ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்காவின் புதிய முடிவால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

    • எழுதியவர், சந்தீப் ராய்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான அனுமதி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

இரான் போரின் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தையை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்க கருவூலச் செயலாளர் ரஷ்ய எண்ணெய் மீதான விலக்கு முடிவுக்கு வருவதாக அறிவித்தார், ஆனால் இப்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.

இது டிரம்பின் தனிப்பட்ட 'முழுமையான மாற்றம்' மட்டுமல்ல, 'முழு குழுவின் மாற்றம்' என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், ஒரு நாளைக்கு முன்னதாக, லெபனானில் போர்நிறுத்தத்தை மேற்கோள் காட்டி, ஹோர்மூஸ் நீரிணையை 'முழுமையாகத் திறப்பதாக' இரான் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன; அன்றைய தினத்தின் தொடக்கத்தில் ஒரு பேரல் 98 டாலருக்கும் அதிகமாக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, பின்னர் 90 டாலருக்கும் கீழே குறைந்தது. போருக்கு முன்பு இது ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலராக இருந்தது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18), இந்த மாற்றம் குறித்து தகவல் அளித்த இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்‌சி, "லெபனானில் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு ஹோர்மூஸ் நீரிணை அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் முழுமையாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது" என்று கூறினார்.

அன்றைய தினமே ட்ரூத் சோஷியல் தளத்தில் ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்ததற்காக இரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தாலும், மற்றொரு பதிவில், "ஹோர்மூஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டு வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்குத் தயாராக உள்ளது, ஆனால் அமெரிக்க கடற்படை முற்றுகை முழு பலத்துடனும் வீரியத்துடனும் தொடரும்" என்று கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்கிறது. இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஒரு சில விஷயங்களில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

மூன்று நாடுகளுக்கு மட்டும் விலக்கு இல்லை

தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை கடல் வழியாக வாங்குவதற்கு உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் (மூன்று நாடுகள் தவிர) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த விலக்கு சுமார் ஒரு மாத காலம் நீடிக்கும்.

வெள்ளிக்கிழமை வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெயை மே 16 வரை வாங்கலாம் என்று அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் ரஷ்யா தொடர்பாக பொது உரிமம் 134B-ஐ வெளியிட்டுள்ளது.

"கப்பல்களில் ஏற்றப்பட்ட, ரஷ்யாவை சேர்ந்த கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விற்பனைக்கு ஏப்ரல் 17, 2026 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பொது உரிமம் 134B-இன் படி, ரஷ்ய தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டுத் தடைகள் விதிமுறைகளின் கீழ் உள்ள அல்லது யுக்ரேன்-ரஷ்யா போருடன் தொடர்புடைய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு இந்த விலக்கு பொருந்தும்.

இருப்பினும், இரான், வடகொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

இந்தியாவுக்கு என்ன லாபம்?

உலகளாவிய எண்ணெய் சந்தையைக் கண்காணிக்கும் நிபுணர்கள், அமெரிக்காவின் இந்த முடிவுகள் இந்தியாவிற்கு ஒரு நிம்மதியை அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

சர்வதேச எண்ணெய் சந்தை நிபுணர் நரேந்திர தனேஜா பிபிசி நியூஸ் இந்தியிடம் பேசுகையில், "அமெரிக்காவின் அறிக்கை முக்கியமாக உள்நாட்டு மக்களுக்காகவே வெளியிடப்பட்டுள்ளது, ஏனெனில் எண்ணெய் விலைகள் உயர்ந்தால் அது அங்கே உள்நாட்டில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

இந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளன. டிரம்பின் இரான் போருக்கு அமெரிக்காவில் மிகக் குறைந்த ஆதரவே இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

"அமெரிக்க நிர்வாகத்தின் இந்த முடிவு மற்ற நாடுகளுக்கானது என்றாலும், இது இந்தியாவிற்கு பெரும் நிம்மதியை அளிக்கும். ஹோர்மூஸ் நீரிணை முடக்கப்பட்டதால், இந்தியா எல்பிஜி (LPG) மற்றும் எல்என்ஜி (LNG) ஆகியவற்றில் மட்டுமே சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் போர் நீடித்திருந்தால், இந்தியாவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம்" என்கிறார் நரேந்திர தனேஜா.

