட்ட அதிகாரிகளும் கொல்லப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உத்தியிலிருந்து இரானுக்கு இது பாதுகாப்பை வழங்கியது.
இருப்பினும், இது அமைதிக்கு ஒரு தடையாகவும் இருக்கலாம். முறையான அதிகாரப் படிநிலை இல்லாத நிலையில், போர்நிறுத்த உத்தரவுகளை அனுப்புவது கடினமாக இருக்கலாம்.
நிச்சயமாக இது நமக்கு இப்போதைக்குத் தெரியாது. ஆனால் இரானில் உள்ள அரசியல் தலைமை ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முயலும்போதும், தாக்குதல்கள் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கு இது வழிவகுக்கும்.

பட மூலாதாரம், Getty Images
பேச்சுவார்த்தைகள் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றன
கஷாயர் ஜொனைதி, பிபிசி
அமெரிக்கா இரான் இடையே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ள நிலையில், இருநாட்டுக்கு இடையே நம்பிக்கைப் பற்றாக்குறை நிலவுகிறது.
கடந்த ஓராண்டில் இரானும் அமெரிக்காவும் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இரண்டு முறையுமே பேச்சுவார்த்தையின் நடுவில்தான் போர் தொடங்கியது.
அரசு ஊடகங்களில் இரான் தன்னை எவ்வளவு வெற்றிகரமானதாகச் சித்தரித்துக் கொண்டாலும், அது மிகவும் பலவீனமான நிலையில்தான் உள்ளது.
அதன் ராணுவம் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது, அதன் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
மேலும் எதிர்க்கட்சியினர் மற்றும் மக்களுடன் அரசுக்குத் தீர்க்கப்படாத பிரச்னைகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக, ஜனவரி மாதப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு அரசு மரண தண்டனை வழங்க தொடங்கியுள்ளது.
நாட்டின் உள்ளே தனது அதிகாரப் பிடியை அரசு பலப்படுத்த வேண்டியுள்ளது. அது ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதன் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அமெரிக்கர்களுக்கு கடினம்.
ஹோர்மூஸ் நீரிணையில் போக்குவரத்து தடையின்றி நடக்கும் என்ற நிபந்தனையின் பேரில் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்கா கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தனது புவியியல் இருப்பிடம் காரணமாக, ஹோர்மூஸ் நீரிணையின் கடல்வழிப் போக்குவரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாக இரான் குறிப்பிடுகிறது. இதுதான் அதன் முதன்மையான முன்னுரிமை.
இரான் அணுசக்தித் திட்டம் தொடர்பாகக் கடினமான பேச்சுவார்த்தைகள் நடக்கப் போகின்றன.
இரானில் யுரேனியம் செறிவூட்டலுக்கு அமெரிக்கா சம்மதித்துள்ளதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இரானில் எந்த விதமான செறிவூட்டலும் செய்யப்படக்கூடாது எனத் தாங்கள் விரும்புவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
வரவிருக்கும் இரண்டு வாரங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