ஏனெனில் இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. பாரம்பரியமாக, இது வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும், யுக்ரேன் போருக்குப் பிறகு, ரஷ்ய எண்ணெயைத் தள்ளுபடி விலையில் அதிக அளவில் வாங்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் வரி மிரட்டல் இந்த கொள்முதலைப் பாதித்தது. இதனால் இந்தியா வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் கொள்முதலை அதிகரித்தது. இப்போது, ஹோர்மூஸ் நீரிணை நெருக்கடியால் அது தடைபட்டுள்ளது.

ஆனால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை ஒருபோதும் நிறுத்தவில்லை, கடந்த மாதம் அமெரிக்கா சலுகை அளித்தபோது, அது மீண்டும் அதிகரித்தது.

"கடந்த நான்கு வாரங்களில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், யுக்ரேன் போர் தொடங்கிய போது, பைடன் நிர்வாகமும் இந்தியாவை பெரிய அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்க ஊக்குவித்தது" என நரேந்திர தனேஜா கூறுகிறார்.

"இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவின் சகாலின்-1 (Sakhalin-1) எண்ணெய் வயலில் 18 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. அமெரிக்காவும் இந்த முதலீட்டை ஊக்குவித்தது." என்றும் அவர் கூறுகிறார்.

டெல்லியைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான உலக வர்த்தக ஆய்வுக்கான இனிஷியேட்டிவ் (GTRI - Global Trade Research Initiative) தலைவரான அஜய் ஸ்ரீவஸ்தவா, ரஷ்யாவுடன் கூடுதல் எரிசக்தி ஒத்துழைப்பை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

பிபிசி நியூஸ் இந்தியிடம் பேசிய அவர், "ஒரு மாத சலுகை என்பது அர்த்தமற்றது, ஏனெனில் ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட அதே எண்ணெய்க்குத்தான் இந்த சலுகை பொருந்தும்" என்றார்.

ஒரு எண்ணெய் கப்பல் எத்தனை நாட்களில் வந்து சேரும்?

இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம், சமீபத்திய ஆண்டுகளில் எண்ணெய் இறக்குமதியைப் பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், தற்போது 41 நாடுகளில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை நெருக்கடியால் இந்தியா பெரிதாகப் பாதிக்கப்படவில்லை என்று நரேந்திர தனேஜா கூறுகிறார்.

ஆனால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி வியூகம் சற்று சிக்கலானது.

"அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, இந்தியா தன்னிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா சொன்னால் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இருந்து இந்தியாவுக்கு எண்ணெய் வந்து சேர 50 முதல் 60 நாட்கள் ஆகும். ரஷ்யாவிலிருந்து 28 நாட்கள் ஆகும். வளைகுடா நாடுகளிலிருந்து 5 முதல் 7 நாட்கள் ஆகும்" என்கிறார் நரேந்திர தனேஜா.

வேகம் மற்றும் அளவைப் பொருத்து, 3 வகை கப்பல்களில் எண்ணெய் வருவதாக அவர் விளக்கினார்: யூஎல்சிசி (அல்ட்ரா லார்ஜ் கேரியர்), விஎல்சிசி (வெரி லார்ஜ் கேரியர்) மற்றும் அஃப்ராமேக்ஸ்.

அமெரிக்காவின் தற்போதைய விலக்கு தற்போது கடலில் இயங்கி வரும் எண்ணெய் டேங்கர்களுக்குப் பொருந்தும். இதன் பொருள் போருக்கு முன்பு புறப்பட்ட பல கப்பல்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. போரின் போது, அதற்கும் முன்னதாகவே புறப்பட்ட கப்பல்கள் மூலம் எண்ணெய் விநியோகம் தொடர்ந்தது. இந்தக் கப்பல்கள் அமெரிக்கா, பிரேசில், கயானா மற்றும் அங்கோலா போன்ற நாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்தன.

இருப்பினும், சமீப நாட்களில் எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

"போரின் போது, வர்த்தகர்களின் திரையில் விலை 110 டாலராக இருந்தபோது கூட, இந்தியா ஒரு பேரலுக்கு 140 டாலர் கொடுத்து எண்ணெய் வாங்கியது. இந்தியா ஒரு பெரிய பொருளாதாரம், அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடையே நற்பெயரைக் கொண்டுள்ளது" என்கிறார் நரேந்திர தனேஜா.

நரேந்திர தனேஜாவின் கூற்றுப்படி, "கத்தாரில் இருந்து எல்பிஜி மற்றும் எல்என்ஜி விநியோகம் பாதிக்கப்பட்ட போது, அர்ஜென்டினாவில் இருந்து ஒரு கப்பல் இந்தியாவை அடைய 58 நாட்கள் ஆகும் என்றாலும், உடனடியாக விநியோகிக்குமாறு இந்தியா அர்ஜென்டினாவைக் கேட்டுக்கொண்டது. அர்ஜென்டினா இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதால் பெரிய அளவில் விநியோகிக்க ஒப்புக்கொண்டது."

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி இரட்டிப்பு

ஐரோப்பிய சிந்தனைக் குழு ஒன்றின் தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

எரிசக்தி மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (CREA) சமீபத்திய அறிக்கையில், பிப்ரவரியில் 1.54 பில்லியன் டாலராக இருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை மார்ச் 2026-இல் 5.8 பில்லியன் டாலராக இந்தியா இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.

அறிக்கையின்படி, மார்ச் 2026-இல் ரஷ்யாவிலிருந்து 371 மில்லியன் டாலர் மதிப்பிலான நிலக்கரி மற்றும் 196 மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களையும் இந்தியா இறக்குமதி செய்தது.

மார்ச் 2022 முதல் ரஷ்ய எண்ணெய்க்கான முக்கிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியா 2024-இல் தினமும் சுமார் இரண்டு மில்லியன் பேரல் எண்ணெயை வாங்கியது மற்றும் கடந்த ஆண்டு ரஷ்யாவிலிருந்து சுமார் 44 பில்லியன் டாலருக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.

எகனாமிக் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு அறிக்கையின்படி, "இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் எல்என்ஜி உள்ளிட்ட எரிசக்தி ஏற்றுமதியை ரஷ்யா இந்தியாவுக்கு அதிகரிக்கும்" என்று உறுதியளித்துள்ளார்.

அலிபோவின் கூற்றுப்படி, ரஷ்யா இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகத்தை கணிசமாக அதிகரித்துள்ளது மற்றும் இந்தியாவுக்குத் தேவையான எந்த அளவிலும் எரிசக்தியைத் தொடர்ந்து வழங்கத் தயாராக உள்ளது.

"மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல், இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது மற்றும் அதன் நிலைப்பாடு நிலையானது" என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவிய காலங்களில், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் நிலையான விநியோகத்தைப் பராமரிக்கவும் மலிவான ரஷ்ய எண்ணெய் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது.

இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் கட்டுப்பாடுகளுக்குப் பழகி இருந்த போதிலும், முதல் தளர்வுகள் வழங்கப்பட்டவுடன் கொள்முதலை விரைவாக மீண்டும் தொடங்கின.

தற்போது, ​​இந்த விலக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது, மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும் எரிசக்திப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

"தனது எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியா ரஷ்யாவுடன் தலா 20 ஆண்டு கால நீண்ட கால எரிசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு, அமெரிக்காவின் அழுத்தத்தை நிராகரிக்க வேண்டும்," என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு